பர்வதமலை – 08

பச்சையம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, நீரற்ற ஓடையில் இறங்கி நடந்தோம். சின்னம்மா பேச்சு கொடுத்தார்.

“சாமி, பர்வதமலைக்கு மொத்தம் ஏழு நடைங்க. அத்தனையும் சுத்திக்கிட்டு நீங்க போகணும்.  சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போறீங்க…?”

“ஏதோ, பழம், ரொட்டி, பிஸ்கெட் எல்லாம் வெச்சிருக்கேம்மா”

“அதெல்லாம் போதுமாங்க. நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போங்க, சோறாக்கிப் போடறோம்.”

“பரவாயில்லை, இருக்கட்டும்மா”

“சாமி, நாங்க அப்படி ஒண்ணும் தீண்டப்படாதவங்க இல்லீங்க. அதுக்காக ரோசனை பண்ணாதீங்க”

“அதுக்குச் சொல்லலேம்மா. நாங்களே நேரம் கழிச்சுக் கிளம்பியிருக்கோம்.  வழியெல்லாம் தங்கித் தங்கிப் போனா நேரமாயிடுமே. அதுக்காகத்தான் சொல்றேன்.”

“சாமி, நாங்க ஏழைப்பட்டவங்கதான். சாதாரண வீடுதான். வந்துட்டுப் போனீங்கன்னா மனசுக்கு சந்தோஷமாக இருக்கும்….”

கிராம மக்களின் வெள்ளை உள்ளத்திற்கும், களங்கமில்லா பேச்சுக்கும் அடிமையாகாதவர்கள் உண்டோ?”

“அம்மா, நீங்க சிறிய வீட்டுலே இருந்துகிட்டு பெரிய மனசோட இருக்கீங்க.  ரொம்ப பேர் பெரிய வீட்டுலே இருந்துகிட்டு சின்ன மனசோட இருக்காங்க. நீங்க எங்களை அன்பா அழைகிறீங்களே, அதுலேயே எங்க வயிறு நிறைஞ்சுப் போச்சும்மா…” என்றேன் நான். தெய்வத்தின் கருணையை ஏழைகளின் மாசற்ற அன்பிலே காண முடிகிறது.

“ஏம்மா, உங்க ரெண்டு பேருக்கும் பட்டியந்தல்தானா ஊர்?” என்று கேட்டார் பாபு.

“இல்லீங்க, நான் கடலாடியிலே பொண்ணு கொடுத்திருக்கேன். இவங்க பட்டீந்தல்லே பொண்ணு கொடுத்திருக்காங்க…”

“ஓகோ, நீங்க மகளைப் பார்த்துட்டு வறீங்க. இவங்க மகளைப் பார்க்கப் போறாங்களா?”

“சாமி, அதோ தெரியுது பாருங்க தென்னந்தோப்பு. அதான் எங்க கிராமம். அங்கே வந்து கொஞ்சம் இளநீராவது குடிச்சுட்டுப் போங்க. அப்போதான் எங்க மனசு குளிர்ந்து போகும். மறுக்காதீங்க ஐயா, வெயில் நேரம். ரொம்ப களைப்பாயிருக்கும். நடையைப் பார்க்காமே வந்துட்டுப் போங்க…” பெற்ற தாயினும் பரிவுடன் அழைத்தார் சின்னம்மா. அம்மாகண்ணும் சேர்ந்து கொண்டார். “ஆமாங்க, நம்ம மரத்திலே இருந்தும் நாலு காய் வெட்டிப் போடச் சொல்றேன். குடிச்சுட்டுப் போங்க…”

நாங்கள் யோசித்துப் பார்த்தோம். இந்தத் தூய்மையான விருந்தோம்பலை நிராகரிப்பது மகா பாவம் என்று தோன்றியது. அவர்கள் வழிகாட்ட வர்பபு மேலே நடந்து பட்டியந்தல் குக்கிராமத்தை அடைந்தோம்.

போதும், போதும் என்று நாங்கள் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும் வரையில்  இளநீரை வெட்டிப் போட்டார்கள். அவர்களின் உள்ளம் போலவே அது கற்கண்டாகத் தித்தித்தது. எங்களிடமிருந்த புட்டியிலும் நிரப்பிக் கொடுத்தார்கள். வழுக்கையை எடுத்துக் கொடுத்தார்கள். சற்று முற்றலான தேங்காயை காகிதத்தில் கட்டிக் தந்தார்கள். எங்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் போது அவர்கள் கண்கள் கலங்கி விட்டன. விடைபெற்ற எங்கள் கண்களிலும் நீர் முட்டி நின்றது.

“சாமி, எங்களை மறந்துடாதீங்க. இந்த பக்கம் மறுபடியும் வந்தா வீட்டுக்கு வந்து போங்க”

“ஆகட்டும் அம்மா, உங்களை எங்களாலே மறக்கவே முடியாது”

பாண்டு கிட்டே சின்னம்ம மெல்லிய குரலில் கூறினார். “இவங்களைப் பார்த்து அழைச்சுகிட்டு போப்பா. காட்டுலே நடந்து பழக்கமில்லாதவங்க. பாவம், போற வழியிலே எங்கேயாவது நிழல் இருந்தா கொஞ்ச நேரம் தங்கிட்டுப் போங்க” என்றார்.

அவர்கள் யாரோ, நாங்கள் யாரோ. வழிப் பயணிகளாக வந்தார்கள். வாழ்க்கைய்ல் மறக்க முடியாதவர்களாக ஒன்றிப் போய் விட்டார்கள். பயன் கருதாத இந்தப் பேரன்புக்குப் பெயர் என்ன? முன்பின் அறியாதவர்களின் உள்ளங்கள் தேடிக்கொண்ட இந்த உறவுக்குப் பொருள் என்ன?

பர்வதமலைச் சிகரத்தைப் போன்று உயர்ந்துள்ள இவ்விரு பெண்மணிகளின் உள்ளங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே நடந்து கொண்டேயிருந்தோம். சுந்தரமும், பாபுவும் பர்வதமலைச் சிகரம் ஒரு மைலுக்கு ஒரு தோற்றமாக மாறிக் கொண்டு வந்த விந்தையை அதிசய உணர்வோடு ரசித்து, கலையுணர்வோடு போட்டி போட்டுக் கொண்டு படமாக்கினர்.

செல்லும் பாதையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கருங்கல் மண்டபங்கள் தென்பட்டன. அவை பெரும்பாலும் பழுதடைந்திருந்தன.

ஒரு காலத்தில் சுவாமி வலம் வரும் பாதையில் நூற்றுக்கும் அதிகமான மண்டபங்கள் இருந்தனவாம். பக்தர்கள் தங்கி இளைப்பாறவும், சுவாமிகள் எழுந்தருளவும் அக்காலத்தில் நல்லிதயம் படைத்தவர்கள் கட்டி வைத்திருந்த மண்டபங்கள். கால வெள்ளத்தில் கரைந்து போயிருக்கின்றன. இடிந்து போய் சின்னாபின்னமாகியிருந்த ஒரு மண்டபத்தில் வீரபத்திரர் சிலை மட்டும் இருந்தது.

பர்வதமலைக்கு வடமேற்கில் வெள்ளந்தாங்கி என்ற ஓர் இடம் இருக்கிறது. அங்கிருக்கும் வெள்ளந்தாங்கீசுவரர் கோயில் தற்போது கீலமாய்ப் போயிருக்கிறது. அந்த இடத்தில் சலாவதி ஆறும், யோகவதி ஆறும் கலந்து மிருகண்டு நதியாக மாறி, எலத்தூர் என்ற இடத்தில் சேயாற்றில் கலக்கிறது.

ஏற்கனவே படித்தறிந்திருந்த இந்த இடத்தில் கண்ணால் காண வேண்டும் என்ற என் ஆவலை கேட்டவரம்பாளையத்தில் ஓர் அன்பரிடம் நான் வெளியிட்டபோது, மலையை வலம் வரும் வழியில்தான் வெள்ளந்தாங்கி இருப்பதாகவும் அப்போது அத்திருத்தலத்தை தரிசிக்கலாம் என்றும் கூறினார்கள். எனவே, பட்டியந்தலை விட்டுக் கிளம்பியது முதல் வெள்ளந்தாங்கியைப் பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தேன் நான்.

மணி மதியம் பன்னிரண்டுக்கு மேலாகி விட்டது. நாங்கள் பாதி தூரம்தான் வந்திருந்தோம். சூரியன் கடுமையாகத் தாக்கினான். மலையடிவாரத்தில் முட்புதர்க்கிடையில் நடந்து கொண்டிருந்த எங்களைத் தவிர அந்த காட்டுப் பகுதியில் வெறு ஒருவருமேயில்லை. இடப்புறமுள்ள ஜம்பு மலையையும், அதற்குப் பின்னால் இருக்கும் ஜவ்வாது  மலையையும், வலப்புறமுள்ள பர்வதமலையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருந்தோம். முன்னால் சென்ற “குழந்தை” அதையெல்லாம் விலக்கி விட்டுக் கொண்டு போக, நாங்கல் மிக ஜாக்கிரதையாக, அடிமேல் அடி வைத்து நிதானமாக நடந்து கொண்டிருந்தோம்.

தாகம் எடுத்த போதெல்லாம் ஒரு வாய் இளநீரைப் பருகினோம். வெம்மையால் உடலெல்லாம் எரிந்தது.  வீசிய காற்றும் அனலாய்ச் சுட்டது. வெள்ளந்தாங்கீசுவரர் கோயில் வந்தாலும் சற்று இளைப்பாறலாம். இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் “ஐடியா”வும் ஒருவருக்குமில்லை.

ஒரு சிற்றாறு தென்பட்டது. எங்கோ பெய்த மழையால் அதில் கொஞ்சம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. கரையிலிருந்த ஒரு மரத்தடியில் ஒரு ஆசாமி படுத்துக் கொண்டிருந்தார்.

“ஐயா, இது என்ன நதி?” என்று கேட்டேன் நான்.

 “வண்ணாத்தி ஆறு” என்றார் அவர் கண்ணைத் திறக்காமலே.

“வெள்ளந்தாங்கீசுவரர் கோயில் எங்கிருக்கிறது?” என்று கேட்டேன்.

“அது இன்னும் போகணும்”

“எத்தனை தூரம் இருக்கும்?”

“போய்க்கினே இருங்க…..வரும்” என்று கூறிய அவர், துணியை எடுத்துத் தலையை நன்றாக மூடிக் கொண்டு விட்டார். கேள்விகள் கேட்டு என் தூக்கத்தைக் கெடுக்காதீர்கள் என்று குறிப்பால் உணர்த்தி விட்டார்.

எங்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. உடல் எரிச்சல் அதிகமாயிற்று. ஆற்றில் ஓடிய நீர் கங்கைப் பிரவாகம் போல் எங்களுக்குத் தோன்றியது. நானும், சுந்தரமும் ஓடிப் போய், அந்த நீரில் விழுந்தோம். மணலின் மேற்பரப்பையொட்டி ஓடிக் கொண்டிருந்த அந்த நீர் வெந்நீராகக் கொதித்துக் கொண்டிருந்தது! உடல் பற்றி எரிந்ததூ!

அந்தச் சூட்டிலும் ஒரு சுகம் இருக்கவே, படுத்துக் கொண்டே சற்று இளைப்பாறி விட்டு, கிரிவலத்தைத் தொடர்ந்தோம். ஒரு மணி நேரம் மீண்டும் கல்லிலும், முள்ளிலும் நடந்த பிறகு, பாலைவனத்தில் பசுஞ்சோலையைப் பார்ப்பது போல், எங்களுக்கு வெள்ளந்தாங்கீசுவரர் ஆலயம் தரிசனம் ஆயிற்று. எங்கள் பாதையை விட்டு சற்று விலகி வயல்களிலும், வரப்புகளிலும் நடந்து ஆலயத்தை அடைந்தோம்.

அது புராணப் பெருமை மிக்கத் தலம். மார்க்கண்டேயரின் தந்தை மிருகண்டு ரிஷி அங்கு தவமிருந்ததாகக் கூறப்படுகிறது.  எனவேதான், கோயிலை ஒட்டினாற்போல் இரண்டு சிற்றாறுகள் ஒன்று கலந்து அங்கிருந்து மிருகண்டு என்று பெயர் தாங்கி ஓடுகிறது.

ஒரு காலத்தில் ஒளி பெற்று விளங்கிய கோயில், காலதேவனின் கொடுங்கோல் ஆட்சியில் சின்னாபின்னமாகி, கவனிப்பாரற்று அநாதைக் கோலத்தில் இருப்பதைக் காணும் போது நெஞ்சு சுக்கு நூறாக வெடிக்கிறது.

அங்கு சந்நிதி மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால் தெய்வச் சிலைகள் ஒன்றையுமே காணோம். உள்ளே சிவலிங்கமாவது இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே இருண்ட மண்டபத்திற்குள் மெல்ல காலடி எடுத்து வைத்தோம்.  அங்கு பயங்கர இருள் சூழ்ந்திருந்தது. எங்களுடைய குரல்கள் கேட்டதே தவிர, யார் எங்கிருக்கிறோம் என்பது கூட சரியாகத் தெரியவில்லை. கருவறை எந்த பக்கம் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவே சற்று நேரம் பிடித்தது.

எங்களுக்காகவே வைக்கப்பட்டிருந்தது போல ஒரு மூலையில் தென்ன ஓலைகள் கிடந்தன. அதையெல்லாம் கருவறைக்கு எதிரில் எடுத்துப் போட்டுக் கொளுத்தினோம். அந்த வெளிச்சத்தில் வெள்ளந்தாங்கீசுவரர் காட்சி தந்தார். பெரிய சிவலிங்கம். ஒரு காலத்தில் அபிஷேக, அலங்கார, நைவேத்திய, பூஜைகளை ஏற்றுக் கொண்ட முக்கண்ணன், எவ்வித ஆடம்பரமுமின்றி, முற்றும் துறந்த முனிவராக தனிமையில் தவமியற்றிக் கொண்டிருந்தார்.

ஒருவர் கண்ணிலும் படாமல் ஒதுங்கியிருந்து தவம் புரியும்  ஈசுவரைத் தரிசித்து விட்ட மகிழ்ச்சியுடன் வெளியே வந்தோம்.

அந்தக் கோயிலிலிருந்து பர்வத மலைத் தரிசனம் அபூர்வமாக இருக்கிறது. எதிரில் ஓடும் நதியையும், அதன் அழகிய படித்துறையையும் , பச்சைப்பசேலென்ற வயல்களையும், நிமிர்ந்து நிற்கும் மலைச் சிகரத்தையும் பார்த்துக் கொண்டிருபதே பெரும் ஆன்மீக அனுபவமாயிருக்கிறது.  தியானத்தில் அமர்ந்து, ஆழ்ந்த அமைதியில் நிலைப்பதற்கு எல்லாவகயிலும் ஏற்ற இடமாக இருக்கிறது அது.