ரமண சரிதம் – 5

அன்று மாடி அறையில் உட்கார்ந்து பாட்ம எழுதிக் கொண்டிருந்தார் வேங்கடராமன். முதல் நாள் வகுப்பில் ஆங்கில இலக்கணத்தில் ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு அவர் சரியான விடை அளிக்க வில்லை. அதற்காக ஆசிரியர் அவருக்கு ஒரு தண்டனை அளித்திருந்தார். பெயின்ஸ் ஆங்கில இலக்கணப் புத்தகத்திலிருந்து அந்தப்  பாடத்தை மூன்று முறை எழுதிக் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார். அந்தப் பாடத்தை இரண்டு முறை எழுதி விட்டார் வேங்கடராமன். மூன்றாவது முறையாக எழுத ஆரம்பித்தார். அவருக்கு அலுப்புத் தட்டியது. சே, நாம் என்ன காரியம்  செய்து கொண்டிருக்கிறோம்? இதனால் நம் ஜன்மத்திற்கு என்ன லாபம்? என்று ஒரு கணம் நினைத்தார். இலக்கணப் புத்தகத்தையும், நோட்டுப் புத்தகத்தையும் பென்சிலையும் ஒரு மூலையில் தூக்கியெறிந்தார். அடுத்த கணம் கண்களை மூடி ஆத்ம தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

அப்போது ஏதோ வேலையாக மாடிக்கு வந்த நாகசாமிக்கு தம்பியிருந்த நிலையக் கண்டு ஆத்திரம்  பொங்கியது. “பணத்தைக் கொட்டி படிக்க வைத்தால் தம்பி இப்படி நேரத்தை வீணடிக்கிறானே!” என்று உள்ளுக்குள்ளேயே பொருமினார். பொறுமையை இழந்தார். தன்னையுமறியாமல் உறக்க கத்தி விட்டார்.

“இப்படியெல்லாம் இருக்கிறவனுக்கு இதெல்லாம் என்னத்துக்கு?”

இதன் பொருள் வேங்கடராமனுக்கு நன்றாகப் புரிந்தது. “படிப்பில் அக்கறையோ குடும்பப் பொறுப்போ சிறிதும் இல்லாமல் நிஷ்டையிலும், தியானத்திலும் நேரத்தை கழித்துக் கொண்டிருப்பவனுக்கு, பள்ளிக்கூடமும், வீடும் எதற்கு? படிக்கப் பிடிக்காதவன் பணத்தைப் பாழாக்குவானேன்? குடும்பத்தைப் பற்றிக் கவலைப் படாதவன், வீட்டில் தங்கியிருப்பானேன்?”

அண்ணன் சொன்ன வார்த்தைகள் அவர் இதயத்தில் சுருக்கென்று தைத்தன. இந்தப் பேச்சுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு கணமும் தங்கியிருக்கக் கூடாது என்று தோன்றியது வேங்கடராமனுக்கு. ஏன் தோன்றாது? அதற்கான வேளைதான் வந்து விட்டதே!

எங்கே போவது? சொந்த வீட்டிற்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை. தாயும் தந்தையும் உறையும் அருணாசலம் தான் அவருக்கு சாந்தி தரக்கூடிய ஒரே இடம். “அருணாசலம், அருணாசலம்” என்று உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பேரொலி இப்போது பன் மடங்கு உரக்க ஒலித்தது. “வா, வா” என்று அவரை வற்புறுத்தி அழைத்தது.

எப்படிப் போவது? ரகசியமாகத்தான் செல்ல வேண்டும். சொல்லி விட்டுச் சென்றால் தேடிக் கொண்டு வந்து விடுவார்கள்! மீண்டும் குடும்பப் பாசத்தில் சிக்க வைத்து விடுவார்கள். வேண்டவே வேண்டாம்!

எல்லாம் மின்னல் வேகத்தில் தீர்மானம்  ஆக் விட்டது. புறப்பட வேண்டியதுதான், பயணம் தொடங்க வேண்டியதுதான்.

“அண்ணா, எனக்கு பன்னிரெண்டு மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. மின்சாரம் பற்றிய பாடம். நான் போயிட்டு  வரேன்” என்று கூறிக் கொண்டே எழுந்தார் வேங்கடராமன்.

ஆம் அருணாசலேசுவரர் இவரை ஸ்பெஷலாகத்தானே அழைத்திருக்கிறார்!

சரி, போயிட்டு வா, சித்தியிடம் ஐந்து ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு போய் அப்படியே என் காலேஜ் சம்பளத்தையும் கட்டி விடு.

அருணாசலேசுவரர் அழைப்பு விடுத்ததோடு, ரயில் டிக்கட்டுக்கு பணமும் கொடுத்து விட்டார்.

கீழே இறங்கி சென்று சித்தியிடம் ஐந்து ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அவசர அவசரமாக ஒரு கடிதத்தை எழுதி, கூடத்தில் இருக்கும் அலமாரியில், அண்ணனின் புத்தகங்களுக்கிடையிலே வைத்து விட்டு, ஓட்டமும் நடையுமாக ஸ்டேஷனுக்கு விரைந்தார் வேங்கடராமன்.

1896-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி சனிக்கிழமையன்று, வேங்கடராமன் பென்சிலில் எழுதிய கடிதத்தைக் கண்ணாடி போட்டு, திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். காகிதம் அங்கங்கே கிழிந்திருப்பதாலும், பென்சில் எழுத்து மறைந்து போயிருப்பதாலும், அக்கடிதத்தைப் படிப்பது மிகவும் கடினமாயிருக்கிறது. அந்தக் கடிதம் பகவான் தாய் மாமன் கீழ்ப்பசலை ராமச்சந்திர ஐயரிடம் இருந்தது. அதை வரவழைத்து, கீழே அதன் வாசகங்களைத் தெளிவாக மையினால் எழுதி வைத்திருக்கிறார்கள்.

“நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன். இது நல்ல காரியத்தில் தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்தக் காரியத்திற்கு ஒருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணமும் செலவு செய்ய வேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்த வில்லை. ரூ.2 இத்தோடு கூட இருக்கிறது.” ……. இப்படிக்கு……………….

சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடும் பதினாறு வயது சிறுவன் எழுதும் கடிதமா இது? ஞான விழிப்புற்று, ஆத்ம தரிசனம் பெற்ற தவ யோகி வரைந்த தத்துவ சாசனம் அன்றோ இதூ!

“ஆத்ம ஜோதியாகிய நான், எந்தப் பேரொளியிலிருந்து தோன்றினேனோ, அதனுடன் கலக்கப் புறப்பட்டு விட்டேன். பற்ற வேண்டியதைப் பற்றி விட்ட பிறகு, பற்றியிருந்த இந்த உடலுக்கும், ஆத்மாவுக்கும் சம்பந்தமில்லையாதலால், அதுவரை, “நான்” என்று சொல்லிக் கொண்டிருந்த உடல், “இது”வாகி விட்டது. ஆண்டவனின் அருள் கிடைத்த பிறகு நாம் செய்வது எல்லாமே நல்ல காரியமாகத்தான் இருக்கும். மானிடப் பிறவி எடுத்ததன் பெரும் பயனை அடைந்தானே என்று மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர, அதற்காக விசனப் படுவது அறிவீனம் அல்லவா? மெய்ப் பொருளை அடைவதற்காக்க கிடைத்த ஜன்மத்தை அழியப் போகும் இந்தக் கட்டையைத் தேடுவதில் வீணாக்க வேண்டாம். “நான்” அகன்று, “தான்” “தனது”, “என்”, “எனது” எல்லாம் ஒழிந்து தனித்தன்மை அழிந்து, சுத்த பிரம்மமாகவே ஆகிவிட்ட பிறகு தனிப் பெயரேது? அவரவர் இஷ்டப்படி எந்தப் பெயரிட்டாவது அழைத்துக் கொள்ளலாம்.

வியர்க்க விறு விறுக்க, ஸ்டேஷனை வந்தடைந்தார் வேங்கடராமன். மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகி விட்டது. நேரமாகி விட்டதே! ரயில் போயிருக்குமோ?

என்ன ஆச்சரியம்! அன்று ரயிலும் நேரம் கழித்தே வந்தது. இல்லை, அன்பு மகன் வரும் நெரம் அறிந்து, அருணாசலேசுவரர் அந்த ரயிலையும் சற்று நேரம் கடத்தியே கொண்டு வந்து நிறுத்தினார். அதில் ஏறி அமர்ந்து கொண்டார் வேங்கடராமன்.

நினைத்ததும் முக்தி தரும் திருச்சுழியில் பிறந்த வேங்கடராமன் நினைத்தாலெ முக்தி தரும் திருவண்ணாமலை நோக்கி ரயிலில் போய்க்கொண்டிருக்கிறார். அவர் தம் “தந்தை”க் காண திருவண்ணாமலைக்குச் செல்கிறார். ஆனால், திருவண்ணாமலை எங்கிருக்கிறது, அதற்குச் செல்ல வழியென்ன என்றெல்லாம் அவருக்குத் தெரியாது. வீட்டில் ஏதோ ஒரு “அட்லா”ஸைப் பார்த்ததில், திருவண்ணாமலை திண்டிவனத்தின் அருகில் இருப்பதைக் கண்டு, அந்த ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கெட் வாங்கியிருந்தார். கையிலிருந்த மூன்று ரூபாயில் இரண்டு பதின்மூன்று அணாவுக்கு டிக்கெட் வாங்கி, மீதி சில்லறையை மடியில் செருகியிருந்தார். அது பத்திரமாக இருக்கிறதா என்று அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆறாம் ஃபாரம் படித்துக் கொண்டிருந்த அந்தப் பள்ளைச் சிறுவர் வீட்டில் ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் “ஓடி” வந்து விட்டார். “அப்பா” அவசரமாக அழைத்து விட்டாரே! யாரிடமும் சொல்லிக் கொள்ள நேரமில்லை அவருக்கு!

றயிலில் தூங்கி தூங்கி வழிந்து கொண்டிருந்தார் அந்தச் சிருவர். அது அவருடைய இயல்பு. அது சாதாரண தூக்கம் அல்ல. தூங்காமல் தூங்கும் யோக நித்திரை. உடலை மரந்த சமாதி நிலை. ஊனக் கண்ணால் பார்ப்பவர்களுக்கு அது சாதாரணத் தூக்கம்தான்!