வேதமூர்த்தி வெற்புறை சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி மலையில் தரிசனம் தந்தார். ஆண்டவர் “தணிகையிலந்தணர்” கோலத்துடன் பாராயணம் கேட்டார்.
அன்று பேரொளியாகவும், அந்தணப் பெரியாராகவும் காட்சி தந்த தணிகேசரை உலகமெ வழிபடவும், திருப்புகழோதுங் கருத்தினரை திருத்தணியில் ஒன்று சேர்க்கவும் சுவாமிகள் தருணம் பார்த்திருந்தார்.
அந்தக் காலத்தில் ஜனவரி மாதம் முதல் தெதியன்று அரசு ஊழியர்களும், அலுவலகங்களில் பணி ப்ரிபவர்களும் பூமாலைகளுடனும், பழங்களுடனும் ஆங்கிலெயத் துரைமார்களின் இல்லங்களுக்குச் சென்று மரியாதை செய்யும் பழக்கம் இருந்து வந்தது. வயிற்றுப் பிழைப்புக்காக மனிதனை வழிபடும் இந்த அடிமைப் புத்தியைக் கண்டு மனம் குமுறிய சுவாமிகள் ஒரு யோசனை செய்தார். மனிதனை வழிபட்ட மனிதனை, மால் மருகனின் வழிபாட்டில் ஈடுபட வைத்தார். டிசம்பர் 31-ம் தேதி திருப்புகழ் பாடிக் கொண்டே மலையேறிச் சென்று, ஜனவரி முதல் தெதி தணிகேசனுக்கு மனம் குளிர அபிஷேகம் செய்து, அவனுக்கு சகல மரியாதைகளுடன் அர்ச்சனை, ஆராதனைகள் செய்து, புத்தாண்டின் அலுவல்களைப் புதுத் தெம்புடன் துவங்க நல்வழி வகுத்துத் தந்தார். 1017-18-ல் வள்ளிமலை சுவாமிகளால் தொடங்கப்பட்ட திருத்தணி திருப்புகழ் திருவிழாவே, நாளடைவில் திருப்படித் திருவிழாவாக மாறி, இன்று முருக பக்தர்கள் கொண்டாடும், மிக முக்கிய விழாக்களில் ஒன்றாக வளர்ந்தோங்கியிருக்கிறது.
இந்த முதல் திருப்புகழ் திருவிழாவில் வள்ளிமலை சுவாமிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் ஓர் அற்புதமே!
சென்னையிலுள்ள திருப்புகழ் அன்பர்களை 31-ந் தேதி திருத்தணிக்குச் செல்லும்படி பணித்தது போலவே, வள்ளிமலை ஆசிரமத்திலிருந்த அன்பர்களையும் அங்கு செல்லுமாறு கூறினார் சுவாமிகள். அதற்கு உடனே இணங்கிய அடியார்கள் சுவாமிகளையும் உடன் வரும்படி அழைத்தனர். சுவாமிகளோ, நீங்கள் செல்லுங்கள். ஆண்டவன் உத்தரவு கிடைத்தால் நிச்சயம் வந்து கலந்து கொள்கிறேன் என்று கூறி அனுப்பினார். அவர்கள் டிசம்பர் கடைசி நாளன்று திருத்தணிக்குச் சென்று சுவாமிகளுக்கு உத்தரவு கிடைத்து அவர் திருத்தணிக்கு வந்தால் ஆளுக்கொரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டார்கள்.
அன்று வள்ளிமலை ஆசிரமத்தில் சுவாமிகளுடன் தகப்பன்சாமி, தேவாரசாமி, சிதம்பரசாமி என்பவர்கள் இருந்தனர். அவர்களைப் பார்த்து சுவாமிகள், “இன்று பாராயணம் முடிந்ததும் நீங்கள் உறங்காமல் விழித்திருங்கள். நான் நிட்டையில் அமரப் போகிறேன். திருத்தணிகைக்குப் போகும்படி ஏதாவது உத்தரவு வந்தால் என்னிடம் சொல்லுங்கள்” என்று கூறி விட்டு நிட்டையில் அமர்ந்து விட்டார்.
சுவாமிகள் கூறியபடியே கண்ணிமைக்காமல் ஆண்டவனின் உத்தரவுக்காக பக்தியோடு காத்திருந்தார் தகப்பன்சாமி. திடீரென்ரு மெல்லிய குரலில், “நீங்கள் தணிகை போய் ஆறு நாட்களில் திரும்பி வந்து விட வேண்டும்” என்று ஒரு அசரீரி கேட்டது. அத்தெய்வ மொழிகளைக் கேட்ட தகப்பன்சாமிக்கு உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. சுவாமிகள் நிட்டை கலைந்ததும், தான் கேட்ட மொழிகளைக் கூறினார். ஆனந்தப் பரவசமடைந்த சுவாமிகள் அடுத்த கணம் தகப்பன்சாமியுடன் திருத்தணிக்கு கால் நடையாகப் புறப்பட்டு விட்டார்.
சுவாமிகள் தமிழகம் மட்டுமின்றி, பம்பாய், கல்கத்தா, டில்லி போன்ற வடநாட்டு நகரங்களுக்கும் சென்று, அங்கு வாழும் தமிழர்களிடையே திருப்புகழின் மேன்மையைப் பர்பபினார். மீண்டும் ஒரு முறை தல யாத்திரை சென்று ஆலயங்களில் வழிபட்டு, மகான்களைத் தரிசித்து, புண்ணிய நீராடி தமது ஆன்மீக வலிமையையும், யோக சக்திகளையும் பெருக்கிக் கொண்டார்.
மகான்களும், தவச் சீலர்களும், யோக சித்தர்களும், ஞானத்துறவிகளும் பரம்பொருளின் தூதுவர்களாகத்தான் நம்மிடையே அவதரிக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு துறையை ஏற்றுக் கொண்டு தங்களுக்குரிய தனி வழியில் மக்களிடையே நன்னெறியையும், நல்லொழுக்கத்தையும், அன்பையும், பக்தியையும், ஞானத்தையும் பரப்புகிறார்கள். காலத்திற்கேற்ப அவ்வப்போது தேவையான பாதையை வகுத்துத் தருகிறார்கள். அதற்கு ஆண்டவன் அவர்களுக்கு தோன்றாத் துணையாக நிற்கிறான். கனவில் வந்து யோசனைகள் கூறுகிறான். அசரீரியாக அருள் பாலிக்கிறான். கண்ணுக்குத் தெரியாத உருவம் தாங்கி வந்து உதவுகிறான்.
ஸ்ரீ வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளிடம் அருணகிரியாரின் திருப்புகழைப் பரப்பி தெய்வ நம்பிக்கையும், முருக பக்தியும் தழைக்கச் செய்யும் அருட் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. அத்துறையில் வெற்றி கண்டு, வந்த காரியம் இனிது முடிந்தேற, ஸ்ரீ முருகனும், ஸ்ரீ வள்ளியம்மையும் அவருக்கு உறுதுணையாயிருந்தனர்.
சுவாமிகள் சுவாமிமலையில் தங்கியிருந்த சமயம். திருப்புகழ் பாராயணமும், பிரசங்கமும் முடிந்து, அவர் ஓர் அன்பர் வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில், “கார்த்திகை மூலம் எனக்குகந்தது” என்று அசரீரி கெட்டது. திருடுக்கிட்டு எழுந்த சுவாமிகள், சீடர்களை எழுப்பி கவனமாகக் கேட்கச் சொன்னார். அவர்களும் அந்த அசரீரியின் வாசகத்தை மிகத் தெளிவாகக் கேட்டனர். கார்த்திகை மாதம், மூல நட்சத்திரத்தன்றுதான் சுவாமிகள் அவதரித்தார். அந்நன்னாளை முருகன் தமக்கு உகந்தது என்று கூறுகிறான். அப்புனித நாலைத் தன் ஜயந்தியாகக் கொண்டாடச் சொல்லாமல், அருணகிரியாரின் ஜயந்தியாக்க கொண்டாட வேண்டும் என்று சுவாமிகள் பணித்தார். 1923-ம் ஆண்டு முதல் பல இடங்களில் அப்புனிதத் திருநால் அருணகிரியாரின் விழாவாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.
தமது தென்னாட்டு யாத்திரைய்ன் போது, பழநியாண்டவனைத் தரிசித்து விட்டு, விராலிமலை ஆறுமுகனை வழிபட்டு திருச்சிக்கு அடுத்துள்ல வயலூர் சென்றார் சுவாமிகள். அப்போது அப்பகுதியில் பருவ மழை பொய்த்து விட்டதால் நிலங்கள் வெடிப்புண்டு விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருந்தார்கள். சுவாமிகளைக் கண்டதும் மக்கள் அவரிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். “நீங்கள் திருப்புகழை உண்மையாக நம்பினால், முருகன் அருளால் மழை பொழியும்” என்று கூறிய சுவாமிகள் தமது பாராயணத்தைத் தொடங்கினார். அப்போது மழை பெய்வதற்கான அறிகுறியே காணோம். பாராயணம் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் எங்கிருந்தோ கருமேகங்கள் வந்து குவிந்தன. சில்லென்று காற்று வீசியது. இரவு பத்து மணி முதல், விடியற்காலை ஐந்து மணி வரை மழை கொட்டித் தீர்த்து விட்டது.
சுவாமிகள் பெங்களூரில் தங்கியிருந்த போது ஜதி வாத்தியத்தை வாசித்துக் கொண்டு, திருப்புகழ் பாராயணப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் அம்ர்ந்திருந்த ஒரு மந்திரவாதி, “ஓன்ஸ் மோர்” என்று கத்தினான். இந்தக் குறுக்கீடு பிடிக்காத சுவாமிகள் “நோ மோர்” என்று கூறி அவனை அலட்சியப்படுத்தி விட்டார். கோபங்கொண்ட அந்த சூனியக்காரன் உடனே ஏவல் செய்து சுவாமிகளின் கைகளை வீங்கும்படி செய்து விட்டான். அதனால் அவர் தொடர்ந்து வாத்தியம் வாசிக்க முடியாமல் போய் விட்டது. ஆனால் அதைச் சிறிதும்பொருட்படுத்தாமல் பாராயணத்தை நடத்தி முடித்தார் அவர். சுவாமிகளின் கைகள் திடீரென்று வீங்கியதைக் கண்டு சீடர்களும், அன்பர்களும் கவலையுற்றனர்.
மறுநாள் காலை சுவாமிகள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த மந்திரவாதி அழுதுகொண்டே ஓடி வந்தான். அவனுடைய கைகள் பெரிதாக வீங்கியிருந்தன. தான் குத்து வலியால் அவதிப்படுவதாகவும், உடல் முழுவதும் எரிச்சல் எடுபதாகவும் கூறி, தான் செய்த குற்றத்தை மன்னித்து, திருநீறு பிரசாதம் அளிக்கும்படியும் வேண்டினான். சுவாமிகள் அவனைப் பார்த்து, “அப்பனே, நீ கற்ற மூன்று சுழி மந்திரத்தைப் பிரயோகிக்கும் வழக்கத்தை இன்றுடன் விட்டு விடுவதாகச் சத்தியம் செய்து கொடுத்தால், விபூதிப் பிரசாதம் தருகிறேன்” என்று கூறினார். அவனும் அவ்வாறே வாக்குக் கொடுத்து விட்டு விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு சென்றான்.
ஒரு சமயம் சென்னை புரசவாக்கம் கங்காதீசுவரர் ஆலயத்தில் சுவாமிகள் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். திடீரென்று எழுந்து கொடி மரத்தின் அருகில் வந்து நின்று வீதியை நோக்கிப் பிரசங்கத்தைத் தொடர்ந்தார். இதன் காரணம் ஒருவருக்கும் புரியவில்லை. சற்றைக்கெல்லாம் கோபுரத்துக்கு வெளியே சற்ரு ஒதுங்கி நின்றிருந்த ஒரு முகமதியத் தோழரை ஆலயத்தினுள் அழைத்து வரும்படி சீடர்களிடம் கூறினார்.
கண்ணீருடன் ஆலயத்தினுள் ஓடி வந்த அந்த முகமதியர், சுவாமிகளின் கால்களில் விழுந்து விசும்பினார். “சுவாமி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டையை அடுத்த மலைக்காட்டில் தாங்கள் இதே பாட்டைப் பாடவில்லையா? அதை நான் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு சிறுத்தைப்புலி பாய்ந்தோடி வந்தது. உடனே நான் அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டேன். ஆனால் தாங்களோ சற்ரும் அஞ்சவில்லை. மாறாகத் தங்கள் திருவோட்டில் இருந்த உணவை அந்தப் புலிக்குக் கொடுத்தீர்கள். அந்தப் புலியும் தங்களுக்குக் காவலாக அருகில் படுத்திருந்தது. பின்னர் தாங்கள் புறப்பட்ட போது, அது தங்களைத் தொடர்ந்து வந்ததால், நான் தங்களை அருகில் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற முடியவில்லை. அதற்குப் பிறகு இங்கு ஓர் அலுவலகாக வந்த நான், அதே குரலை, அதே பாட்டக் கேட்டு அசந்தி நின்றேன். நான் வெளியே நின்றிருந்தது தங்களுக்கு எப்படித்தான் தெரிந்ததோ? எனக்குத் தரிசனம் தருவதற்காக எழுந்து வந்த தங்கள் கருணையை எப்படிப் பாராட்டுவேன்?” என்றுக் கூறிக் கதறித் தீர்த்து விட்டார். அருகிலிருந்தவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டனர்.