பர்வதமலை – 06

ஒரு நாள் “இந்தியன் ரெவ்யூ” பத்திரிகையின் ஆசிரியர் எம்.சி. சுப்பிரமணியம் என்னைத் தொலைபேசியில் அழைத்து இளமைப் பருவத்தில் பர்வத மலையைச் சுற்றிலுமுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்த நினைவுகளெல்லாம் தன் நெஞ்சில் கிளர்ந்து எழுந்த உற்சாகத்தில் உணர்ச்சி மேலிடப் பேசினார். “அருணாசல மகிமை”யில் சற்றும் எதிர்பாராத திருப்பமாக பர்வத மலையின் மகிமையும் இணைந்து கொண்டது இறையருளின் சிறப்பே”  என்று கூறினார். மலைக்கு வடக்குப்புறம் உள்ள கேட்டவரம்பாளையத்திற்குச் சென்று, அங்குள்ள முதியவர்களிடம் மேலும் தகவல்கள் சேகரித்து எழுதும்படி கூறினார்.

அதற்கு அடுத்த நாள் எழுத்தாளர் “மகரம்” எனக்கு எழுதிய கடிதத்திலும் கேட்டவரம்பாளையத்திற்குச் சென்று பர்வத மலையின் கம்பீரத்தைக் காணும்படி என்னைத் தூண்டியிருந்தார்.

நான் நேசிக்கும் பர்வத மலை மீண்டும் வரும்படி எனக்கு அழைப்பு விடுத்தது.நேரம் கடத்தாமல் நண்பர்களோடு புறப்பட்டு விட்டேன்.

போளூரைக் கடந்துதான் கேட்டவரம்பாளையத்திற்குச் செல்ல வேண்டும்.வேலூரைக் கடந்துதான் போளூருக்குச் செல்ல வேண்டும்.எனவே, இரத்தினகிரி பாலமுருக்ன சந்நிதியில் ஓரிரவு தங்கி விட்டு, மறுநாட்காலை பிரயாணத்தைத் தொடருவதென்று முடிவு செய்தோம்.

“ஆறுபடை வீடுகளில் கோலோச்சும் ஆறுமுகனே, இங்கு ஒரு கட்டி  கற்பூரத்திற்குக் கூடக் கதியின்றி நீ தவிப்பதேன்? உனக்கு உண்மையாகவே சக்தியிருந்தால் கவனிப்பாரற்று, கேட்பாரற்று இப்படி கற்சிலையாக அமர்ந்திருப்பாயா?” என்று மூன்று ஆண்டுகளுக்கு முன் (1967) பகுத்தறிவு வசனம் பேசியவரே, ஆயிரம் ஆயிரமாக பணம் வந்து குவிந்து கொண்டிருப்பதையும், வெள்ளி, தங்க, வைர நகைகளாக வந்து சேர்ந்து கொண்டிருப்பதையும் பார்த்து, “என்னே உந்தன் சக்தி! என்னே உந்தன் மகிமை!” என்று பிரமித்துப் போய், பக்தி நெறியின் அவசியத்தையும், சமய வாழ்வின் சிறப்பையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்.அன்று பகுத்தாறிவு பேசியவர், இன்று பாலமுருகனின் அடிமையாகி, அவரது மலரடிகளை இரு கரங்களால் பற்றி, கல் நெஞ்சும் கரைய கண்ணீர் விட்டுக் கதறியழுகிறார்.முருகனோ, அப்பச்சிளம் குழந்தையைக் கண்டு புன்னகை புரிந்து கொண்டிருக்கிறார்.

அன்று ரத்தினகிரி சாமியாருடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.அதாவது அவர் சிலேட்டில் எழுதிக் காட்டிக் கொண்டிருந்தார்.ஆலயத்தின் வளர்ச்சியைப் பற்றிக் கூறினார்.இரத்தினகிரி மலையிலிருந்து சுற்றுப் புறம் பார்த்தால் கண்னுக்கும் உள்ளத்திற்கும் குளிர்ச்சியாக இருக்கிறது. பச்சை வயல்களும், பசுஞ்சோலைகளும், தென்னந்தோப்புகளும், அருகில் தெரியும் குன்றுகளும், தொலைவில் தெரியும் மலைத்தொடர்ச்சிகளும் நம்மை அமைதி ஊஞ்சலில் அமர வைத்து, மதுர கீதம் பாடுகின்றன. ஓர் இரவு அங்கு படுத்து எழுந்தது, புத்துணர்ச்சியும், புதுத்தென்பும் பெறுகிறோம்.

போளூரிலிருந்து கேட்டவரம்பாளையத்திற்கு பயணமானோம்.இருபுறமும் இயற்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தளித்தன.“கேட்டவரம்” என்ற தனது நாவலில் எழுத்தாலர் அநுத்தமா எழுதியிருந்த காட்சிகளை கண்ணெதிரே கண்டு களித்தோம்.“எள்ளுப்பாறை”யின் வனப்பு மிக்க வயல்களையும், “வள்ளூர்” ஏரியின் தெள்ளிய நீரையும் ரசித்துக் கொண்டே கேட்டவரம்பாளையம் வந்து சேர்ந்தோம்.

ஊருக்குள் செல்வதற்கு முன், வயல்களுக்கு நடுவில் காட்சி தரும் சிம்மேசுவரர் ஆலயமும், பின்னால் வானுலகை எட்டிப்பிடிக்க முயல்வது போல், முகில் கூட்டத்தை முட்டி நிற்கும் பர்வத மலையின் சொல்லில் அடங்கா சௌந்தர்யத் தோற்றமும் நெஞ்சை அள்ளுகின்றன. நம்மை ஒரு கணம் நிற்க வைத்து, வாழ்நாளெல்லாம் அழகையும், அமைதியையும் தேடி அலையும் மனிதனே, நேரம் கிடைத்த போது இந்தப் பக்கம் வந்து போ, செயற்கையழகிலும், களியாட்டங்களிலும் நீ என்றுமே காண முடியாத  பேரின்பத்தை இங்கு பெறலாம். இதுவே தெய்வ தரிசனம் என்று இயற்கையன்னை தாய்க்குரிய கருணை உள்ளத்தோடு நம்மை அழைப்பது காதில் விழுகிறது.அது தெய்வத்தின் குரலாகக் கேட்கிறது.

ஆலயத்தினுள் செல்கிறோம்.கோபுர வாசல் அடைக்கப்பட்டிருப்பதால் வடப்புற வாயில் வழியாகப் போகிறோம்.சிம்மேசுவரரையும், திரிபுரசுந்தரியையும் தரிசித்து விட்டு வெளியே வருகிறோம்.அருகிலிருக்கும் ஒரு சிறு மலையில் மக்களின் கோலாகல ஆரவாரம் கேட்கிறது.

“அது என்ன?” என்று விசாரித்தேன்.

“அங்கே ஒரு முருகன் கோயில் கட்டப் போறாங்க. ரொம்ப வருஷங்களாக மலைமேலே அரைகுறையாகக் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று இருந்தது.நாலு நாளைக்கு முன்னே நம்ம ஊர்லே ஒருத்தருக்குக் கனவில் முருகர் வந்து தனக்கு அங்கு கோயில் கட்டும்படி கட்டளையிட்டாரு.அதனாலே ஊர் ஜனங்களெல்லாம் கூடி உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு நாலைக்கு முன்னே அங்கெ ஒரு சுனை இருப்பது தெரிஞ்சுது.பாறைகளை புரட்டிப் போட்டு அதையும் பெரிசு செய்துகிட்டிருக்காங்க” என்று உள்ளூர் அன்பர் ஒருவர் பதில் கூறினார்.

கேட்டவரம்பாளையம் ஊருக்குள் எங்கள் கார் நுழைந்தது.கடை வீதியைக் கடந்து லட்சுமி நாராயணசுவாமி ஆலயத்திற்குச் சென்றோம்.அங்கு விமானமெல்லாம் புதுப்பிக்கப்பட்டு, அண்மையில் குடமுழுக்கு விழாவும் நடைபெற்றுள்ளதாக அறிந்தோம்.  ஆலயத்தில் அமர்ந்தவாறே அங்கு அழைத்து வரப்பட்ட வயோதிகர்கள் மாதிமங்கலம் சின்னசாமி உடையார், ராமநாத ஐயர் இருவரிடமும் பர்வத மலையைப் பற்றி நான் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அந்தணர் தெருவிலிருந்து ஒரு பள்ளி ஆசிரியர் வந்து என்னைப் பஜனை மடத்திற்கு வரும்படி அழைத்தார். அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்ரீராமநவமி உற்சவத்தைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்ததால், அந்த இடத்தைத் தரிசிக்க ஆவலுடன் சென்றேன்.

அறுபது வருடங்களுக்கு முன் (1910) தொடங்கிய இந்த உற்சவத்திற்கு பாகவதர்களும், பக்தர்களும் பல ஊர்களிலிருந்து வந்து கூடுகிறார்கள் என்றும், ஒரு வாரத்திற்கு மேல் பஜனையும், உபந்நியாசங்களும், கச்சேரிகளும் இடைவிடாமல் நடைபெறும் என்றும், அந்த ஊர் மக்கள் இதைத் தங்கள் வீட்டு விழாவாகக் கருதி, உற்சாகத்துடன் ஒத்துழைப்பார்கள் என்றும் கூறினார்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மகிமை. அதை சொல்லிக் கொள்வதில் அவ்வூர் வாசிகளுக்குத்தான் எத்தனை பெருமை!

கேட்டவரம்பாளையத்தில், அம்மூர் சுவாமிகள் என்ற அவலூர் சீனுவாச ஐயங்கார் தங்கியிருந்ததாகவும், அவர் பரம ராம பக்தர் என்றும், நின்றுகொண்டேதான் பஜனையைக் கேட்பார் என்று கூறினார்கள். அவரைப் பின்பற்றி, ஸ்ரீராமநவமி உற்சவத்தில் இன்றும் பாகவதர்கள் நின்று கொண்டே நாம சங்கீர்த்தனம் செய்யும் சிறப்பைப் பற்றியும் அறிந்தேன்.அதற்கு அம்மூர் சுவாமிகள் கொடுத்த விளக்கத்தை அறிந்த போது, ஸ்ரீ ஆஞ்சநேயரின் ராம பக்தியை எண்ணி எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தேன்.

நாம் படுத்துக் கொண்டு ராமன் புகழ் பாடினால், ஆஞ்சநேயர் உட்கார்ந்து கொண்டு கேட்பாராம்.நாம் உட்கார்ந்து கொண்டு பாடினால், ஆஞ்சநேயர் நின்று கொண்டு கேட்பாராம்.நாம் நின்று கொண்டு பாடினால், அனுமார் ஆனந்தக் கண்ணீருடன் நர்த்தனம் செய்து கொண்டெ கேட்பாராம்.

கிருஷ்ணமூர்த்தியும், சாம்பமூர்த்தியும், காமகோடிப் பெரியவர்கள் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளிய நாட்களை நினைவு கூர்ந்தார்கள். ஸ்ரீ சந்திரமௌளீசுவரர்  பூஜைக்காக அவர்கள் பர்வத மலையிலுள்ள மகாவில்வத்தைப் பறித்துக் கொண்டு வந்து ஸ்ரீமடத்தில் கொடுப்பார்களாம்.

கிடைத்தற்கரிய மகா வில்வ தளங்களைக் கண்டதும், பெரும் மகிழ்ச்சியடைந்த காமகோடிப் பெரியவர், மலையேறிச் சென்று அப்புனித மரத்தைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினாராம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அது இயலாமல் போய் விட்டதாம்.

பின்னர், தெருக்கோடியில் இருக்கும் காசிவிசுவநாதர் கோயிலுக்குச் சென்றோம்.கருவறையில் இருக்கும் பாணலிங்கத்தைத் தரிசித்தோம்.கோஷ்ட கணபதி நின்ற திருக்கோலத்தில் நம்மைக் கவருகிறார்.

அந்தக் காலத்தில் ஊர்ச் சிறுவர்களெல்லாம் சேர்ந்து கருங்கற்களைப் புரட்டித் தூக்கி வந்து தளவரிசை போட்டு மண்டபத்தைக் கட்டிய நிகழ்ச்சியைப் பெருமையுடன் விவரித்தார் கிருஷ்ணமூர்த்தி. பழுது அடைந்திருக்கும் பகுதிகளையும், மதிற் சுவர்களையும் சீர்செய்து குடமுழுக்கு நடத்துவதற்கான முயற்ச்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார் அவர்.

அந்த ஊருக்கு முதலில் கட்டரம்பாளையும் என்றே பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.இன்றும் சுற்றுப்புறத்திலுள்ல கிராம மக்கல் கட்ரம்பாளையம் என்றே குறிப்பிடுகிறார்கள். ஊரின் வடமேற்கு எல்லையில் ஒரு சிறு மலையிலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள்தான் அவ்வூருக்கு புதுப்பெயர் ஏற்படக் காரணமாயிருந்திருக்கிறார் என்று அன்பர்கள் சொன்னார்கள்.

அவர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், கேட்டவரத்தையெல்லாம் கொடுக்கும் எம்பெருமாள்.எனவேதான் கட்டரம்பாளைய்ம், கேட்டவரம்பாளையம் ஆயிற்று அதையும் சுருக்கி “கேட்டவரம்” என்று இப்போது அழைக்கிறார்கள்.

கேட்டவரம் மலையில் உறையும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளைத் தரிசிக்கச் சென்றோம்.கேட்டவர்ம ஏரியின் கரையோரமாக அம்மலையை நோக்கிச் செல்லும் போது மீண்டும் இயற்கை அன்னை எழிர்கோலாட்ட்ம போட்டு நமக்கு நடைபாதை விரிக்கிறாள்.கரடு முரடான பாதையையும் பொருட்படுத்தாமல், பரவசத் துடிப்போடு நாம் செல்கிறோம்.சற்றுத் தொலைவில் பசுமை பொழியும் பொலிவோடு நிமிர்ந்து நிற்கும் ஜவ்வாது மலைத்தொடர், வழித் துணையாக நம்முடனேயே வருகிறது.

மலையடிவாரத்தில் கார் வந்து நின்றதும், உச்சிப் பாறையொன்றில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த இரு குரங்குகள் தனிமை கலைந்து, “இவர்கள் யார்?எதற்காக இப்போது இங்கே வந்தார்கள்?” என்பது போல் எங்களைப் பார்த்தன.அந்தக் காட்சி திருப்பதி மலையை நினைவுபடுத்தியது.

“மலையடிவாரத்தில் வாழும் மக்களுக்கு இந்தக் கோயில்தான் திருப்பதி….” என்றார் உடன் வந்த பட்டர்.பின்பக்கம் வழியாக மலையேறினோம். வழுக்குப் பாறைகளும், முட்செடிகளும், கற்களும் மண்டிக் கிடந்த அந்தக் கரடுமுரடான பாதையில் ஏறும்;போது, பர்வதமலைப் பயணம் நினைவுக்கு வந்தது.  அடர்ந்த மரங்களினூடே  அவ்வப்போது பர்வத மலைச்சிகரம் தெரிந்தது. அங்கிருந்து பார்க்கும் போது அதன் வடிவமும், வனப்பும் தனிச் சோபையுடன் விளங்கியது.

கேட்டவரம் மலையிலிருந்து பர்வத மலைச் சிகரம் இன்னும் உயரமாக, ஆலய கோபுரம் போல் தோற்றமளிக்கிறது.அதைப் பார்த்து வியந்த பழநி, “அடேயப்பா!அது மேலேயா நாம் ஏறினோம்.நினைச்சாலே ஆச்சரியமாயிருக்கிறதே” எனக் கூறிவிட்டு பாபுவைக் கடைக்கண்ணால் பார்த்தார். எங்களுடன் பர்வத மலை ஏறமுடியாமல் போயிற்றே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்  பாபுவை வெறுப்பூட்டுவதற்காக இப்படி அடிக்கடி பழநி சொல்லிக் கொண்டிருந்தார்.

நாங்கள் கேட்டவரத்தை அளிக்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளையும், அலர்மேலுமங்கைப் பெருமாட்டியையும் தரிசித்து விட்டு கீழே இறங்கி வந்தோம். “தொலைந்தார்களடா” என்று குரங்குகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன!அன்று மகாளய அமாவாசை புண்ணியதினம்.மாலை ஆறு மணி இருக்கும். கேட்டவரம்பாளையத்திலுள்ல பம்ப் செட் ஒன்றிலிருந்து பயிர்களுக்குப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் நீரில் ஆசை தீர நீராடிவிட்டு, திருநீறு பூசி, பர்வதநாதரை நோக்கிக் கும்பிட்டோம். பூண்டிக்குச் சென்று திண்ணையில் அமர்ந்திருக்கும் மகானைத் தரிசிக்கலாம் என்று ஓர் எண்ணம் தோன்றியது.அன்றிரவு அத்திருச் சந்நிதியிலேயே தங்கிவிட்டு, மறுநாட் காலை பர்வத மலையை வலம் வருவது என்று முடிவு செய்தோம்.அடுத்த கணம் எங்கள் கார் பூண்டி கிராமத்தை நோக்கிப் பறந்தது.