ஸ்ரீ ராகவேந்திரர் தினமும் அருகிலிருக்கும் காவிரியில் நீராடி, ஸ்ரீ சாரங்கபாணியையும், கும்பேஸ்வரரையும் தரிசித்துக் கொண்டு தமது குருவுக்கு குருவான ஸ்ரீ விஜயீந்திரரின் பிருந்தாவனத்தை வலம் வந்து மூலராமரை முறையோடு பூஜை செய்து கொண்டு நல்ல முறையில் ஸ்ரீ மடத்தை நிர்வகித்து வந்தார். நாள் முழுவதும் பண்டிதர்கள் புடைசூழ, ஆன்றோரும், சான்றோரும் அருகில் இருக்க வேத வேதாந்த பாடங்களையும், சாஸ்திர நூல்களையும் பிரும்ம சூத்திர பாஷ்யங்களையும் ஆராய்ந்து வந்தார். பிறருக்குப் பாடங்களைச் சொல்லிக் கொண்டே பல அரிய நூல்களையும் படைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது சோழ மண்டலத்தில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த விஜய ராகவ நாயக் என்பவர் கஜானாவிலிருந்த பணத்தையெல்லாம் எடுத்து செல்வழித்தார். மக்கள் துயரம் நீங்குவதாகக் காணோம். ஸ்ரீ ராகவேந்திரர் மந்திர சக்தியையும், யோக மகிமையையும் பற்றிக் கேள்வியுற்றிருந்த அரசர் குடந்தை வந்து, சுவாமிகளின் பொற்பாதங்கள் தஞ்சை மண்ணில் பட வேண்டும் என்று பிரார்த்தித்தார். அரசரின் அழைப்பிற்க்கிணங்கி சுவாமிகளும் தஞ்சைக்குச் சென்றார்.
ஸ்ரீ மடத்திலிருந்த பணத்தை எடுத்து ஏழைகளுக்கு அளித்தார். திருமகள் உள்ளம் குளிர்ந்தாள். அரசரின் கஜானா மீண்டும் நிரம்பியது.
வடவாற்றின் தென் கரையில் இருந்த மடத்தில் தங்கியிருந்த சுவாமிகள் பூஜைகள் செய்தார். பிரார்த்தனைகள் புரிந்தார். தவமிருந்தார். யாகங்கள் நடத்தினார். சுற்றி நின்றிருந்த போர்ப் படைகள் காவல் புரிந்தனர். வருண தேவன் மனம் குளிர்ந்தான் வானில் கார் மேகங்கள் சூழ்ந்தன. கடும் மழை பெய்தது. கொடும் பஞ்சமும் மறைந்தது.
அரசர் அக மகிழ்ந்தார். சுவாமிகளின் அருளாற்றலைக் கண்டு அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார். நன்றியின் அடையாளமாக ஒரு வைர மாலையை ஸ்ரீ மடத்திற்கு பரிசாக அளித்தார். அந்த மாலையை ஸ்ரீ ராகவேந்திரர் எரிந்து கொண்டிருந்த அக்னிக்கு அர்ப்பணித்து விட்டார். சுவாமிகள் தன்னை அவமதித்து விட்டதாகக் கருதிய அரசர் கடும் கோப்ம கொண்டார். உள்ளம் குமுறினார்.
இதையறிந்த சுவாமிகள், அக்னி தேவனை வேண்டினார். அந்த வைரமாலை அப்படியே வெளிவந்தது. அதைக் கண்ட அரசர், ஆனந்தக் கண்ணீர் சொரிந்து தம்மை மன்னித்தருளும்படி வேண்டினார். அந்த மாலையை அக்னி தேவன் அணிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதால் அவனுக்கு அளித்ததாக அரசனுக்கு விளக்கம் தந்தார் சுவாமிகள். பன்னிரண்டு ஆண்டுகள் தஞ்சைத் தரணியில் தங்கிவிட்டு மீண்டும் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.
சந்நியாசிகள் ஒரே இடத்தில் தங்கியிருக்கக் கூடாது. அவர்கள் சஞ்சார்ம செய்து கொண்டேயிருக்க வேண்டும். மக்களை அறநெறியில் அழைத்துச் செல்லவும், சத்தியத்தையும், அன்பையும் பரபி, நம் கலாசாரத்தைக் காப்பாற்றவும் அவர்கள் அடிக்கடி தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும். அதிலும் மடாதிபதிகள் நடமாடும் தலங்களாக நாடு முழுவதும் வலம் வந்து கொண்டேயிருக்க வேண்டும். எனவேதான், ஸ்ரீ ராகவேந்திரர் தீர்த்த யாத்திரை புறப்பட்டார். தென்னாடு எங்கும் பவனி வந்த பின், கேரள மாநிலத்திலும் யாத்திரை செய்து விட்டு, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் முதலிய பகுதிகளுக்கும் சென்றார். ஆலய தரிசனம் செய்தார். புண்ணிய நீராடினார். கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்றபடி சென்றவிடமெல்லாம் விவாதங்கள் புரிந்தார். தத்துவ விளக்கங்கள் தந்தார். விண்ணோரும் வியக்கும் வகையில் சிறப்பெய்தினார்.
ஒரு சமயம் மூன்று ஜோதிடர்கள் ஸ்ரீ ராகவேந்திரரை தரிசிக்க வந்தனர். அவர்களிடம் தமது ஜாதகத்தைக் காட்டி, தமது ஆயுட்காலத்தை நிர்ணயித்துக் கூறும்படி சுவாமிகள் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொருவரும் ஒரு வயதைக் குறிப்பிட்டுக் கூறினர். ஒருவர் நூறு வயதென்றார். மற்றொருவர் முந்நூறு வருடங்கள் என்ரார். மூன்றாவது ஜோதிடர் எழுநூறு வயது இருப்பார் என்றார். அருகில் இருந்தவர்கள் எல்லோரும் குழம்பியிருக்க, சுவாமிகள், “இந்த மூன்று ஜோதிடர்கள் கூறுவதும் உண்மையே” என்று சொன்னார். ஒன்றும் புரியாத சீடர்கள் கேள்விக்குறியுடன் குருவின் முகத்தைப் பார்த்தனர். சுவாமிகள் விளக்கினார். “என் உடல் நிலைக்கும் காலம் நூறு வருடங்கள், என் நூல்கள் பிரகாசமடையும் காலம் முந்நூறு வருடங்கள், எனது பிருந்தாவன வாசம் எழுநூறு வருடங்கள்.”
கும்பகோணத்தில் இருந்த சுவாமிகளைத் தரிசிக்க ஒரு சமயம் மூன்று அந்தணர்கள் வந்தார்கள். வரும் வழியில் ஸ்ரீ மடத்தில் தங்களுக்கு நல்ல உணவு கிடைக்குமா என்பதைப் பற்றி அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு வந்தனர். ஊருக்குள் வந்ததும் காவிரிக்கு குளிக்கச் சென்றனர். சுவாமிகளின் சீடர் ஒருவர் துவைப்பதற்காக எடுத்து வந்த குருவின் காஷாய உடையுடன் படித்துறையில் நின்று கொண்டிருந்தார். அவர் அந்தணர்களைக் கண்டதும், “நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஸ்ரீ மடத்தில் உங்களுக்குத் தேவையான உணவும், இதர வசதிகளும் கிடைக்கும். நீராடி விட்டு நேரே ஸ்ரீ மடத்திற்கு வாருங்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்ட அந்தணர்கள், தாங்கள் ஊர் எல்லைக்கு வெளியே ரகசியமாகப் பேசிக் கொண்ட விஷயம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்ற வியப்பில் ஆழ்ந்தனர். பின்னர் தங்கள் மனத்தில் இருப்பதை கூறும்படி அந்தச் சீடரிடம் வேண்டினர். “என்னை ஏன் கேட்கிறீர்கள்? எங்ககு ஒன்றுமே தெரியாது” என்றார் சீடர். அப்போது சுவாமிகளின் காஷாயம் அவர் கையில் இல்லை. காவிரியில் இருந்தது. காஷாயத் துணி கையில் இருந்ததால் தான் தங்கள் மனத்திலிருந்ததை அவரால் கூற முடிந்தது என்று உணர்ந்த அந்தணர்கள், “காஷாயத்திற்கே இத்தனை மதிப்பு என்றால் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்” என்று அவரைத் தரிசிக்கச் சென்றனர்.
ஸ்ரீ மடத்தில் அவர்கள் சாப்பிடும் போது சுவாமிகள் மிக அக்காறையோடும், பரிவோடும் அவர்களைக் கவனித்துக் கொண்டார். அவர்கள் விரும்பியது போலவே அவர்களுக்கு நல்லுணவு கிடைத்ததா என்று அன்புட்ன விசாரித்தார். உணவியப் பற்றி அவ்வாறு சந்தேகம் கொண்டதர்கு தங்களை மன்னிக்கும்படி அவர்கள் கோரினர். அதைக் கேட்ட சுவாமிகள், “நான் பிருந்தாவனப் பிரவேசம் செய்த பின் என் பிருந்தாவனத்தைப் பரம்பரையாகப் பூஜை செய்யும் பொறுப்பு உங்களிடமே ஒப்படைக்கப்படும். நிவேதனம் தங்களுக்கு என்றும் ஆகாரமாக க் கிடைத்து விடும்” என்று ஆசி வழங்கினார். அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான் இன்றும் மந்த்ராலய பிருந்தாவனத்தில் பூஜை செய்து வருகிறார்கள்.
சுவாமிகளின் சீடர் ஒருவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆனால் அவரிடம் அதற்கான நிதி வசதியில்லை. எங்கு போய் பெண்ணைத் தேடுவது என்றும் தெரியவில்லை. சுவாமிகளிடம் இதைப் பற்றி அந்தரங்கமாகப் பேச வேண்டும் என்று சமயம் பார்த்திருந்தார். சுவாமிகள் ஒரு நாள் கை கால்களுக்குத் தேய்த்துக் கொள்ளும் நேரமாகப் பார்த்து அவர் தனிமையில் இருந்த அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தனக்குப் பண உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். “உனக்குப் பணமா வேண்டும்? இதை எடுத்துக் கொள்!” என்று அந்த (மிருத்திகை) மண்ணைக் கொஞ்சம் கொடுத்தார். அந்த மண்ணை ஆனந்தத்துடன் பெற்றுக் கொண்ட சீடர், அதை ஒரு சிறு பெட்டியில் வைத்துப் பத்திர்பபடுத்தினார். தமது ஊரான பிஜாப்பூரை நோக்கி நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்கினார்.
வழியில் ஓய்வெடுத்துக் கொள்வதற்காக இரவு ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினார் (அந்த இல்லத்தில் அன்று காலைதான் வீட்டுக்காரி ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்திருந்தாள்). நடுநிசி நேரம். ஸ்ரீ மடத்திலிருந்து வந்த அந்த பிராமணர் அயர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்தார். அங்கு திடீரென்று பூதம் ஒன்று தோன்றியது. அப்போது மண் இருந்த பெட்டியிலிருந்து ஒரு தீப்பிழம்பு தோன்றி அப்பூதம் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தது. அதைக் கண்டு அரண்டு போன பூதம், பிராமணரின் அருகில் வந்து அவரை தட்டியெழுப்பியது.
படபடப்புடன் எழுந்த பிராமணர், “ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நம” என்று கூறி விட்டு, “நீ யார்? இங்கே ஏன் வந்தாய்?” என்று கேட்டார். அதைக் கேட்ட அந்தப் பூதம், “சுவாமி, தயவு செய்து உரக்கப் பேசாதீர். நான் ஒரு பிரும்ம ராட்சசம். இந்த வீட்டுகிகாரர் கடந்த பிறவியில் என் குழந்தைகளையெல்லாம் கொன்று விட்டார். எனவே இந்தப் பிறவியில் இவருக்கு பிறக்கும் குழந்தைகளையெல்லாம் நான் ஒவ்வொன்றாகக் கொன்று வருகிறேன். இதுவரை எழு குழந்தைகளைக் கொன்றிருக்கிறென். இது இன்று காலை பிறந்திருப்பது எட்டாவது குழந்தை. அதைக் கொல்ல உள்ளே நுழையும் போது இந்த அக்னி என்னை பயமுறுத்துகிறது. தாங்கள் அந்தச் சம்புடத்தை அப்புறப்படுத்தி விட்டு தயவு செய்து எனக்கு வழி விடுங்கள். உங்களுக்கு ஏராளமான பண உதவி செய்கிறேன்.” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.
“சரி அவ்வாறே செய்கிறென். என் திருமணத்திற்குத் தெவையான பணத்தைக் கொண்டு வா” என்ரு அந்தப் பிராமணர் கூறவெ, அந்த பிரும்ம ராட்சசம் உடனே மறைந்து, எங்கோ சென்ரு ஒரு குடம் நிறைய நாணயங்களைக் கொண்டு வந்து பிராமணர் முன் வைத்தது. அவர் ஆனந்தமடைந்து குடத்தை தன்னருகில் நகர்த்தி வைத்துக் கொண்டு “பிரும்ம ராட்சசமெ, உனக்கு நான் பிரதி உபகாரம் செய்யப் போகிறென். ஆனால் உன்னை இந்த வீட்டுக்குள் செல்ல அனுமதிப்பது உதவி செய்தது ஆகாது. ஏனெனில் குழந்தையைக் கொல்லும் பாவத்தை மேலும் உனக்குத் தேடித்தர நான் விரும்பவில்லை. இத்தனை பாவங்களுக்கும் காரணமான உன் பிரும்ம ராட்சசப் பிரவியையே நான் தொலைத்து விடுகிறேன்” என்று கூறி, பெட்டியிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து தண்ணீரில் கரைத்து அந்தப் பிரும்ம ராட்சசத்தின் மீது தெளித்தார். அப்போது திடீரென்று மீண்டும் அக்னி தோன்றியது. அது கொழுந்து விட்டு எரிந்தது. அதில் பிரும்மராட்சசத்தின் சரீரம் எரிந்து சாம்பலாகியது. திவ்விய சரீரத்துடன் ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகையின் மகிமையைப் பாராட்டிக் கொண்டே ஆகாயத்தில் மறைந்தது.
மறுநாள் பொழுது விடிந்ததும், சுவாமிகளின் பிராமண சீடர், இரவில் நடந்தவற்றை வீட்டுக்காரரிடம் கூறினார். தன் குழந்தையைக் காப்பாற்றியவருக்கு தன் வீட்டிலேயே வளர்ந்து வரும் தனது சகோதரியின் குமாரத்தியையே மணம் செய்து வைத்தார் அவர். ஏராளமான செல்வத்துடனும், பேரழகியான மனைவியுடனும் ஸ்ரீ மடத்திற்கு திரும்பி ஸ்ரீ ராகவேந்திரரின் பாதங்களில் விழுந்து வணங்கினார் அந்தச் சீடர்.