மந்த்ராலய சரிதம் – 2

அப்போது கும்பகோணத்திலிருந்த ஸ்ரீ மத்வரின் பூர்வாதி மடம் ஒன்றில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் என்ற மகான் இருந்தார். அவர் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவரும், ஸ்ரீ மத்வரின் துவைத சித்தாந்தத்தில் உறுதியாய் நின்று அத்வைதிகளையும், சைவ மத குருக்களையும் வாதத்தில் வென்றவருமான ஸ்ரீ விஜயீந்திர சுவாமிகளின் சீடரான சுதீந்திர சுவாமிகள் ஒரு பெரிய சாஸ்திர பண்டிதர். பல சீடர்கள் இவரை அணுகிப் பாடம் கேட்டு வந்தார்கள்.

கும்பகோணம் வந்தடைந்த ஸ்ரீ வேங்கடபட்டர், சுதீந்திர சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி தமக்கு வித்யாதானம் அருளும்படி வேண்டினார். வேங்கடபட்டரின் முகலாவண்யத்தையும், வாக்கு வன்மையையும் பழமும் தன்மையையும் கண்டு, அவர் ஒரு மகா புருஷர் என்பதை சுவாமிகள் ஒரு நொடியில் அறிந்து கொண்டு அறிவு புகட்ட வந்துள்ள ஆசாரியனாகவே அந்தச் சீடரை மதித்தார். அவர் மீது எல்லையற்ற அன்பை வாரிச் சொரிந்தார்.

இதைக் கண்ட இதர சீடர்கள் சும்மா இருப்பார்களா? வேங்கடபட்டரைப் பற்றிச் சுவாமிகளிடம் இல்லாததையும், பொல்லாததையும் சொன்னார்கள். அவர் ஒழுங்காகப் பாடங்களைப் படிப்பதில்லை என்றும், எந்நேரமும் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் புகார் செய்தார்கள். அப்போது ஸ்ரீ சுவாமிகள், ஸ்ரீ மத்வாசாரியர் செய்தருளிய பிரம்மசூத்திர பாஷ்யத்திற்கு ஸ்ரீ ஜயதீர்த்தரால் செய்யப்பட்டிருந்த விளக்க உரையான நியாயஸூதை என்ற கடினமான நூலைப் பாடம் சொல்லிக் கொண்டிருதார். வேங்கடபட்டரைப் பற்றிச் சீடர்கள் கூறிய புகார்களைக் கேட்டு தாமே எல்லாவற்றையும் நேரில் அறிவதாகக் கூறியிருந்தார்.

ஒரு நாள் இரவு, சீடர்கள் படுத்து உறங்கும் அறைக்குச் சென்று பார்த்தார் சுவாமிகள். படித்ததற்கு அடையாளமாக அவர்கள் அருகில் புத்தகங்களோ, விளக்குகளொ இல்லை. போர்வையைப் போர்த்திக் கொண்டு ஆளுக்கொரு கோணத்தில் குறட்டை விட்டுக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார்கள். வேங்கடபட்டர் எங்கிருக்கிறார் என்று சுவாமிகள் தேடிப் பார்த்தார். அவரை அங்கே காண வில்லை. சந்தேகம் கொண்ட சுவாமிகள் மடத்தைச் சுற்றி வந்தார். அங்கு ஒரு மூலையில் கட்டாந்தரையில், தலையணை கூட இல்லாமல் இடுப்பில் கட்டியுள்ல வேட்டியுடன் போர்வையின்றி குளிரில் விறைத்தபடி வேங்கடபட்டர் படுத்து உறங்குவதைக் கண்டு மனம் வெதும்பினார். அவருடைய தலைக்கு அருகில் உலர்ந்த சருகுகள் எரிக்கப்பட்டு கருகி இருந்தன. மற்றொரு பக்கத்தில் நியாயஸூதை நூலும், சில ஓலைச் சுவடிகளும், எழுத்தாணிகளும் கிடந்தன. கருணையே வடிவான குரு தமது காஷாயத்தை எடுத்துச் சீடரின் மீது போர்த்தி விட்டு ஓலைச் சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு தம்முடைய இருப்பிடத்திற்கு திரும்பி விட்டார். ஆழ்ந்த நித்திரையில் இருந்த வேங்கடபட்டருக்கு இவை ஒன்றுமே தெரியாது.

மறுநாள் காலை அவர் கண் விழித்தவர் அங்கு ஓலைச் சுவடிகள் இல்லாததையும், தம் மீது காஷாயத் துணி போர்த்தப்பட்டிருப்பதையும் கண்டு திடுக்கிட்டார்.  இவையெல்லாம் சக மாணவர்களின் குறும்புத்தனமாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, தம் குருவிடம் சென்று முறையிட்டார். குருவும் இதைப் பற்றிப் பிறகு விசாரிப்பதாகச் சொல்லி அவரை அனுப்பி விட்டார்.

பகல் உணவு முடிந்ததும், சுவாமிகள் சபையைக் கூட்டினார். முதல் நாள் இரவு தாம் கண்ட காட்சிகளைச் சீடர்களிடம் விசாரித்தார். உலர்ந்த சருகுகளைக் கொளுத்தி அந்த வெளிச்சத்தில் இரவெல்லாம் வேங்கடபட்டர் நியாயஸூதைக்கு எழுதி வரும் வியாக்கியானங்களைப் படித்துக் காட்டினார். அன்றைய பாடத்தின் போது தமக்கே விளங்காத சில கருத்துக்களுக்கு வேங்கடபட்டர் தெளிவான வியாக்கியானங்கள் எழுதி, தம்முடைய அஞ்ஞானத்தையும் போக்கி விட்டதாக சுவாமிகள் கூறினார். குரு கூறியதைக் கேட்ட மற்றச் சீடர்கள் ஆச்சரியம் அடைந்து, வேங்கடபட்டரின் ஞானத்தைப் பாராட்டித் தங்களை மன்னித்தருளும்படி கோரினர். இவ்வாறு வேங்கடபட்டர் பகலில் பாட்ம கேட்டு, இரவில் நியாயஸூதைக்குத் தமது வியாக்கியானங்களை எழுதி முடித்தார். அந்நூலுக்குச் சுதீந்திர சுவாமிகள் ஸுதா பரிமளம் என்று பெயரிட்டார். அதனால் வேங்கடபட்டருக்குப் பரிமளாச்சாரியர் என்ற காரணப் பெயரும் தோன்றியது.

ஒரு வருடம் கும்பகோனத்தில் தங்கிவிட்டு, புவனகிரிக்குத் திரும்பினார் வேங்கடபட்டர் என்ற பரிமளாச்சாரியர், மனமொத்த மனையாளுடன் மீண்டும் இல்லறம் நடத்தத் தொடங்கினார். அதற்குள் அவருடைய படிப்பும், பாண்டித்யமும் பாரெங்கும் பரவிட்டிருந்ததால் பல பகுதிகளில் இருந்தும், சீடர்கள் அவரிடம் பாட்ம கேட்டுச் சென்றனர். அந்த இல்லத்தில் சரஸ்வதி தேவி தாண்டவமாடினாள். கல்வியும், கேள்வியும் தழைத்தன.

ஆனால், கலைமகள் ஆட்சி புரிந்த இடத்தில் திருமகளின் கடாட்சம் இருக்கவில்லை. வறுமை அக்குடும்பத்தை மிகவும் வாட்டியது. அந்நேரத்தில் கருவுற்ற சரஸ்வதிபாய், ஆண் மகவு ஒன்றை ஈன்றெடுத்தாள். திருவின் திருநாமத்தை எந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருந்தால் வறுமை அகன்று, வளம் கொழிக்குமே என்ற ஆசையில் வேங்கடபட்டர் தம் திருக்குமாரனுக்கு லட்சுமிநாராயணன் என்ற நாமம் சூட்டி, நா இனிக்க அவனை அடிக்கடி அழைத்தார்.

தனயனுக்குத் திருவின் பெயரிட்டு அழைத்தும், வேங்கடபட்டரின் தரித்திரம் நீங்கவில்லை. துறவறம் ஏற்பதர்காகப் பிறவி எடுத்தவௌர்க்கு இல்லரம் இன்பமாக அமைந்து விடுமா?

ஏழ்மையின் பிடியில் சிக்கியவர், பிழைப்பைத் தேடி வீட்டை விட்டுக் கிளம்பினார். ஆனால், தாம் கற்ற வித்தையை விற்கவோ, செல்வந்தரிட்ம சென்று யாசிக்கவோ அவர் விரும்பவில்லை. பரிபூரணனுக்கே அடிமை செய்யப் பிறந்தவர், மானிடருக்கு குற்றேவல் புரிந்து கும்பியை வளர்க்கத் தயாராயில்லை. “மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போய் விடுவான்?” என்ற வேதாந்த பரமான நம்பியால் உந்தப்பட்டு அடுத்த ஊருக்குச் சென்றார்.

அந்தக் கிராம அதிகாரியின் இல்லத்தில் அன்று ஒரு சமாராதனை. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவ்வழியே சென்ற வேங்கடபட்டரை யாசகர் என்று நினைத்து உள்ளே அழைத்துச் சென்று சந்தனம் அரைத்துக் கொடுக்கும்படி அவரைப் பணித்தார் ஒருவர்.  தம்மிடமிருந்த மந்திர சக்தியைப் பிறருக்குப் புரிய வைக்க வேண்டும் என்று விரும்பிய பட்டர், அக்னி சூக்தத்தை உச்சரித்துக் கொண்டே சந்தனத்தை அரைத்தார். வயிறார உண்ட பிறகு, அந்தச் சந்தனத்தை எடுத்துப் பூசிக் கொண்ட அந்தணர்கள், “சந்தனம் செந்தணலாக எரிகிறதே” என்று அலறியபடி அங்குமிங்கும் ஓடினார்கள். இதைக் கண்ட கிராம அதிகாரி, சந்தனத்தை அரைத்தவர் யார் என்று வினவ, வேங்கடபட்டரை அழைத்து வந்து எதிரில் நிறுத்தினார்கள்.

வேங்கடபட்டரின் முகத்தில் பிரகாசித்த அருள் ஒளியைக் கண்ட அந்த கிராம அதிகாரி, மகான் ஒருவருக்கு தான் அபசாரம் செய்துவிட்டதை உணர்ந்து, கன்னத்தில் போட்டுக் கொண்டார். கண்கலங்கினார். மன்னித்தருளும்படி கதறினார். உடனே மீதியுள்ள சந்தனத்தை வருணசூக்தத்தால் மந்திரித்துக் கொடுத்தார் பட்டர். அந்தச் சந்தனத்தைப் பூசிக் கொண்டதும் எல்லோர் உடலும் குளிர்ந்தது. பிறகு வேங்கடபட்டருக்குத் திருப்தியாக உணவு அளித்து, ஏராளமான திரவியங்களை வாரி வழங்கி தக்க மரியாதைகளுடன் வழியனுப்பி வைத்தார் அந்தக் கிராம அதிகாரி.

சில நாட்களில் அந்தத் திரவியத்தையெல்லாம் செலவழித்து விட்டார்  வேங்கடபட்டர். தமது மந்திர சக்தியையும், யோக சக்தியையும் காட்டி மேலும் பணம் சம்பாதிக்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. வறுமை அவரை மீண்டும் பற்றிக் கொண்டது. அடுக்களையில் மீண்டும் பூனை தூங்கத் தொடங்கியது.

துவாபர யுகத்தில் ஒரு குசேலர் இருந்தார். வேங்கடபட்டர் கலியுக குசேலர் ஆனார். மனைவிக்கு இருந்தது ஒரே ஒரு கந்தல் புடவைதான். பொறுமையையும், பதி சேவையையுமெ ஆடை ஆபரணமாக அணிந்து மகிழ்ந்தாள் அந்த உத்தமி. அவருக்கு இருந்ததும் ஒரு வேட்டிதான். அதில் ஆண்டவனின் ஆயிர்ம திருநாமங்களை நினைவுபடுத்தும் ஆயிரம் பொத்தல்கள் இருந்தன. குழந்தை லட்சுமிநாராயணனோ பிறந்த வடிவிலே, நிர்வாணமாக திரிந்து கொண்டிருந்தான்.

ஆண்டவன் தன் பக்தர்கலை அளவுக்கு மீறிச் சோதிக்கிறான். உண்மையான பக்தர்கள் அந்தச் சோதனைகளைக் கண்டு அஞ்சாமல், ஆண்டவன் விட்ட வழி, என்று அவன் பெருமைகளையே பேசி, அவன் தரிசனத்தைத் தேடி அலைகின்றனர். இப்படித்தான் வேங்கடபட்டரும், பக்தியில் திளைத்து, ஆத்மானுபவ இன்பத்தில் மூழ்கி, வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். தர்மபத்தியான சரஸ்வதியோ அவருக்கு அனுசரணையாக நடந்து கொண்டாள். உத்தமக் கணவனை அடைந்த பாக்கியத்தை நினைத்து பெருமையில் பூரித்துப் போனாள். அவருடைய தூய வாழ்வுக்குத் துணையாக நின்றாள்.

அடுத்த வேளைக்கான அரிசியைப் பற்றிக் கவலைப் படாமல் ஆன்ம செல்வத்தை அடையும் வழியைப் பற்றியே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து, ஒரு நாள்  சரஸ்வதி பாய், “கும்பகோணம் மடத்திற்குச் செல்வோம். ஸ்ரீ சுதீந்திர சுவாமிகளிடம் அடைக்கலம் புகுவோம்” என்று கூறினாள். வேதாந்த தத்துவங்களையும், சாஸ்திர நூல்களையும் மென்மேலும் கற்றறிய வேண்டும் என்று அவா கொண்டிருந்த வேங்கடபட்டரும் மனைவியின் யோசனையை உட்னஏ ஒப்புக் கொண்டாள்.

கணவனைத் துறவியாக்கிவிட்டு, தனிமரமாக, தற்கொலைப் பாவத்திற்கு ஆளாகப் போகிறோம் என்பதை சரஸ்வதி பாய் அப்போது எப்படி அறிவாள்?