வள்ளிமலை – 14

இந்த ஆலயத்தினுள் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோன்றியதற்கும் ஒரு சுவையான வரலாறு உண்டு.

ஒருநாள் விடியற்காலை நான்கு மணிக்கு, வைஷ்ணவியின் சந்நிதியில் பார்த்தசாரதி தியானத்தில் அமர்ந்திருக்கிறார். பபோது அவருக்கு உண்மை நிகழ்ச்சியோ, கனவுக் காட்சியோ என்று அறுதியிட்டுக் கூற முடியாத ஒரு தோற்றம் தரிசனம் ஆகிறது.

மலையாளியைப் போன்ற ஒரு குட்டையான ஆசாமி அவரிடம் வந்து, “சுவாமி, ஸ்ரீ ரமண மகரிஷியின் படத்திற்கு முன்னால் ஒரு நாகப்பாம்பு வந்து பட்ம எடுத்து ஆடுகிறது. அருகே போனால் மறைந்து விடுகிறது. இது இரண்டு, மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. உங்களை வந்துப் பார்க்கச் சொன்னார்” என்றார்.

“என்னை வந்து பார்க்கச் சொன்னது யார்?” என்று கேட்கிறார் பார்த்தசாரதி.

“திருஞானம் உங்களிடம் சொல்லச் சொன்னார்” எங்கிறார் முன்பின் தெரியாத அந்த ஆசாமி.

அத்துடன் தோற்றம் மறைந்து விடுகிறது. இதைப் பற்றி காலையில் ஆசிரமத்திலிருக்கும் ஒரு சாதுவிடம் சொல்லுகிறார் பார்த்தசாரதி. அப்போது அவர் நண்பர் “அருணாசல மாகாத்மியம்” படித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தோற்றத்தின் பொருள் அவருக்கும் புரியவில்லை.

பின்னர் பார்த்தசாரதி, தமிழ்ப் பேரறிஞர் வ. சு. செங்கல்வராயப் பிள்ளையிடம் அதைப் பற்றிக் கேட்டார். “திருஞானம்” என்ற பெயர் ஞானாசிரியரான தட்சிணாமூர்த்தியையே குறிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அந்த விளக்கத்திற்குப் பிறகும் தமது தரிசனத்தின் முழுப்பொருளை அவரால் அறியமுடியவில்லை.

இது நடந்து சில நாட்கள் கழித்து, பார்த்தசாரதியின் மகன் பாஷ்யம், ஏதோ ஒரு விஷயமாகத் தந்தையைக் காண வந்தார். பேச்சினிடையே தம்மிடமிருந்த தட்சிணாமூர்த்தி சிலையைப் பற்றி தந்தையிடம் குறிப்பிட்டார். சில வருடங்களுக்கு முன்பு பார்த்தசாரதி தமது மகனுக்குக் கொடுத்திருந்த சிலை அது. அதைப் பற்றி அவர் மறந்து கூடப் போய் விட்டார். தற்போது மகன் நினைவுபடுத்தியதும், “உனக்கு அது வேண்டாமென்றால், எனக்கே திருப்பில் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார் பார்த்தசாரதி.

மகனோ, “அது பூஜைக்குரியதல்ல. கால் விரல் ஒன்று உடைந்து விட்டிருக்கிறது” என்று கூறினார்.

“பரவாயில்லை, கொடு” என்று கேட்டு அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார் பார்த்தசாரதி.

வைஷ்ணவி கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு ஒரு சந்நிதி அமைக்க வேண்டும் என்று கருதியவர், ஒரு சிற்பியை அழைத்து, மூளியாக இருக்கும் அந்த விரலைப் பழுது பார்த்துத் தர்ரும்படி கொடுத்தார். இரண்டு நாட்களுக்கெல்லாம் ஆச்சரியம் கலந்த ஆனந்தத்துடன் சிலையோடு திரும்பி வந்தார் சிற்பி.

“சாமி, உடைந்த பாகத்தை நான் சரி செய்வதற்காக உளியால் நான் லேசாகத் தட்டினேங்க. மாயமோ, மந்திரமோ தெரியலைங்க. அந்த விரல் தானாகவே வளர்ந்துட்ட மாதிரி ஒழுங்காயிருக்குங்க” என்று கண்கள் பனிக்கக் கூறினார்.

எப்போதோ வாங்கப்பட்டு மகனிடம் கொடுக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி சிலை, எப்படியோ அவரிடமே திரும்ப வந்து, தெய்வாதீனமாக மூளியைப் போக்கிக் கொண்டு 1959-ம் ஆண்டு சிவராத்திரியன்று வைஷ்ணவி கோயில் அமர்ந்து விட்டது.

இருண்ட தம் வாழ்வுக்கு அருணாசல ஜோதியாக ஒளி வழங்கி, ஆன்மீகப் பாதையில் நல்வழி காட்டியருளிய ரமணராகவே நினைத்து, இறுதிவரை அந்த தட்சிணாமூர்த்தியைத் தொழுது வந்தார் சாது பார்த்தசாரதி.

வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் தேவியின் சந்தனக் காப்பையும், கிரீடம், கர்ணபத்ரம், ஒட்டியாணம், தங்கக் கவசம் முதலிய அலங்காரங்களையும் காணக் கண்கோடி வேண்டும். இதரப் பண்ட்கிய தினங்களிலும் விசேஷ அலங்காரங்கள் கண்ணைக் கவரும்படி அமைந்து இருக்கும்

நவராத்திரி திருவிழாவின் போது வைஷ்ணவி ஆலயத்தில் பெருங்கூட்டம் கூடுகிறது. அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஓர் அலங்காரம் ஒன்றை ஒன்று மிஞ்சும்படி அழகு கொஞ்சி விளையாடும். அத்திருச்சந்நிதியை விட்டு அகலவே மனமின்றிச் சொக்கிப் போய் தன்னை மறந்து அப்படியே நின்றிருக்கும் பக்தர்களைத் தரிசிப்பதே பெரும் புண்ணியம் என்று சொல்ல வேண்டும்.

எஸ். பார்த்தசாரதி, சாது பார்த்தசாரதி ஆனதைப் பற்றி அவரைக் கேட்ட போது, “யாரிடமாவது முறையாக சந்நியாசம் பெற்றுக் கொண்டாரா” என்று கேட்கும் போது “அதெல்லாம் இல்லை. எல்லாம் தேவி கொடுத்ததுதான். குடும்ப வாழ்க்கையை விட்டு தேவியின் தொண்டில் ஈடுபட்ட பிறகும் வெள்ளாடைதான் உடுத்தியிருந்தேன். ஒரு நாள் நண்பர் ஒருவர் கொடுத்த பழுப்பு கலர் ஆந்திரக் கதர் வேட்டிஉயை உடுத்தியிருந்தேன். அப்போது என்னைப் பார்க்க வந்திருந்த என் பழைய நண்பர்கள், நான் சந்நியாசம் மேற்கொண்டு விட்டேனோ என்று எண்ணி, சற்று நகர்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். என்னுடன் பேசும் போது அதிகமாக அரட்டை அடிக்காமல், அநாவசிய வம்புகள் பெசாமல், அளவோடு ஜாக்கிரதையாகப் பேசினார்கள். எனவே காவித்துணி எனக்குத் தேவையான தனிமையையும், தியாத்திற்கேற்ற மன நிலையையும் தேடித் தரும் என்ரு எனக்குத் தோன்றியது. அன்று முதல் காவியணியத் தொடங்கினேன்” என்று அவருக்கே உரிய புன்முறுவலுடன் கூறினார் சாது பார்த்தசாரதி.

திருமயிலையில் எஸ். பார்த்தசாரதி இல்லத்தில் ஒரு மகிழ் மரத்தடியில் வீற்றிருந்த லட்சுமி தேவியின் விக்ரகத்தைப் பார்த்து ஸ்ரீ வள்ளிமலைத் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் “வைஷ்ணவி மிக அழகாக இருக்கிறாளெ” என்று வியந்தார். அவர் அடிக்கடி அப்படிக் கூறியதைக் கேட்ட பார்த்தசாரதி, “ஏன் இந்த விக்ரகத்தைப் பார்த்து வைஷ்ணவி என்று கூறுகிறீர்கள் சுவாமி?” என்று விளக்கம் கேட்ட போது, “நான் காஷ்மீரில் பார்த்த வைஷ்ணவியைப் போலவே இந்தத் தேவி இருக்கிறாள்” என்று விடையளித்தார் சுவாமிகள்.

ஆனால் காஷ்மீரத்திலுள்ள திரிகூட மலையில் உறையும் வைஷ்ணவி தேவியோ அருவமாக, லிங்க வடிவில் காட்சி தருகிறாள். அவ்வாறு இருக்கும் போது, வள்ளிமலை சுவாமிகள் தேவியின் உருவத்தைப் பார்த்ததாகக் கூறியதன் பொருள் என்ன?

நம்மைப் போன்ற சாதாரண மக்களின் கண்களுக்குப் புலப்படாத காட்சிகளை யோக சித்தர்கள் காண்பார்கள். அருவமாக அமர்ந்திருக்கும் அம்பிகையின் அருளை மட்டுமெ நாம் உணரலாம். மகான்கள் அம்பிகையையெ தரிசிப்பார்கள். அன்னையின் புன்சிரிப்பைக் கண்டு மகிழ்வார்கள். அவளுடன் பேசவும் செய்வார்கள்.

ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் அன்னை வைஷ்ணவியை குமரிப் பெண்ணாகத் திரிகூட மலைக் காடுகளில் கண்டுகளித்திருக்க வேண்டும். ஆலயக் குகையில் அவளை மெய்தவத்தில் ஆழ்ந்திருக்கும் யோகீசுவரியாக நேருக்கு நேர் தரிசித்திருக்க வேண்டும். அந்த அற்புத வடிவங்களைத் திருமயிலையில் பார்த்தசாரதி வணங்கிய உருவச் சிலையிலும் கண்டிருக்க வேண்டும். அந்த சக்திக்கு “வைஷ்ணவி” என்ற திருநாமம் சூட்டியிருக்க வேண்டும்.

வள்ளிமலைக்கும், திரிகூடமலைக்கும் இடையேயும் சில பொருத்தங்களைப் பார்க்கிறோம். வள்ளிமலையைப் போலவே, திரிகூட மலையிலும் புனிதமும் அருளும் சூழ்ந்த குகையொன்று இருக்கிறது. வள்ளிமலையில் பல யோக சித்தர்கல் தவமியற்றியிருக்கிறார்கள். சச்சிதானந்த சுவாமிகள் தம் திருக்கரங்களால் மண்ணைத் தோண்டி பெரிதாக்கி, காலமெல்லாம் திருப்புகழ் பாராயணம் செய்ததனால் மகிமை பெற்ற குகை இது.

திரிகூட மலையிலுள்ள குகையில் உலக மாந்தர் உய்ய அன்னை பராசக்தி நித்திய தவம் செய்து கொண்டிருக்கிறாள். தேவி தங்குவதற்காக, சிம்மராஜன், தன் நகங்களால் பாறைகளைப் பிறாண்டி, குடைந்து உருவாக்கிய குகை அது என்று கூறப்படுகிறது. சிம்மம் குகையைப் பிறாண்டிய அடையாளங்களை இன்றும் அங்கே காண முடிகிறதாம்!