அத்தியாயம் – 39
ஆபத் பாந்தவன்
ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று
அதனை விலக்கிடுவான்
பாரதியார்: “கண்ணன், என் தோழன்”
‘பாவயாமி ரகுராமம்’ பாட்டில் ஒவ்வொரு ராகத்திலும் சிட்டஸ்வரம் பாடி சாவேரி முத்தாய்ப்புக்குத் திரும்புவதுபோல், பாபாவின் ஒவ்வொரு வித லீலா மகிமையை இன்றுவரை1 சொன்னாலும், பிறகு பழைய மந்திரத்துக்கே திரும்புகிறோம். ‘பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே’ என்று மணிவாசகம் கூறும் தத்வமயமான பழங்குடில் தான் அந்தப் பாத மந்திரம் லக்ஷக் கணக்கிலானவர்க்கு இன்று பிரசாந்தி நிலயம் இருப்பதைவிட, நூற்றுக்கணக்கானவருக்கு மட்டுமே அன்று இன்னும் நெருக்கமான தாயகமாக இருந்தது பாத மந்திரம்.
தாயாகவே விடைதர முடியாமல் தந்து பக்தர்களை அந் நாட்களில் அனுப்பிவைப்பார் ஸ்வாமி. “வீடு திரும்ப வேண்டும் என்று பக்தர் விண்ணப்பித்தால், “ஏன், பிறந்தகம் அதற்குள் அலுத்துப் போச்சா? மாமியார் வீட்டுக்குப் போகணுமா? ம்… போங்கள்! மாமியார் அவஸ்தை அதிகமானதும் மறுபடி வந்து சேருங்கள்” என்பார். மாயைதான் மாமியார்; மாயி நம் ஸ்வாமியார்!
2 அதாவது முதற்பதிப்புக்காக நூல் உருவான 1976 வரை
அவர்கள் வண்டியில் ஏறி அது கிளம்பும் வரை உடன் நிற்பார் சில சமயம் ஆற்றங்கரை வரை சென்று, அக்கரையில் அவர்கள் புள்ளி புள்ளியாக மறைகிறவரை நின்றிருந்து அபயஹஸ்தத்தைத் தூக்கி ஆட்டிக் கொண்டிருப்பார். ஆற்றங்கரைக் காற்றில் கற்றைக் குழல் புரள, இதயம் அன்பிலே துவள அவர் அப்படி நிற்பதை மனத்தில் பார்த்துக்கொண்டாலே பச்சைக் கற்பூர அபிஷேகம் பெறுவது போலிருக்கிறது!
பக்தர்களுக்குத் தாமே கைப்பட பந்துத்வம் சொட்டக் கடிதம் எழுதுவார். விழாக்களுக்கு வரச் சொல்லி அழைப்பார். தாமாகவே அவர்கள் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிக்கொண்டு செல்வார். பகவானா இவர் என்னும்படிக்கு விளையாடி விநோதம் செய்வார் இழையப் பழகுவார். இன்றும் ஒரு சில அந்தரங்க பக்தர்களிடம் அவர் இப்படி எல்லாம் ஒட்டி நின்று இனித்து விளையாடினாலும், அந்த ஆதிகாலத்தோடு ஒப்பிட்டால் இன்று ஓரளவு விரக்தராக, விலகியவராகவே ஆகிவிட்டார் என்கிறார்கள்.
பழைய மந்திரத்தில் ஒவ்வொரு பாட்டிமாரையும் தமக்கு ஸ்நானம் செய்விக்கச் சொன்னதை முன்பே பார்த்தோம். அங்குவந்து தங்குவோர் ஒவ்வொருவர் அறைக்கும் சென்று, அவர்களோடு அமர்ந்து உண்பார். ஒரே நாளில் பதினைந்து, இருபது பக்தர் ஜாகைகளுக்கு அடுத்தடுத்துச் சென்றுகூட நமது ஸ்வல்ப ஆஹாரக்காரரே உண்டிருக்கிறார். உலகுண்ட மாயனும் அவரேயன்றோ?
அந்நாட்களிலும் உபதேசத்துக்குக் குறைவில்லை. முப்பத்திரண்டு வயதுக்குப் பின்பே விசேஷமாக மேடைப் பிரஸங்கம் ஆற்றத் தொடங்கினார்; இதனை ஒட்டியே வேதாந்த, புராண, தத்வங்களை எழுதிப் பிரசாரம் செய்ய ‘ஸநாதன ஸாரதி’ என்ற பத்திரிகை தொடங்கினார். (இன்று இவ்வேடு ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஸிந்தி, நேபாளி, அஸ்ஸாமி, ஒரியா ஆகிய இத்தனை மொழிகளில் வெளியாகிறது.) எனினும் ஆதி காலத்திலேயே, விநோதங்களுக்கு ஊடே ஊடே உரையாடலிலேயே உபதேசம் கொடுத்துவிடுவார். விநோத லீலையாகத் தோன்றுவதிலேயே தத்வார்த்த விளக்கம் கொடுத்து விடுவார். உதாரணமாக:
ஸாகம்மா, “போர்க்களத்தில் பகவான் அர்ஜுனனுக்கு இத்தனை பெரிய கீதையை உபதேசம் செய்து, விச்வரூப தரிசனம் காட்டிக் கொண்டிருந்தபோது எதிரிகள் எப்படிப் போரிடாமலே பேசாதிருந்தார்கள்? விச்வரூபம் காணாதிருந்தார்கள்? இது நம்பமுடியாமலிருக்கிறதே!” என்றாள்.
பாபா பதில் சொல்லாமல் சித்ராவதி மணலை அளைந்தார். மணலைக் கயிறாகத் திரிப்பது என்பார்கள். இவரோ கயிறென்ன, எதுவாக வேண்டுமானாலும் அதை மாற்றிவிடுவாரே! இப்போது முழங்கை வரை மணலில் ஆழ்த்தி எடுத்தார். ஆகா, ஓரடி நீளமும் அரையடி உயரமும் உள்ள அழகிய தந்தப் பிரதிமை வெளிப்பட்டது! கீதோபதேசப் பதுமை! பல குதிரைகள் பூட்டிய ரதத்தில் பகவான் அமர்ந்து உபதேசிக்கிறார். ஒவ்வொரு மில்லிமீட்டரிலும் நுணுக்கமான வேலைப்பாடு!
அதெல்லாம் இருக்கட்டும். ஸாகம்மாவின் கேள்விக்கு விடை எங்கே? இதோ பாபா சொல்கிறார்: “இதோ இந்த தந்தப் பதுமை இருக்கிறதே, இதைச் சாதாரணமாக மாநுட ரீதியில் எத்தனை தொழிலாளிகள் சேர்ந்து எத்தனை நாட்கள் வேலை செய்து தயாரிக்க வேண்டியிருக்கும்? ஆனால் இப்போது இது ஸ்வாமி ஒருவரின் சங்கற்பத்தில் க்ஷணகாலத்தில் சிருஷ்டியாகி விடவில்லையா? பகவான் மனம் வைத்தால் காலத்தையே மாற்றிவிடமுடியும். இப்போது மாநுட ரீதியில் பல நாட்கள் தேவைப்படுகிற காரியத்தை ஒரு நொடியிலேயே முடித்து விட்டேன். அன்று மாநுடரீதியில் போர்க்களத்தில் மற்ற வீரர்களுக்கு ஒரு சில கணம் ஓடும்போதே, அர்ஜுனனின் சித்தத்தில் கீதோபதேசத்துக்கான அத்தனை நீண்டகாலத்தை உண்டாக்கிவிட்டேன்; மானுடக் கண்ணுக்குத் தெரியாத விச்வரூபம் காண அவன் ஒருவனுக்கே திறமருளினேன்” என்றார்.
இருப்பினும், பெரும்பாலும் தமது ஸ்தூல சரீரத்தைக் காலதத்வத்துக்கு உட்பட்டே அவர் இயக்குவதால்தான் பழைய மந்திர நாட்களில் செய்ததுபோல் இன்றுள்ள கணக்கற்ற அடியரில் ஒவ்வொருவருடனும் பழக முடியாமலாகியிருக்கிறது. இன்று ஒவ்வொருவர் பாலும் இதயத்தில் அலை வீசும் அன்பு ஸமுத்ரத்தை அடக்கிக்கொண்டு வெளியிலே சற்று விட்டேற்றியாகத்தான் அவ இருந்தாக வேண்டியிருக்கிறது. பழைய நாட்களைப் போல அவஸ்தூல அன்பு காட்டினால் புட்டபர்த்திக்குக் கோடானுகோடி மக்கள் நித்யவாஸம் செய்ய வந்துவிடுவரே! இதனால்தான் ஒரு பார்வை, ஒரு சொல்லில் அன்பைக் காட்டிவிட்டு அகன்று விடுகிறார். பேட்டி கொடுப்பாராகில், அப்படிப்பட்டவர்களிடம் அச்சமயத்தில் பிரேமையை வர்ஷித்துவிடுகிறார். ஆயினும் அது முடிந்த மறுகணமே, அவரா இவர் என்னும்படி விட்டேற்றியாக வறட்சி மாதிரி கூட, ஆகிவிடுவார். பாதமந்திரத்தில் எவர்களைக் கழுத்தில் கை போட்டுக்கொண்டு கட்டி மகிழ்ந்தாரோ அவர்களுக்குங்கூட இன்று இதே கதிதான் என்பதை நினைத்து வேண்டுமானால் பிற்கால பக்தர்கள் திருப்திப்படலாம்!
ஆயினும் ஸூக்ஷ்ம ஸாயிக்கு அத்தனை லக்ஷம் பேரு நெருக்கம். அவர்களிடம் இறுக்கமான அன்பைக் காட்டி வினை தீர்த்து, வியாதி தீர்த்து, விபத்து தீர்த்து, விபரீத சிந்தை தீர்த்து அருள்வதில் அவருக்கிணை அவர்தான். ஸ்தூல ஸாயி செய்யாததெல்லாம் ஸூக்ஷ்ம ஸாயி செய்வார். ஸ்தூலருக்கு வெண்ணெய், பால் பிடிக்காதிருக்கலாம். ஸூக்ஷ்மரோ பலர் இல்லங்களில் இதே நிவேதனங்களை ஏற்கிறார்! ஸ்தூல ஸாயிக்குப் புலம்பலாகவும், விளம்பமாகவும் உள்ள பஜன்கள் உகவாமலிருக்கலாம். ஸூக்ஷ்ம ஸாயியோ இப்படிப்பட்ட பஜன்கள் பாடப்பெறும்போதும் பல இடங்களில் தமது அருளின் அடையாளங்களைக் காட்டுகிறார் – அதாவது பஜனைக் கூடத்தில் திடுமென தாழம்பூ அல்லது மல்லிகை மணம் பரவும்; அல்லது படங்களில் விபூதி, தேன் முதலியன துளிக்கும்; அல்லது அவற்றுக்குச் சார்த்தியுள்ள பூச்சரம் சக்கர வட்டமாகச் சுழலும்; அல்லது படத்திலிருந்து விக்கிரஹங்கள் குதிக்கும்; அல்லது ஒளி மயமான “ஓம்” என்ற அக்ஷரம் சித்திரத்தில் தோன்றும்; அல்லது ஸூக்ஷ்ம பாபாவுக்கென அமைத்த ஆஸனத்தில் வைத்திருக்கும் புஷ்பத்தில் ஸ்தூல ஸ்பரிசம் பட்டாற்போல் அது நசுங்கியிருக்கும்!
ஸ்தூலமோ, ஸூக்ஷ்மமோ எப்படியாயினும், இவரது அவதாரப் பணி இரண்டுதான் ஒன்று, அடியாரின் தனி வாழ்க்கையைக் கணந்தோறும் கவனித்து இடர்களில் காப்பது; மற்றது. உலகம் முழுவதிலும் பொதுவாக நல்லறங்கள், ஆன்ம நாட்டம் பரப்புவது. பின்னே சொன்னதற்கே அவதாரங்களை மீள மீள நிகழ்த்துவதாக கீதாசார்யன் கூறினான். “உலகில் தர்ம ஸம்ஸ்தாபனத்துக்கே நான் அவதரித்துள்ளேன்” என்று பாபாவும் பன்முறை கூறியிருக்கிறார். ஒருபக்கம் தர்மங்கள் முன்னைவிட வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் சீரழிவும் அது பாட்டுக்கு வலுத்துக் கொண்டுதான் போகிறது. இந்த விஷயத்தைப் பிற்பாடு கவனிக்கலாம். அவதாரப் பணி என்று எடுத்துக் கொள்ளும்போது தர்ம ஸ்தாபனமே தலையான முக்யத்துவம் பெற்ற போதிலும், தனிப்பட்ட அடியாரின் இடர் தீர்ப்பதிலேயே அவதாரத்தின் அன்பு இனிக்க இனிக்க நம் நெஞ்சில் மேவுகிறது.
இவ்விதம் விபத்தில், விபரீதத்தில் பாபா கை கொடுப்பது போல் எந்தப் புராண இதிஹாஸத்திலும் பார்த்திருக்கமுடியுமா என்பது சந்தேகம்தான். வானத்து விண்மீன்களை எண்ணினாலும் எண்ணலாம். இந்த ஆபத்ஸஹாய லீலைகளை எண்ணி முடியாது. ‘ஸாம்பிள்’ மட்டுமே பார்க்கலாம்.
***
பாபா கொடைக்கானலில் பக்தர் சூழ்ந்திருக்கையில் படுக்கையில் சாய்ந்தமர்ந்திருக்கிறார். திடுமென எழுந்து, “ஷூட் பண்ணாதே!” என்று கூவிவிட்டு, அப்படியே சாய்ந்து விடுகிறார். ஜீவசக்தி கூடுவிட்டுக் கிளம்பிவிட்டது!
மீண்டும் ‘பிரக்ஞை’ பெற்ற பாபா, போபாலில் உள்ள காப்டன் எஸ்… என்ற ராணுவ வைத்திய அலுவலருக்குத் தந்தி கொடுக்கச் சொல்கிறார். தந்தி வாசகம் “ஆயுதத்தை பற்றிக் கவலைப்படாதே; அது என்னிடம் இருக்கிறது பாபா” என்றிருக்க வேண்டுமாம்!
பக்தர்கள் எத்தனை கோரியும் விளக்கம்தராமல் வதைக்கிறார்!
நான்காம் நாள் போபாலிலிருந்து கடிதம் வருகிறது. முதலை பற்றிய கஜேந்திரனையும், துச்சாஸனன் துகிலுரித்த துரோபதியையும் காத்த பதி இவர் என்று காட்டிக் கொடுக்கும் கடிதம்! கடிதத்தை அடியார் கேட்குமாறு படிக்கச் செய்கிறார்.
அப்போது செய்யப்பட்ட மாநிலப் புனரமைப்பில் ஸாயி பக்தரான மேற்படி காப்டன் தாழ்ந்த பதவிக்குத் தள்ளப்பட்டு அவரது ஜூனியர்கள் மேலாளராகி விடுகின்றனர். அவர் செய்த முறையீடுகளுக்குக் கேள்வி முறையில்லை. மனம் சலித்து விடுகிறார் அச்சமயத்தில் அவரது மனைவியும் உடன் இல்லை.
இரண்டாம் உலகயுத்தத்தில் பணி செய்தவர் அவர் சட்டென்று துப்பாக்கி நினைவு வந்து விடுகிறது. ஆம் தற்கொலைக்குத் துணிந்து விடுகிறார். கை பிசகாமல் சுடுகிறோமா என்று சோதனை பார்க்க ஒரு முறை சுட்டும் விட்டார்.
மறுமுறை தம்மை நோக்கியே சுட்டுக் கொள்ளப் போகும் அந்த நொடித் துகளில்தான் சரியாக இங்கே கொடைக்கானல் பாபா, “ஷூட் பண்ணாதே!” எனக் கத்தியது!
அதே சமயம் அங்கே, போபாலில், காப்டனின் அறைக்கல தடதடவெனத் தட்டப்பட்டது.
அவருக்கு என்ன தோன்றியதோ, படுக்கை அறைக்குப் போய் ரிவால்வரைத் தலையணையின் கீழ் வைத்துவிட்டு வந்து கதவைத் திறந்தார்.
அவரது ஆதிகாலக் கல்லூரி நண்பர் தமது மனைவி வேலையாள் சகிதம் பெட்டியும் படுக்கையுமாக வந்து நின்றார் உல்லாஸ புருஷரான அந்த நண்பர் பழைய ஜோக்குகணை வீசினார்; புது ஜோக்குகளைப் பொழிந்தார். எந்த தத்வமும் உபதேசமும் செய்யமுடியாததை அவரது அன்பும், மலர்ச்சியாம் நகைச்சுவையுமே சாதித்துவிட்டன.
அதாவது, தற்கொலை எண்ணத்தை விட்டே விட்டார் காப்டன்!
இப்படி முக்கால் மணி ஆனபின் அவருக்கு மீண்டும் உயிரளித்த நண்பர், “இங்கே உன் அகத்துக்காரியும் இல்லை. நாங்கள் தங்கினால் சிரமம்தான். பக்கத்திலேயே வேறொரு நண்பர் இருக்கிறார். அங்கே தங்குகிறோம்” என்று சொல்லி, அந்த இன்னொரு நண்பரின் விலாஸத்தைக் கொடுத்துவிட்டு, மனைவி, வேலையாள் ஸஹிதம் பெட்டியும் படுக்கையுமாகக் கிளம்பிவிட்டார்.
காப்டன் திரும்பி உள்ளே வந்து துப்பாக்கியை அதனிடத்தில் வைப்பதற்காகத் தலையணைக்குக் கீழ் கைவிட்டார்.
காணோம்!
அவர் உள்ளம் ஒரு விம்மல் விம்மியது. ஒருகால், ஒருகால்… அப்படியும் இருக்குமோ? கல்லூரி நண்பர் கொடுத்த விலாஸத்துக்கு ஓடினார். ‘அப்படியும் இருக்குமோ?’ என எண்ணினாரே, அப்படியேதான் இருந்தது! அவ்விலாஸத்தில் குறிப்பிட்ட எவருமே இருக்கவில்லை!
“நொடியின் சிறு பொடிக்குள்” புகுந்து வெடியிலிருந்து மீட்ட பிரபோ, “ஸாயி!” என்று ஆவி கூவ வீடு திரும்பினார்.
கோடையும் கானலும் தெரியாத குளிர் பூம்புனலான அருளாளனிடமிருந்து தந்தி! ஆயுதம் தரியாத அவதாரனிடம் அடியாரின் ஆயுதம் பத்திரமாக இருக்கிறதாம்!
மூவராக வந்து விளையாடிதை என்னென்று சொல்ல? “ஏகதா பவதி த்ரிதா பவதி” “ஒன்று மூன்றாகிறது” என்ற வேத வாக்கியத்தை எப்படி விசித்திரமாகக் காட்டிவிட்டார்!
***
போபால் மட்டும் தானா என்ன? பூபாலனத்தில் அமெரிக்கா வரை விரிகிறது ஐயனின் ஆபத்சகாயம்.
அமெரிக்க விமானப்படை ஸிவில் பாட்ரோலைச் சேர்ந்த காப்டன் சார்லஸ் பென் விமானம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். லாஸ் ஏஞ்ஜெல்ஸைச் சேர்ந்த இவருடைய கார்டியன் ஏஞ்ஜல் (காப்புத் தேவதை) நம் பாபாதான்.
காணாமற் போன சில விமானங்கள் எங்கு போயின என்று கண்டுபிடித்து மீட்கும் பணியில் பென் ஈடுபட்டிருக்கையில், இவரது விமானமே காணாமற் போகிற துர்க்கதிக்கு ஆளாக இருந்தது. மற்ற விமானங்களின் தடம் தெரியாமல் இவர் திண்டாடியது மட்டுமின்றி, பெட்ரோல் டாங்க் வெடித்து வின்ட் ஸ்க்ரீன் மீது பெட்ரோல் பீய்ச்சி அடித்தது. விமானம் நெருப்புப் பிடித்து எரிந்து விழ வேண்டியதுதான்.
அந்த உச்சகட்டத்தில், புட்டபர்த்திக்குப் பதினாயிரம் மைல்களுக்கப்பால் பதினாயிரம் அடி உயரத்தில், அந்த விமானத்தில் பாபா ஸாக்ஷாத்தாகப் பென்னுக்குப் பக்கத்தில் பொன்னாக நின்று புன்னகைக்கிறார்!
விமானத்துக்குள் பெட்ரோல் வெடிப்பு; வெளியே மலைச்சிகரங்களில் மோதிக்கொண்டு சீறும் ‘ஹைல் ஸ்டார்ம்’ எனும் பயங்கரப் பனிப்புயல்! பென் துளிக் கலங்கவில்லை. அந்தப் பைலட்டின் வாழ்க்கைப் பைலட்டான பாபாதான் பக்கத்தே உள்ளாரே!
பென்னிடம் “இந்த விசையை இப்படி முடுக்கு; அந்த விசையை அப்படித் திருகு” என்று சொல்லிக் கொடுத்தபடியிருக்கிறார் ஸ்வாமி. விமானம் விபத்தின்றிப் பறக்கிறது.
ஆத்மாவை நெருப்பு எரிக்காது, காற்று அசைக்காது என்பார்கள். ஆத்மநாயகன் அருளில் ஜடமான விமானத்தைக்கூட நெருப்பும் காற்றும் தொடவில்லை. விபத்திலிருந்து காத்தது மட்டுமில்லை. “மற்ற பிளேன்களைத்தானே தேடுகிறாய்? நீ ஏன் தேடவேண்டும்? நான் தேடித் தருகிறேன்!” என்கிறது தேடக் கிடைக்காத தெய்வம், தேடாமலே கிட்டிவந்து!
***
மெக்ஸிகோவும் அமெரிக்காவும் சந்திக்கும் டிகேட்டில் இருக்கிறது ‘ஸாயி நிலயம்.’ இந்திராதேவி என்ற இந்தியப் பெயர் சூட்டிக் கொண்டுள்ள அமெரிக்க பிரஜையான ருஷ்ய மூதாட்டியை முன்பே கண்டிருக்கிறோம். “ஸாயி நிலயம்” என்பது அவரது யோகப் பயிற்சிக்கூடமே. உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்றவரும், பதினோரு மொழி நிபுணரும், “இருளிலிருந்து ஒளிக்கு” என்ற தத்வத்தைப் பல தேசங்களில் போதித்தவருமான இந்திராதேவி மைசூர் கிருஷ்ணமாச்சாரியார் என்ற மஹாயோகியிடம் பயின்றவர். ‘யோகேச்வரன் இவனே’ என்று பாபாவிடம் வந்துவிட்டவர்.
அமெரிக்காவில் இவர் யோகாஸன போதனை தொடங்கினார். ஒருநாள் போதனையின்போது ஒவ்வொரு பௌதிகச் செயலோடும் ஒவ்வொரு மானஸிக பாவனையையும் சேர்த்துக் கொள்ளுமாறு பாடம் சொல்லிக் கொண்டு போனா உதாரணமாக ஓர் அவயவத்தைத் தளர்த்தி விட வேண்டுமானால் ‘நாம் இறைவனுக்கு முன் மிக எளியவர் என்ற எண்ணத்தோடு தளர்த்துங்கள்’ என்றார். கையை ஊன்றச் சொல்லும்போது ‘ஸர்வ ஆதாரமான பகவானையே ஊன்று கோலாகப் பற்றும் உணர்வை அக்கையில் ஊட்டிக் கொள்ளுங்கள்’ என்றார். ஜீவதயையைத் தசைகளோடு பிசைவதுபோல் ஒவ்வொரு யோக அப்யாஸத்திலும் அன்பான மனோபாவனைகளைக் கலந்து கலந்து அளித்தார்.
சீடர்களுக்கு வியப்பு – “இதென்ன ஹட யோகம், ராஜ யோகம் எதிலும் சேராத புது யோகம்!” என்று. ஆனால் இவ்விதம் உடலசைவோடு உணர்வசைவுகளைச் சேர்த்து தேகத்தைப் பிரேம மயமாக்கிக் கொண்டு ஆஸனங்கள் பயிலும் போது அதுவரை கிட்டியிராத புனித ஆனந்தம் தெரிந்தது!
“மாதாஜி, இதென்ன யோகம்?” எனக் கேட்டனர். “ஸாயி யோகம்” என்றார் இந்திரா பளிச்சென.
“இதைத் தாங்கள் எப்போது கற்றீர்கள்?” என்று சீடர்கள் கேட்டதுந்தான் அம்மையாருக்கே அதிசய உண்மை பளிச்சிட்டது! விந்தை! அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிற அப்போதேதான் இவருக்கும் இந்த ‘ஸாயி யோகம்’ தெரிய வந்திருக்கிறது! ஸூக்ஷ்ம ஸாயி குரு இவருள்ளிருந்து போதிக்க, அதையே இவர் வெளியே மொழிந்திருக்கிறார்!
யோக சமாசாரம் இருக்கட்டும். விபத்துத் தீர்க்கும் வித்தகமல்லவா இவ்வத்தியாய விஷயம்?
1970 ஸெப்டெம்பர் முடிவில் இந்திரா தேவி சிகாகோ சென்றிருக்கையில், டிகேட்டில் பயங்கரக் காட்டுத் தீ மூண்டு 4500 ஏக்கர் பரப்பளவை பஸ்மமாக்கிவிட்டதாகச் செய்தித்தாள்களில் பார்த்தார். அப்பகுதியில்தான் இவரது ஸாயி நிலயம் இருந்தது.
இந்திராதேவி உண்மை யோகினியாதலால் கலங்கவில்லை. அது பகவான் பாபாவுக்கு அர்ப்பணமான இடம். அவர் பார்த்துக் கொள்கிறார். அது எரிந்து போயிருந்தாலும் சரி, ‘அதுதான் பகவானுக்கு சம்மதம் என்று அர்த்தம். அவருக்கு எது சம்மதமோ அதுதான் நல்லது. கொடுமைக்கும் அவர் சம்மதிக்கிறார் எனில், அதற்கு நாம் அறியாத ஒரு தர்மமான காரணம் இருக்கத்தான் வேண்டும்’ என்று நிம்மதியாகத் திரும்பி வந்தார்.
ஸாயி நிலயம் எரியாமலே நின்றது!
அங்கிருந்த ஸாதகர்கள் பகவானின் அற்புதத்தைச் சொல்லிச் சொல்லிக் கூத்தாடினர். நெருப்பு நெருங்கி வந்ததும் இவர்கள் பக்கத்துக் குன்றுச்சிக்கு ஓடினராம். அக்னி பகவான் திருவிளையாடலை முடித்துத் தணிந்த பின்பே திரும்பினர். ‘ஸாயி நிலயம்’ முழுவதற்கும் நெருப்புக் கடவுள் கறுப்புப் பூச்சு மட்டும் கொடுத்து விட்டுச் சென்றானே ஒழிய, அதை எரிக்கத் துணியவில்லை. அங்கும் பாபாவின் பூஜையறையிலோ, இந்தப் ‘பெயின்டிங்’ வேலைகூடச் செய்யாமலே, அதை வெள்ளை வெளேரென்று விட்டுச் சென்றான்! ‘நெருப்பையும் எரிக்கும்’ என்று திருப்புகழ் சொன்ன திறன் தான்! சில்லென்ற நீர் சீறும் நெருப்பை எரித்து விடுகிறது ஸாயியின் கருணை மழை நெருப்பை எரித்தது!
மீண்டும் 1971 ஜூலைத் தொடக்கத்தில் அக்னி படையெடுத்தான். அதே ராஞ்சோ குசுமாப் பிரதேசத்தை, வாயுதேவன் பரம சகாயம் செய்ய, தீச்சேனை மளமளவென்று முன்னேறி இதோ ஸாயி நிலயத்தை நெருங்கிவிட்டது!
இந்திரா, அவரது கணவர், டிரைவர் அல்ஃபான்ஸோ ஆகிய மூவரும் வெளியே சென்று திரும்புகையில் இதைக் கண்டனர். ஆயினும், வெளியிலேயே இருந்துவிடாமல், நெருப்பு நெருங்கும் நிலயத்துக்குள்ளே சென்றனர் – அத்தனை தைரியம்! அதுவல்லவா உண்மை நம்பிக்கை!
இவர்கள் வருமுன்பே நிலயத்திலிருந்து ஸாதகர்களும் மற்றவர்களும் பக்கத்திலுள்ள குன்றுக்கு ஓடியாயிற்று!
விபத்து வேளையில் பாபா இந்திராவின் மோதிரத்திலேயே அவருக்கு மட்டும் தெரிவார். அச்சமயத்தில் பாபா எங்கே எப்படி இருக்கிறாரோ, அப்படியே இங்கு தெரிவார்! ஒருமுறை ரு வெள்ளைக் காரிலிருந்து அவர் இறங்குவதாக மோதிரத்திற்குள் தெரிந்தது. பிறகு இந்திரா விசாரணை செய்து, அவர் அச்சமயத்தில் ஒரு வெள்ளைக்காரில் பயணம் முடித்து இறங்கினார் என்று தெரிந்துகொண்டார்!
இந்திரா தியானத்தில் அமர்ந்தார். தன் மோதிரத்துள் தரிசனம் காட்டும் மாதிறத்தோனிடம், “பாபா பகவான்! உங்களுக்கு எல்லாம் தெரியுமாயினும், நீங்களே ஆபத்துக் காலத்தில் இந்த மோதிரத்துள் தோன்றும் உங்களிடம் முறையிடச் சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா? அதனால் சொல்கிறேன். இதோ காட்டுத் தீ ஸாயி நிலயத்தை நெருங்குகிறது. உங்கள் சித்தப்படி ஆகட்டும்” என்று சொன்னார்.
‘விர் விர்’ என்று வந்துகொண்டிருந்த அக்னி அலைகள் இப்போது நெருங்குவதாகவே தெரியவில்லை! மூவரும் பால்கனிக்கு வந்து பார்த்தால்…
ஸாயி பக்தர்களாலுங்கூட நம்பவொண்ணா அதிசயம்!
நிலயத்துக்குச் சற்றுத் தள்ளி நெருப்பு ஒரு சுவர்போம் ஸ்தம்பித்து நின்றது!
திடுமெனக் காற்றின் திசை மாறிற்று. தீக்குத் துணையாக வந்த காற்று எப்படியோ ஒரு சுழி சுழித்துக் கொண்டு திரும்பி விட்டது! நிலயத்திலிருந்து நெருப்பை நோக்கி அச்சூறாவளிக் காற்று பாய்ந்து அதைப் பிடித்துத் தள்ளியது. துரத்தித் துரத்திச் சென்றது. அடக்கி, ஒடுக்கி அடிபணிந்து அணைந்து போக வைத்தது!
நெருப்பை அணைப்பது தங்கள் கைமீறிய விஷயம் என்று சளைத்துப் பின் வாங்கிக் கொண்டிருந்த மெக்ஸிகரான தீயணைப்புப் படையினர் இதைக் கண்டு கூவினர்: “மிலாக்ரோ, ஸெனோரா!” (“அம்மணி! அற்புதம்!”)
உடனே வரச்சொல்லி பாபாவிடமிருந்து தந்தி வந்தது. பர்த்திக்குப் பறந்தார் இந்திரா. இந்திரையாம் மஹாலக்ஷ்மி பொறித்த பதக்கத்தை அவர் கையில் வைத்த பாபா, “இது நிலயத்துக்கு ரக்ஷை. இனி நெருப்பில்லை. (No more fires)” என்றார்.
வேதம் மறுபடி வாழ்கிறது. நம் வித்தகன் வரலாற்றிலே! நாற்புறமும் சூழ்ந்த நெருப்பிலிருந்து அத்ரி மஹர்ஷியை அச்வினி தேவர் காத்தனர் என்ற வேதக் கதையை இனி நம்பலாம்தானே?
அன்று நிலயத்தைத் தீ நெருங்கிய போது வெளியே ஓடிவிட்ட ஸாதகர்கள் தங்கள் உயிரையே கண்களில் தேக்கிக்கொண்டு “மாதாஜி என்னாவாரோ?” என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். நெருப்பு நிலைத்து நின்றதையும், பிறகு திரும்பி ஓடியதையும் பார்த்தனர். பாபாவிடம் இதுவரை பக்தியே கொள்ளாதலின் என்பவளின் கண்களிலிருந்து மடை பெருகிற்று.“ஸாயி பாபா இதோ இருக்கிறார்!” என்று விசும்பினாள்.