கார்வேட் நகர் சென்று காஞ்சிப் பெரியவரை சந்தித்ததைப் பற்றியும், அதற்குப் பிறகு பர்வத மலையை கிரிவலம் வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியதையும் சாமியாரிடம் கூறி விட்டு, “நாளைக்கு கிரிப்பிரதட்சணம் போகலாம்னு இருக்கேன். உங்க ஆசீர்வாதத்திற்காகத்தான் வந்தேன்” என்றேன் நான்.
“போய் வாங்க, எல்லாம் பார்த்துட்டு வாங்க” என்றார் சாமியார்.
“ராத்திரி இங்கேயே தங்கிவிட்டுக் காலையிலே போகலாம்னு இருக்கோம்” என்றேன்.
“அப்படியே செய்யுங்க” என்று சாமையார் கூறியதும், அருகிலிருந்த பூண்டி மணியம் கோவிந்தராஜுலு நாயுடு, “சாமி, அவருதான் சொம்மா வந்து போறாரே, எல்லா மகிமைகளையும் பத்தி நீங்க விவரமாகச் சொன்னாதானே அவரு எழுதுவாரு” என்று சாமியாரிடம் கூறினார். உடனே சாமியார் “அவருதான் எல்லாம் தெளிவா, தத்துவமா எழுதறாரே” என்று பதிலளித்தார்.எனக்கு உண்மையிலேயே தூக்கிவாரிப் போட்டது. என் ஆச்சரியத்தைப் புரிந்து கோண்ட மணியக்காரர், “நம்ம பத்திரிகை வந்ததும் சாமியாருக்குப் படித்து காட்டறேனுங்க… ஒரு தரத்திற்கு இரண்டு தரமா படிக்கச் சொல்லி கவனமா கேட்கறாரு….” என்றார்.
“உங்களைப் பற்றியும் பர்வத மலையைப் பற்றியும் ஜனங்க நிறைய தெரிஞ்சுக்க ஆசைப்படாறாங்க… எல்லாத்தையும் மொத்தமா சொன்னீங்கன்னா, எழுதலாம்னு பார்க்கறேன்” என்றேன் நான்.
சாமியார் மௌனமாக இருந்தார்.
“ஐயா கேட்கறாரே, நீங்க என்னா பதில் சொல்றீங்க?” என்று குறுக்கிட்டார் மணியம்.
“போய் வரட்டும், கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்” என்று பதிலளித்தார் சாமியார்.
அன்று சாமியார் நன்றாகப் பேசினார். சில நாட்கள் ஒன்றுமே பேசமாட்டார். சில நாட்கள் பேசத் தொடங்கினா, அரிய பெரிய கருத்துக்குள்ள பாடல்களெல்லாம் கூறி விளக்குவார். பழைய நிகழ்ச்சிகளை சுவைபட விவரிப்பார்.
சாமியாருக்கு தீபாராதனை செய்து படுக்க வைத்து விட்டார்கள். அவரது தலைப்பக்கம் நின்றிருந்த நான் “சாமி, நீங்க பர்வத மலைக்குப் போய் வந்ததைப் பற்றி ஏதாவது சொல்லுங்க” என்று கேட்டேன்.
“அங்கெல்லாம் தெருவுங்க, ஓட்டல் கடையெல்லாம் இருக்குது. நான் மாடி மேலே ஏறிப் போய்க் கதவைத் தட்டினேன். உள்ளே பன்னிரண்டு பேர் உட்கார்ந்து கிட்டிருந்தாங்க. சரி, காலம், நேரம், சூழ்நிலை சரியில்லையென்று நான் இறங்கி வந்துட்டேன்” என்றார் சாமியார்.
சம்பந்தமில்லாத அந்தப் பேச்சில் ஆழ்ந்த பொருள் புதைந்திருப்பதாக எனக்குத் தோன்றியது.
பர்வத மலையைப் பற்றிய வேறெந்தக் கேள்விக்கும் சாமியார் பின்னர் பதிலே கூறவில்லை.
காஞ்சி சங்கராசாரியாரை நேரில் எப்போதாவது பார்த்திருக்கீங்களா சாமி?” என்று கேட்டேன். அவங்க எல்லாம் பூஜை, அபிஷேகம், ஆராதனை என்று இருக்கிறவங்க. எட்டி, கிட்டி இருந்து பார்க்க வேண்டியதுதான். “நீங்க பபடி எப்போதாவது பார்த்திருக்கீங்களா?” என்று கேட்டேன்.
“பார்த்திருக்கேன், நல்லா பார்த்திருக்கேன்” என்றார் சாமியார்.
“எங்கே?”
“மேட்டுப்பளையத்திலே” என்றார் சாமியார். நான் புரியாமல் மணியக்காரரைப் பார்த்தேன். அவர், “ஆமாங்க, இருக்கும், இங்கே பக்கத்திலே மேட்டுப்பாலையம் மடத்திலே நாற்பது வருஷங்களுக்கு முன்பு காஞ்சி சங்கராசாரியார் வந்து தங்கி பூஜை செய்திருக்கிறார். அப்போ பார்த்ததைத்தான் சாமியார் சொல்றாரு போலிருக்குது” என்றார்.
அன்று நவராத்திரி தினம்,. அதிகாலையில், அம்பிகையின் தவத்திற்காக, சேய் முருகப்பெருமான் வரவழைத்த சேய்யாற்றில் நீராடிவிட்டு, சாமியாரிடம் விடைபெற்றுக் கொண்டு பர்வதமலையை வலம் வருவதார்காகப் புறப்பட்டோம்.
பூண்டியிலிருந்து கடலாடி செல்லும் வழியில் இடப்புறம் ஸ்ரீ சக்ர மேருவாக திருவண்ணாமலை தோற்றமளிக்க, வலப்புரம் பர்வதமலை சிவலிங்கமாக காட்சி தர, அந்த அற்புத தரிசனத்தை மாறி மாறிக் கண்டு உள்ளம் களிநடம் புரிய உலக நினைவுகள் மெள்ள மெள்ள மறைய, நாங்கள் பர்வதமலை அடிவாரத்தை நோக்கிப் பயணமானோம்.
மாதிமங்கலத்தில் சிவலிங்கம் போல் காட்சி தரும் மலைச்சிகரம், கடலாடி நோக்கிச் செல்லும் போது நந்திகேசுவரராக காட்சி தருகிறது. ஓடி, ஒளிந்து, மறைந்து, மறைந்து, உயர்ந்து, ஓங்கி, அந்தச் சிகரம் நம்முடம் கண்ணாமூச்சி விளையாடுகிறது. அதிலிருந்து கண்களை அகற்ற முடியா வண்ணம், கண் கொள்ளாக் காட்சியாக அது நம்மைக் கவர்ந்து, கருத்தை அள்ளிக் கொண்டு போகிறது.
தாமரைப்பாக்கம் திருப்பத்திற்கருகில், எதிர்ப்புறமாக சைக்கிளில் பூண்டி மணியம் நாகேசுவர ஐயர் எங்கோ வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தார். அவரை நிறுத்தி நாங்கள் வந்த பணியக் கூறினோம். அவருடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
“நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். வசூலை முடித்துக் கொண்டு ஒரு நொடியில் வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார் அவர்.
வீட்டுக்குச் சென்றதும் திருமதி நாகேசுவரன் அடக்க முடியாத ஆனந்தத்துடன் எங்களை வரவேற்றார்.
கையில் எடுத்துக் கொண்டு போக எங்களுக்கு உப்புமா செய்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார் அந்த அம்மாள். வீண் சிரமம் வேண்டாம் என்றும், பன்னிரண்டு மணிக்கெல்லாம் திரும்பி வந்து சாப்பாடு சாப்பிடுவதாகவும் கூறிவிட்டு கிரிவலத்திற்கு நாங்கள் கிளம்பினோம்.
உங்களுக்காக சமைத்து வைத்துக் காத்துக் கொண்டிருப்பேன். சீக்கிரமா வந்துடுங்கோ” என்று அந்த அம்மாள் எங்களுக்கு விடை கொடுத்தார். நாங்கள் தர்மலிங்கத்தைத் தேடினோம். அவர் எங்கோ போய்விட்டிருந்தார். கழனிக்குப் போயிருந்த பாண்டுவை வரவழைத்தோம். அவர் துணைக்கு “குழந்தை” என்பவரை அழைத்துக் கொண்டு வந்தார். மலை ஏறும்போது ஒரு தாத்தா வந்தார். மலை சுற்றும் போது ஒரு குழந்தை வந்தார்.
மலையைச் சுற்றுவதற்காக நாங்கள் ஐவரும் புறப்பட்டோம். திரௌபதி அம்மன் கோயிலருகில் வரும்போது மணி சரியாக ஒன்பது அடித்தது. அம்மனுக்குத் தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. தெருவிலிருந்த படியே அம்பிகையைத் தரிசித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். ஏரிக்கரையருகில் செல்லும் போது இரண்டு பெண்மணிகள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். இருவரும் மூன்று மைலிலிருக்கும் பட்டியந்தல் என்ற கிராமத்திற்குப் போகிறார்கள்.
“என்ன, மலைக்குப் போறீங்களா?” என்று கேட்டாள் சின்னம்மா.
“இல்லேம்மா, மலையைச் சுற்றி வரப் போறோம்” என்று பதிலளித்தார் பாண்டு.
“ஐயா, மலைமேலே ஏறி கோயிலெல்லாம் பார்க்கலையா?” என்று கேட்டார் அம்மாகண்ணு.
“பார்த்துட்டோம்மா….”
“நீங்க மலையேறிட்டு, மலையையும் சுத்தறீங்க. ரொம்ப புண்ணியம். இது திருவண்ணாமலை சுத்தறதோட ஒசத்தி தெரியுமா? அங்கே ஒரு அடிக்கு ஒரு லிங்கம். இங்கே ஒரு பிடிக்கு ஒரு லிங்கம்…” என்றார் சின்னம்மா பெருமையுடன்.
திருவண்ணாமலை சுற்றுப்பாதை சுமார் ஒன்பது மைல். பர்வதமலை சுற்றுப்பாதை சுமார் பதினைந்து மைல். திருவண்ணாமலையைச் சுற்றிலும் நல்ல பாதையிருக்கிறது. பர்வதமலையைச் சுற்றி சரியான பாதையே கிடையாது. வயல் வரப்புகளிலும், சுடு மணல் ஓடையிலும், கல்லிலும், முள்ளிலும் அவதிப்பட்டுக் கொண்டுதான் நடந்தாக வேண்டும். முன்பு நல்ல பாதை இருந்ததாம். அந்தப் பாதையில்தான் மார்கழி மாதம் முதல் நாளன்று மாதிமங்கலம் ஈசுவரன் மலை வலம் வருவது வழக்கமாம். இப்போது பாதை பெரும்பாலும் விளை நிலங்களாக மாறி விட்டன. அங்கே நிலக்கடலைப் பயிர் ஆகிறது. மார்கழி மாதத்திற்குள் கடலையை அறுத்து, வேலிகளை அகற்றி சுவாமி போவதற்கு வழி ஏற்படுத்தித் தந்து விடுவார்களாம்!
நல்ல வேளையாக சின்னம்மாவின் துணையும், ஆலோசனையும் கிடைக்காமலிருந்தால் ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு போய்த் திண்டாடியிருப்போம்.
“நீங்க ஏரியை சுற்றிக் கொண்டு போனீங்கன்னா ரொம்ப நடக்க வேண்டியிருக்கும். அநாவசிய சுத்துங்க. அதுவும் இந்த வெய்யிலில் வெந்து போயிடுவீங்க. எங்களோடேயே வாங்க. பட்டியந்தல் வரைக்கும் போறோம். பேசிக்கிட்டே போவோம்” என்று சின்னம்மா கூறவே, எல்லோரும் பேசிக்கொண்டே நடந்தோம்.
“அதோ தெரியுது பாருங்க, அதான் பச்சையம்மா கோயில்” என்றார் பாண்டு.
“மாதிமங்கலத்திலே ஒரு பச்சையம்மன் கோயில் இருப்பதாக சொன்னாங்களே?”
“ஆமாங்க, அது மலைக்குக் கிழக்குப் பக்கத்திலே இருக்குங்க. இது மேற்குப் பக்கத்திலே இருக்கு. இந்த இடமும் கடலாடியைச் சேர்ந்ததுதான் என்றார் பாண்டு.
நாங்கள் பச்சையம்மன் கோயிலுக்குச் சென்றோம். பர்வத மலையைப் பற்றி நான் முதன் முதலில் பேசிய போது, பூண்டி மகான் “பச்சையம்மா கோயில்” என்று கூறியது அப்போது என் நினைவுக்கு வந்தது.
வெளியில் பிரும்மாண்ட அளவில் சப்த முனிகள் வீற்றிருக்கிறார்கள். உள்ளே பச்சையம்மன் சிலையும், வலப்புறம் சிவலிங்கமும், இடப்புறம் விநாயகரும் எழுந்தருளியிருக்கிறார்கள். அங்கே திரிசூலம் ஒன்றும் இருக்கிறது.
மன்னார்சாமி, நந்திகேசுவரர் ஒரு புறமும், திருமால், லட்சுமி மறுபுறமும் காட்சி தருகிறார்கள்.
கருவறையின் இடப்புறம் கோடியில் இருக்கும் முனிவர் சிலையை “பிருங்கிரிஷி” என்று கூறினார் பூசாரி. அக்கோயிலில் ஆடி மாதம் சிறப்பாக உற்சவம் நடைபெறுவதாகவும் அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன்.