வள்ளிமலை – 12

வள்ளிமலை ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்ததும், பொங்கித் தாய்க்குப் பூஜை செய்து விட்டு திரும்பிய சுவாமிகள், எதிரில் சிரித்துக் கொண்டு சேஷாத்ரி சுவாமிகள் நிற்பதைக் கண்டு பிரமித்துப் போனார். “குருநாதா, ப்ரபோ” என்று கத்திக் கொண்டேதரையில் விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்தார். எதிரில் குருநாதரைக் காண வில்லை. மாறாக அங்கு ஒரு சிறு அணிற் பிள்ளை துள்ளிக் குதித்து ஓடியதைக் கண்டார்.

சரீரத்தோடு இருக்கும் போதே, எந்த உருவத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் அபூர்வ சக்தி யோக சித்தர்களுக்கு உண்டு. கொடுத்து வைத்தவர்களின் கண்களுக்கு மட்டும் உண்மை புரியும்.

1929-ம் ஆண்டு சேஷாத்ரி சுவாமிகள் மகா சமாதியடைந்த பிறகு, பன்னிரண்டு ஆண்டு காலம் வள்ளிமலை சுவாமிகள் தமது திருப்புகழ் ஆசிரமத்திலேயே தவத்தில் ஈடுபட்டிருந்த போது, அவரைத் தரிசிக்கு மலைக்கு வந்த கூட்டம் பெருகிய வண்ணம் இருந்தது.

திருப்புகழ் மாமந்திரத்தின் சக்தியாலும், தவயோக நெறியாலும், பொங்கித் தாயின் பேரருளாலும் சுவாமிகள் வியத்தகு சித்திகளைப் பெற்றிருந்தார். நடந்ததையும், நடந்து கொண்டிருப்பதையும், நடக்கப் போவதையும் அவர் அறிந்திருந்தார் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவருடைய சந்நிதியில் அன்பர்கள் பல அதிசயங்களைக் கண்டிருக்கிறார்கள். தீராத நோய்களெல்லாம் குணமடையப் பெற்றிருக்கிறார்கள். அவரது ஆசியல் குழந்தையற்றவர்கள் மழலைச் செல்வங்களைப் பெற்று இன்புற்றிருக்கிறார்கள். குறைப் பிரசவத்தால் அவதியுற்ற பெண்மணிகள் பின்னர் சுகப் பிரசவம் ஆகி, நலமுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

1940-ம் ஆண்டு வள்ளிமலையை விட்டுப் புறப்பட்ட சுவாமிகள், அடுத்த பத்தாண்டு காலம் அனேகமாக சென்னை நகரிலேயே வசித்து வந்தார். அங்கிருந்தபடியே, தென்னாட்டிலும், பம்பாய், கல்கத்தா, ரிஷிகேசம் முதலிய இடங்களுக்கும் யாத்திரை செய்து விட்டு வந்தார். அவ்வப்போது வள்ளிமலைக்குச் சென்று தங்குவதும் உண்டு.

எழுபத்தைந்து வயதைக் கடந்த நிலையிலும், இளமை மாறாத ஆர்வத்துடன், திருப்புகழைப் பாடியு, பாட வைத்தும் நாடெங்கும் பக்தியைப் பரப்பிக் கொண்டிருந்தார். அவருடைய “வள்ளி கல்யாண” பிரசங்கங்களைக் கேட்க பெருங்கூட்டம் கூடியது.

கருணை வள்ளலான திருப்புகழ் சுவாமிகள், தள்ளாத வயதிலும், பஸ்ஸிலும், ரிக் ஷாவிலும்,, நடையுமாகச் சென்னை மாநகரம் முழுவதும் அலைந்திருக்கிறார். பக்தர்களின் வீடு தேடிச் சென்று, நொந்த உள்ளங்களுக்கு நன்மருந்தாம் திருப்புகழ் தந்தி ஆட்கொண்டிருக்கிறார். வெயில் என்றும், மழையென்றும், குளிர் என்றும் பாராமல், பசி நோகாமல், கண் துஞ்சாமல், இறைப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அந்தப் பேரருளாலர் குழந்தையைப் போல் பழகுவார். வேடிக்கையாகப் பேசுவார். ஆனால் பிறர் பாடும் போது தவறு இழைத்து விட்டாலோ, தாளம் தப்பி விட்டாலோ பொறுக்க மாட்டார். கடிந்து கொள்வார். கன்னத்தில் அடிப்பார். தலையில் குட்டி விடுவார்.

வள்ளிமலை சுவாமிகள் திருப்புகழைப் பாடுவதோடும், அதற்குப் பொருள் கூறி தத்துவ விளக்கம் செய்வதோடும் நின்று விடவில்லை. திருப்புகழிலிருந்து பல பாட்டுக்களை எடுத்து, பாராயணம், பஜனை, தியானம், பூஜை, அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், கற்பூராரத்தி முதலியவற்றுப் பயன்படும்படி தொகுத்தளித்திருக்கிறார்.

அதே போல் வேல் வகுப்பில் உள்ள பதினாறு அடிகளை அறுபத்து நான்கு வரிகளாக மாற்றியமைத்து, அதற்கு, “வேல் மாறல்” என்று பெயரிட்டிருக்கிறார். அது ஒரு கவசம் போன்றது.  மார்கழி திருப்புகழ் பாராயணத் திருமுறை, திருப்புகழ் கோபூஜை, அனுஷ்டானத் திருப்புகழ் போன்றவற்றையும் ஆக்கித் தந்திருக்கிறார். இரண்டாவது உலகப் போரின் போது, பகைவர்களிடமிருந்து நம் நாட்டையும், மக்களையும் காப்பதற்காக, திருப்புகழிலிருக்கும் கோளறு பதிகங்களையும், வேல் வாங்கு வகுப்பு முதலிய பிற பாடல்களையும் முறையாகத் தொகுத்து, “திருப்புகழ் பாராயணக் குண்டு” என்ற பதிப்பையும் வெளியிட்டு உதவினார். இப்புத்தகங்களை இலவசமாகத் தந்து, எல்லோரையும் பாராயணம் செய்யச் சொன்னார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் மயிலாப்பூரில் ஒரு பிரபல வக்கீலின் வீட்டில் திருப்புகழ் பாராயணத்திற்கு ஏற்பாடாகியிருந்தது. அந்த வக்கீல் அதற்கு முன் திருப்புகழ் பாடியதில்லை. பாராயணம் தொடங்குவதற்கு முன் தாளத்தை எடுத்து வ்ககீலின் கையில் கொடுத்து, “நீயும் பாடு” என்றார் சுவாமிகள். அன்று பாட ஆரம்பித்தவர், நாடெங்கும் திருப்புகழ் பஜனைகள் செய்து முருகன் கீர்த்தியைப் பரப்பினார். ஒவ்வோர் ஆண்டும் திருத்தணி திருப்படி விழாவில் முக்கிய பங்கு கொண்டார். திருப்புகழ் மணி டி. என். கிருஷ்ணசுவாமி ஐயர்தான் அந்த வக்கீல்.

மலருடன் சேர்ந்த நாறும் மணப்பது போல் சுவாமிகளுடன் பழகியவர்களெல்லாம், பண்பாளர்களாகவும், அவருடன் சேர்ந்து பாடியவர்களெல்லாம் முருக பக்தர்களானார்கள். திருப்புகழைப் பரப்பினார்கள்.

சென்னையில் திருப்புகழ் வள்ளிமலை சுவாமிகளின் பாதம் பட்டுப் புனிதமடைந்த இல்லங்களில் மயிலாப்பூரில் வாழ்ந்த பிரபல வழக்கறிஞரான எஸ். ஸ்ரீநிவாச ஐயங்கார் வீடும் ஒன்று. அவருடைய மகன் எஸ். பார்த்தசாரதி வள்ளிமலை சுவாமிகளிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

ஆன்மீகத் துறையில் நாட்ட்டமோ, விக்ரக ஆராதனையில் நம்பிக்கையோயின்றி, வாழ்ந்து வந்த பகுத்தாறிவாளர் பார்த்தசாரதி. காவியுடை அணிந்து, உள்ளத் தூய்மையோடு, தியானத்திலாழ்ந்து, தேவியின் வழிபாட்டில் மனம் கரைந்து, ஆலயத்திற்கு வருபவர்களை அன்பு மொழியால் அரவணைத்து, அருள் வழி காட்டும் சாது பார்த்தசாரதியாக மாறியது ஓர் அதிசய வரலாறாகும்.

சீமானுக்குரிய நாகரீக வசதிகளோடு ஆடம்பர வாழ்க்கை நடத்திய பார்த்தசாரதிக்கு, தெய்வங்களின் கற்சிலைகளையும், பஞ்சலோக விக்கிரகங்களையும் வாங்குவது ஒரு “ஹாபி”யாக இருந்து வந்தது. கலாரசனையில் தோய்ந்த உள்லமாதலால், நம் நாட்டின் கலைப் பொருட்களை வாங்கி,  பங்களாவின் வரவேற்பு அறையில் வைத்து ஆனந்தப்பட்டார் அவர். வணங்குவதற்கும், வழிபாட்டிற்கும் உரிய தெய்வ வடிவங்களாக அவற்றைக் கருதாமல், கண்ணுக்கினிய காட்சிப் பொருள்களாகத்தான் அவற்றை “சேகரித்து” வைத்தார் அவர்.

1946-ம் ஆண்டு தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. இரவு சாப்பாட்டுக்குப் பிறகு பார்த்தசாரதி படுக்கச் சென்று விட்டார். வழக்கமாகக் கலைப் பொருள்கள் விற்கும் அன்பர் ஒருவர் காரில் வந்து, பார்த்தசாரதியை அவசர அவசரமாக எழுப்பினார். வக்கோலில் சுற்றப்பட்டிருந்த ஒரு கற்சிலையைக் காரிலிருந்து எடுத்து தாழ்வாரத்தில் இறக்கி வைத்தார்.

“மிஸ்டர் பார்த்தசாரதி, இதில் ஓர் அழகான கல் விக்ரகம் இருக்கிறது. இதை நான் உங்களுக்காகவெ கொண்டு வந்திருக்கிறேன். இதற்குப் பணம் கொடுக்க வேண்டாம். இதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறேன். இரவு நேரத்தில் தொந்தரவு கொடுத்ததற்கு மன்னியுங்கள்” என்று கூறி விட்டு அந்த நபர் காரில் ஏறிக் கொண்டு போய் விட்டார்.

பார்த்தசாரதிக்கு தூக்கக் கலக்கம். இலவசமாகக் கொடுத்து விட்டுப் போகும் அந்தச்சிலை சாதாரணமாகத்தானே இருக்கப் போகிறது என்ற அசிரத்தை வேறு. வக்கோலைப் பிரித்துப் பார்க்காமலேயே படுக்கையறைக்குச் சென்று விடுகிறார்.

மறுநாள் காலையில் அதைப் பிரித்துப் பார்த்த போது, அழகிய அம்மன் விக்ரகம் ஒன்று இருப்பதைக் கண்டார் பார்த்தசாரதி. அந்தச் சிலையின் கலையழகில் அப்படியே சொக்கிப் போனார்.

நண்பர் துரைசாமி ஐயரின் கருத்திற்கிணங்க, தோட்டத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் அம்மனை வைத்துப் பூஜிப்பது என்று முடிவு செய்து பார்த்தசாரதி, காலங்கடத்த விரும்ப வில்லை.

தீபாவளி புண்ணிய நாளன்று, தேவியின் அருளால் அஞ்ஞான இருள் நீங்கி  ஆன்ம ஒளி பளிச்சிடும் அந்தப் பொன்னாளில், மகாலக்ஷ்மி அஷ்டோத்தரத்துடனும், நைவேத்திய கற்பூராரத்தியுடனும், அம்பிகை மகிழ் மரத்தடியில் திருக்கோயில் கொண்டாள்.

அந்த அம்மனை மகாலட்சுமியாகவே கருதி, வெள்ளிக்கிழமை தோறும் சிரத்தையுடன் பூஜை செய்து வந்தார் பார்த்தசாரதி. அன்ட்கு வரும் கூட்டம் நாள்டைவில் பெருகியது. மகாலட்சுமி அஷ்டோத்திரத்துடன், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது. பூஜையிலெயே நம்பிக்கையற்றிருந்த பார்த்தசாரதியை பராசக்தி தனக்கு ஒரு பூஜாரியாக்கிக் கொண்டு லீலை புரிந்தாள்!

பார்த்தசாரதியின் இல்லத்திற்கு வரும்போதெல்லாம் ஸ்ரீ வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள், அந்த அம்மன் சிலையின் அழகைப் பார்த்து வியப்பது வழக்கம். “வைஷ்ணவி ரொம்ப அழகாயிருக்கிறாள்” என்று கூறுவார். அவர் ப்படிக் கூறுவதைக் கேட்டுப் பார்த்தசாரதி ஆச்சரியப்படுவார்.

“மகாலட்சுமி” என்று அவர் நினைத்து பூஜை செய்து கொண்டிருந்த விக்ரகத்தை, “வைஷ்ணவி” என்று சுவாமிகள் அழைக்கும் காரணத்தை பார்த்தசாரதி அறிய விரும்பினார். சுவாமிகளிடம் ஒரு நாள் கேட்கவும் செய்தார்.

அதாற்கு சுவாமிகள், “என் வடநாட்டு யாத்திரையின் போது நான் காஷ்மீர் சென்றிருந்தேன். அங்கு ஜம்முவுக்கு முப்பது மைல் தொலைவில் இருக்கும் ஒரு மலைக் குகையில் வைஷ்ணவியைத் தரிசித்தேன். இந்த விக்ரகம் அத்தேவியைப் போலவே இருப்பதால் இதை வைஷ்ணவி என்று அழைத்தேன்” எனக் கூறினார்.

சுவாமிகள் சொல்லி விட்டார். அது போதும் பார்த்தசாரதிக்கு. அன்றுமுதல் அன்னையை வைஷ்ணவி தேவியாகவே பூஜித்து வந்தார்.ஒரு வருடம் கழித்து ஒரு நாள் சுவாமிகள், பார்த்தசாரதியைப் பார்த்து, “நீ பூஜிக்கும் வைஷ்ணவி தேவி என்னை மிகவும் வசீகரித்து விட்டாள்.  என் இஷ்ட தேவதையாகவும் வள்ளியாகவும் நான் கருதும் பொங்கித் தாயை இவளோடு ஐக்கியப்படுத்திவிட வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே, வைஷ்ணவியின் பூஜையை நியமத்துடன் நீ விடாமல் செய்து வர வேண்டும்” என்று சுவாமிகள் கூறிய போது, பார்த்தசாரதிக்கு வியப்பும், ஒரு வித அச்சமும் ஏற்பட்டது. “சுவாமி, நான் செய்யும் பூஜையைத்தான் தாங்கள் பார்த்திருக்கிறீர்களே, இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். அதற்கு சுவாமிகள் “இதற்கு மேல் கோடையில் கொஞ்சம் தயிர் சாதம் நைவேத்தியம் செய்து விடு போதும்” என்று பதில் கூறினார். “தொழிலிலும் வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கும் தம்மிடம் இத்தனை பெரிய பொறுப்பை ஒப்படைக்கிறாரே, தம்மால் முடியுமா?” என்று பார்த்தசாரதி ஒரு கணம் கவலையோடு சிந்தித்தார்.