பர்வதமலை – 10

மறுநாள் காலை அலுவலகத்தில், மேஜையில் குவிந்திருந்த கடிதங்களில் எஸ். சீதாராமன் என்பவர் எழுதியிருந்த கடிதம் கவனத்தைக் கவர்ந்தது.

1928-ஆம் அண்டு திருவண்ணாமலை தாலுகாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது , தபால் தலைகள் விற்பவரான ராமு நயினார் என்பவருடனும், பிர ஊழியர்களுடனும், சிவராத்திரி தரிசனத்திற்காக பர்வதமலைக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு வயோதிகரை, ராமு நயினார் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அந்த வயோதிகருக்கு எழுபது வயதிற்கு மேலிருக்கும். அவர்தான் கோயிலுக்கு முன்புள்ள தாழ்வார மண்டபத்தைக் கட்டியவர். அந்தக் காலத்தில் இரு ஆப்ரைகளை இணைக்கும் இரும்புத் த்ண்டவாளங்கள் கிடையாது. அங்குள்ள ஒரு ஆலமரத்தின் விழுதைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடித்தான் அடுத்த பாறைக்குச் செல்ல வேண்டும். கோயிலில் கட்டட வேலைகள் செய்வதற்கு, கூலியாட்கள் இரண்டு படி சுண்ணாம்பையும், இரண்டு மூன்று கற்களையும் மடியில் கட்டிக் கொண்டு, ஆல விழுதைப் பற்றிக் கொண்டு, பாறைக்குப் பாறை தாவி, அவைகளை மேலே கொண்டு போய் சேர்ப்பார்களாம்.  இம்மாதிரி தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டு சேர்த்து, ஒரு மாத காலம் மேலேயே தங்கியிருந்து அவர் அந்த மண்டபத்தைக் கட்டி முடித்திருக்கிறார்.

ஒரு மாத காலம் அவர் மலை மீது தங்கியிருந்த போது, இரவு படுக்கப் போகும் முன் கோயிலை சுத்தமாகப் பெருக்கி வைப்பது வழக்கம். ஆனால் காலையில் எழுந்து பார்த்தால், சூடம் கட்டியிருந்த காகிதங்கள், மிட்டாய் வைத்திருந்த காகிதங்கள், சுவாமிக்கு அர்ச்சனை செய்த மலர்கள் முதலியவை தரையில் கிடப்பதைக் கண்டு அதிசயிப்பார்.

ஒரு நாள் அவருக்கு இரண்டு மணிக்கே விழிப்பு வந்து விட்டது. அபோது எதிர்ப்புறமுள்ள பாறையில் நான்கு, ஐந்து  பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, “யாரது?” என்று அவர் கேட்டார்.  உடனே அவர்கள் “நீ யாரய்யா?”  என்று திருப்பிக் கேட்டார்கள். “நான் இங்கே கட்டிடம் கட்ட வந்தேன்” என்று இவர் சொன்னதும், “நீ வந்த காரியத்தை கவனிய்யா” என்று கூறி விட்டு உடனே மறைந்து விட்டார்கள்.

அவர்கள் சித்த புருஷர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று வயோதிகர் சீதாராமனிடம் கூறிவிட்டு, “இவர்களுக்கு இங்கு இருக்கும் ரகசிய மூலிகைகளெல்லாம் தெரியும். மணி என்ற மூலிகையை உருட்டி வாயில் போட்டுக் கொண்டால், இவர்கள் நினைத்த இடத்திற்கு பறந்து செல்வார்கள். சென்னையில் இரவு பத்து மணிக்கு லாலா கடையில் மிட்டாய் வாங்கி கொண்டு, இங்கு பறந்து வந்து பூஜை செய்து விட்டுப் போவார்கள்” என்று தெரிவித்தார்.

அவர்கள் போகும்போது நாம் உற்றுக் கவனிக்கா விட்டால் சாதாரண மனிதர்கள் போல்தான் இருப்பார்களாம். அவர்களைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்தால் உடனே மறைந்து விடுவார்களாம்.

பர்வத மலைக் காடுகளில் இருக்கும் பல வகையான  மூலிகைகளைப் பற்றியும், வயோதிகர், சீதாராமனிடம் விவரித்திருக்கிறார். ஆள் மிரட்டி, பேய் மிரட்டி என்ற இரு வகை மூலிகள் இருக்கின்றன. உடல் வலுவில்லாத ஒருவர் ஆள் மிரட்டியைக் கையில் எடுத்துக் கொண்டால், பயில்வான்கள் கூட  அவரைக் கண்டு நடுங்குவார்கள். பேய் விரட்டியைக் கையில் வைத்துக் கொண்டால், எல்லா விதமான பேய்களும் நம்மைக் கண்டு பயந்து ஓடி விடும்.

தாம் கேள்வியுற்ற மற்றொரு நிகழ்ச்சியைப் பற்றியும் சீதாராமன் கடிதத்தில் எழுதியிருந்தார்.

பர்வதமலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், மலையேறிச் செல்லும் பாதையில் நின்று கொண்டு, “சித்த புருஷர்கள் தரிசனம் கிடைக்காதா?” என்று அநேக நாட்கள் காத்துக் கிடந்தார்.

ஒரு நால் மூன்று நான்கு ஆசாமிகள் அவ்வழியே வந்தார்கள். அங்கு நின்றிருந்த கிராமவாசியைப் பார்த்து அவர்களில் ஒருவர், “இங்கே ஏன் தினமும் நின்று கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு கிராமவாசி, “சித்தபுருஷர்கள்  வந்து போவதாகச் சொல்கிறார்கள். எனக்கு ஏதாவது தங்கம் கிடைக்குமா என்று நான் காத்திருக்கிறேன். ஒரு வாரமாக ஒருவரையும் காணொம். என் வயிற்றெரிச்சலை ஏன் கிளர்றே? நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க” என்றார். உடனே வந்த ஆசாமிகளில் ஒருவர், “உன் கையில் இருக்கும் அரிவாளைக் கொஞ்சம் கொடு” என்று சிரித்துக் கொண்டே கேட்கவும், கிராமவாசி அதைக் கொடுத்தார். அவர் அரிவாளை உற்றுப் பார்த்துவிட்டு, கிராமவாசியிடமே திருப்பிக் கொடுத்தார் அவர். சற்றைக்கெல்லாம் வந்தவர்கள் மறைந்து விட்டார்கள். அவர்கள் மறைந்தவுடன் கையிலிருந்த அரிவாளைப் பார்த்தார் கிராமவாசி. அது சூரிய ஒளியில் பளபளத்தது. அவர் கையில் தங்க அரிவாள் இருந்தது!

இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் படித்து விட்டு பேராச்சரியத்தில் மூழ்கியிருந்த எனக்கு, பர்வதமலையில் தேவ சித்தர் ஒருவரைச் தரிசித்த ஒரு நபரைக் கண்டு பேசும் வாய்ப்பும் சில நாட்களிலேயே கிட்டியது.

மாதிமங்கலத்தை அடுத்துள்ள அருணகிரி மங்கலத்தைச் சேர்ந்தவர் ஏ. விசுவநாதப் பிள்ளை என்பவர். அவரது குடும்பத்தார் முப்பது வருடங்களுக்கு மேலாக சிவராத்திரியன்று பர்வத மலைக்குச் சென்று, மல்லிகார்ஜுன சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வந்தவர்களுக்கெல்லாம் பிரசாதம் அளித்து வருபவர்கள்.

“அண்ணாமலையார் பாதம்” என்று புகைப்படத்துடன் நான் குறிப்பிட்டிருந்தது அண்மையில் ஏற்பட்டது என்றும். ஒரு பக்தை அதைப் பாறையில் அடித்து வைத்ததாகவும் கூறிய பிள்ளௌஇ, புராணத்தில் கூறப்பட்டுள்ள அண்ணாமலையார் பாதம் மாதிமங்கலத்திலிருந்து செல்லும் வழியில் ஒரு பாறையில் காணப்படுவதாகவும் கூறியிருந்தார். செல்லும் வழியில் “தீட்டக்காரி மண்டபம்” என்று ஒரு மண்டபம் இருக்கிறதாம். மலையேறி செல்லும் பெண்கள் திடீரென்று வீட்டுக்கு விலக்காகி விட்டால், அந்த மண்டபத்திலேயே தங்கிவிட வேண்டுமாம். அப்படிச் செய்யாமல் தீட்டுடன் மலையேறி சென்றால் எங்கிருந்தோ வரும் செங்குளவிகள் அவர்களைத் தாக்கித் துன்புறுத்துமாம்.

ஒரு வாரத்திற்கெல்லாம் என்னைச் சந்தித்த விசுவநாதப் பிள்ளை, பர்வத மலைக்குத் தம்முடன் நான் ஒரு முறை வர வேண்டும் என்று எனக்கு அழைப்பு விடுத்தார். கடலாடி வழியாக மலை ஏறியிருக்கக் கூடாது என்றும், மாதிமங்கலம் வழிதான் எளிதானது என்றும் கூறினார் விசுவநாத பிள்ளை.

“ஜனக்கூட்டம் இருந்தால் சித்த புருஷர்கள் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள் என்கிறார்களே, அது உண்மையா?” என்று அவரிடம் கேட்டேன் நான்.

“அப்படிச் சொல்ல முடியாது. கொடுப்பினை இருப்பவர்களுக்குத் தரிசனம் கிடைக்கும்”

“அதெப்படி அத்தனை நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?”

“சொந்த அனுபவத்தில்தான் சொல்கிறேன். அடியேனுக்கு ஓர் அற்புத தரிசனம் கிடைத்தது. அதைத் தங்களுக்குச் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறிவிட்டு, தமது அனுபவத்தை விவரித்தார் பிள்ளை.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் (1945), சிவராத்திரியன்று தந்தை, தாய், சகோதரர் முதலிய்வர்களுடன் விசுவநாதபிள்ளை பர்வதமலைக்குச் சென்றார். வழக்கம் போல் அங்கு வந்திருந்த அடியார்களுக்கு அன்னம் வழங்கிவிட்டு, மிகுதியான சாதம், சாம்பார், ரசம் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பாதாள சுனை அருகே வைக்கப் போன சமயம், அங்கு ஒரு மனிதர் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். பார்ப்பதர்கு அவர் விறகு வெட்டும் இருளனைப் போலிருந்தார். அவரைப் பார்த்து, “சாப்பிடுகிறாயா?” என்று கேட்டார் பிள்ளை.

அதற்கு அவர், “நாங்கள் மொத்தம் பன்னிரண்டு பேர். அவர்களில் நான் மட்டும்தான் வந்தேன். இன்னொரு சமயம் நாங்கள் பன்னிரண்டு பேரும் வந்து சாப்பிடுகிறோம்” என்று பதில் கூறினார்.

மறுபடியும், “சாப்பிடுகிறாயா, இல்லையா?” என்று பிள்ளை கேட்டதற்கு, “சரி, இலையப் போடு” என்றார் அவர்.

இலையைப் போட்டு பறிமாறியதும், அந்த ஆசாமி திருப்தியாக சாப்பிட்டுவிட்டு, பாதாள சுனையில் இறங்கி கையைக் கழுவிக் கொண்டு, நீர் அருந்தி விட்டு வந்தார். பிறகு விசுவநாத பிள்ளை, அங்கிருந்த ஒரு கட்டையைக் காண்பித்து, அதை மேலே கோயிலுக்குக் கொண்டு வா, சாமிக்கு வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல் எல்லாம் செய்ய வேண்டும்” என்றதும், அவர் பதில் பேசாமல் கட்டையைத் தூக்கிக் கொண்டு வந்து மேலே போட்டு விட்டுப் புறப்பட்டார்.

“அபிஷேகமெல்லாம் பார்த்து விட்டு, பிரசாதம் சாப்பிட்டுவிட்டு காலையில் போகலாம்” என்று பிள்ளை கூறியதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவர் பாதாள சுனைப்பக்கம் இறங்கிப் போய் விட்டார்.

விடியற்காலை பூஜை முடிந்ததும், சாமிக்குப் படைத்த வடை, சுண்டல், பொங்கல் எல்லாவற்றையும் அங்கிருந்த பக்தர்களுக்கு விநியோகித்தர்கள். ஆனால் கொடுக்கக் கொடுக்கக் குறையாமல் பிரசாதங்கள் அப்படியேயிருந்தன. அந்த அதிசயத்தைத் தந்தையாரிட்ம கூறினார் விசுவநாத பிள்ளை. அதற்கு அவர், “நேற்று விறகு சுமந்து வந்தவர் சாதாரண ஆசாமியாகத் தோன்றவில்லை. அவருக்கு ஒரு பங்கு எடுத்து வைத்து விட்டு பஜனை செய்பவர்களுக்குக் கொடு” என்றார். அப்படியே செய்தார் பிள்ளை. அதற்குப் பிறகே பிரசாதம் தீர்ந்தது. இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், அந்த ஆசாமி சுமந்து வந்து போட்ட ஒரே விறகு கட்டையிலேயே எல்லா பிரசாதங்களும் தயாராகிவிட்டன!

மறுநாட் காலை எல்லோரும் கீழே இறங்கத் தயாரான போது, அந்த ஆசாமி எதிரில் வந்தார். விசுவநாத பிள்ளை கொடுத்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு, “வாருங்கள் போகலாம்” என்றார்.

பிறகு எல்லோரும் ஏதேதோ பேசிக் கொண்டு மலையை விட்டு இறங்கி வந்தார்கள். அவர் ஒரு சித்த புருஷராக இருக்குமோ என்று சிலர் சந்தேகப்பட்டார்கள். இன்னும் இஸ்லரோ, “அதெல்லாம் இருக்காது, வீண் பிரமை” என்று நினைத்தார்கள். அப்போது வழியில் இருந்த ஒரு முட்புதரை நோக்கி அந்த ஆசாமி, “இவர்கள் என்னை நம்பவில்லை” என்று கூறினார். அடுத்த கணம் முட்செடி இரண்டாக்ப பிரிந்தது. உடனே அந்த ஆசாமி அதனுள் போய்ப் பதுங்கிக் கொண்டார். முட்புதர் மீண்டும் மூடிக் கொண்டது.

அவர் சாதாரண மனிதர் அல்ல என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது. உடனே விசுவநாதப் பிள்ளையின் தந்தையார், மலைச்சிகரத்த்தைப் பார்த்து ஓர் அருட்பா பாடி, “சாமி, இது சித்து. எனக்குத் தேவையானது முக்தி” என்றார். அடுத்த கணம் புதர் விரிந்தது. சித்தர் சிரித்துக் கொண்டே வெளியே வந்தார். கடுகளவு திருநீறை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தார்.

பின்னர், அவர் சாதாரணமாக எல்லோருடனும் சிரித்துப் பேசிக் கொண்டு கீழிறங்கி வந்தார். அவர்கள் பச்சையம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, சமைத்து சாப்பிட்டார்கள். பிள்ளையின் பக்கத்தில் அமர்ந்து அந்த சித்தரும் சாப்பிட்டார். எல்லோரும் மூன்று மணிக்குக் கிளம்பினார்கள்.

முன்னால் மூவர் போக, நடுவில் சித்தர் நடக்க, பின்னால் விசுவநாத பிள்ளையும், அவரது பெற்றோர்களும் சென்றார்கள். வழியிலிருந்த ஒரு ஓடையில் இறங்கிய சித்தர் திடீரென்று எப்படியோ மறைந்து விட்டார். முன்னால் இருந்தவர்கள், அவரைப் பார்த்தாயா என்று பின்னால் இருந்தவர்களைக் கேட்டார்கள். இல்லையே, நீங்கள் பார்த்தீர்களா என்று பதிலுக்கு இவர்கள் கேட்டார்கள். ஓரிருவர் ஓடையிலேயே அழுது புலம்பினார்கள். ஆனால் சித்தர் மறைந்தது மறைந்ததுதான்.

சித்தர் சொன்ன பன்னிரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கும் பாக்கியம் தமக்கு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார் விசுவநாத பிள்ளை.

பூண்டி சாமியாரிடம், “பர்வத மலைக்குப் போயிருக்கிறீர்களா?” என்று கேட்ட போது, “மாடி மேலே ஏறிப் போய்க் கதவைத் தட்டினேன். உள்ளே பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தாங்க.  சரி, காலம், நேரம், சூழ்நிலை சரியில்லைன்னு நான் இறங்கி வந்துட்டேன்” என்று கூறினாரல்லவா?

சம்பந்தமில்லாத அந்தப் பேச்சில் ஆழ்ந்த பொருள் புதைந்திருப்பதாக அப்போது எனக்குத் தோன்றியது. விசுவநாத பிள்ளை கூறியதைக் கேட்டதும் அது சற்று உறுதியாயிற்று.  விசுவநாத பிள்ளையிடம், சித்த புருஷர் குறிப்பிட்ட பன்னிரண்டு பேர், பூண்டி சாமியார் பார்த்த அதே பன்னிரண்டு பேர்தானா?”

ஏன் சந்தேக இருளை, உள்ளத்தில் இயங்கும் அருணாசல ஒளிதான் போக்க வெண்டும்.

— பர்வத மலை யாத்திரை – இத்துடன் நிறைவடைகிறது.