உள்ளூர் அன்பர் ஒருவர் தந்த குளிர்ந்த நீரை அருந்தி விட்டு, அங்கிருந்து புறப்பட்டோம். மணி இரண்டரை ஆகி விட்டது. எங்களுக்குப் பசிக்கத் தொடங்கியது. பாபுவிற்கு கால்கள் தள்ளாடி விட்டன. கண்கள் சிவந்து விட்டன. வந்து செமையாக மாட்டிக் கொண்டு விட்டோம். பேசிப்பயனில்லை என்று அவர் பேசுவதையே நிறுத்தி விட்டார்.
இன்னும் நாலைந்து மைல்கள் போனால் மாதிமங்கலம் பச்சையம்மன் கோயில் வரும். அதுவரை தங்குவதற்கு நிழல் கூடக் கிடைக்கப் போவதில்லை. கண்ணுக்கெட்டிய வரையில் ஒரு மரத்தைக் கூடக் காணோம்.
நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். “இதோ பார் நந்தி” என்றார் சுந்தரம் சட்டென்று.
“எங்கே?” என்று கேட்டுக் கொண்டே திரும்பினோம்.
“இதோ இந்தப் பாறையைப் பாருங்க. அசல் நந்திதான். பர்வதமலையைப் பார்த்துக்கிட்டு அது உட்கார்ந்திருக்கும் அழகைப் பாருங்க” என்று சொல்லியபடியே இரண்டு மூன்று கோணங்களில் அதைப் படம் பிடித்துக் கொண்டார் சுந்தரம்.
ஒரு மணி நேரம் நடந்திருப்போம். ஆகா! இதென்ன அதிசயம்! இது உண்மைதானா? அல்லது கண் ஏமாற்றுகிறதா? திடீரென்று ஒரு புளியமரம் கண்ணுக்குத் தெரிந்தது! அதை அடுத்து ஒரு துரவுக் கிணறு. அதற்குப் பக்கத்தில் ஒரு குடிசை.
“இன்னும் அரை மணி நேரம் இங்கேதான் ரெஸ்ட். எல்ளோரும் துண்டை விரித்துப் படுப்போம்” என்று நான் கூறி முடிப்பதார்குள் எல்லோரும் படுத்து விட்டார்கள்.
“ஆகா, இந்த வெயிலில் வந்ததற்கு இந்த நிழல் எத்தனை சுகமாக இருக்கிறது? இப்போது உப்பு போட்ட ஒரு பிடி பழைய சோறு இருந்தால் எப்படி இருக்கும்?” என்றேன் நான். என் பசி எனக்குத் தெரியும், என்னைப் படைத்த ஆண்டவனுக்கும் தெரியும்!
“அதுக்குக் கடிச்சுக்க பச்சை மிளகாயோ, ஒரு துண்டு வெங்காயமோ இருக்கணும், வேறே ஒண்ணும் வேணாம்” என்று ஒத்துப் பாடினார் சுந்தரம்.
பாபு ஒன்றுமே பேசவில்லை. அவருக்குப் பேசவே சக்தியில்லை!
பாண்டு எங்கள் நிலைமையைப் புரிந்து கொண்டார். அந்தக் குடிசைப் பக்கம் போனார். அங்கிருந்த அம்மாளுடன் ஏதோ பேசினார்.
“சார், தண்ணி கொட்டின சோறு இருக்குதாம், ஆனால் அதுக்கு கடிச்சுக்க பச்சை மிளகாய், வெங்காயம் ஒண்ணுமில்லையாம். காஞ்ச மிளகாய் இருக்காம்.”
நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். எத்தனை விருந்துகள் சாப்பிட்டு என்ன? இந்த நேரத்தில், இதைவிட ருசியான விருந்து கிடைக்குமா?
“பாண்டு, தண்ணி கொட்டின சோற்றைக் கொண்டு வாங்க. காஞ்ச மிளகாயை சுந்தரத்திற்குக் கொடுங்க. எனக்கு பிஞ்சு புளியங்காய் இருக்கு” என்று கூறிவிட்டு மரத்திலிருந்த புளியங்காயைப் பறிக்கத் தொடங்கினேன்.
மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றி விட்டான். ஒரு நொடியில் ஆண்டவன் எங்களுக்கு விருந்து படைத்து விட்டான். அந்த நீர்ச் சோறும், புளியங்காயும் அமிர்தமாக இருந்தது. இப்போது நினைத்தாலும் வாயில் நீர் ஊறுகிறது.
உண்ட மயக்கத்தில் சிறிது நேரம் உருண்டு விட்டு, மறுபடியும் புறப்பட்டோம். ஒரு மணி நேரம் நடந்த பிறகு ஒரு குளம் கண்ணில் பட்டது. அதில் இறங்கி அமிழ்ந்து குளித்தோம். மேலேயிருந்த நீர் “வெதவெத” வென்றிருந்தது. கீழே ஜில்லென்றிருந்தது. அதிக ஆழமில்லை. ஆசை தீருமட்டும் அந்த நீரில் அமர்ந்திருந்து விட்டு, துவட்டிக் கொண்டு, உடையை மாற்றிக் கொண்டு, திருநீறு பூசி, மாதிமங்கலம் பச்சையம்மன் கோயிலுக்குச் சென்று தரிசித்தோம்.
மலையேறி மல்லிகார்ஜுன சுவமியைத் தரிசிக்கச் செல்லும் மக்கள், பச்சையம்மனைத் தரிசித்து விட்டே போகிறார்கள். சக்தியின் துணையோடு சென்றால் சிவதரிசனம் எளிதாகி விடுகிறது.
மலையடிவாரத்தில், காட்டுக்குள், காட்டுக்குள் வீரபத்திர சுவாமி கோயில் இருப்பதாகக் கூறினார்கள். நேரம் ஆகிவிட்டதாலும், கால்கள் கெஞ்சியதாலும், நாங்கள் அங்கு செல்லாமலே வீட்டுக்குத் திரும்பும்படியாகி விட்டது.
மறுநாட்காலை புறப்பட்டு, சேயாற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் “சப்தகைலாசங்கள்” என்ற ஏழு சிவத்தலங்களையும் தரிசிப்பது என்று முடிவு செய்தோம். எங்கள் எண்ணத்தை நாகேசுவர ஐயரிடம் தெரிவித்தோம். அவர் உடனே ஒரு காகிதத்தை எடுத்து ஏழு கிராமங்களும் எங்கெங்கே இருக்கின்றன வரைபடமாகத் தீட்டி எங்களிடம் கொடுத்தார்.
காலை ஆறரை மணிக்கெல்லாம் நாங்கள் “ஆலய தரிசன”த்திற்குத் தயாராகி விட்டோம். முதல் கடலாடிக்கும், மாதிமங்கலத்திற்கும் இடையில் இரண்டாவது மைலில் சேயாற்றைக் கடந்து, அக்கரையில் இருக்கும் தாமரப்பாகத்திற்குச் சென்றோம். அது செங்கம் தாலுகாவில் அமைந்திருக்கும் ஒரு சிறு கிராமம்.
தாமரப்பாக்கம் ஆலயத்தின் பிராகார மதிற்சுவர்கள் இடிந்து போயிருக்கின்றன. கருங்கல் மண்டபத்திற்குள் அக்னீசுவரரும், திரிபுரசுந்தரியும் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்கள். கோஷ்ட தேவதைகளான கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரும்மா, துர்க்கை ஆகியோர் பின்னமாகாமால் கலையெழிலுடன் காட்சி தருகிறார்கள். வெளிப்பிராகாரத்தில் தெய்வங்களின் உருவச்சிலைகள் பின்னமான நிலையில் அங்கங்கே காணப்படுகின்றன. அக்கோயிலில் தற்போது இரண்டு கால பூஜைகளே நடைபெற்று வருகின்றன.
அடுத்து வாசுதேவம்பட்டு என்ற கிராமத்திற்குச் சென்றோம். கடலாடியை விட்டுப் புறப்பட்டு, காஞ்சி கிராமத்தைக் கடந்து, பெரியகுளம் கிராமத்தை அடுத்து வலப்புறமுள்ள குறுக்குப் பாதையில் திரும்பினோம். அந்தப் பாதை போகப் போக மிகவும் மோசமாகி விட்டது.
பழநி வயலில் காரை இறக்கி, வரப்பில் ஏற்றி, எப்படியோ சாமர்த்தியமாக எங்களைத் தார் ரோடில் கொண்டு வந்து சேர்த்து விட்டார். அது திருவண்ணாமலையிலிருந்து செங்க்ம செல்லும் பஸ் பாதை. அதில் மேற்கே சென்றால், செங்கத்திற்கு முன்பே, பத்தாவது மைலில் “பாய்ச்சல்” என்ற சிற்றூர் வருகிறது. பாய்ச்சலிலிருந்து வாசுதேவம்பட்டுக்குப் போக நாங்கள் வடக்கே திரும்பிச் சென்றோம்.
நாங்கள் சென்றது பாதையே அல்ல. வழி நெடுகிலும் முட்புதர்கள், பாறைகள், பள்ளங்கள். பாவம், வழியெல்லாம் பட்ட அடிகளைத் தாங்கிக் கொண்டு, கடமை தவறாத தியாகியாக, எங்கள் கார் எங்களை வாசுதேவம்பட்டில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டே, ஒரு மரத்தடியில் நின்று இளைப்பாறியது. நாங்கள் ஆலயத்தினுள் சென்றோம்.
தாமரப்பாக்கத்திலிருப்பது போலன்றி, இங்கு மதிற்சுவர்கள் பழுதடையாமல் இருக்கின்றன. மண்டபங்களும், விமானங்களும் நேர்த்தியாக இருக்கின்றன. சுவாமியின் பெயர் பக்தவத்சலேசுவரர். ஆட்கொண்டேசுவரர் என்றும் அழைக்கிறார்கள். அம்பீகையின் நாமம் சௌந்தர நாயகி என்ற அழகம்மை. இருவரும் கிழக்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கின்றனர்.
மகா மண்டபத்தில் சப்த கன்னிகைகளும், அந்தரத்தில் நால்வரும் எழுந்தருளியிருக்கின்றனர்.
கருவறை மண்டபத்தின் வெளிப்புறம், வெளிப்புறமிருக்கும் கோஷ்ட தட்சிணாமூர்த்திக்குத் தனிச் சந்நிதி அமைத்திருக்கின்றார்கள்.
வெளிப்பிராகாரத்தில் கிழக்கு நோக்கி விநாயகருக்கும், ஆறுமுகருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோயிலில், பங்குனி உத்திரமும், ஆனித்திருமஞ்சனமும் விசேஷமாகக் கொண்டாடப்படுவதாக அறிந்தேன். அந்த ஊரிய ஒரு காலத்தில் வாசுதேவராஜா என்பவர் ஆண்டிருக்கிறார். அதன் அடையாளமாக, தற்போது அங்கு, ஓர் இடிந்த கோட்டை இருக்கிறது. அருகில் எட்டடி உயரத்தில் ஸ்ரீ வீராஞ்சநேயரின் உருவச் சிலையும் இருக்கிறது.
அந்த ஊரின் பெருமையை பற்றி ஓர் அன்பர், “காசியை விட வீசம் உயர்ந்தது வாசநகர்” என்று வழங்கப்படும் முதுமொழியை எங்களுக்கு நினைவுபடுத்தினார்.
கலசப்பாக்கம், பூண்டியிலிருந்து சேயாற்றைக் கடந்து வந்தால், மூன்றாவது மைலில் இருக்கிறது நார்த்தாம்பூண்டி கிராம. ஆனால், பஸ் பாதை வழியாகச் சுற்றிக் கொண்டு வந்தால் எட்டு மைல்கள் ஆகும். நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து போளூர் செல்லும் பாதை வழியாக வந்து, நாயுடுமங்கலம் கிளை வழியில் மேற்கே திரும்பி, மூன்று மைலில் உள்ள நார்த்தாம்பூண்டியை அடைந்தோம்.
தட்சனால் சபிக்கப்பட்ட நாரத முனிவர் கைலாசத்திற்குச் சென்று சிவபெருமானிடம் முறையிட, ஈசுவரன் அவரை பூலோகத்திற்குச் சென்று, திருவண்ணாமலைக்கு வடப்புறத்திலும், சேயாற்றின் தென் கரையிலும் உள்ள ஓர் இலந்தை மரத்தடியில் தம்மைக் குறித்துத் தவம் இருக்கும்படி கூறியதாகவும், பின்னர் அங்கு லிங்க உருவில் அவருக்குக் காட்சி அளித்ததாகவும், நாரதரே கைலாசநாதருக்கு அங்கு ஓர் ஆலயம் எழுப்பிப் பூஜித்ததாகவும், தலபுராண வரலாறு கூறுகிறது.
நாரதர் தவமியற்றியதால், நாரதர் பூண்டியென அழைக்கப்பட்டு, நளடைவில் அது நாரத பூண்டியாகி, பின்னர் அது நார்த்தாம்பூண்டியாக மருவியிருக்கலாம். அல்லது நாரதர் நற்றவம் இயற்றியதால், நற்றவம் பூண்டி யாகி, நார்த்தாம்பூண்டியாகவும் மாறியிருக்கலாம்.
சப்த கைலாசத் தலங்களிலேயே, நார்த்தாம்பூண்டி ஆலயம்தான் மிகவும் பெரியதாக இருக்கிறது. அங்குதான் சுவமிக்கு கைலாசநாதர் என்ற திருநாமமும் விளங்குகிறது. அம்பிகை பிருஹந்நாயகியாகத் திகழ்கிறாள்.
கோஷ்ட கணபதிக்கும், தட்சிணாமூர்த்திக்கும் தனிச்சந்நிதிகள் இருக்கின்றன. வெளிப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கி விநாயகர், ஸ்ரீ வேணுகோபாலன், அறுமுகர் மூவரும் எழுந்தருளியிருக்கிறார்கள்.
வடமேற்கு மூலையில் ஒரு இலந்தை மரம் இருக்கிறது. அதனடியில் ஒரு சிவலிங்கமும், அதனருகில் ஒரு முனிவரின் உருவச்சிலையும் காணப்படுகின்றன. “இதுதான் நாரதர், இந்த இலந்தை மரத்தினடியில்தான் அவர் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தார்” என்று கூறினார் ஆலய அறங்காவலர் திரு கணேச நயினார்.
மகாமண்டபத்தின் தென்மேற்கே, ஐந்தடி உயரமுள்ள ஒரு பெரிய லிங்கம் இருக்கிறது. அதைக் காசிலிங்கம் என் கிறார்கள.
அம்மன் சந்நிதி மண்டபத்தில் நவக்கிரகங்கள் இருக்கின்றன.
இக்கோயிலில் கிருத்திகைத் திருவிழாவும், மாசிமக தீர்த்தவாரியும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், பிரும்மோற்சவம் நடைபெறுவதில்லை என்றும் அறிந்தேன். கால பூஜைகள் ஒழுங்காக நடைபெறுகின்றன.
அங்கிருந்து மீண்டும் திருவண்ணாமலை போளூர் சாலைக்கு வந்து, மேட்டுப்பாளையம் கிளை வழியில் திரும்பி “தென் பள்ளிப்பட்டு” கிராமத்தை அடைந்தோம். அங்குள்ள கோயில் கீலமாகி போய் பூஜையும் நின்று போயிருந்தது. மதிற்சுவர்கள் எல்லாம் இடிந்து தரைமட்டமாகியிருக்கின்றன. பிராகாரத்தில் குடிசைகளும், வைக்கோல் போரும், சாணிக் குவியலும் காணப்படுகின்றன. மண்டபத்தினுள் நுழைய முடியாமல், தட்டுமுட்டு சாமாங்களையெல்லாம் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். மிகப் பிரயாசைப்பட்டு, தடைகளை விலக்கி உள்ளே சென்று, டார்ச் விளக்கைப் போட்டு, சிவலிங்கத்தைத் தரிசித்து விட்டு வந்தோம். (50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிலைமை முற்றிலும் மாறியிருக்கலாம்).
அங்கிருந்து மேற்கே மூன்று மைல் சென்றால் பழங்கோயில் இருக்கிறது. நாங்கள் சென்ற சமயம் அங்கு திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பலக்ராதீசுவரரும், விமலாம்பிகையும் அங்கு எழுந்தருளியிருக்கிறார்கள்.
அங்குள்ள நடராஜர் உருவச்சிலை கண்களைக் கவருகிறது. உற்சவ மூர்த்திகள் எழிர்கோலத்துடன் வீற்றிருக்கின்றனர். அவற்றில் சில பூமிக்கடியிலிருந்து கிடைத்தனவாம்.
சுவாமி சந்நிதிக்குப் பின்புறம், திருவண்ணாமலையில் இருப்பது போல் வேணுகோபாலசுவாமி சந்நிதியிருக்கிறது.
இங்கு கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
அங்கிருந்து காரிலேயே சேயாற்றின் மணற்படுகையைக் கடந்து பூண்டி சுவாமிகளைத் தரிசித்தோம். பர்வதமலையை வலம் வந்ததைப் பற்றியும், சப்த கைலாச தலங்களில் ஐந்து தலங்களைத் தரிசித்து விடதைப் பற்றியும், வாசுதேவபட்டு போகும்போது பட்ட கஷ்டங்களைப் பற்றியும் விவரித்தோம்.
“நாந்தான் அன்னிக்கே சொன்னேனே, அது காட்டுப்பாதைன்னு. ஒரே முள்ளும் கல்லுமா இருக்கும்.” எனக் கூறியவர், சிரித்துக் கொண்டே, “எங்களுக்கெல்லாம் நேர்ப்பாதை, உங்களுக்குக் கஷ்டமான பாதை” என்றார்.
மணி நான்காகி விட்டது. இன்னும் கரப்பூண்டியும், மண்டகுளத்தூரும் பார்க்க வேண்டும். சாமியாரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டோம். சேத்துப்பட்டு செல்லும் பாதையில் திரும்பி, மூன்றாவது மைலில் உள்ள கரப்பூண்டிக்குச் சென்றோம்.
சிறு கோயில்தான், என்றாலும் அது மனதுக்கு நிறைவாக, தெய்வீகக் களையோடு விளங்குகிறது. ஸ்ரீ கரகண்டேசுவரரும், பாலசுந்தரியும் அங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். சிவாலயத்திற்கு அங்கமான எல்லா தேவதைகளும் அங்கு காட்சி அளிக்கிறார்கள். வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுக்னைன் திருவடிவம் அற்புத எழிலோடு கண்ணையும், கருத்தையும் கவருகிறது.
மீண்டும் சேத்துப்பட்டு சாலைக்குத் திரும்பி வந்து இரண்டு மைல்கள் சென்று கிழக்கே திரும்பி மண்டகுளத்தூரிய அடைந்தோம். “சுப்ரீம் கோர்ட் பிரதம நீதிபதியாயிருந்த ஜஸ்டிஸ் பதஞ்சலி சாஸ்திரியார் ஊர் இது” என்று பெருமிதத்துடன் கூறினார் ஒருவர்.
மதிற்சுவரெல்லாம் இடிந்து போய், கோயில் கவனிப்பாரற்று கிடந்தது. இங்கே உறையும், தர்மேசுவரரும், தர்மவர்த்தனியுமதான் யாராவது ஒரு புண்ணியவானின் உள்ளத்தில் புகுந்து, அக்கோயிலின் திருப்பணியை நடத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். (50 ஆண்டுகள் கடந்து, தற்போது, இந்த அனைத்து கோயில்களும் சீர் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடத்தப்பட்டு சிறப்பாக பூஜை, திருவிழா எல்லாம் நடைபெற்று வரக்கூடும்.)ஓரே நாளில் சப்த கைலாசத்தையும் தரிசித்த பெருமிதத்தோடும். அதனால் கிடைத்த புண்ணிய மூட்டையோடும் நாங்கள் திரும்பிப் பயணமானோம்.