ரமண பகவான் திருவண்ணாமலைக்கு வந்த புதிதில் நடந்த நிகழ்ச்சி இது. திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய பெண்மணியொருத்தி, ஜட்காவில் ஏறிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வீதிக்கு ஓட்டச் சொன்னாள். வண்டிக்காரன் வண்டியை ஊருக்கு வெளியே ஓட்டிச் சென்று அந்தப் பெண்மணியிடமிருந்து நகைகளைப் பறிக்க முயன்றான். அப்போது இரண்டு போலீஸ்காரர்கள் அந்த இடத்தில் தோன்றி, அவளை வீட்டில் கொண்டு போய் சேர்த்தார்கள். போலீஸ்காரர்களின் நம்பர்களைக் குறித்து வைத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி, அவர்களுக்கு ஏதாவது அன்பளிப்பு அளிக்க வெண்டும் என்ற ஆவலில் மறுநாள் அவர்களைத் தேடிச் சென்றாள். ஆனால், அந்த நம்பர்கல் உடைய போலீஸ்காரர்களையே திருவண்ணாமலையில் காண முடியவில்லை! முதல் நாள் நடந்த சம்பவத்தைப் பற்றி ஒரு பொலீஸ்காரருக்கும் தெரியவில்லை.
பகவான் மற்றோர் அற்புத நிகழ்ச்சியைக் கூறியிருக்கிறார். டி.கே. சுந்தரேச ஐயர் என்ற ரமண பக்தரின் வயோதிக உறவினர் ஒருவர், கால் ஊனமாயிருந்தும், கிரிப் பிரதட்சிணம் செய்வது வழக்கம். உறவினர் இல்லத்தில் தங்கியிருந்த அவர், ஒரு நால் மனம் வெறுத்துப் போய் கிராமத்திற்கே சென்று விடுவது என்று தீர்மானித்து வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்.
அவர் ஊர் எல்லையைக் கடந்து சென்று கொண்டிருந்த போது, ஓர் இளம் பிராம்மணன் அங்கு தோன்றி, “உன் பவிசுக்கு இது வேறயா?” என்று கடிந்து கொண்டே அவருடைய ஊன்றுகோல்களைப் பறித்துக் கொண்டு போய் விட்டான். திடுக்கிட்டுப் போனவருக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது. என்ன ஆச்சரியம்! அடுத்த கணம் அவர் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார். திடீரென்று அவர் ஊனம் குணமாகி விட்டது! ஊன்றுகோல் இல்லாமலேயே நட்ககத் தொடங்கினார்.
அருணாசல புராணத்தில், இதைப் போன்றே கால் முடமான ஒரு பக்தர் தினமும் கிரிவலம் வந்ததாகவும், ஒருநாள் அருணாசலேசுவரரே மனித உருவில் வந்து, அவரது கைக்கட்டைகளை அகற்றி குணப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ள விவரங்களை பகவான் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
மகான்களும், ஞானிகளும் பக்தர்களின் கனவில் தோன்றி அருள் வழங்குவதைப் பற்றி நிறைய கேள்விப்படுகிறோம். ரமண பகவானும் அவ்வாறு கனவில் தோன்றி, அடியார்களை ஆட்கொண்டதைப் பற்றிய இரு நிகழ்ச்சிகளையும் முதலியார் குறிப்பிட்டிருக்கிறார்.
மாதவசாமி என்பவர் பகவானுக்கு அன்புத் தொண்டு புரிந்து வந்தார். அவரிடம் பகவான் ஒரு நாள் ஆசிரமத்தின் ஆபீசிலிருந்து சிறு பாக்கெட் நோட்புக் ஒன்று எடுத்து வரச்சொன்னார். ஆனால், அவர் மறந்து விட்டார். மறுநாளும் பகவான் நினைவுபடுத்தினார். ஏனோ தெரியவில்லை. அன்றும் மாதவசாமிக்கு அதைப் பற்றிய நினைவேயில்லை. மூன்றாம் நாள், கே.கே. நம்பியார் என்ற டிஸ்ட்ரிக்ட் போர்டு எஞ்சினியர் பகவானுக்குத் தேவையான நோட்புக்கைக் கொண்டு வந்து தந்தார். ஆச்சரியமடைந்த பகவான், “இதை ஏன் எனக்குக் கொண்டு வந்து தந்தீர்கள்?” என்று அவரிடம் கேட்டார்.
“பகவான் கொண்டு வரச்சொனார்,எ டுத்து வந்தேன்” என்றார் நம்பியார். “என்னது! உங்ககிட்டே என்னிக்குச் சொன்னேன்?” என்று கேட்டார் பகவான்.
பின்னர், பகவான் முதல் நாள் தம் கனவில் தோன்றி தமக்கு ஒரு நோட்புக் தேவையென்று கேட்டு, அது எம்மாதிரியிருக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதனால் அதை எடுத்து வந்ததாகவும் கூறினார் நம்பியார். அப்போது பகவான், “மாதவசாமியைப் பார்த்து, “நீ எனக்கு நோட்புக் கொடுக்கவில்லை. இதோ பாரு, நம்பியார் கொண்டு வந்து கொடுக்கிறார்” என்று விளையாட்டுச் சிரிப்புடன் கூறினார்.
ஒரு சமயம் ஆசிரமத்தில் பேனா மை தீர்ந்து விட்டது. அப்போது சேலத்தில் இருந்த டி.எஸ். ராஜகோபால ஐயர் என்ற பக்தரின் கனவில் பகவான் தோன்றி, மை வேண்டுமென்று கேட்க, அவர் ஒரு ஜாடி நிறைய கொண்டு வந்து கொடுத்தார். அப்போதும் அவர் கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் பகவான்.
பகவான் ரமணரின் உண்மை சொரூபத்தை நேரில் தரிசித்த ஒரு நேபாள பக்தர் கூறியுள்ளதை ஓரிடத்தில் நினைவுபடுத்துகிறார் முதலியார்.
நேபாளத்திலிருக்கும் திரிசேந்திரா கல்லூரியி முதல்வரான திரு ருத்ரராஜ் பாண்டே என்பவர் ஆசிரமத்திற்கு வந்து பகவானின் சந்நிதியில் சிறிது நேரம் இருந்து விட்டு அருணாசலேசுவரரைத் தரிசிக்க கோயிலுக்குச் சென்றார். அங்கு என்ன நடந்தது என்பதை அவரே கூறக் கேட்போம் :
கருவறையின் அருகில் ஓர் எண்ணெய் விளக்கு மினுக்கிக் கொண்டிருந்தது. என்னை அழைத்துச் சென்றவர் “அருணாசலா” என்று இளம் குரலில் கூவினார். உடனே என் நினைவெல்லாம் கருவறையினுள் இருந்த சிவலிங்கத்தின் மீது பதிந்தது. என்ன அதிசயம்! அங்கு லிங்கத்திற்குப் பதில் ரமண மகரிஷியின் உருவத்தைக் காண்கிறேன். சிரித்த முகத்துடன், ஒளி மிகு கண்களுடன் என்னை அவர் பார்க்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், நான் ஒரு ரமணரை மட்டும் பார்க்கவில்லை. நூற்றுக் கணக்கான சிரித்த முகங்களையும், பிரகாசமான கண்களையும் காண்கிறேன். கருவறையில் திரும்பும் இடங்களிலெல்லாம் அத்தோற்றத்தைத் தரிசித்தேன். அருணாசலேசுவரரைக் காண ஆலயத்திற்குச் சென்றென். அங்கு அவர் நடமாடும் தெய்வமாகக் காட்சி தந்ததைக் கண்டு ஆனந்தித்தேன்.
ஸ்ரீ ரமண பகவான் பெரும்பாலும் மௌனத்தாலேயே அடியார்களை ஆட்கொண்ட ஆன்மீக வல்ளல். அன்னாரது திருச்சந்நிதியில் அமர்ந்தவர்கள், அவரது அருட்பார்வை பேசிய மௌன மொழியைக் கேட்டு மனச் சாந்தி பெற்றதில் வியப்பில்லை.
பகவானது கருணா கடாட்சம் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு மாதிரியான பொருளைத் தரும். அவரவர் மனவெழுச்சிக்கும், மனநிலைக்கும், மனப் போராட்டத்திற்கும் எற்றவாறு அது அமையும்.
முகவை கண்ண முருகனார் தமது “ரமண சந்நிதி முறை”யில் “அஞ்சலெனச் சொல்லி யெனையாண்ட பெம்மான்” என்றும், “அஞ்சல் அஞ்சல் என்றே அணிவாய் மலர்ந்தடியார் சஞ்சலங்கள் போக்குபவன்” என்றும் கூறியிருக்கிறார். இதைப் பற்றி தேவராஜ முதலியர் ஒரு சமயம் முருகனாரிடம் குறிப்பிட்டு, “கவி என்றால் எதை வெண்டுமானாலும் கற்பனை செய்து எழுதி விடுவதா? பயப்படாதே, என்று பகவான் உங்களிடம் எப்போதாவது கூறியிருக்கிறாரா?” என்று கேட்டார்.
அதைக் கேட்டு முருகனார் சற்று உணர்ச்சியுடன் “பகவான் பேசாவிட்டால் என்ன, அவருடைய கண் பார்வை என்னை நோக்கி, நான் இருக்கிறேன், நீ பயப்படாதே, என்று கூறுவது போலிருக்கிறது” என்ரு பதிலளித்தார்.
அதற்கு மேல் முதலியாரால் ஒன்றுமெ பேசமுடியவில்லை. பகவானின் அருள் நோக்கில் அவரும் மூழ்கித் திளைத்திருக்கிறாரே! “நீ கவலைப்படாதே, உனக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றுகிறேன்” என்று பகவானின் அருள் நோக்கு ஆயிரம் முறை அவருக்கு அபயம் அளித்திருக்கிறதே!
மௌனத்தாலேயெ பக்தர்கள்கின் பல சந்தேகங்களையும், சஞ்சலங்களையும் போக்கியருளும் பகவானிடம் உரையாட வேண்டும் என்றும், அவர் திருவாய் மலர்ந்தருளுவதைக் கேட்க வேண்டும் என்றும் தணியாத ஆவலோடு ஆசிரமத்திற்கு வந்தவர்களும் உண்டு.
பலர், “ஆன்ம தரிசனம் பெற வேண்டுமானால், குடும்பத்தையும், உத்தியோகத்தையும் விட்டு விட்டு காட்டுக்குப் போய் துறவியாய் வாழ்ந்தால்தான் முடியுமா?” என்று கெட்பார்கள். அதற்கு பகவான் வழக்கமாகத் தரும் பதில் இதுதான் :
“துறவு என்பது மனத்தைப் பொறுத்த நிலை. அது நாம் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்தது அல்ல. ஒருவன் தன் குடும்பத்துடன் பட்டணத்தில் வசித்தாலும், பந்தபாசங்களற்ற ஒரு சந்நியாசியாக வாழ முடியும். அதைப் போலவே ஒருவன் தம் மனைவி மக்களையும், உத்தியோகத்தையும், சொத்துக்களையும் விட்டு விட்டு, காட்டுக்குப் போன பிறகும், அவனுடைய மனம் அவற்றையே நினைத்துக் கொண்டிருந்தால், அவன் சம்சாரியாகவே இருப்பான் காட்டுக்குப் போய் என்ன பிரயோசனம்? வீட்டையும், உறவினர்களையும் விட்டு வந்து விட்டாலுமுன் மனம் உன்னுடனேயே வந்து விடுகிறதே! பழைய ஆசாபாசங்கள் மறைந்து, புதிய பற்றும் பாசமும் தோன்றுவதால் பயனில்லை. நாம் நம் மனத்தையே துறந்து விட வேண்டும். “நான்”, “நமது” என்ற எண்ணங்களையே விலக்கி விட வேண்டும்.”
ஒரு சமயம் தேவராஜ முதலியர் பகவானைப் பார்த்து, “ஆடு மாடுகள் போன்ற பிரானிகளுக்கு முக்தி கிடையாது என்று சொல்லுகிறார்களெ, பிராணிகள் மனிதப் பிறவியெடுத்து, மனிதனாக வாழ்ந்த பிறகுதான் ஆன்ம விடுதலை பெற முடியும் என்று புத்தகத்திலும் படித்திருக்கிறேன். இது உண்மையா?” என்று கேட்டார்.
அதற்குப் பகவான், “அப்படியொன்றுமில்லை. கஜேந்திர மோட்சக் கதையை நீ கேள்விப்பட்டதில்லையா?” என்று திருப்பிக் கேட்டார்.
ஆசிரமத்திலிருந்த லட்சுமி என்ற பசு இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர் இந்தப் பேச்சு நடைபெற்றது. லட்சுமி இறந்த போது, தேவராஜ முதலியார் ஆசிரமத்திலில்லை. ஒரு மாதம் கடந்த பிறகு, முதலியார் பகவானைத் தரிசிக்கச் சென்ற போது, லட்சுமியின் சமாதியில் பொறிக்கப்படுவதற்காக தாம் எழுதியுள்ள ஒரு பாட்டை பகவான் அவரிடம் காட்டினார். அதில் கடைசி வரியில் வரும் முக்தி நாள் என்பதைச் சுட்டிக் காட்டி, முதலியார் பகவானிடம், “லட்சுமி முக்தியடைந்த தினத்தை இது குறிக்கிறதா, அல்லது……” என்று இழுத்தார். “இறந்து விட்டது என்று சொல்லுவதற்குப் பதில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறாரா, அல்லது உண்மையிலேயே அந்தப் பசுவிற்கு மோட்சம் கிடைத்து விட்டதா?” என்று முதலியார் கேட்க, நினைத்ததை அறிந்து கொண்ட பகவான், “அந்த வார்த்தைக்கு, முக்தியடைந்து விட்டது” என்றுதான் அர்த்தம் என்று சந்தேகத்திற்கிடமின்றிக் கூறினார். பின்னர், பக்தர்கள் லட்சுமியைப் பற்றி பல மொழிகளில் எழுதியிருந்த கவிதைகளை முதலியாரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். லட்சுமி ஆசிரமத்திற்கு எப்படி வந்து சேர்ந்தது என்ற விவரத்திலிருந்து தொடங்கி, எல்லா நிகழ்ச்சிகளையும் ஒன்று விடாமல் அவருக்குச் கூறினார். அந்த விவரங்களையெல்லாம் அப்படியே எழுதிப் பகவானிடம் காட்ட அவர் அதைத் திருத்திக் கொடுத்தார்.
மலையின் மீதுள்ள விரூபாட்ச தேவர் குகையில் ரமண பகவான் வாசம் செய்த காலத்தில், தினம் காலையில் கீரைகளைப் பறித்து வந்து அன்புடன் அளித்து வந்த கீரைப் பாட்டிதான் பசுவாக மறு அவதாரம் எடுத்து ஆசிரமத்திற்கு வந்து பகவானுக்குத் தொண்டு புரிந்து நற்கதியடைந்ததாக ரமண பக்தர்கள் கருதி வணங்கும் லட்சுமியின் சமாதியைத் தரிசிக்கும் போது, பகவானின் கருணை வெள்ளத்தில் மூழ்கி விடுகிறார்கள்.
ஒருநாள் பகவானிடம் பேசிக் கொண்டிருந்த போது, தேவராஜ முதலியார், “பகவானே! முக்தியைப் பற்ரி எனக்கு ஒன்றுமே தீரியாது. எனக்கு மோட்சத்தைப் பற்றிய கவலை கூடக் கிடையாது. நான் எப்போதும் சந்தோஷமாக இருந்தால் போதும், வேறு ஒன்றும் வேண்டாம்” என்றார்.
அதற்குப் பகவான், நீங்கள் அந்த வார்த்தையை உபயோகப்படுத்தா விட்டாலும், நீங்கள் மோட்சத்தைத்தான் விரும்புகிறீர்கள். நீங்கள் விரும்பும் எல்லையற்ற பேரானந்தம் ஆன்ம விடுதலையின் மூலம்தான் கிடைக்கும். அதுதான் முக்தியென்பது. அதாவது அஞ்ஞானம் விலகி, மெய்யறிவு பெறுவதைத்தான் முக்தி என்கிறோம்
“மனிதன் ஆனந்தத்தை நாடுவதில் தவறொன்றுமில்லை. எனெனில் எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பதுதான் அவனுடைய இயல்பு. ஆனால் உலகப் பொருள்களில் அந்த ஆனந்தத்தைப் பெறலாம் என்ரு நினைப்பதுதான் தவறு. அழிவற்ற ஆன்ம வஸ்துவில் மனத்தைப் பதிய வைப்பதின் மூலமே நாம் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற முடியும்.” என்ற பேருண்மையைப் பகவானிடமிருந்து பெறர்கரிய உபதேசமாகப் பெற்றார் தேவராஜ முதலியார்.
பகவான் ரமணர், ஆன்ம விடுதலைக்கு ஞான மார்க்கத்தை உபதேசித்தருளிய மெய்ஞானியாவார். அதே நேரத்தில் கடவுள் பக்தியில் திளைத்த பரம பக்தருமாவார். இளவயதில் நாயன்மார்களின் வரலாற்றைப் படித்டூப் படித்து நெக்குருகி கண்ணீர் சிந்திய அவர், முதிய பருவத்திலும், புராணக் கதைகளைக் கேட்கும் போதெல்லாம் நெஞ்சுருகுவார். ஆண்டவனின் திருவிளையாடல்களையும், மெய்யடியார்களின் துயரங்களையும் கேட்டுக் கண்ணீர் வடிப்பார்.
ஆண்டவனிக்ன் திருநாமத்தை எந்நேரத்திலும் உச்சரிக்கும் படியும், நேரம் கிடைத்த போது நாமசங்கீர்த்தனம் செய்யும்படியும் அவர் அநேக பக்தர்களிடம் கூறியிருக்கிறார். ராமன், கிருஷ்ணன், சிவன், முருகன் போன்ற தெய்வத் திருநாமங்களெ நம்மை உய்விக்கும் சக்தி பெற்றவை என்பதை உணர்த்தியிருக்கிறார். “கடவுளும், கடவுளின் திருநாமமும் வெவ்வேறானவையல்ல” என்று பகவான் கூறுவது வழக்கம்.
பக்தியோகத்தின் அடிப்படியயே சரணாகதிதான். அந்த சரணாகதி தத்துவத்தை தேவராஜ முதலியாருக்கு சந்தேகத்துக்கிடமின்றி உபதேசித்தருளினார் பகவான்.
ஒரு நாள் முதலியார் நிம்மதியற்றிருந்தார். பகவான் தம்மைப் பரிபூரணமாக ஆட்கொள்ளவில்லையென்றும், தமக்குத் தேவையானவற்றையெல்லாம் செய்யவில்லையென்றும் குறைப்பட்டுக் கொண்டார். நேரே பகவானிடம் சென்றார். சிவப்பிரகாசம் பிள்ளை இயற்றியுள்ல மூன்று பாடல்களைப் பாடினார். “பகவானே, என் மனத்தில் உள்ள வருத்தத்தை இந்தப் பாடல்கள் தெளிவாகக் கூறுகின்றன. தயவு செய்து செவிமடுக்க வெண்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டார். அப்பாடல்களில் அடங்கியுள்ள கருத்து இவைதான்.
“நாம் எத்தனைதான் திட்டங்கல் போட்டாலும், ஆண்டவனின் அருளன்றி எதுவுமெ நடைபெறாது என்றும், ஒரு திட்டமும் போடாமல் சும்மா இருப்பவனே சிறந்த பக்தன் என்றும் தாங்கள் உபதேசித்திருக்கிறீர்கள். ஆனால், உங்கள் உபதேசப்படி என்னால் நடந்து கொள்ள முடியவில்லை. என் மனத்தை அட்கக முடியவில்லை.”
“குருதேவா, தாங்கள் காட்டிய புனித வழியை என்னால் பின்பற்ற முடியவில்லை. உலகப் பற்றையும், பாசத்தையும் என்னால் விட முடியவில்லை. அழியக் கூடிய உடல் அல்ல “நான்” என்ற உண்மையைப் புரிய வைத்திருக்கிறீர்களே தவிர, உண்மை நிலையை உணரும்படி தாங்கள் செய்ய வில்லையே! கருணையுள்ளம் படைத்த குருவானவர் தம் அடிமையைத் திருத்தி நல்வழிப் படுத்த வெண்டும். ஒன்றுக்கும் உதவாதவன் என்று என்னை ஒதுக்கித் தள்ளி விடக் கூடாது.”
“நான் போகும் வழியிலேயே என்னை விட்டு விட்டல், நான் உய்வது எங்கனம்? பலவீனனான என்னால் என்னைத் திருத்திக் கொள்ள முடியவில்லை. தாங்களும் என்னைத் திருத்தாமல் இருக்கிறீர்கள். தங்களை விட்டால் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் எனக்கு வேறு கதி ஏது? உங்கள் எண்ணம்தான் என்ன? என்னை என்னதான் செய்யப் போகிறீர்கள்? தாங்கல் பாராமுகமாய இருப்பது சரியா, சற்குருநாதா?”
உண்மையான பக்தன் நெஞ்சுருகப் பிரார்த்திக்கும் போது, பகவான் செவி சாய்க்காமல் இருப்பாரா? கருணைத் தெய்வம் பேசிற்று.
“நான் செய்யறேனோ இல்லையோ அதைப் பற்றி உனக்கென்ன? நீ சரண்டர் (சரணாகதி) பண்னி விட்டு சும்மாயிருக்க வேண்டியதுதானே.”
உண்மையான பக்தன் எப்படி இருக்க வெண்டும் என்பதை உலகிற்கு ஞான பகவான் எத்தனை எளிதாக உபதேசித்து விட்டார்!
வழிபாட்டிற்குரிய தெய்வம், மனித குலத்தின் மீதுள்ள பெருங்கருணையால், வணக்கத்திற்கும் நன்றிக்கும் உரிய குருவாக அவதாரம் செய்கிறது. அந்த குருவைத் தஞ்சமென அடைந்து, திட பக்தியோடும், தூய்மையான உள்ளத்தோடும் வணங்குபவர், பிறவிப் பெருங்கடலைக் கடந்து, ஆன்ம தரிசனம் பெற்று, பிறால் வழிபடத் தக்கவனாகிறார்.
ஆதி குருவான அருணாசலேசுவரன், வேங்கடராமனை ஆட்கொண்டார். அக்கணமே ஆன்ம தரிசனம் ஆயிற்று. தந்தையை அடைக்கல அடியந்த ரமணேசன், சற்குருவாக உயர்ந்தார். பிறர் வழிபடத்தக்க பகவான் ஆனார்.
ஸ்ரீ ரமண பகவானை குருவாக ஏற்று, இதயக் கமலத்தில் இருத்தி, அவரை தன்னுள் இயங்கும் ஆன்ம சக்தியாக உணர்ந்து, தன்னை அழித்து, “அது”வாக இருந்து, இணையற்ற இல்லத்தரசியாய், ஒப்பற்ற ஞானியாய், மாசற்ற பக்தையாய், பிறப்பற்ற ஜீவனாய் வாழ்ந்து, பூஜைக்குரிய தேவியாய் அனைவரையும் அருள் பாலித்த அன்னை ஜானகியின் மகிமை ரமணர் சரிதத்தின் ஓர் அங்கமாக அமைந்ததில் வியப்பில்லை.
“சத்தியத்தைப் பேசு”, “தர்மத்தைச் செய்” என்று வேதம் ஆணையிட, அவ்வழி நடந்த சான்றோர்களால் பண்படுத்தப்பட்டு, ஆன்மீக வளம் கொழிக்கும் நம் பாரத மண்ணில் அவ்வப்போது, மகான்கள் அவதரித்து, தூய வாழ்க்கை மேற்கொண்டு, நம் பண்டைய பெருமைகளை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் தோன்றிய பெண் ரத்தினமாக ஜானகிதேவியார், இல்லறமான நல்லறம் நடத்தி, பெண்குலம், தர்ம நெறியிலிருந்தும், சத்திய வாழ்க்கையிலிருந்தும் மாறாது, நியாயத்தோடும், நேர்மையோடும் வாழ்ந்து, ஆண்டவனிடம் பக்தி செலுத்தி வந்தால் முக்தி பெறலாம் என்பதை உணர்த்தவே அவதரித்தவர், “சம்சாரத்திலிருந்து கொண்டே ஒருவர் பந்தபாசங்களற்ற சந்நியாசியாக வாழலாம், முக்தி நிலையடையலாம். அதற்காக காடு மலைகளைத் தேடிக் கொண்டு போக வேண்டியதில்லை” என்ற ரமண பகவானின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவ்வம்மையார். தம்மை நாடி வந்தவர்களையெல்லாம் கடமை தவறாத, ஒழுக்கம் தவறாத நல்ல குடும்ப ஸ்த்ரீகளாக இருக்கும்படி உபதேசித்து, ஒவ்வொரு வீட்டையும் ஆலயமாக்கி கருணையினால் குட முழுக்கு செய்தருளி அங்கு அன்பினால் விளக்கேற்றி வைத்தவர்.