வள்ளிமலை – 11

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 1929-ம் ஆண்டு ஜனவரியில் மகா சமாதி அடைந்தார். தம் குருநாதனின் சமாதி சடங்குகளில் கலந்து கொண்டு விட்டு திருவண்ணாமலையிலிருந்து வள்ளிமலை திரும்பிய சச்சிதானந்த சுவாமிகள், பன்னிரண்டு ஆண்டுகள் மலையை விட்டு இறங்காமல் ஆசிரமத்திலெயே தங்கியிருந்தார். அதே சமயம் சென்னையிலிருந்த சில அன்பர்களுக்கும் அவர் தரிசனம் அளித்திருக்கிறார்!

வெங்கடாச்சாரி என்ற அன்பர் சுவாமிகளின் படம் ஒன்றை ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்று, அங்கு அதை சில நாட்கள் வைத்து விட்டு, சுவாமிகளின் ஆசி பெற்று வீட்டுக்கு எடுத்து வரும் போது சிலர் சுவாமிகளிடம், “இந்தப் படம் பேசுமா? ஆகாரம் சாப்பிடுமா?” என்று கேட்டனர். அதாற்கு சுவாமிகள், “இந்தப் படம் பேசவும் செய்யும், சாப்பிடவும் செய்யும்” என்றார்.

மறுநாள் வெங்கடாச்சாரியார் வீட்டில்  பூஜை அறையில் சுவாமிகள் படத்திற்கு நிவேதனம் செய்து கொண்டிருந்தார்கள்.  அப்போது, “ஓரு லோட்டா காபி கொடு” என்ற குரல் கேட்டது. சந்தேகமில்லை, அது சுவாமிகளின் குரல்தான். “உள்ளே வாருங்கள்” என்று வீட்டார் அழைக்கவும், “இல்லை, எனக்கு அவசர வேலையிருக்கிறது. போக வேண்டும். காப்பியை ஜன்னல் வழியாகவே கொடு” என்று சொல்லி கையை நீட்டினார் சுவாமிகள். அவர் கேட்டபடியே காப்பியை ஜன்னல் வழியாகவே கொடுத்தனர். அவரும் அதை வாங்கிக் குடித்து விட்டு, பாத்திரத்தை ஜன்னலில் வைத்தார். உடனே எல்லோரும் தெருப்பக்கம் சென்று பார்த்தனர். அங்கு சுவாமியைக் காணோம். சுற்றுமுற்றும் பார்த்தார்கள், பயனில்லை.

ஒரு முறை மலையை சீர்திருத்தம் செய்த வேலையாட்களுக்கு கூலி கொடுக்க சுவாமிகளுக்கு இருநூறு ரூபாய் தேவைப்பட்டது. கையில் பணமில்லை. முருகனிடம் பிரார்த்தித்தார். வேறு யாரிடம் கேட்பார்?

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு ஆசிரமத்தில் ஆலமராத்தடியில் அமர்ந்திருந்தார் சுவாமிகள். அப்போது எதிரில் ஒரு பை வந்து விழுந்தது. அதை அவிழ்த்துப் பார்த்தார். அதில் வெள்ளி நாணயங்களாக இருநூறு ரூபாய் இருந்தது. முருகனின் கருணையை நினைத்து மனம் உருகி, கண்ணீர் உகுத்தார் சுவாமிகள்.

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் சென்னைக்கு வந்த சுவாமிகள், அவருடைய பக்தர்களில் ஒருவரான பிரபல டாக்டர் ரங்காச்சாரியின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது டாக்டர் சுவாமிகளைப் பார்த்து, “நான் அனுப்பிய இருநூறு ரூபாய் வந்து சேர்ந்ததா?” என்று கேட்டார். சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

டாக்டர் சொன்னார், “ஓரு நாள் முருகன் என் கனவில் தோன்றி, வள்ளிமலை சுவாமிகளுக்கு இருநூறு ரூபாய் தேவைப்படுகிறது. அதை நீ அனுப்பி வை” என்று உத்தரவிட்டார். மறுநாள் ஆகாய விமானம் மூலம் பெங்களூருக்குப் புறப்பட்டென். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. இருநூறு ரூபாய் நாணயங்களாக ஒரு மூட்டையில் கட்டி வைத்துக் கொண்டேன். விமானம் வள்ளிமலையை நெருங்கிய போது தாழ்வாகப் பறந்தது. பைனாகுலரின் மூலம் கீழே பார்த்தேன். சுவாமிகள் ஆலமரத்தடியில் அமர்ந்திருப்பது தெரிந்தது. உடனே அந்தப் பையை கீழே போட்டேன். அது பத்திரமாக வந்து சேர்ந்ததா?” என்று கேட்டார்.

முருகனின் லீலா விநோதத்தை நினைத்து கண் கலங்கிய சுவாமிகள் டாக்டரை அப்படியே இறுகத் தழுவிக் கொண்டார். “நீங்கள் பெரும் பாக்கியம் செய்தவர். முருகன் தங்களுக்கு கனவில் காட்சி தந்தானே, எனக்கு இன்னும் அந்த பாக்கியம் கிடைக்க வில்லையே” என்ரு உணர்ச்சி பொங்கக் கூறினார்.

ஒரு சமயம் ஒரு வயோதிகர் வள்ளிமலை சுவாமிகள் இருந்த குகைக்கு வந்து, “பசிக்கிறது, ஏதாவது கொடுங்கள்” என்று கேட்டார்.  ஒரு பாத்திரத்தில் இருந்த கஞ்சியை அந்தப் பெரியவருக்குக் கொடுக்கும்படி சுவாமிகள் கூறவே, சீடர் ஒருவர் எடுத்துக் கொடுத்தார். பசியால் வாடிய அந்த வயோதிகர், பாத்திரத்திலிருந்த கஞ்சியைக் குடித்து விட்டு அங்கிருந்து போய் விட்டார். ஒரே மூச்சில் மூன்று படி கஞ்சியையும் குடித்த அந்த அந்திசய மனிதர் யாரென்று பார்த்து வரும்படி சுவாமிகள் சில சீடர்களை அனுப்பினார். ஆனால் எத்தனை தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எங்கோ மாயமாய் மறைந்து விட்டார். மறுநாள் முதல் ஆசிரமத்தில் பெரியவருக்கு ஆகாரம் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பெரியவருக்காக வைக்கப்பட்ட அந்த ஆகாரத்தை தவறாமல் ஒரு கீரிப்பிள்ளை வந்து சாப்பிட்டு விட்டு போகத் தொடங்கியது. சேஷாத்ரி சுவாமிகளே கீரியின் உருவில் வந்து உணவை உட்கொள்ளுகிறார் என்ற உண்மை பின்னர்தான் தெரிந்தது.

திருவண்ணாமலையில் நடமாடிக் கொண்டிருந்த சேஷாத்ரி சுவாமிகள், அநேக நாட்கள் இரவு நேரங்களை மயானத்திலேயே கழிப்பது வழக்கம். அங்கிருந்த வெட்டியான் சுவாமிகள் மீது பேரன்பு வைத்திருந்தான். சுவாமிகளும் அவனிடம் கருணையோடு பழகினார். ஊரில் தனக்கு யாராவது புத்தாடைகள் கொடுத்தால் அவற்றைக் கொண்டு வந்து வெட்டியானிடம் கொடுத்து விட்டு, அவனுடைய கந்தல் ஆடையைத் தான் அணிந்து கொண்டு போய் விடுவார்.

செஷாத்ரி சுவாமிகள் மகா சமாதி அடைந்த போது, பிரிவு தாங்காமல் துயரமடைந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களில் அந்த வெட்டியானும் ஒருவன். எந்நேரமும் அவரைப் பற்றியே ஏங்கிக் கொண்டிருந்த அவனால் சுவாமிகளின் ஒளிமிக்க கண்களையும், புத்துயிரூட்டும் புன்னகையையும், இனிமையான பேச்சுக்களையும் மறக்கவே முடியவில்லை.

ஒரு நாள் அவனுடைய கனவில் சேஷாத்ரி சுவாமிகள் தோன்றி அவனை அன்போடு தழுவிக் கொண்டார். ஆறுதல் மொழிகள் கூறினார்.

“அப்பனே, என்னைக் காண வில்லையே என்று வருத்தப்படாதே. நான் வள்ளிமலையில் இருக்கிறேன். அங்கு போ, உனக்குத் தரிசனம் தருகிறென்” என்று வாக்குக் கொடுத்தார்.

மறுநாள் அந்த வெட்டியான் வள்ளிமலைக்குக் கிளம்பி விட்டான். சுவாமிகளிடமு, பிறரிடமும் தான் வந்த காரியத்தைக் கூறினான்.  சேஷாத்ரி சுவாமிகளின் தரிசனத்திற்காக காலை முழுவதும் காத்திருந்தான்.

மாலையில் பாறையின் மீது பெரியவருக்கு ஆகாரம் வைப்பதைக் காணச் சென்றான். அப்போது அங்கு ஒரு கீரி வந்தது. அருகிலிருந்தவர்கள் திருப்புகழ் பாடினார்கள். கீரிப்பிள்ளை வெல்லம் கலந்த அன்னத்தை ருசித்து சாப்பிடத் தொடங்கியது.

அடுத்த கணம், கீரிப்பிள்ளை மறைந்து, அங்கு சேஷாத்ரி சுவாமிகள் காட்சியளித்தார். வெட்டியான் பக்திப் பரவசத்தில் உடல் நடுங்க “சாமி, சாமி, என்னைத் தனியாக விட்டுட்டு இங்கே ஏன் சாமி வந்தீங்க?” என்று கதறினான். தன்னை சுவாமிகள் வள்ளிமலைக்கு அழித்துத் தரிசனம் கொடுத்ததை நினைத்து பூரித்துப் போனான்.

ஒரு சமயம் வள்ளிமலை சுவாமிகள் திருவண்ணாமலைக்குச் சென்று ஸ்ரீ ரமண சுவாமிகள் சந்நிதியில் திருப்புகழ் பாடினார். பின்னர் சேஷாத்ரி சுவாமிகளைத் தேடிக் கண்டுபிடித்து, தரிசனம் செய்து சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். இறுதியில் மறுநாள் வள்ளிமலை போகப் போவதாகக் கூறி உத்தரவு கேட்டார். அப்போது சேஷாத்ரி சுவாமிகள், “”டேய், நானும் வள்ளிமலைக்கு வரேண்டா. அன்னையும் அழைச்சுண்டு போடா” என்று கூறியதும் வள்ளிமலை சுவாமிகளுக்கு மகிழ்ச்சியை அடக்கவே முடியவில்லை. குருநாதர் விளையாட்டுக்கு அவ்வாறு கூறுகிறாரோ என்ற சந்தேகத்துடன், மறுநாள் காலையில் அவரிடம் சென்று, “ரயிலுக்குப் போகலாமா” என்று பரிவுடன் கேட்டார்.  “ஓ, வரேனே” என்று அவரும் கிளம்பினார். குருவும், சீடரும் ரயில் நிலையத்திற்குச் சென்று, ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்.

ரயில் கிளம்பியது. சட்டென்று சேஷாத்ரி சுவாமிகள் எழுந்து, கீழே குதித்து விட்டார். வள்ளிமலை சுவாமிகளின் முகத்தில் ஏமாற்றம் குடி கொண்டது. குருநாதர் திடீரென்று தமது மனதை மாற்றிக் கொண்டு விட்டாரே என்று வருந்தினார்.

“டேய், நீ வருத்தப்படாதே, போ. நான் வள்ளிமலைக்கு வந்து சேருகிறேன்” என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு, சேஷாத்ரி சுவாமிகள் ஓடி விட்டார்.