வெங்கண்ணா அடிக்கடி சுவாமிகளிடம் வந்து அவர் நலம் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு தேவையானவற்றை உடனுக்குடன் செய்து தந்தார். ஒரு நாள் சுவாமிகள் வெங்கண்ணாவை ஆற்றங்கரியக்கு அழைத்துச் சென்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டி, அங்குதான் தாம் பிருந்தாவன வாசம் செய்யப் போவதாகக் கூறினார்.
சுவாமிகளின் கருத்திற்கிணங்க திவான் வெங்கண்ணா அந்த இடத்தில் சிற்பிகளைக் கொண்டு ஒரு பிருந்தாவனத்தை நிர்மாணித்தார். சுற்றிலும் பெரிய மதில் சுவர் எழுப்பினார். மதில் வாசலின் மீது கிராம தேவதைக்குப் பிரியமான ஆட்டுத் தலைகள் போன்ற உருவங்களைச் செய்து வைத்தார். சுவாமிகளின் விருப்பப்படி, அந்த பிருந்தாவனத்தை நிரப்ப நூற்றுக்கணக்கான சாளக்கிராமங்களை சேகரித்தார். பிருந்தாவனத்தில் கைங்க்கர்யம் செய்யப் போகும் அந்தணர்களுக்காக அங்கு அறுபது வீடுகளையும் கட்டி வைத்தார்.
சுவாமிகள் தமது பூர்வாசிரம சகோதரர் குருராஜாசாரியரின் பேரனான வெங்கண்ணாசாரியருக்கு சந்நியாச ஆஸ்ரமம் அளித்து, ஸ்ரீ யோகீந்திர தீர்த்தர் என்ற திருநாமம்வ் அழங்கி, தமக்குச் செய்தது போலவே அவருக்கும் பணிவிடைகள் செய்யும்படி வெங்கண்ணாவிடம் கூறினார். வெங்கண்ணா மந்த்ராலயம் கிராமத்தை யோகீந்திரரின் பெயருக்கு மாற்றுவதற்கான பத்திரங்களைத் தயார் செய்தார்.
ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யப் போகிறார் என்ற செய்தி எங்கும் பரவிவிடவே பக்தர்கள் மந்த்ராலயத்தில் வந்து கூடி விட்டனர். ஒரு நாள் சுவாமிகள் திவான் வெங்கண்ணாவை தம் அருகில் அழைத்து, தமது உடலைத் துறக்கப் போகும் நாள் நெருங்கி விட்டது என்று மெல்லிய குரலில் கூறினார்.
வெங்கண்ணரே, கவலைப்படாதீர்கள். உங்களை நான் ஒரு போதும் கை விட மாட்டேன். என் உடல் மறைந்தாலும், பிருந்தாவனத்தில் இருந்து கொண்டே உங்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருப்பேன், என்று ஆருதல் மொழிகள் தந்தருளினார் ஸ்ரீ ராகவேந்திரர்.
கரையை உடைத்துக் கொண்டு பாய்ந்து வரும் வெள்ளமெனக் கண்ணிர் பீறிட்டு வர, திக்பிரமை பிடித்தவர் போல நின்றிருந்தார் வெங்கண்ணா.
மகான்களும், ஞானிகளும் வெவ்வேறு முறைகளில் மறைந்து உலக வாழ்க்கையைத் துறக்கிறார்கள்.
சிலர் ஸ்ரீ மத்வாசாரியரைப் போல், திடீரென்று நம் கண்களிலிருந்து மறைந்து விடுவார்கள்.
நந்தனாரையும், ராமலிங்க சுவாமிகளையும் போல் கோயில் கருவறைக்குள் நுழைந்து, இறைவனுடன் ஐக்கியமாகி விடுவார்கள் சிலர்.
துக்காராம் போன்றவர்கள் தங்கள் உடலுடனேயே விமானத்தில் ஏறி சுவர்க்கம் செல்வார்கள்.
தெய்வத்தின் திருநாமம் சிந்தனையில் குடி கொள்ள, தியான நிலையில் அமர்ந்து, உட்ல எனும் கூட்டிலிருந்து பிரிந்து செல்பவர்கள் ஒருவகை.
வேறு சிலர், ஸ்ரீ ராகவேந்திரரைப் போல், ஜீவ சமாதியில் அமர்ந்து பிருந்தாவனத்தை மூடி விடும்படி சீடர்களுக்கு கட்டளையிடுகிறார்கள்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் விரைவிலேயே நம் கண்களிலிருந்து மறையப் போகிறார் என்ற செய்தி எங்கும் பரவி விட்டது. அந்த மகானைக் கடைசி முறையாகத் தரிசிக்கவும், அவருடைய நல்லாசியைப் பெறவும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் மந்த்ராலயத்திற்கு வந்து கூடினார்கள். வந்தவர்கள் எல்லோரும் இருபத்து நான்கு மணி நேரமும் சுவாமிகளின் அருகிலேயே தங்கியிருக்க விரும்பினார்கள். தெய்வ ஒளி வீசும் அந்தப் பொன்னிறமேனியின் எழிலை உள்ளம் குளிரப் பருகிக் கொண்டு, கண் கலங்க, நெஞ்சம் உருக, உடல் சிலிர்க்க, கை கட்டி, வாய் பொத்தி, பேசாமடந்தையாக நின்றிருந்த தம் பக்தர்களுக்கு, அமைதியே உருவான ஸ்ரீ ராகவேந்திரர் அனுதாபத்துடன் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். மெய்ப்பொறுளோடு ஒன்றிவிட்ட அந்த மகான், மரணத்தை வென்று, பேரானந்த மோன நிலையில் மெய்த்தவம் புரிந்து கொண்டிருந்தார்.
அழியக்கூடிய உலக்ப பொருள்களில் மனத்தைப் பறி கொடுத்து, பற்றோடும், பாசத்தோடும் வாழும் நாம், இறப்பைக் கண்டு அஞ்சுகிறோம். இறுதிக் காலத்தில் பிரிவின் துயரம் நம்மை வாட்டுகிறது. ஆனால், பற்றில்லாமல் வாழும் ஞானிகளுக்கோ, பிரிவு என்பதே கிடையாது. அவர்கள் இவ்வுலகில் யாரையும் விட்டுப் பிரிவதில்லை. மாறாக, பந்தபாசம் அற்ற அத்தகய துறவிகள், பரமாத்மாவுடன் சேர்ந்து விடுகிறார்கள். அவர்களுக்கு சேர்க்கையின் பேரின்பம்தான் கிட்டுகிறது. பிரிவின் துயரம் அவர்களைத் தீண்டுவதில்லை.
வேத தர்மங்களையும், சமய உணர்வையும், தெய்வ பக்தியையும் நிலை நாட்டுவதற்காகத் திருவவதாரம் செய்த ஸ்ரீ ராகவேந்திரர், மந்த்ராலயத்தில் பிருந்தாவத் திருக்கோயில் கொள்ளப்போகும் நாள் நெருங்கி விட்டது. மக்களின் கண்களில் இருந்து தாம் மறையப் போகும் நாளும், நேரமும் அவரது ஞானக்கண்ணுக்குப் பளிச்சென்று தெரிந்தன. வெளியூர்களுக்குச் செல்லும் தேதியை நாம் நண்பர்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்வது போல், அத்தனை சாதாரணமாக, ஸ்ரீ ராகவேந்திரர் தமது பிருந்தாவனப் பிரவேசத் திருநாளை அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.
திவான் வெங்கண்ணாவை அழைத்து சிராவண மாசம், கிருஷ்ண பட்சம், இரண்டாம் தேதி, குருவாரமான புண்ணிய தினத்தில் தாம் ஜீவ சரீரத்துடன் பிருந்தாவனப் பிரவேசம் செய்யப் போவதாக ஸ்ரீ ராகவேந்திரர் அறிவித்து விட்டார். அதற்குத் தேவையான சடங்குகள் சீராக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளில் மிகத் தீவிரமாக முனைத்து விட்டார் திவான் வெங்கண்ணா.
அன்று விடியற்காலை, ஆதவன் உதயமாவதற்கு முன்பெ, மந்த்ராலயக் கிராமமே விழித்துக் கொண்டு விட்டது. இல்லை, அங்கிருந்த மக்கள் அந்த இரவு முழுவதும் உறங்கவில்லை. அவர்களுக்கு எப்படி உறக்கம் வரும்?
அத்தனை பேரும் துங்கபத்திரா நதியில் நீராடி விட்டு, மடித்துணி உடுத்திக் கொண்டு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அமர்ந்திருந்த இடத்தில் வந்து குழுமினர். சுவாமிகள் இல்லாமல் வாழ முடியுமா? அந்தக் கண்களில் ஊற்றெடுக்கும் கருணையை இனி காண முடியுமா? தேனினும் இனிய குரலைக் கேட்க முடியுமா? அந்தப் பொற்கரத்திலிருந்து தீர்த்த பிரசாதம் பெற முடியுமா?
ஓவ்வொருவர் மனத்திலும் ஆயிரம் கோடி எண்ணங்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தன. பக்தர்களின் கண்களில் படர்ந்திருந்த எக்கப் பார்வையை ஒரே நொடியில் புரிந்து கொண்டு விட்டார் சுவாமிகள். அனைவரையும் அருள் நோக்கோடு பார்த்தார். தட்சிணாமூர்த்தியாக, மௌனத்தாலேயே மெய்யறிவைப் புகட்டினார். அங்கு பேரமைதி நிலவியது.
பின்னர், சுவாமிகள், தமது நித்திய பூஜைகளைத் தொடங்கினார். தசாவதார பீடம் கொண்ட ஸ்ரீ ராமர், ஸ்ரீ திக்விஜயராமர், ஸ்ரீ ஜயராமர், ஸ்ரீ வாசுதேவர், ஸ்ரீ வேணுகோபாலர் முதலிய விக்ரகங்களில் அன்று அலாதியான சோபை விளங்கியதைக் கண்டு சுவாமிகள் மெய்யுருகி, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அதைக் கண்டு பக்தர்கள் கண் கலங்கினர்.
நாதமயமான பரப்பிரும்மம், ஸ்ரீ ராகவேந்திரரை ஆட்கொண்டது. சொல்லில் அடங்காப் பேரின்பத்தில் மிதந்து கொண்டிருந்த அவர், வீணையைக் கொண்டு வரும்படி அருகிலிருந்தவரிடம் கூறினார். அந்த மங்கள வாத்தியத்தில் சுருதி கூட்டி, தந்திகளை மீட்டினார். இசைக்கு அதி தேவதை எதிரில் வந்து நின்றாள். கண்ணனின் குழலோசை கேட்டது. துதிப்பாடல் ஒன்று பிறந்தது.
பல்லவி
இந்து யனகே கோவிந்த நின்ன
பாதார விந்தவ தோரோ முகுந்தா
அநுபல்லவி
மந்த்ரோத்தாரனே, நந்த கோபனே கந்த
இந்திரா ரமண கோவிந்த கோகுல நந்த
சரணம்
நொந்தேனய்யா பவபந்தன தொளுசில்குகி
முத்தேதாரி காணதே குந்திதே ஜனதொளு
கந்த நெந்தென்ன குந்தகளெணஸதே
தந்தேகாயோ கிருஷ்ண கந்தர்ப்ப ஜனகா
மூடதனதிபலு ஹேடி ஜீவனாகி
திருடபக்தியனு நாமாடவில்லவோ ஹரியே
நோடவில்லயோ நின்னபாட லில்லலேமகிமெ
காடிகார கிருஷ்ணா பெடிகொம்பெனோ ஸ்வாமி
தரணியொளு பூபாரஜீவன்னனாகி
மேரே தப்பி நடந்து சேரிதே குஜலா
ஆருகாய்வரு இல்லாசேரிதே நினகய்யா
தீருவேணுகோபாலா பாருகாணிலோ ஸ்வாமி
“ஹே முகுந்தனே! உன் திருவடிகளை இன்று எனக்குக் காண்பிப்பாய்! மந்த்ரகிரியைத் தூக்கியவனே, நந்தகோபனின் குமரனெ, கோகுலத்தில் ஆனந்தத்தைத் தந்தவனெ, கோவிந்தா, உலகப் பந்தங்களில் சிக்கி நான் கஷ்டப்படுகிறென். இதிலிருந்து விடுபட்டு முன்னேறும் வழியொன்றும் புரியாமல் தவிக்கிறேன். கிருஷ்ணா! உன்னிடம் நான் உறுதியான பக்தி வைக்கவில்லை. உன்னைக் கண்ணாரக் காணக்கொடுத்து வைக்காதவன் நான். வாயார உன் புகழ் பாட மறந்தவன். யோகிகளுக்குக் கிட்டாத கிருஷ்ணா, உன்னை நான் அடிபணிந்து வேண்டுகிறேன். இந்தப் பூமிக்குப் பெரும் பாரமாகவே நான் வாழ்ந்து விட்டேன். ஹே! வேணுகோபாலனே, உன்னையே நான் சரணடைந்து விட்டென். நீ எனக்கு அருள் புரிந்து முக்தியைக் காட்டுவாய், சுவாமி…..!”
இசையும், பக்தியும் இணைந்து ஸ்வர சுத்தமாக பைரவி ராக சொரூபமாக அந்த மண்டபத்தை நிரைத்து அண்டசராசரங்களிலும் மதுர மணம் வீசியது. மலர் மழை பொழிந்தது. மணியோசை கேட்டது. சதங்கியயொலி எழும்பியது. பூஜையிலிருந்த வேணுகோபால மூர்த்தி நர்த்தனம் ஆடத் தொடங்கி விட்டார். பக்திக்கு கட்டுப்பட்ட பரமன், தன்வயமிழந்து ஆடினார். காண்பதற்கரிய இக்காட்சியைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். ஆட்டத்திற்கு ஏற்பத் தாளம் போட்டுக் கொண்டு ஆரவாரம் செய்தனர். பொங்கி வந்த கண்ணீர் அவர்களை நீராட்டி புனிதமாக்கியது.
தமது பிருந்தாவனப் பிரவேச நெரம் நெருங்கிவிடவே பண்டிதர்களை அழைத்து, ஸ்ரீ மத்வாசாரியாரின் சாஸ்திரத்திற்கு தாம் எழுதியுள்ள விளக்க நூல்களைப் பாராயணம் செய்யும்படி பணித்தார் சுவாமிகள். ஒரு புறம் வேத விற்பன்னர்கள் வேத பாராயணம் செய்து கொண்டிருந்தனர். மந்திர ஒலி, மந்த்ராலயமெங்கும் சூழ்ந்தது.
பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டே, தமது பிருந்தாவனத்திற்கு அருகில் வந்தார் சுவாமிகள். தமது சீடர்களைக் கொண்டு தூபம், தீபம் ஆகியவற்றால் அதற்குப் பூஜைகள் செய்வித்தார். அடுத்தக் கணம் கூட்டத்தில் ஒரே பரபரப்பு காணப்பட்டது. சிலர் கண்களை மூடிக் கொண்டு “ஹரே நாராயணா”, “கிருஷ்ணா”, “வேணுகோபாலா”, “ஸ்ரீ ராமா” என்று உரக்கக் கூவியழைத்தார்கள். சிலர் சுவாமிகளையே உற்று நோக்கியவாறு “ஸ்ரீ ராகவேந்திராய நம” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கல்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் கம்பீரமாக நடந்தார். புன்னகை தவழும் உதட்டில் ஆண்டவ்னைன் திருநாமம் துலங்க, ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருக, கரத்தில் தண்டம் ஏந்தி, தியாகப் பிரும்மமாக, பிருந்தாவனத்தினுள் நுழைந்தார். தாரை, தப்பட்டை, பேரி வாத்தியங்கள் முழங்கின. நாதசுரம் மங்கள நாதத்தைப் பொழிந்தது. “ஓம் நமோ நாராயணாய” “ஓம் நமோ நாராயணாய” என்று உச்சரித்துக் கொண்டே பத்மாஸனத்தில் அமர்ந்தார் ஸ்ரீ ராகவேந்திரர். குருவின் கட்டளைக்கு இணங்க அருகிலிருந்த சீடர்கள், நூற்றுக்கணக்கான சாளக்கிராமங்களை எடுத்து பிருந்தாவனத்தை மூட ஆரம்பித்தனர். சுற்றிலும் நின்றிருந்த பக்தர்களின் கண்களிலிருந்து சுவாமிகளின்பொன்னுடல் சிறுகச் சிறுக மறையத் தொடங்கியது. கணத்திற்குக் கணம் ஸ்ரீ ராகவேந்திரர் என்ற உருவம் மறைந்தது. ஸ்ரீ ராகவேந்திரர் என்ற ஆன்மீகத் தத்துவ்ம பேரொளியாகப் பாரெங்கும் வியாபித்தது. அதற்கு முடிவில்லை. அழிவில்லை. எல்லையுமில்லை. இன்றும் அது உயிர்துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. பக்தர்களுக்கு அருள் வழங்குகிறது. அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுகிறது.
அப்பண்ணாசாரியார் என்பவர் ஸ்ரீ ராகவேந்திரரின் முக்கிய சீடர்களில் ஒருவர். சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்த போது அவர், துங்கபத்ரா நதியின் அக்கரையில் இருந்தார். ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த செய்தி அவர் செவிகளில் பட்டதும் அவர் துடிதுடித்துப் பொனார். அப்புனித வேளையில் சுவாமிகளின் தரிசனம் கிடைக்கப் பெறாத பாவியாகிவிட்டேனே, என்று மனம் நொந்து பிருந்தாவனத்தையாவது போய்த் தரிசிக்கலாம் என்று ஓடோடி வந்தார் அவர்.
வரும்போது சுவாமிகளின் புகழைப் பாடிக் கொண்டே வந்தார். கவிபாடும் திறனற்றவராக இருப்பினும், பக்தியால் உந்தப்பட்டு அவர் அநேக சுலோகங்களை இயற்றிக் கொண்டே வந்தார். அந்த சுலோகங்கள் ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திர மாலையாக இன்றும் பக்தர்களால் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
பாடிக் கொண்டே ஓடி வந்த ஸ்ரீ அப்பண்ணாசாரியார், ஸ்ரீ ரகவேந்திரரின் பிருந்தாவனத்தைத் தரிசனம் செய்த போது, “யோ பக்த்யா குரு ராகவேந்த்ர சரணவ்ந்த்வம்” என்ற சுலோகத்தைப் பாடத் தொடங்கினார். மூன்றாவது அடியில் காணும் “கமலாநாதப்ரஸாதோத யாத் கீர்த்திர் திக் விதிதா விபூதி ரதுளா” என்ற வார்த்தை வரையில் அவரால் இயற்ற முடிந்தது. அதாற்கு மேல் ஓர் எழுத்தும் வரவில்லை. திண்டாடினார். திணறினார், தவித்துப் போனார்.
சீடரின் மனநிலையைக் கண்டு மனம் இளகினார் பிருந்தாவன வாசியான ஸ்ரீ ராகவேந்திரர். அப்பண்ணாசாரியாரின் எல்லையர்ற பக்தியைப் பாராட்டும் வகையில் அந்த சுலோகத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தார்.
“பிருந்தாவனத்திலிருந்து சாட்சீஹயாஸ்யோத்ரஹி” என்ற குரல் கணீரென எழுந்தது. ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளகள் நிச்சயம் உண்டாகும் என்பதற்கு ஸ்ரீ ஹயக்ரீவமூர்த்தியான நாராயணனே சாட்சி என்று ஸ்ரீ ராகவேந்திரரே உறுதியளித்தார். அதைக் கேட்டு அப்பண்ணாசாரியார் பக்திப் பரவசத்தில் மூழ்கிப் போனார். கண்களிலிருந்து மறைந்தாலும் தமது குரு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உறுதி அவருக்கு ஏற்பட்டது.
அந்த உறுதியும், நம்பிக்கியயும், மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்தை தரிசிக்கும் எல்லோருக்கும் ஏற்படுகிறது.
ஓம் சத்குரு ஸ்ரீ ராகவேந்திராய நம!!