கும்பகோணம் ஸ்ரீ மடத்திற்கு தமது குடும்பத்துடன் வந்து சேர்ந்த ஸ்ரீ வேங்கடபட்டரை இரு கரங்கள் நீட்டி இன்முகத்துடன் வரவேற்றார் ஸ்ரீ சுதீந்திர சுவாமிகள். ஆழ்ந்த அறிவும், பரந்த ஞானமும் உடைய அந்த மகான் வறுமையில் வாடுவதை அறிந்து கண் கலங்கினார்.
அந்தக் குடும்பம் ஸ்ரீ மடத்திலேயே தங்கியிருபதற்கான எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
வயிற்றுப் பசியை விட அறிவுப் பசிதான் வேங்கடபட்டரை வாட்டியது. நாம் கற்றது கை மண்ணளவு தான் என்று அவர் எண்ணியதால், மேலும் பல நூல்களைக் கற்க வேண்டும் என்று விரும்பி சுவாமிகளின் காலடியில் அமர்ந்து பாடங்கள் கேட்டார். சீடருக்கு கற்பித்த போதும், அவருடன் விவாதம் புரிந்த போதும் தாமே பல புது விளக்கங்களைப் பெற்று அதன் மூலம் தெளிவடைந்தார் அந்தக் குரு. நாளடைவில் ஸ்ரீ வேங்கடபட்டர் ஆஸ்தான பண்டிதர் ஆனார். அதனால் அந்த மடத்தின் புகழும், பெருமையும் பன்மடங்காக உயர்ந்தன.
ஸ்ரீ வேங்கடபட்டர் குருவிடமிருந்து மகா பாஷ்ய வியாக்கியானங்களையும், வேதாந்த தத்துவங்களையும் அறிந்து கொண்டார். குருவிடம் பாட்ம கேட்காத போது, சாஸ்திர நூல்களையும், இலக்கண நூல்களையும் உன்னி உன்னி ஆராய்ந்தார். நூல்களை ஆராயாத நெரத்தில் தம்மை நாடி வருபவர்களின் சந்தேகங்களைப் போக்கினார். ஒரே சமயத்தில் சீடராகவும் இருந்தார், குருவாகவும் இருந்தார் அவர்.
வேங்கடபட்டர் ஓர் அறிவுக் களஞ்சியமாக மட்டும் இருக்க வில்லை. சொல் ஆற்றலும், வாதத் திறமையும் மிக்க தர்க்க வாதியாகவும் விளங்கினார். மத்வ சித்தாந்தத்தின் மேன்மையை நிலைநாட்டுவதில் இணையற்றுத் திகழ்ந்தார். ஸ்ரீ சுதீந்திர சுவாமிகள், யாத்திரை செல்லும் போது, ஆஸ்தான பட்டரையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கமாகி விட்டது. ராஜமன்னார்குடிக்கும், தஞ்சாவூருக்கும், ஸ்ரீமடத்துடன் சென்றிருந்த ஸ்ரீ வேங்கடபட்டர், தத்துவ ஞானிகளையும், பண்டிதர்களையும் வாதத்தில் வென்ரு சிறப்பெய்தினார். அதைக் கண்டு ஸ்ரீ சுதீந்திர சுவாமிகள் எல்லையர்ர ஆனந்தம் கொண்டார்.
ஸ்ரீ சுதீந்திரருக்கு வயதாகி விட்டது. அவருக்கு உடல் நலம் குன்றியது. அதிக நாட்கள் வாழ மாட்டோம் என்று அவருக்குத் தோன்றியதால், அடுத்த மடாதிபதியை நியமிப்பது பற்றிச் சிந்தித்தார். ஸ்ரீ வேங்கடபட்டருக்கு சந்நியாச ஆஸ்ரமும் கொடுத்து, ஸ்ரீ மடத்தையும் அவரிடமே ஒப்படைத்து விடுவது என்று தமக்குள்ளேயெ ஒரு முடிவு செய்து கொண்டார்.
ஆனால், சுதீந்திரர் தமது எண்ணத்தை வெளியிட்ட போது, அதற்கு ஸ்ரீ வேங்கடபட்டர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கான காரணத்தையும் அவர் தெளிவாகச் சொன்னார்.
“சுவாமி, கிரகஸ்தாஸ்ரமத்தை விட்டு விலக எனக்கு இன்னும் வயதாகவில்லை. இளமை மாறாத என் மனைவி சரஸ்வதி என்னிடம் பற்றும் பாசமும் கொண்டு என்னையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறால். என் மகன் லட்சுமிநாராயணனுக்கோ இன்னும் உபநயனமே ஆகவில்லை. நானோ உலக இன்பங்களில் இன்னும் இச்சை உடையவனாகவே இருக்கிறென். ஆசாபாசங்களில் மனத்தைப் பறி கொடுத்து வாழும் நான், வைராக்கிய மன நிலை எய்துவது கடினம். மனத்தை ஒரு நிலைப்படுத்தி, பற்றறு வாழ முடியாத ஒருவன், காவியுடை அணிந்து கொண்டால் ஒரு வேஷதாரியாகலாமே தவிர, ஒரு நாளும் துறவியாக முடியாது. பக்குவம் பெறாத பருவத்தில் பகல் வேஷம் போட்டு உலகத்தை ஏமாற்றுவதோடு என்னையும் ஏமாற்றிக் கொள்ள நான் தயாராயில்லை” என்று அவர் கூறிய போது, ஒவ்வொரு சொல்லிலும் சத்தியம் ஒலித்தது. அது ஸ்ரீ சுதீந்திரர் உள்ளத்தில் எதிரொலித்தது. அவர் பதில் பேசவேயில்லை. என்ன பேசுவார்?
தமது இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்று நினைத்த சுதீந்திரர் அவசர அவசரமாக மற்றொரு சீடருக்கு சந்நியாசம் அளித்து, அவருக்கு யாதவேந்திரர் என்ற திருநாமம் சூட்டினார். ஆனால் சில நாட்களுக்குள் சுவாமிகள் குணமடைந்து விட்டார். யாதவேந்திரர் தமது பூஜைக்காக அவரிடம் சில விக்கிரகங்களைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார். மாதங்கள் கடந்தன. ஸ்ரீ சுதீந்திரர் மீண்டும் நோய்வாய்பட்டு, படுத்த படுக்கையானார். வெகு தொலைவில் யாத்திரை செய்து கொண்டிருந்த யாதவேந்திரர் திரும்பி வருவதற்குள் தாம் உயிர் நீக்க நேர்ந்தால் ஸ்ரீ மடத்திற்கு ஓர் அதிபதி இல்லாமலும், மூலராமரை ஆராதிக்க ஓர் ஆசாரியர் இல்லாமலும் போய் விடுமெ என்று கவலையுற்றார். எப்படியாவது ஸ்ரீ வெங்கடபட்டரைச் சம்மதிக்கச் செய்து தமது பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைத்து விட வேண்டுமென்று விரும்பினார். இதைப் பற்றி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிட்மே முறையிட்டார். “ஏ, ரகுகுல திலக, ராகவா, பட்டரின் மனத்தை நீதான் மாற்ற வேண்டும்” என்று மன்றாடினார். ரகுராமனும் மனமிரங்கினார். அன்றிரவே ஸ்ரீ ராகவ மூர்த்தி, சுவாமிகளின் கனவில் தோன்றி அபயம் அளித்தார். “கவலைப்படாதெ, உன் இச்சைப்படியெ எல்லாம் நடக்கும். வேங்கடபட்டர் உன் வேண்டுகோளைப் புறக்கணிக்க மாட்டார். அவர் இந்த வித்யாபீடத்தின் அதிபதியாகி வையம் போற்றும் மாமேதையாக விளங்குவார்” என்று அருளினார்.
மறுநாளே வேங்கடபட்டரை அழைத்து அந்தரங்கமாகப் பெசினார் சுவாமிகள். அந்த மடத்தின் தலைவராக விளங்குவதாற்கு அவருக்குள்ள தகுதிகளையெல்லாம் எடுத்துக் கூறினார். உலக சுகங்களின் நிலையற்ற தன்மையை விளக்கினார். வேதங்களுக்கு உரைகள் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவருக்கு சந்நியாச ஆசிரமமே ஏற்றது என்று அறிவுறுத்தினார். கடைசியில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கனவில் தோன்ரி, “ஸ்ரீ வேங்கடபட்டர் மனம் மாறி துறவியாவார்” என்று ஆசி வழங்கிய விவரத்தையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்.
ஸ்ரீ வேங்கடபட்டரின் மனம் குழம்பியது. தமது உயிருக்கு மேலாக மதிக்கும் குருவின் கோரிக்கையை நிராகரிப்பது எப்படி? எந்த ஆண்டவனின் குரலாக குரு பேசுகிறாரோ, அந்த ஆண்டவனெ தாம் ஒரு துறவியாக வேண்டும் எனச் சித்தம் கொண்டு விட்டால், அற்பனான நான் என்ன செய்ய முடியும்? ஆனால்…..ஆனால்…..என் அருமை சரஸ்வதியை விட்டு தான் எப்படிப் பிரிவது? அவள் முகத்தைப் பாராமல் நான் எவ்வாறு இருப்பது? என் செல்வனை, கண்ணின் மணியான லட்சுமிநாராயணனை யார் காப்பாற்றுவது? உபநயனம் கூட ஆகாத உலகமே அறியாத பாலகனாயிற்றே, பாவம்! ஆனால்…. சுவாமிகள் கூறியது போல் துறவறம் பூண்டு விட்டால், சம்சார சங்கடங்களிலிருந்து விடுதலை பெற்று விட்டால், பல வியாக்கியானங்கள் எழுதலாமெ…. வேதங்களுக்கு வியாக்கியானங்கள் எழுதலாமே…. பிறவி எடுத்ததின் பயனைப் பெறலாமே…. ஆனால்….. ஆனால்…..என்னை விட்டுப் பிரிந்து சரஸ்வதி எங்கனம் உயிர் வாழ்வாள்? அன்று முழுவதும் அவரது மனத்தில் முடிவில்லாமல் எழுந்த பலவாறான எண்ண அலைகள் ஓயாமல் ஒலியெழுப்பிக் கொண்டேயிருந்தன.இரவு வெகு நேரமாகியும் உறக்கம் வராததால், அவர் படுக்கையில் இப்படியும், அப்படியும் புரண்டு கொண்டிருந்தார். நடுநிசியில் சற்றுக் கண்ணைச் செருகியது. நித்திராதேவி, கண் இமைகள் மீது வந்தமர்ந்தாள், மூடினாள்.