மந்த்ராலய சரிதம் – 8

உயர்ந்த பதவி கிடைத்தும் கூட, உள்ளம் மாறாமல் இருந்தார் வெங்கண்ணா. எந்நேரமும் ஸ்ரீ ராகவேந்திரரின் திருவுருவத்தை இதயத்தில் இருத்தி, மீண்டும் அவர் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார். அவர் மனக்குறையைப் போக்க வந்தவரைப் போல் ஸ்ரீ ராகவெந்திரரும் பிருந்தாவனத்திற்காகத் தகுந்த இடம் தேடி ஆதோனி எல்லைக்குள் அடி எடுத்து வைத்தார். அச்செய்தியைக் கேள்வியுற்ற வெங்கண்ணா ஸ்ரீ ராமனைப் பிரிந்திரிந்த பரதனைப் போல் அவரைக் காண ஓடோடி வந்தார். சுவாமிகளை ராஜ மரியாதைகளுடன் வரவேற்று, பல்லக்கில் அமர வைத்துப் பட்டணப் பிரவேசம் செய்வித்தார். மாளிகையொன்றில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

ஏழை வெங்கண்ணா ஆதோனி திவானாகப் பெரும் பதவி வகிப்பதைக் கண்ட ஸ்ரீ ராகவேந்திரர் அழைத்தார். அன்பரே, உங்களுக்கு இத்தனை உயர்ந்த பதவி பற்றி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் என்று வெங்கண்ணாவுக்கு விடையளிக்கும் போது கூறினார் சுவாமிகள்.

எல்லாம் தாங்கல் அளித்த பிச்சை பிரபோ! இந்த அற்பனுக்கு வாழ்வளித்தது தங்கள் கருணை தான். எனக்கென்று தனித் தகுதியொன்றும் கிடையாத். அடக்கமாக, உள்ளத் தூய்மையுட்ன பதிலளித்தார் வெங்கண்ணா.

அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. தாங்கள் நமது சமயத்திற்கும் கடவுளுக்கும் தொடர்ந்து நற்பணியாற்ற வேண்டும்.

தங்கள் சித்தம், என் பாக்கியம் சுவாமி. என்னைத் தங்களிடம் ஒப்படைத்து விட்டென் தாங்கள் காலால் இடும் பணியை நான் சிரசால் செய்யக் காத்திருக்கிறேன். என்ன செய்ய வேண்டும், கூறுங்கள்.

தக்க நேரம் வரும் போது அவசியம் சொல்கிறேன். சென்று வாருங்கள், என்று பிரசாதம் கொடுத்து அனுப்பினார் சுவாமிகள்.

சுவாமிகளின் எல்லையற்ற கருணையைப் பற்றியும், ஒப்பில்லா சக்திகளைப் பற்றியும் நவாப்பிடம் எடுத்துரைத்தார் வெங்கண்ணா. ஸ்ரீ ராகவேந்திரருக்குப் பீஜபூர் சுல்தான் செய்துள்ள உரிமைகளையும், அளித்துள்ள கௌரவப் பட்டங்களையும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த நவாப், சுவாமிகளைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். அதைப் பற்றி திவான் வெங்கண்ணாவிடம் கூறினார். உடனடியாக சுவாமிகளின் அனுமதியைப் பெற்று, இருவரின் சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்தார்.

நவாப் மசூத்கான் பரிவாரங்கள் புடை சூழ, சுவாமிகள் தங்கியிருந்த மாளிகைக்குப் புறப்பட்டார். ஆனால், ராகவேந்திரரின் மீது அவர் மனத்தில் முழு நம்பிக்கை பிறக்கவில்லை. சுவாமிகளின் யோக சக்தியைச் சோதிக்க நினைத்த நவாப், தங்கத் தட்டில் புலால் வகைகளை வைத்து, பட்டுத் துணியால் மூடி, பணியாளை எடுத்து வரும்படி உத்தரவிட்டிருந்தார். அந்தத் தட்டை சுவாமிகளுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்த பின்னர், இஸ்லாமிய முறைப்படி சுவாமிகளை வணங்கி விட்டு தன் ஆசனத்தில் அமர்ந்தார். புன்னகை மலர்ந்த முகத்துடன் சுவாமிகள் மன்னனுக்கு ஆசி வழங்கினார். செங்கோல் ஆட்சியைப் பற்றியும், குடி மக்களின் நலன் பற்றியும் அக்கறையோடு, அன்பொழுக விசாரித்தார்.

ஸ்ரீ ராகவேந்திர திருமுகத்த நோக்கினார் நவாப். அதில் படர்ந்திருந்த தெய்வீகச் சோபையைக் கண்டு மெய் சிலிர்த்தார். அந்தக் கண்களிலிருந்து பிறந்த கருணையொளி, மதியின் தண்ணொளியாக அவர் மேனியைக் குளிர்வித்தது. உதடுகளில் நெளிந்த குருநகை நெஞ்சத்தை நிறைத்தது.

“சே, நான் ஒரு அற்பப் பிறவி. இந்த தேவ புருஷரையா நான் சோதிக்கத் துணிந்தேன். அவமானம், அவமானம்! பெரிய பாவம் புரிந்து விட்டேன். உண்மையை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு விட வேண்டியதுதான்….. ஆனால் எப்படிச் சொல்வது, நவாப் மனம் குழம்பினார்.

அருகில் நின்றிருந்த ஒருவரை அழைத்து தீர்த்தம் எடுத்து வரச்சொல்லி, மூடியிருந்த தட்டின் மீது தெளித்தார் சுவாமிகள். பணியாளை அழைத்து மூடியிருந்த துணியை விலக்கும்படி கூறினார்.

நவாபுக்கு உள்ளமும், உட்லௌம் பதறின. “வேண்டாம் அதைத் திறக்காதீர்கள், நான் பெரும் அபசாரம் செய்து விட்டென்” என்று உரக்கக் கூச்சலிட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் தொண்டை அடைத்தது. பேச்சு எழும்பவில்லை.

பணியாள் துணியை விலக்கினான். என்ன ஆச்சரியம்! தட்டில் புலால் எதுவும் இல்லை. அதாற்குப் பதில் முக்கனி வகைகள் இருந்தன. மணம் வீசும் மலர்கள் இருந்தன.

நவாப் ஒரு கணம் தமது கண்களையெ நம்பவில்லை. இது என்ன மாயம்? இதென்ன மந்திர சக்தி? இந்த மகானிடம் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டு விட்டோமே, என்று உள்ளம் குமுறியவர், சட்டேன்று எழுந்து ஓடி வந்து சுவாமிகளின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து, அழுது புரண்டார். அதன்பின் தெய்வம் அடைக்கலம் தந்தது. நம்பிக்கையற்றவருக்கு நம்பிக்கை பிறந்தது.

ஆன்மீக வாழ்வளித்த ஆசாரியருக்குத் தம் ராஜ்யத்திலுள்ள கிராமம் ஒன்றைத் தானமாக அளிக்க வேண்டும் என்று விரும்பினார் நவாப். அந்த எண்ணத்தை திவானிடம் கூறினார். திவான்,இந்தச் செய்தியை சுவாமிகளிடம் கூறினார். தம் மனத்திலிருந்ததை மன்னர் எவ்வாறு தெரிந்து கொண்டார் என்று ஆச்சரியப்பட்டார் சுவாமிகள்.

வெங்கண்ணா, நவாப் உள்ளன்புடன் அளிக்கும் பரிசை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு துங்கபத்திரா நதிக்கரியயில் இருக்கும் மந்த்ராலயம் என்ற கிராமம் வேண்டும். அதைத் தானமாகத் தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள், என்று கூறினார் ஸ்ரீ ராகவேந்திரர்.

திவான் வெங்கண்ணா ஒரு கணம் தயங்கினார்.

“சுவாமி, அந்தக் கிராமம் வேண்டாம், அது செழிப்பர்ற பூமி. அதை வேறு யாருக்கோ, நவாப் கொடுத்து விட்டார். தங்களுக்கு வளம் கொழிக்கும் வேறொரு கிராமத்தைக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று மன்றாடிப் பார்த்தார். சுவாமிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

வெங்கண்ணா, எனக்குத் தேவையானது மந்த்ராலயம்தான். இங்கு நிரந்தரமாக தங்க வேண்டும் என்பதற்காகத் தானெ குடந்தியிலிருக்கும் என் குருநாதரின் ஸ்ரீ மடத்தை விட்டு இத்தனை தூரம் வந்திருக்கிறேன். என்னைப் போன்ற சந்நியாசிகளுக்கு செழிப்புள்ள பூமியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. என் குருநாதர்களைப் போல நதிக்கரையிலேயே என் பிருந்தாவனத்தை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்காக தங்கள் பேருதவியை நாடுகிறேன் என்று ஸ்ரீ ராகவேந்திரர் கூறிய போது, வெங்கண்ணாவின் கண்களில் நீர் முட்டி நின்றது.

ஆதோனி நவாப் மந்த்ராலய கிராமத்தை ஸ்ரீ ராகவேந்திரருக்கு அளித்து விட்டார். ஒரு நல்ல முகூர்த்தத்தில் அங்கு எழுந்தருளினார். தங்கள் குலதெய்வமான வேங்கடாசலபதிக்கு ஆலயம் ஒன்று நிறுவினார்.