சுவாமிகள் சென்ற பிறகு, பார்த்தசாரதிக்குப் பழைய நினைவுகள் வந்தன. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் 1930-ம் ஆண்டிலேயே நண்பர்களோடு வள்ளிமலை திருப்புகழ் ஆசிரமத்திற்குச் சென்று, சுவாமிகளைத் தரிசித்திருக்கிறார். பின்னர், நேரம் கிடைத்த போதெல்லாம் பிறருடன் ஏதோ வேடிக்கையாகச் சென்றாரே தவிர, பக்தியால் மெய்சிலித்தோ, மெய்மறந்தோ அவரெதிரில் நின்றதில்லை. அவரிடம் கை கட்டி வாய் பொத்தி, தன் குறைகளைக் கூறி உபதேசம் கேட்டதுமில்லை. “ஏதோ ஒரு பெரியவர்” என்ற மரியாதை மட்டும் இருந்தது அவ்வளவுதான்.
திருப்புகழ் ஆசிரமத்திற்கு வந்த பார்த்தசாரதியிடம் ஒரு நாள் வள்ளிமலை சுவாமிகள், “நீ குருவைத் தேடி அலைய வேண்டாம், குருவெ உன்னைத் தேடிக் கொண்டு வருவார்” என்று கூறினார். அன்று சென்னைக்குக் காரில் திரும்பி வரும் போது பார்த்தசாரதி, சுவாமிகள் கூறியதை அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொண்டார். “எதற்காக சுவாமிகள் அப்படிச் சொன்னார்? நாம் அவரிடம் ஒன்றுமே கேட்கவில்லையே. நான் எந்த குருவையும் நாடி அலையவில்லையே. உபதேசம் பெறவேண்டும் என்ற எண்ணமும் என் மனத்தில் இல்லையெ. எனக்குத்தான் சொன்னாரா? இல்லை…. வேறு யாருக்காவது சொன்னாரா? குருவாவது சீடராவது? நல்ல வேடிக்கை!….” சென்னை வரும் வரை சிந்தனை தொடர்ந்தது.
“குருவே உன்னைத் தேடிக் கொண்டு வருவார்” என்று பல ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளிமலை சுவாமிகள் சொன்னது, ஒரு நாள் பலித்தே விட்டது. மலையை விட்டு இறங்கி வந்த சுவாமிகள் சென்னைக்கு வந்தார். பார்த்தசாரதியின் இல்லத்திற்குச் சென்றார். மகிழ மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த பராசக்தியை வைஷ்ணவியாகக் கண்டார். வள்ளையம்மையையும், விநாயகரையும், முருகனையும், திருமாலையும், பரமசிவனையும் எல்லா தெய்வங்களையும், சகல தேவதைகளையும் ஆதி பாராசக்தியின் உருவில் அவர் தரிசித்திருக்க வேண்டும். திருப்புகழ் மாமந்திரத்தால் தாம் பெற்ற தவ சக்தியை, அந்த விக்ரஹத்தில் ஆவாகனம் செய்ய நினைத்தார்.
அந்த நோக்கத்துடன் 1950-ம் ஆண்டு போகிப் ப்ண்டிகையன்று சுவாமிகள் வைஷ்ணவி தேவிக்குப் பூஜை செய்தார்.
அன்று சில பெண்மணிகளோடு ஒரு குறத்திப் பெண்ணையும் அழைத்து வந்திருந்தார் சுவாமிகள். திருப்புகழ் பாட்லகளை உணர்ச்சி ததும்பப் பாடினார். அவர் குரல் தழுதழுத்துப் கண்கள் பனித்தன. சுற்றியிருந்தவர்களின் கண்களும் குளமாயின. பார்த்தசாரதியும் கண் கலங்கினார். அவருக்குத் திருப்புகழ் தெரியாது. அர்த்தமும் புரியவில்லை. இருந்தும் ஏனோ நெக்குருகிப் போனார். உள்ளம் கரைந்து விட்டதைப் போல் உணர்ந்தார்.
திருப்புகழ் பாடிக் கொண்டே, சுவாமிகள் மூன்று முரை வலம் வந்தார். பின்னர் தாம் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த சிவப்புப் புடவையை எடுத்து அந்த குறத்திப் பெண்ணுக்குக் கொடுத்தார். பூஜை முடிந்து விட்டது. ஆவாகனம் ஆகி விட்டது.
தமது நாற்பதாவது வயதில் தந்தையிடமிருந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் பார்த்தசாரதி. பணமிருந்தென்ன? மனைவி தீராத நோய்க்கு ஆளாகியிருக்கும் போது கணவனுக்கு வீட்டில் நிம்மதியிருக்குமா? அவளும் இரண்டாண்டுகளில் ஐந்து குழந்தைகளையும், கணவனையும் தனியே தவிக்க விட்டு விட்டு மீளாத்துயில் கொண்டு விட்டாள். வாழ்க்கையே சூனியமாகிவிட்டது பார்த்தசாரதிக்கு.
இந்தத் துயரத்தை அடுத்து, அவர் மானேஜிங் டைரக்டராக இருந்த ப்ருத்வி இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்ததால் சில ஓழியர்கள் உயிரிழந்தனர். இந்தப் பேரிடி அவர் உள்லத்தைச் சுக்கு நூறாக்கியது. வெளிக்கு சுக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவரின் உள்ளம் அழுது கொண்டிருந்தது!
இந்த நிலையிலிருந்தவருக்கு மன ஆறுதல் தரத்தானோ என்னவோ, எங்கேயோ இருந்த அம்பிகை அவர் வீடு தேடி வந்தாள். அவளைப் பக்தியுடன் ஆராதிப்பதில் பெரும் அமைதி கண்டார் பார்த்தசாரதி.
குருவாக வந்து, கருணையைப் பொழிந்து, பொன் மொழிகளால் அவரை ஆன்மீக நெறிக்கு அறிமுகப்படுத்திய வள்ளிமலை சுவாமிகள் 1950-ம் வருடம் நவம்பர் மாதம் மகாசமாதி அடைந்து விட்டார்.
அடுத்து, இளம் பிராயத்திலிருந்தே உடல் நலம் குன்றியிருந்த தன்னை, அன்போடும், ஆதரவோடும் வளர்த்து ஆளாக்கிய, அன்னையும் மறைந்து விட்டாள்.
அதையடுத்து தம் இருபது வயது மகனைத் திடீரென்று பறி கொடுத்தார் அவர். வீட்டில் ரேடியோ ரிப்பேர் செய்து கொண்டிருந்தவன், மின்சார அதிர்ச்சியால் தாக்கப்பட்டு அகால மரணமடைந்தான். சாதாரண துக்கமா இது? ஒரு மனிதனால் எத்தனைதான் தாங்க முடியும்? இல்லறத்தைப் பற்றிக் கொண்டு எப்படியாவது வாழ்ந்து விடலாம் என்று நினைத்தவரை விதி அடுத்தடுத்து துன்புறுத்தினால் என்ன செய்வது? அப்போது வைஷ்ணவி தேவியின் பாதத்தைத் தவிர பார்த்தசாரதிக்கு வேறு புகலிடமில்லை. அவளைத் தூக்கிக் கொண்டு சென்னைக்கு மேற்கேயுள்ள திருமுல்லைவாயிலுக்கு ஓடினார். அங்கு, அவர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெரிய பண்ணையில் தீபாவளி தினத்தன்று தேவியைப் பிரதிஷ்டை செய்து, அவளது திருவடித் தொண்டிற்கெ தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்.
சீர்காழிக்கு மேற்கே ஒன்பதாவது மைலில் தென் திருமுல்லைவாயில் என்ற ஒரு சிவத்தலம் இருக்கிறது. அது திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்று சிறப்படைந்தது.
சென்னைக்கு மேற்கே பன்னிரண்டாவது மைலில் உள்ள சிவத்தலம் திருமுல்லைவாயில் என்று அழைக்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர், இராமலிங்க சுவாமிகள் முதலியவர்கள் இத்தலத்தைக் குறித்துப் பாடியிருக்கிறார்கள்.
அம்பத்தூருக்கும், ஆவடிக்கும் இடையில் இருக்கும் வட திருமுல்லைவாயில், நில வளமும், நீர் வளமும் நிறைந்து, அழகும், அமைதியும் சூஃஜ்ந்த மேட்டுப்பாங்கான சிற்றூர். “முருகு அமர் சோளை சூழ் திருமுல்லை” என்று சுந்தரர் அதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
சுந்தரரின் திருப்புகழாலும், அருணகிரிநாதரின் திருப்புகழாலும் சிறப்புற்ற திருமுல்லைவாயிலில், திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளின் அருட்கரத்தால் பூஜிக்கப்பட்ட வைஷ்ணவி தேவி திருக்கோயில் கொண்டது மிகப் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. அது மட்டுமின்றி “அம்பாபுரி” என்று அழைக்கப்படும் சக்தி பீடத்தில், அன்னை பராசக்தி அருளாட்சி புரிவதோடு, அத்தலத்தை திருப்புகழ் பரப்பும் திருப்பீடமாகவும் அமைத்துக் கொண்டது அவளது திருவருளின் தனி மகிமை என்பதில் சந்தேகமில்லை.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், கல்லும் முள்ளும் மண்டிக் கிடந்த பூமியில் எளிமைக் கோலத்தில், சிறு குடில் ஒன்றில் குடி புகுந்த வைஷ்ணவி தேவி, இன்று இயற்கை எழில் கொழிக்கும் சுந்தரச் சூழ்நிலையில் திகழும் சிங்கார ஆலயத்தில் சௌந்தர்ய தேவதையாகக் கொலுவீற்றிருக்கிறாள்.
எழிலோடும், எடுப்போடும் அமைந்திருக்கும் தோரண வாயில், அன்னையின் ஆலயத்தைக் காண “வா வா” என்று அழைக்கிறது. இருபுறமும் மரங்களடர்ந்த சோலைகளுக்கிடையே செல்லும் பாதையில் நட்ககும் போது, நெடிதுயர்ந்த தென்னை மரங்களின் ஓலைகள் சலசலக்க, மலர் வகைகளின் லேசான நறுமணம் காற்றில் மிதக்க, தேன் தேடி அலையும் வண்டினங்களின் ரீங்காரத்தைப் பின்னணியாகக் கொண்டு பறவியினங்கள் இனிய குரல் எழுப்ப, இயற்கையன்னை அந்த தெய்வ அரங்கத்தில் நடனம் பயிலுவதைக் கண்டு களிக்கலாம்.
வைஷ்ணவி ஆலயம், ஆசிரம சூழ்நிலையில் அமைந்திருக்கிறது. அங்கு அழகான, சிறிய குடில்கள் நிறைய கட்டி வைத்திருக்கிறார்கள். ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களும், சாதுக்களும் அங்கு வசிக்கிறார்கள். வெளியூரிலிருந்து குடும்பத்தோடு சில தினங்கள் வந்து தங்கி, தேவியைத் தரிசித்து, அமைதியும், ஆனந்தமும் பெற்றுச் செல்வதர்கும் வசதிகள் செய்து தந்திருக்கிறார்கள். இந்த ஆசிரமத்திற்கு வருபவர்கள், சம்சார பந்தத்திலிருந்து சில நாட்களாவதுவிடுதலை பெற்று இங்கு வந்து தங்க வேண்டும் என்று நிச்சயம் எண்னுவார்கள்.
ஸ்ரீ வைஷ்ணவி தேவியின் மூலஸ்தானம் வழக்கமாக எல்லோரும் பார்க்கும் கருவறையைப் போல் இருக்கவில்லை. சலவைக் கற்களால் ஆன அந்த அறையில், இருளையோ, எண்ணெய் பிசுக்கையோ, ஒரு சொட்டுத் தண்ணீரையோ பார்க்க முடியாது. இதரக் கோயில்களில் கருவறையில் நாம் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கோ, சாதி, மத வேறுபாடின்றி, எல்லோரும் தாராளமாகப் போகலாம்.
கருவறையில், பின்புறச் சுவரை அலங்கரிக்கும் ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ ரமண பகவான், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் ஆகிய நால்வரின் புகைப்படங்கள், வைஷ்ணவி ஆலயத்ஹ்திற்கும், அருணாசலத்திற்கும் உள்ள தொடர்புக்கும் சான்று கூறுகின்றன.
இடப்புறமாக உள்ள மாடத்தில் கொள்ளை அழகுடன் ஒரு சிறு ஸ்படிக விநாயகர் அமர்ந்திருக்கிறார்.
மண்டபத்திற்கு வெளியே அன்னையை நோக்கியபடி வியாச விநாயர் வீற்றிருக்கிறார்.
இந்த விநாயகரைப் பார்த்தால் கருங்கல்லாலான சிலை என்றே நினைக்கத் தோன்றும். உண்மையில் இது, மண்ணால் செய்த, சூளையில் சுடப்பட்ட்ட சிலை. அந்த உருவமே புதுமையாக இருக்கிறது. அவருக்குத் தும்பிக்கையைச் சேர்த்து மூன்று கரங்கள்தான் இருக்கின்றன. அந்தத் தும்பிக்கையோ வளைந்திராமல், நேராகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
வியாச விநாயகருக்கு வெள்ளிக் கிழமை தோறும், ஒரு தேங்காய் உடைத்தால் எல்லா நன்மைகளும் ஏற்படும் என்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
காலிகொம்பன், பலியோர் தேங்காய், கவியோர் நாளில் சுகம் பார், ஓம்”
ஓரு நாள் பார்த்தசாரதிக்கு சித்தி விநாயகர் காளியாகக் காட்சி தருகிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து, கொடைக்கானலிலிருந்து “காளிக் கொம்பன்” என்ற பெயரில் ஒரு விநாயர் வந்து, வியாச விநாயகராகப் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். விளக்கம் கூற முடியாத எத்தனையோ விந்தைகளில் இதுவும் ஒன்று.