கோவை மாவட்டத்தில், பவானியை அடுத்து, மேட்டூருக்குச் செல்லும் பாதையில் பூநாச்சி புதூர் என்ற ஒரு கிராமம் இருக்கிறது.அங்கு நூறு ஆண்டுகளுக்கு முன், சிதம்பர ஐயர் என்பவர் மணியமாக பணியாற்றி வந்தார்.வேத சாஸ்திரங்களை முறைப்படி பயின்று, குலத்திற்குரிய நெறியோடு வாழ்ந்து வந்தார்.அவருடைய பாட்டனாரான கணபதி சாஸ்திரிகள், அறுபது வயதில் இல்லறத்தைத் துறந்து, துறவியாகி, கால் நடையாகவே காசிக்குச் சென்று, கங்கையில் ஜீவ சமாதி அடைந்தார்.
சிதம்பர ஐயரின் மனைவி பார்வதி இறந்து விடவே, மகாலட்சுமி என்ற உத்தமியை இரண்டாந்தாரமாக அவர் திருமணம் செய்து கொண்டார்.எல்லாச் செல்வங்களும் பெற்று மனம் ஒன்றிக் குடித்தனம் நடத்தி வந்த அத்தம்பதிக்கு குழந்தைச் செல்வம் இல்லாதது ப்ரும் குறையாக இருந்தது.மகாலட்சுமி வெண்டாத தெய்வமில்லை.நோற்காத நோன்பு இல்லை.
ஒரு நாள் மகாலட்சுமி தோசைக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்தாள்.திடீரென்று அங்கு தோன்றிய கருநாகம் ஒன்று, அவளருகில் வந்து படமெடுத்து ஆடியது. அருகிலுள்ள “நாககிரி” என்ற திருச்செங்கோட்டுக்கு வரும்படி அது அழைப்பது போல் அந்த அம்மாளுக்குத் தோன்றவே, பன்னிரண்டு அமாவாசைகள் அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதாகப் பிரார்த்தனை செய்து கற்பூரம் காட்டினாள். அந்த நாகம், சாதுவாகச் சென்று விட்டது.
அருணகிரிநாதர் தமது திருப்புகழிலும், கந்தர் அலங்காரத்திலும், கந்தர் அனுபூதியிலும் திருச்செங்கோட்டு மலையைப் பற்றியும், அங்கு உறையும் “நாகாசல வேல”ணைப் பற்றியும், பெருமையோடு பேசுகிறார். “செங்கோடனைச் சென்று தொழ நாலாயிரங் கண் படைத்திலனே அந்த நான்முகனே” என்றும், “தெய்வத் திருமலை” என்றும் திருச்செங்கோட்டை ஏற்றிப் போற்றுகிறார்.திருச்செங்கோட்டிலிருந்து பூநாச்சி கிராமம் அதிகத் தொலைவிலில்லை. சிதம்பர ஐயரும், மகாலட்சுமியும் தாங்கள் பிரார்த்தித்துக் கொண்டபடி பன்னிரண்டு அமாவாசை திருநாட்களில் தவறாமல் திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீசுவரரையும், கந்தனையும் தொழுது வந்தார்கள். அதன் பலனாக பிறந்த பெண்ணுக்கு நாகம்மாள் என்றும், நான்கு ஆண்டுகள் கழித்துப் பிறந்த ஆண்மகவுக்கு அர்த்தநாரி என்றும் பெயரிட்டனர்.அர்த்தநாரிதான், பின்னர் வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள வள்ளி மலையில் குடியேறி திருப்புகழ் அமுதத்தை வையகத்திற்கு வாரி வாரி வழங்கிய வள்ளிமலை சுவாமிகள்.
1870-ம் ஆண்டு ஜனவரியில் சேஷாத்ரி சுவாமிகள் அவதரித்தார்.அவரிடம் மந்திரோபதேசம் பெற்ற சீடரான வள்ளிமலை சுவாமிகள் அதே 1870-ம் ஆண்டு நவம்பரில் அவதரித்தார்.
அர்த்தநாரிக்கு ஐந்து வயது நிரம்பியபோது, சிதம்பர ஐயர் திடீரென்று காலமானார்.திக்கற்றவளாய்ப் போன மகாலட்சுமி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு, ஈரோட்டில் ஓட்டல் வைத்திருந்த தன் தமையனான கங்காதர ஐயரின் வீட்டிற்குச் சென்றாள்.அங்கு தந்தையின் திதியை முறைப்படி செய்வதற்காக அர்த்தநாரிக்கு உபநயனம் செய்வித்தார்கள்.ஏழாவது வயதில் கலைவாணியின் அருளாசியோடு பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.
அர்த்தநாரிக்குப் படிப்பில் கவனம் செல்லவில்லை.வகுப்புப் பிள்ளைகளுடன் விளையாடுவதிலும், விஷமச் சேட்டைகள் புரிவதிலும் நேரத்தைக் கடத்தினார்.
ஒரு நாள் விளையாட்டு வினையாகி விட்டது.தன் வயதுள்ள சிறுவனை, காளிங்கராயன் வாய்க்காலில் பிடித்துத் தள்ளி விட்டு, “இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” என்று வீட்டுக்கு வந்து விட்டார் அர்த்தநாரி.காயம் பட்ட சிறுவனின் தந்தை, ஓட்டலில் இருந்த கங்காதர ஐயரிடம் வந்து சத்தம் போட்டார்.
கடுங்கோபமடைந்தவர், மறுநாளே தங்கையையும், “அருமை”க் குழந்தையையும் கிராமத்திற்கே திருப்பி அனுப்பி விட்டார்.உறவினர் கை விட்டு விடலாம்.பெற்றவள் அப்படிச் செய்வாளா?பிள்ளையைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள் மகாலட்சுமி.பையன் பள்ளிக்கூடத்திற்குப் போய் வந்தானேயொழிய, விளையாட்டும், விஷமும் அப்படியேதான் இருந்தன.விரவில் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார் அர்த்தநாரி.
பின்னர் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார்.நகைச்சுவையோடு பேசுவார்.அவர் இருந்த இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.பெரிய மாமாவான அப்பு தீட்சிதருக்கு மருமகன் மிது அபார நம்பிக்கையிருந்தது.“பையன் எப்படியாவது பிழைத்துக் கொண்டு விடுவான்” என்று அடிக்கடி கூறுவார்.தம் ஐந்து வயது பெண் சுப்புலட்சுமியை அர்த்தநாரிக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.
ஒன்பது வயது நிரம்பிய அர்த்தநாரிக்கு குடும்பப் பொறுப்பு வந்து விட்டது.பிழைப்பைத் தேடிக் கால் நடையாகவே சென்றார்.சத்தியமங்கலம், ஹாசனூர் வழியாக மைசூர் வந்து சேர்ந்தார்.அங்கு அவருடைய அத்தை பிள்ளைகள் இருவர் இருந்தனர்.அத்தான் குருசாமி ஐயர் அரண்மனையில் தலைமைச் சமையற்காரராகப் பணியாற்றி வந்தார்.அவரது சகோதரர் ஸ்ரீகண்ட ஐயர், மிட்டாய்க் கடை வைத்திருந்தார்.அவர்களுடைய சிபாரிசின் பேரில் அரண்மனை அந்தப்புரத்தில் சமையல் வேலைக்கு அமர்ந்தார் அர்த்தநாரி.ஒன்பது ரூபாய் சம்பளம்.லீவு கிடைத்த போதெல்லாம் கிராமத்திற்கு வந்து தாயைப் பார்த்து விட்டுப் போவார்.
ஆங்கள் பன்னிரண்டு வயதுக்கு மேல் அந்தப்புரத்தில் பணியாற்ற முடியாது.எனவே அவரை அரண்மனைக்கு மாற்றினார்கள்.அதிகாரிகளுடன் யாத்திரை செய்து சமைத்துப் போட வேண்டிய கடினமான வேலையில் அமர்த்தப்பட்டார். காட்டுப் பிரதேசங்களிலும், திறந்தவெளியிலும், மலையிலும், வெய்யிலிலும் சமைத்துப் போடுவது என்பது எளிதான காரியமல்ல. இருப்பினும், தன் சாமர்த்தியத்தால், நேரம் தவறாமல் அதிகாரிகளுக்குப் பிடித்த சமையலைச் செய்து போட்டு, எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கினார் அர்த்தநாரி.
தொழில் செய்து கொண்டே, தேக வலிமையையும் பெருக்கிக் கொண்டார் அர்த்தநாரி.தேக பயிற்சிகள் பழகினார்.சாமுண்டி மலையில் ஏறும் போது ஒவ்வொரு படிக்கட்டிலும் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டு போவார்.சிலம்பம் பயின்றார்.குத்துச் சண்டை போடப் பழகிக் கொண்டார்.பதினாறு வயதில் பெரிய பயில்வானாக விளங்கினார்.