மந்த்ராலய சரிதம் – 1

மந்த்ராலயத்தை தேவேந்திரனுடைய அமராவதிக்கும், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை கல்பதருவுக்கும் ஒப்பிடுவது வழக்கம். சுவாமிகளின் பிருந்தாவனத்தில், ஸ்ரீ ராமர், நரஹரி, கிருஷ்ணர், வேத வியாசர் முதலிய தெய்வங்கள் கோயில் கொண்டிருப்பதால் அதை தரிசிப்பவர்கள் கலியுகத்தின் இன்னல்களில் இருந்து விடுதலை பெற்று, நற்கதி அடைகிறார்கள். சாதி, சமய வேற்றுமையின்றி அனைவரும் வாழ்க்கையில் ஒரு முரையாவது மந்த்ராலயத்திற்குச் செல்ல வேண்டும் என்று விழைகிறார்கள்.

ஸ்ரீ சத்குரு சாயிபாபா, தம்மை ஸ்ரீ வேங்கடாசலபதியின் சீடர் என்று கூறி வந்தார். ஸ்ரீ ராகவேந்திரரோ, திருவேங்கடமுடையானைத் தமது தந்தையாகவே போற்றி வந்தார். அதர்மம் மேலோங்கித் துயரம் சூழ்ந்துள்ள இக்கலியுகத்தில் வேத தர்மத்தை நிலை நாட்டவும், ஹரி பக்தியை பரவச் செய்யவும், ஸ்ரீ வேங்கடரமணன், உலகிற்கு அளித்த பிச்சையன்றோ ஸ்ரீ ராகவேந்திரர்!

விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ண பட்டர்.  அவர் ஒரு பெரிய வீணை விதவான். வேத, தர்ம சாஸ்திரங்களை முறையே பயின்று, ஸ்ரீ மத்வ சித்தாந்தத்தைப் பற்றி பிரவசனம் செய்து வந்த அந்த குணசீலருக்கு, கனகாசல பட்டர் என்று ஒரு மகன் இருந்தார். ஹரி பக்தியில் மிகவும் சிறந்து விளங்கிய அவரும் தந்தையைப் போலவே ஒரு சாஸ்திரப் பண்டிதராகவும் இசை வல்லுனராகவும், ஆஸ்தான வித்வானாகவும் திகழ்ந்தார். ஸ்வர தேவதைகள் அவர் ஆணைக்குட்பட்டு அவர் முன் நர்த்தனம் செய்தன.

கனகாசல பட்டரின் குமாரரான திம்மண்ண பட்டர் – கோபிகாம்பாள் என்ற பெண்மணியை மணந்து கொண்டார். அனேக ஆண்டுகள் மக்கட்செல்வம் இல்லாமல் மனம் வாடிய இத்தம்பதி, தங்களது குலதெய்வமான வேங்கடாசலபதியை தரிசிக்க திருமலைக்கு வந்தனர். இவர்களது தூய பக்தியைக் கண்டு, திருவேங்கடநாதன் கருணை கொண்டார். அருள்மாரி பொழிந்தார். அதன் பலனாக திம்மண்ணப் பட்டருக்கு ஒரு மகள் பிறந்தாள். குலதெய்வத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் மகளுக்கு வேங்கடாம்பாள் என்று தந்தை நாமம் சூட்டினார். அடுத்து அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். குருராஜர் என்ற திருநாமம் அவனுக்குச்  சூட்டப்பட்டது.

திருமலையிலிருந்து குடும்பத்துடன் ஸ்ரீ வரதராஜப் பெருமாளைத் தரிசிக்க காஞ்சீபுரம் வந்த ஸ்ரீ திம்மண்ண பட்டர் சிதம்பரம் அருகிலுள்ள புவனகிரியிலேயே தங்கி விட்டார். அது அவருடைய மூதாதையர்கள் வாழ்ந்த சிற்றூர்.  அங்கு வேதம் ஓதி உன்னத வாழ்க்கை நெறிகளைக் கடைபிடித்து வாழ்ந்த அந்தணப் பெருமக்கள் நிறைந்திருந்தனர். மத்வமதத்தைச் சார்ந்த குணசீலர்களுக்கும் குறைவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்த மாத்வர்கள் இவரிடம் வந்து மத்வ சித்தாந்த நூல்களைப் படித்துச் சீடர்களானார்கள்.

இவ்வாறு நிம்மதியுடன் வாழ்ந்து வந்தார்கள் மனத்தில் ஒரு குறையும் இருந்தது. தமக்கு ஓர் ஆண் மகன் மட்டுமே இருந்தது அவருக்கு துயரத்தைத் தந்தது. குறையொன்றுமில்லை கோவிந்தனிடம் தம் குறையை சொல்லி கதறியழுவதற்காக திம்மண்ண பட்டர் மீண்டும் திருப்பதிக்கே சென்றார். ஸ்ரீ வெங்கடாசலபதியின் பாத கமலங்களில் விழுந்து வணங்கி, “நீயின்றி எனக்கு வேறு கதியில்லை” என்று அடைக்கலம் புகுந்தார். பக்தியால் கசிந்து உருகினார். தனிமரம் தோப்பு ஆவதில்லை. எனவே, மீண்டும் ஒரு பிள்ளையைப் பெறாமல் மலையை விட்டு இறங்கப் போவதில்லை என்று விரதம் ஏற்றுக் கொண்டார். திருமாலும் மனம் இரங்கினார். திம்மண்ணருக்குத் திருக்குமாரன் ஒருவனை ஈந்தார். எல்லையற்ற ஆனந்தத்தில் திளைத்துப் பூரித்து திம்மண்ணர், ஸ்ரீ வேங்கடேசன் அளித்த புத்திரருக்கு வேங்கட பட்டர் என்று பெயர் சூட்டி, உச்சி முகர்ந்து, முத்த மாரி பொழிந்து அக மகிழ்ந்து போனார். குழந்தையைக் காண வந்தவர்கள், பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனின் தெய்வீகப் பொலிவை அதன் வதனத்தில் கண்டு கை கூப்பி வணங்கி விட்டுச் சென்றனர். கலியுகவாசிகளை உய்விக்க, ஸ்ரீனிவாசன் தங்களுக்குத் தந்த வரப்பிரசாதம் என்று அந்தத் தெய்வக் குழந்தையை ஈன்ற தாய், தந்தையர் எண்ணி, உள்ளத்தில் புளகிதம் பொங்க புவனகிரிக்குத் திரும்பினர்.

திம்மண்ன பட்டர் தந்தைக்குரிய கடமைகளைச் செவ்வனே ஆற்றினார். தம் குமாரத்தியை மதுரையைச் சேர்ந்த லட்சும நரசிம்மாச்சாரிக்கு கன்னிகாதானம் செய்து தந்தார். குருராஜருக்கு காலா காலத்தில் உபநயன, விவாக சுப காரியங்களையும் நடத்தி வைத்து, அவர் கற்க வேண்டிய சாஸ்திரங்களில் பயிற்சியளித்தார். வயோதிகம் அவரை வந்தடைந்தது. உயிர் துறக்கும் தருணத்தில் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வந்த சிறுவன் வேங்கடபட்டரை, மூத்த மகன் குருராஜரிடம் ஒப்புவித்து விட்டு கண்களை மூடினார் அவர்.

தமயன், தந்தைக்குச் சமம் அல்லவா? குருராஜர் தம்பிக்குப் பெரும் ஆதரவாக இருந்து ஏழு வயதில் அவனுக்கு பிரம்மோபதேசம் செய்வித்தார். பின்னர் சகல வித்தைகளையும் கற்பதற்காக மதுரையிலுள்ல தமது தமக்கை புருஷனான நரசிம்மாச்சாரிட்ம தமது தம்பியை அனுப்பி வைத்தார் குருராஜர். அண்ணன் சொல்லுக்கு மறு சொல் பேசியறியாத அந்த உத்தமச் செல்வனும் மதுரைக்குச் சென்றான். வேதம், காவியம், நாடகம், அலங்காரம் முதலியவற்றை முறையே கற்றான். சில வருடங்களுக்குள்ளேயே இவையெல்லாம் அவனுக்குப் பாடம் ஆகிவிட்டன. அடுத்து லட்சுமி நரசிம்மாச்சார் தம் மைத்துனருக்கு தர்க்கம், வியாகரணம், மீமாம்சம் போன்ற பாடங்களைச் சொல்லி வைத்தார். பின்னர், வேதாந்த தத்துவங்களையும் எளிதில் கற்றறிந்தார் வேங்கடபட்டர். ஞானிகளாக இருந்தாலும், குருவின் மூலம் கற்க வேண்டும் என்ற நியதிக்கேற்ப, அவர் பாட்ம கேட்டாரே தவிர, முற்பிறவியின் புண்ணைய பலத்தால் அவர் எல்லாவற்றையும் முன்பே அறிந்திருந்தார் என்றே கூற வேண்டும்.

இளைய சகோதரனின் மதி நுட்பத்தையும், சாஸ்திர ஞானத்தையும் கேள்வியுற்று உள்ளம் குளிர்ந்த குருராஜர், வேங்கடபட்டரை புவனகிரிக்கு வரவழைத்து விவாகம் செய்து வைத்தார். சரஸ்வதி பாய் என்ற உத்தமியுடன் வாழ்க்கைப் படகில் பயணத்தைத் தொடங்கினார் வேங்கடபட்டர்.ஆனால், இவர் சம்சார சாகரத்தில் உழன்று, வயிறு வளர்க்கப் பிறந்தவர் அல்லவே! ஹரி பக்தியிலும், வேதாந்த விசாரத்திலுமே இவர் மனம் ஈடுபட்டது. ஸ்ரீ மத்வாச்சாரியாரின் நூல்களையும், அதற்கு ஸ்ரீ ஜயதீர்த்தர், வியாஸராஜர் முதலிய பல மகான்கள் செய்துள்ள வியாக்கியானங்களையும் உரைகளையும் படித்தறிய வேண்டும் என்று விரும்பினார். உத்தம குருவை மனம் நாடியது.  கும்பகோனத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கி விட்டார்.