ஸ்ரீநிவாசாச்சாரியார் என்ற மகான் ஒரு சமயம் ஸ்ரீ மடத்திற்கு வந்திருந்தார். அவர் எழுதியிருந்த நூல்களைப் படித்துப் பார்த்து சுவாமிகள் அவரைப் பாராட்டி, ஸ்ரீநிவாச தீர்த்தர் என்ற கௌரவப் பெயரும் கொடுத்தார். சாப்பிடும் போது அவர் சமயலில் கடுகு கலந்திருப்பதைக் கண்டார். தமது ஆசாரத்திற்கு விரோதம் என்று கருதி கடு அற்ற உணவு வகைகளை மட்டும் உண்டார். பின்னர் சுவாமிகளிடம் மந்திராட்சதை பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினார்.
இல்லத்திற்கு வந்ததும் தமையனாரான யாதாவாசரியார் சுவாமிகளின் பிரசாதத்தைத் தரும்படி கேட்டபோது வேட்டியில் இருந்த முடிச்சை அவிழ்த்தார் ஸ்ரீநிவாசாசாரியார். என்ன ஆச்சரியம்! அந்த மந்திராட்சதை கறுப்பாகியிருந்தது. அதைக் கண்ட தமையனார் தனது சகோதரன் ஏதோ பெரிய அபசாரம் செய்து விட்டான் என்று மனம் வருந்தி, உடனே அவரிய ஸ்ரீமடத்திற்கு நௌப்பி வைத்தார். ஸ்ரீநிவாசாசாரியாரும் ஸ்ரீமடத்திற்கு வந்து தான் ஏதாவது பிழை செய்திருந்தால் மன்னித்தருளுமாறு சுவாமிகளிடம் வேண்டினார். சுவாமிகள் அவரைப் பார்த்து “அன்பரே, உங்கள் நன்மதிப்பைப் பெற்றுள்ள மகான்களின் முன்னிலையில் அவர்களது ஆகாரங்களை அனுசரிப்பதே முறையாகும். ஸ்ரீ மடத்தின் சமையலில் கடுகு சேர்க்கப்பட்டிருப்பது தங்கள் ஆசாரத்திற்கு ஏற்றதல்ல என்று நீங்கள் கருதியது அபசாரமாகும். இம்முறை தாங்கள் கடுகைச் சேர்த்துக் கொண்டு சாப்பிடுங்கள்” என்று பணித்தார். ஸ்ரீநிவாசாசாரியார், கடுகு சேர்த்த உணவை உட்கொண்ட பின்னர், கறுத்திருந்த மந்திராட்சதையைச் சுவாமிகளுக்குக் காட்டுவதற்காக வேட்டியின் முடிச்சை அவிழ்த்தார். என்ன ஆச்சரியம்! அது சிவப்பாக மாறி விட்டிருந்தது.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், தென்னகத்திலிருக்கும் முக்கிய தலங்களுக்கெல்லாம் தீர்த்த யாத்திரை சென்றார். ஸ்ரீ ரங்கம், மதுரை, ராமெஸ்வரம், திருநெல்வேலி, திருவனந்தபுரம் முதலிய ஊர்களுக்குச் சென்று விட்டு உடுப்பிக்கு விஜயம் செய்தார். அங்கு உறையும் ஸ்ரீ கிருஷ்ணனிடம் மனத்தைப் பறி கொடுத்தார். தங்கத்தில் வேணுகோபால விக்ரகம் ஒன்றை தமது கரங்களாலேயே செய்து அதை ஆராதிக்கத் தொடங்கினார். ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் பூஜா விக்கிரகங்களில் அதுவும் ஒன்றாகி விட்டது.
உடுப்பியில் ஓராண்டுக்காலம் தங்கிய சுவாமிகள் ஸ்ரீ கிருஷ்ணரின் சந்நிதியிலேயே வியாஸராஜர் இயற்றியுள்ள சந்திரிகைக்கு, பிரகாசம் என்னும் அற்புதமான வியாக்கியானத்தை எழுதி முடித்தார். தந்திரதீபிகை என்ற நூலுக்கு நியாய முக்தாவளி என்ற உரையையும் எழுதியருளினார்.
உடுப்பியிலிருந்து மைசூருக்குச் சென்றார் ஸ்ரீ ராகவேந்திரர். பூர்வாசிரியர்களான விபுதேந்திரர், விஜயீந்திரர் முதலிய மகான்களின் பொன்னடிகள் பட்ட நஞ்சன்கூடு என்னுமிடத்தில் சுவாமிகளைச் சகல மரியாதைகளுடன் எதிர் கொண்டழைத்தார் மைசூர் மன்னர். ஸ்ரீமடத்தில் அவர் சௌகரியமாக தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். பின்னர் சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொள்வதற்காகத் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு எழுந்தருளும்படி சுவாமிகளைப் பணிவுடன் அழைத்தார். ஸ்ரீ ரங்கநாதரின் அருகாமையில் சிறிது காலம் தங்கியிருக்க வெண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, அரசரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தை நோக்கி யாத்திரையைத் தொடங்கினார் சுவாமிகள். அவர் அங்கு தங்கியிருந்த போது பல கிராமங்களையும், ஆபரணங்களையும் ஸ்ரீமடத்திற்கு நன்கொடையாக அளித்தார் அந்த மன்னர்.
சாதுர்மாஸ்ய விரதம் முடிந்ததும் ஸ்ரீ ராகவேந்திரர் வடக்கு நோக்கி தம் பயணத்தைத் தொடர்ந்தார். கடக் என்ற ஊருக்கு அருகிலுள்ள கிரீடகிரி என்ற கிராமத்திற்கு வந்தார். அந்தக் கிராமத் தலைவர் தமது இல்லத்தில் ஒரு நாள் தங்கி மூல ராமருக்குப் பூஜை செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து, சுவாமிகளை அன்புடன் அழைத்துச் சென்றார்.
அன்று தம் இல்லத்தில் ஒரு பெரிய சமாராதனைக்கு ஏற்பாடு செய்திருந்தார் அந்தக் கிராமத் தலைவர். அதற்காகப் பெரிய அளவில் சமையல் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது மாம்பழங்கள் பழுத்துக் குலுங்கும் பருவமானதால், மாம்பழ ரசம் தயார் செய்து பிரம்மாண்டமான அண்டாக்களில் நிரப்பி வைத்திருந்தார்கள். சமையல் அறையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீட்டுக்காரரின் மகன், தவறி அண்டாவுக்குள் விழுந்து மாண்டு விட்டான். பிள்ளையைக் காணவில்லையே என்று சிறுவனின் அம்மா தேடி வந்தார். மகன் விபத்துக்குள்ளானதைக் கண்டு துடிதுடித்துப் போனாள். இத்துயரச் செய்தியைக் கணவனிடம் ரகசியமாகக் கூறி கதறியழுதாள். வீட்டிற்கு மகான் வந்திருக்கும் போது இவ்வாறு நேர்ந்து விட்டதே என்று வருந்தி, மகனின் மரணத்தை மறைத்து விடுவதென்று அவ்விருவரும் திட்டமிட்டனர். ஆனால், அச்செய்தி வெளியே பரவிவிடவே சாப்பாட்டிற்கு வந்திருந்தவர்கள், பெரிய அபசாரம் நேர்ந்து விட்டது என்று கூக்குரலிட்டனர்.
திரிகால ஞானியான ஸ்ரீ ராகவேந்திரர் நிலைமையைப் புரிந்து கொண்டார். வீட்டுக்காரரை அழைத்து, உங்கள் மகன் எங்கே என்று ஒன்றும் தெரியாதவர் போல் விசாரித்தார். பிள்ளையைப் பறி கொடுத்தவர் சிறிது நேரம் தயங்கி விட்டு, உண்மையைச் சொன்னார்.
உதட்டில் புன்னகை ஒன்று நெளிய, பையனை எடுத்து வரும்படி கூறினார் சுவாமிகள். இறந்து கிடந்த தம் மகனைத் தூக்கி வந்து சுவாமிகளின் முன் கிடத்தினார் தந்தை. சுவாமிகள் அபிஷேக தீர்த்தத்தை எடுத்து அப்பையனின் மீது தெளித்தார். மறுகணம், தூக்கத்திலிருந்து எழுபவன் போல் அந்தப் பையன் எழுந்து சிரித்துக் கொண்டே விளையாடச் சென்று விட்டான். ஆனந்தக் கண்ணிர் பொங்கி வழியச் சுற்றியிருந்தவர்களெல்லாம் ஸ்ரீ ராகவேந்திரரின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.
ஸ்ரீ ராகவேந்திரரின் வரலாற்றில், கருநாகம் தீண்டி மரணமடைந்தவர்களுக்கு அவர் உயிரளித்த நிகழ்ச்சியைப் படித்து மெய்சிலிர்க்கிறோம்.
ஸ்ரீ ராகவேந்திரர் இறந்தவர்களை உயிர்பிக்கிறார் என்ற செய்தி எங்கும் பரவி விட்டது. இதனால் மாத்வர்கள் மட்டுமின்றி இதர மதத்தினரும் ஸ்ரீ சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து அவர் மீது பெருமதிப்பும் தூய பக்தியும் கொள்ள ஆரம்பித்தனர். இதைக் கண்ட சில லிங்காயத் சைவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. இவரால் ஸ்ரீ மத்வ மதமும், ஸ்ரீ ஹரி பக்தியும் ஓங்க் வளர்ந்து விடுமே என அஞ்சி ஸ்ரீ ராகவேந்திரரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். அவரிடம் மந்திர சக்தியோ, யோக சித்திகளோ இல்லை என்பதை நிரூபிக்க வெண்டும் என்ற தீய எண்ணத்தில் ஒரு சூழ்ச்சி செய்தனர்.
தங்களுக்குத் தெரிந்த ஒரு பையனை அழைத்து, மூச்சை அட்ககிக் கொள்ளும்படி அவனிட்ம கூறி, சவம் போல் தரையில் படுக்க வைத்து, துணியால் மூடி, அருகில் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். அவ்வழியே சுவாமிகள் பல்லக்கில் வருகிறார் என்பதை அறிந்தே அவர்கள் இப்படி ஒரு நாடகமாடினர். சற்றுத் தொலைவில் பல்லக்கு வருவது தெரிந்ததும், சுவாமிகளிடம் சென்று துக்கம் நெஞ்சை அடைக்க “கோ” வென்று கதறியழுதனர். இறந்து விட்ட இப்பிள்ளைக்கு எப்படியாவது மீண்டும் உயிரளிக்க வேண்டும் என்று கோரினர்.
அவர்களுடைய சூதும், சூழ்ச்சியும் சுவாமிகளுக்கு நன்கு விளங்கி விட்டது. தம் சக்தியை சோதிக்கவே இவர்கள் இவ்வாறு பாசாங்கு செய்கின்றனர் என்பதை உணர்ந்து, அப்பனே, விபத்துக்கு உள்ளாகி மாண்டவர்களைத்தான் என்னால் பிழைக்க வைக்க முடியும். இயற்கையாக மாண்டவர்களை என்னால் உயிர்ப்பிக்க முடியாது. அந்தச் சக்தி எனக்கு இல்லை. உங்கள் பிள்ளை உண்மையாகவே இறந்து விட்டான். அவனைத் தூக்கிச் சென்று விடுங்கள், என்று கூறினர்.
இதைக் கேட்ட லிங்காயத் தோழர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள். “பூ இவ்வளவுதானா உங்கள் யோக மகிமை, ஞானதிருஷ்டி எல்லாம்? பையன் இறந்து விட்டானாம்! ஐயோ பாவம்! இவனைத் தூக்கிச் செல்ல வேண்டிய அவசியமேயில்லை. இதோ பாருங்கள். இவனே எழுந்து ஓடப் போகிறான் என்று கூறிக் கொண்டே பையனை எழுப்பினார்கள். ஆனால் பையன் எழுந்திருக்கவில்லை. அவன் பெயரைச் சொல்லி கூவி அழைத்தார்கள். அவனை அசைத்தார்கள், குலுக்கினார்கள், உலுக்கினார்கள்.
பையன் கட்டைமரம் போலப் படுத்திருந்தான். மூக்கினருகில் விரலை வைத்துப் பார்த்தார்கள். மூச்சில்லை. மார்பைத் தொட்டுப் பார்த்தார்கள். துடிப்பு நின்று விட்டிருந்தது. அவன் உண்மையிலெயே இறந்து கிடந்தான். விளையாட்டு வினையாகிவிட்டது. ஸ்ரீ ராகவெந்திரரின் வாக்கு பலித்து விட்டது. சுவாமிகளின் மகிமையை உணராது அவரைச் சோதிக்க முனைந்தது பெரிய தவறு என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். “நாங்கள் செய்த அபசாரத்திர்கு மன்னிப்பே கிடையாது” என்று கூச்சலிட்டுக் கொண்டேஒ அங்கிருந்து ஓடி விட்டனர்.
கடும் கோடைகாலம். சுவாமிகள் யாத்திரை செய்து கொண்டிருக்கிறார். உடன் வரும் சீடர் ஒருவரின் மனைவிக்குப் பேறு காலம் நெருங்கி விட்டது. அவள் பிரசவ வேதனை தாங்க முடியாமல் கதறுகிறாள். தங்குவதற்கு நிழலில்லை. அருந்துவதற்கு நீரில்லை. சுவாமிகள் தமது யோக சக்தியால் அந்தப் பாலைவனத்தை ஒரு நொடியில் சோலைவனமாக்கி விடுகிறார். தமது காஷாயத்தை எடுத்து உயர பறக்க விடுகிறார். அதுவெ ஒரு கூடாரமாக அமைகிறது. தமது தண்டத்தைத் தரையில் பாய்ச்சி, கமண்டலத்தில் இருந்த நீரைப் பூமியில் தெளிக்கிறார். அந்த இடத்தில் ஒரு குட்டை தோன்றியது. சுவாமிகள் யாத்திரை தொடங்கினார். அப்பெண்மணியோ அந்த இடத்திலேயே தங்கினாள். சுகபிரசவமான பின் சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்டு கணவருடன் சுவாமிகள் முகாமிட்டிருந்த இடத்திற்குப் போய் சேர்ந்தார்கள்.
ஓரிடத்தில் அநேக அந்தணர்கள் சுவாமிகளிட்ம வந்து அந்த ஊர் அரசன் தங்கள் சொத்துக்களையெல்லாம் பறித்துக் கொண்டு துன்புறுத்துவதாக முறையிட்டனர். வேதம் ஓதும் அந்தணர்களின் அல்லலைப் போக்க வேண்டும் என்று சுவாமிகள் திருவுள்ளம் கொண்டார்.
தமது கட்டளைக்கு இணங்கி செயல் புரிந்து வந்த ஒரு வைணவ பூதத்தை அழைத்து அரண்மனையில் விளையாடிக் கொண்டிருந்த அரச குமாரனைத் தூக்கி வந்து ஒரு குகையில் பத்திரமாக வியக்கும்படிபணித்தார். பூதமும் அவர் குறியபடியே செய்தது.
மகனைக் காணாது அரசன் எங்கெல்லாமோ தேடிப்பார்த்தும் பலனில்லாமல் சுவாமிகள் இருக்கும் இடமறிந்து ஓடி வந்து அவர் அடி பணிந்து தன் மக்னைன் கதி என்னவாயிற்று என்று கூறும்படி கேட்டான்.
சுவாமிகள் அரசனிட்ம நிதானமாகக் கூறினார். “அரசனே, நீ அந்தணர்களின் சொத்துக்களையெல்லாம் பறித்துக் கொண்டு விட்டதால், உன் புத்திரனை யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். நீ அவர்களுடைய சொத்துக்களையும், செல்வங்களையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டால், உன் மகனும் உன்னிடம் திரும்பி வந்து விடுவான்.
இதைக் கேட்ட அரசன் மனம் மாறியது. அந்தணர்களின் சொத்துக்களை அவர்களிடமெ திருப்பிக் கொடுத்து விட்டான். அவர்கள் உள்ளம் மகிழ்ந்து வேத மந்திரங்களை கோஷித்து அரசனை மனமார ஆசீர்வதித்தனர். ஸ்ரீ ராகவேந்திரரிடம் வந்து தங்கள் சொத்துக்கள் மீண்டுவிட்டதாகக் கூறினர். உடனே சுவாமிகள், பூதத்தை அழைத்து, அரச குமாரனை அரண்மனையில் கொண்டு சேர்த்து விடும்படி கட்டளையிட்டார். மக்ன பத்திரமாக திரும்பி வந்து விட்டதைக் கண்டு எல்லையற்ற ஆனந்தம் கொண்ட மன்னன் அன்று முதல் அந்தணர்களிட்ம அன்போடும் பண்போடும் நடந்து கொண்டான்.