இந்தப் பகுதியை சங்க காலத்தைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்ற மன்னர் ஆண்டதாகவும், அவர் கட்டிய கோட்டையின் இடிந்த சின்னங்கள்தான் மலையின் மீது காணப்படுவதாகவும் கூறினார்.
பர்வத மலையில் நூற்றெட்டு குகைகள் இருப்பதாகவும், அவற்றில் பல தேவசித்தர்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறிய பிள்ளை, “நீங்க மேலே போனீங்களே!சிங்கக் கிணறு பார்த்தீங்களா?” என்று கேட்டார்.
“இல்லை.ஒரு பெரிய சுனையைத்தான் பார்த்தோம்.நீர் ஜில்லென்று ஐஸ் மாதிரி இருந்தது.அந்த நீரைக் குடித்தோம். அதில் குளித்தோம்” என்றேன் நான்
“அதுக்குத்தான் சிங்கக் கிணறு என்று பெயர்.அதிலே என்ன பார்த்தீங்க?”
“தண்ணீரைப் பார்த்தோம்”
“அதைக் கேட்கலே, வேறே என்ன பார்த்தீங்க?”
“உங்ககிட்டே விஷயங்களைக் கேட்டுக்கிட்டுப் போகலாம்னு இங்கே வந்தா, எங்களையே நீங்க கேள்வி கேட்கிறீங்களே…. தயவு செய்து உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லுங்களேன்” என்று பொறுமையிழந்து மன்றாடினேன் நான்.
“தப்பா நினைச்சுக்காதீங்க. அந்த இடத்தை நீங்க நல்லா கவனிச்சுப் பார்த்திருந்தா, நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு நல்லா புரியும்.அங்கே குனிஞ்சு பார்த்தா, வளைவா ஒரு குகை மாதிரி உள்ளே போறது தெரியும்.அதுக்குள்ளே போனால் தாமரைக்குளம், வாழைத்தோட்டம், பலாத்தோப்பு, நந்தவனம் எல்லாம் இருக்கு. அங்கேதான் சித்த புருஷர்கள் பல ஆயிரம் வருடங்களாக வாசம் செய்து வராங்க. அவங்கதான் ராத்திரியிலே வந்து சுவாமிக்கு பூஜை செய்துட்டுப் போறாங்க. ஆனால், அவங்க நம்ப கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க” என்றார் முத்துகுமாரசாமி பிள்ளை.
“அந்த மலையில் அண்ணாமலையார் பாதங்கள் இருக்கிறதே, அதைப் பற்றி ஏதாவது புராண வரலாறு உண்டா?” என்று கேட்டேன் நான்.
“அண்ணாமலையார் ஆகாய சஞ்சாரத்தின் போது ஒரு சமயம் இந்த மலையில் தங்கி இளைப்பாறினாராம்.அதன் அடையாளமாகத்தான் அந்தப் பாதங்களை செதுக்கி வைத்திருப்பதாகச் சொல்லுவாங்க” என்றார் பிள்ளை.
“மேலே கடப்பாறைக் கம்பிகளைப் புதைத்து வைத்திருக்காங்களே, அதுக்கு முன்னே அந்த மலை மேலே எப்படி ஏறிப் போயிருப்பாங்க?”
“கடப்பாறைங்க வச்சதெல்லாம் ஐம்பது அறுபது வருஷங்களுக்குள்ளாரதான். அறுபது வருஷத்துக்கு முன்னே (1910) ஒரு பெரிய இடி விழுந்து மலைச்சிகரத்திலே பாறை பொளந்து கீழே விழுந்துடுச்சு. அதுக்கப்புறம் மேலே ஏர்றது ரொம்ப கஷ்டமாப் போய் கடப்பாறையும், தண்டவாளமும் வெச்சாங்க” என்றார் அந்த முதியவர்.
“அந்த மலையில் பச்சிலை மூலிகைகள் இருப்பதாகச் சொல்றாங்களே, உங்களுக்கு அதைப் பற்றி ஏதாவது தெரியுமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன் நான்.
“ஆமாம், இப்போ கூட சாதுக்கள் வந்து இந்த பச்சிலைகளைப் பறித்துக் கொண்டு போகிறார்கள்.பல ஜில்லாக்களிலிருந்து நாட்டு வைத்தியர்கள் தேவ மூலிகைகளைத் தேடி இங்கே வருகிறார்கள்.இங்கே மகாவில்வம் என்ற அபூர்வ மரம் இருக்கிறது.அதில் ஐந்து, ஏழு, ஒன்பது தளங்கள் இருக்கும்.இந்த மலையில் ஒரு செடி இருக்கிறது.அதன் இலையை மென்று தின்றால் மாங்காய் மாதிரி வாசனை வரும்.அன்று முழுவதும் பசியோ, தாகமோ இருக்காது.இதை நான் சாப்பிட்டிருக்கிறேன். சொந்த அனுபவத்தில்தான் சொல்கிறேன்…”
“அங்கு இருக்கும் அண்ணாமலையார் பாதங்களைத் தவிர திருவண்ணாமலைக்கும் பர்வத மலைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?”
“ஒரு புராண வரலாறு உண்டு” என்று கூறி ஓர் அதிசய நிகழ்ச்சியையும் கூறினார்.
“திருவண்ணாமலை குகையில் வாசம் செய்து கொண்டிருந்த குகை நமசிவாயர் ஒரு சமயம் தம் சீடர் நமசிவாயருடன் சுவாமி தரிசனத்திற்காக பர்வத மலைக்கு வந்தார்.சிங்கக் கிணறு என்ற பாதாள சுனைக்கருகே வந்ததும், சீடரைச் சமையல் செய்து வைக்கச் சொல்லி விட்டு, குகை நமசிவாயர் மலை மேலேயுள்ல கோயிலுக்குச் சென்று விட்டார்.
சமையல் செய்து கொண்டிருந்த சீடர், கரண்டியில்லாததால் அருகில் உள்ள ஒரு செடியில் வெண்மை நிற நாக சர்ப்பங்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, மிக ஜாக்கிரதையாக ஒரு சின்னக் கிளையை ஒடித்து சாதத்தைக் கிளறினார். உடனே சாதம் கருமை நிறமாக மாறி விட்டது.குரு கோபித்துக் கொள்ளப் போகிறாரே என்று பயந்த சீடர் அந்தச் சாதத்தை தாமே உட்கொண்டு விட்டு, குச்சியை வீசியெறிந்து விட்டார்.பின்னர், சுனையிலிருந்து நீர் கொண்டு வந்து மறுபடியும் புதிதாகச் சமையல் செய்யத் தொடங்கினார்.
சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த குகை நமசிவாயர், அங்கு சீடரைக் காணாமல் சுற்று முற்றும் தேடினார்.அங்கு ஓர் இளைஞன் நின்று கொண்டிருப்பதைக் கண்டு, “நீ யார்?” என்று வினவினர்.அந்த இளைஞரோ, “குருநாதா, என்னைத் தெரியவில்லையா, அடியேன் நமசிவாயம் தான், தங்கள் சீடர்தான்” என்றாராம்.அதைக் கேட்டு குரு திகைத்தே போய் விட்டார்.சீடனின் தோற்றம் எப்படித் திடீரென்று மாறிற்று என்பது அவருக்கு வீளங்கவே இல்லை.தாம் கோயிலுக்குச் சென்ற பிறகு என்ன நடந்தது என்று கூறும்படி சீடரிடம் கேட்டார்.சீடரும் நடந்தவற்றை ஒன்று விடாமல் விவரமாகக் கூறினார்.
“அப்படியா, அந்தச் செடி எங்கே?இந்த மலையில் கருநெல்லிச் செடி இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.எங்கே அது?” என்று வினவினார்.சிடரும் செடி இருந்த இடத்தைப் பார்த்தார்.ஆனால், அங்கு அந்தச் செடியைக் காணவில்லை.அது எப்படியோ மறைந்து விட்டது.
“நீ தூக்கியெறிந்த அந்தக் குச்சியையாவது தேடி எடுத்து வா” என்று கட்டளையிட்டார் குரு.அந்த இடத்தில் போய்ச் சீடர் பார்த்த பொது அந்தக் குச்சியும் மறைந்து விட்டிருந்தது.அந்த அதிசயத்தைக் கண்டு இருவரும் ஆச்சரியமடைந்தனர்.பின்னர் குருவின் கட்டளைக்கிணங்க தாம் உண்ட சோற்றை கக்கித் தர அதை உட்கொண்ட, குகை நமசிவாயரும் முதுமை நீங்கி இளமைப் பருவம் பெற்றார்.
அன்றிரவு குருவும் சீடரும் கோயிலுக்கருகில் கற்பூர சுனையிலிருந்து நீர் எடுத்து சுவாமிக்கும் முருகனுக்கும் வீரபத்திரருக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் , பூஜை முதலியவற்ரை செய்து விட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது தேவ சித்தர்கள், கந்தர்வர்கள் வந்து மல்லிகார்ஜுனருக்கு பூஜை செய்ததைக் கண்டு ஆனந்தித்தார்கள்.அவர்களோடு அளவளாவி உள்ளம் மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு, “தமது சீடரின் ஞான திருஷ்டியை அறிந்த குகை நமசிவாயர், “இன்று முதல் நீ சிடர் நமசிவாயர் இல்லை.குரு நமசிவாயரே” என்று கூறி அவரை வாழ்த்தியது இந்த பர்வத மலையில்தான் நிகழ்ந்தது” என்று கூறி முடித்தார் அம்முதியவர்.
நான் சென்னைக்குத் திரும்பிய பின்னர், புது டில்லியிலிருந்த கே.சுப்பிரமணிய சாஸ்திரி என்பவரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது.
திருவண்ணாமலை வேத பாடசாலையில் பயின்று கொண்டிருந்த சமயம், ஓர் ஐப்பசி பௌர்ணமியன்று இவரும் இவரது நண்பரும் ஒரு சாதுவின் துணை உடன் சுவாமி தரிசனத்திற்காக பர்வத மலையில் ஏறி, பகல் மூன்று மணி சுமாருக்கு கோயிலை அடைந்தார்கள். மேலேயுள்ள சுனையில் கை கால்களைக் கழுவிக் கொண்டு மல்லிகார்ஜுனரை வழிபட்டார்கள்.அதற்குள் மேலும் சில பக்தர்களும் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.
இரவு பதினோரு மணிக்கு அசதியின் காரணமாக அனைவரும் சற்று கண்ணயர்ந்தார்கள்.ஒரு மணி நேரம் கடந்திருக்கும்.சுப்பிரமணியனுக்கு விழிப்பு ஏற்பட்டது.அப்போது சுற்றுபுறமெங்கும் ஒரு நறுமணம் கமழ்ந்தது.அது அவர் நாசியைத் துளைத்தது.தீபம் ஒன்று பிரகாசமாக எரிந்தது.நண்பனை எழுப்பி அருகில் சென்று பார்த்தார்.சிவலிங்கத்தின் மீது வகைவகையான வண்ண மலர்கள் அர்ச்சிக்கப்பட்டிருந்ததைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார்.
இம்மாதிரி அரிய காட்சிகளைக் காணக் கொடுத்து வைத்திருந்த வேறு சிலரும் எனக்குக் கடிதங்கள் எழுதியிருந்தார்கள்.அக்கடிதங்களைப் படித்தபோது மலையின் மீது ஓர் இரவு தங்கியிருந்து இம்மாதிரி அனுபவங்களைப் பெற நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்ற வருத்தம் என்னை வாட்டியது.
திரும்பி வந்ததிலிருந்து பர்வத மலைக்கு மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும் என்று என்னுள் ஏதோ ஒரு சக்தி உந்திக் கொண்டிருந்தது.அதற்குக் காரணமும் இருந்தது.
பர்வத மலைக்குச் சென்று திரும்பியதும் ஆந்திராவில் புத்தூருக்கு அருகிலுள்ள கார்வேட் நகருக்குச் சென்று ஸ்ரீ காஞ்சிப் பெரியவவரைத் தரிசித்து என் பயணத்தைப் பற்றியும், என் அனுபவங்களைப் பற்றியும் கூறினேன். கனவில் வந்து என்னை பூண்டி சாமியாரைப் பற்றி மேலும் எழுதும்படிக் கட்டளையிட்டு அதன் தொடர்பாக என்னைப் பர்வதமலைக்கு அழைத்துச் சென்று மல்லிகார்ஜுன சுவாமியையும், பிரமராம்பிகையையும் தரிசனம் செய்து வைத்த கருணைக்குப் பெரிதும் கடமைப்பட்டிருப்பதாகக் கூற நினைத்த நான், எதுவுமெ பேச நாவெழாமல் சற்று நேரம் மௌனமாக நின்று கண்ணீராலேயே நன்றி செலுத்தினேன். என்னைப் பார்த்து சுவாமிகள் புன்னகை பூத்தார். நடந்ததையும், நடப்பதையும், நடக்கப் போவதையும் அறிந்த ஞானகுருவுக்கு என் மனத்தில் இருப்பது புரியாதா?
“பல ஆண்டுகளுக்கு முன்னே பெரியவர், பர்வத மலையேறியதாகக் கேள்விப்பட்டேன்.அங்கிருக்கும் மகிமைகளை எனக்கு உணர்த்த வேண்டும்” என்று நெஞ்சார வேண்டினேன்.
சுவாமிகள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்.பின்னர், “நான் மலையேறவில்லை.கிரிப் பிரதட்சணம்தான் செய்தேன்” என்றார்.
மலையை வலம் வரும்படி எனக்கு மகான் கட்டளையிட்டதாகவே எனக்குத் தொன்றியது.அன்று முதல் அதற்கான திட்டத்தை மனத்தில் உருவாக்கத் தொடங்கினேன்.சுவாமிகளின் இந்தத் தரிசனத்திற்குப் பிறகுதான் எனக்கு சிலரிடமிருந்து கடிதங்கள் வந்தன.அவற்றிலிருந்து புதுத் தகவல்களும், விளக்கங்களும் பெற்றேன்.
ஒரு நால் காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த வாசகர் பாலசுப்பிரமணியனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.அதில் பர்வதமலையைப் பற்றி வெலூர் அரசினர் கலைக் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் திரு மு.வை.அரவிந்தன் அவர்களிடமும், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ் ஆராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்வான் சே.வெங்கடராமச் செட்டியார் அவர்களிடமும் விசாரித்தால் விவரங்கள் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார் அன்பர்.நான் உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு பர்வத மலையைப் பற்றிய இலக்கியப் பின்னணியை அறிந்து கொண்டேன்.
சங்க கால நூலான பத்துப்பாட்டின் இறுதியில் “மலைபடுகடாம்” என்ற பழைய பாடலில் இம்மலை, நவிரமலை என்று குறிக்கப்படுகின்றது.“நவிரம்” என்றாலே மலை என்றுதான் பொருள்.பாடல் ஆசிரியர் இம்மலையை மூங்கில்கள் எழித்து வளரும் மலை என்று வர்ணித்துள்ளார். அப்பகுதியை ஆண்ட நன்னன் என்ற மன்னனைப் புகழ்ந்து பாடிய புலவர், “நவிரமலை மீது சுர்ககும் மழை போல புலவர்கள் கை நிரம்பும்படி பரிசு கொடுக்கும் மன்னன்” என்று நன்னனைப் புகழ்ந்திருக்கிறார்.
நவிர மலையில் “காரியுண்டிக் கடவுள்” வீற்றிருப்பதாகப் பத்துப் பாடலில் கூறப்பட்டுள்ளது.“காரி” என்ற சொல்லுக்கு கருமை என்பது பொருளாகும்.“காரி உண்டிக் கடவுள்” என்பதற்கு ஆலம் உண்ட நீலகண்டப் பெருமானைக் குறிப்பதாகும்.இப்பெயர் பிற்காலத்தில் “கார் கண்ட ஈசுவரன்” என்றும், பின் “கரை கண்ட ஈசுவரன்” என்றும் “கரைகண்டேசுவரன்” என்றும் மருவியிருக்கிறது.எனவேதான் பர்வத மலையை அடுத்துள்ல ஊரில் சிவத்தலங்கள் இப்பெயர் விளங்குகின்றன.பாரியாறு என்னும் சிற்றூரும், காரியந்தல், காரிமங்கலம் முதலிய ஊர்களும் காரிகண்ட ஈசுவரனுடன் தொடர்புடியயவாகும்.
சங்க காலத்தில் “செங்கண்மா” என்று வழங்கப் பெற்ற செங்கம் என்ற ஊரைத் தலைநகராக்க கொண்டு ஆட்சி புரிந்து வந்த நன்னன், பர்வத மலையில் எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானைக் குலதெய்வமாக வழிபட்டு வந்தான். மலையின் உச்சியில் ஈசுவரனுக்குக் கோயில் கட்டியதோடு, பாதாளச் சுனையையும், தான் தங்கி வழிபடுவதற்காக ஒரு கோட்டையையும் அமைத்திருந்தான்.நீலகண்டேசுவரரின் பேரருளால் இம்மன்னன் பேராற்றலும், பெருஞ்செல்வரும் பெற்று தன் பகைவர்களை வென்று வாகை சூடி, வல்லரசனாகவும் நல்லரசனாகவும் ஆட்சி புரிந்தான்.
சில கோணங்களிலிருந்து பார்க்கும் போது, இம்மலையின் மூன்று சிகரங்கல் சிவபெருமானின் திரிசூலம் போல் தொற்றமளிப்பதைக் கண்ட ஒரு புலவர், இதற்கு “திரிசூலகிரி” என்று பெயர் சூட்டி, அப்பெயர் கொண்ட ஒரு புராணமே பாடியுள்ளார்.
சிவராத்திரியன்று இறைவனுக்கு நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நட்ககும்.அக்கம் பக்கத்திலுள்ள கிராம மக்கள் பஜனை செய்து கொண்டு கூட்டம் கூட்டமாக மலையேறிச் சென்று தரிசனம் செய்வார்கள்.
முற்காலத்தில் இம்மலை மேல் ஏறி தினமும் பூஜை செய்து வந்தார்கள்.பின்பு மாதிமங்கலத்திலிருந்து ஒரு வீரசைவர் திங்கட்கிழமைதோறும் மல்லிகார்ஜுனருக்கு வழிபாடு செய்து உச்சியில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு வருவார்.தற்போது அண்ணாமலையில் நடைபெறுவது போல் கார்த்திகை தீபத்தன்று மட்டும் விளக்கேற்றி வருகிறார்கள்.பர்வத மலையில் அண்ணாமலையார் பாதம் பட்டிருக்கிறது.அருணாசல ஜோதியும் பிரகாசிக்கிறது.