வள்ளிமலையைப் போலவே திரிகூட மலையிலும் சக்திதேவி அருளாட்சி புரிகிறாள். இங்கு “பொங்கி” வனதேவதையாக நடமாடிக் கொண்டிருக்கிறாள். அங்கு “வைஷ்ணவி” வன தேவதையாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
திருகூடமலையிலெ ழுந்தருளியிருக்கும் வைஷ்ணவி, அம்பாபுரி என்னும் அம்பத்தூருக்கருகில் உள்ள வட திருமுல்லைவாயிலில் ஓர் ஆலயம் அமைத்துக் கொண்டு விட்டாள். வள்ளிமலை வள்ளலால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவியாதலால், வல்ளிமலைக்கும், வைஷ்ணவி ஆலயத்திற்கும் ஒரு நீங்காத தொடர்பு இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும், போகிப் பண்டிகை அன்றும், தீபாவளியன்றும் குருபூஜை அன்றும், மற்றும் விசேஷ தினங்களிலும், தேவியின் அபிஷேகத்திற்காக வல்ளிமலையிலுள்ள குமரி தீர்த்தத்திலிருந்து புனித நீர் கொண்டு வரப்படுகிறது.
திருவருணைத் தலத்தில் தோன்றிய அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழைப் பாரெல்லாம் பரப்பினார் சச்சிதானந்த சுவாமிகள். ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் சீடராக வள்ளிமலைக்குச் சென்று, அங்கிருந்து திருமயிலை வந்து வைஷ்ணவியைக் கண்டு அவளுக்கோர் ஆலயம் அமைத்தார். இந்த வரலாற்று நிகழ்ச்சிகளிலும் ஓர் அதிசயமான ஒற்றுமை இருப்பதைக் காண்கிறோம்.
திருவருணை அண்ணாமலையார் ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம். திருமயிலையில் வைஷ்னவி தேவி எட்டாண்டுகள் எழுந்தருளியிருந்தது மகிழ மரத்தடியில். திருமுல்லைவாயில் வைஷ்ணவி ஆலயத்தின் தலவிருட்சமும் மகிழ மரமே!
ஊரையாடிக் கொண்டிருக்கும் போது, இத்தகைய பல அதிசய ஒற்றுமைகளைச் சுட்டி காட்டினார் சாது பார்த்தசாரதி. தேவியின் கடாட்சத்தால் அந்தப் பகுதி வனப்பு மிகு சோலையாக மாறியுள்ல அதிசயத்தையும் விவரித்தார்.
வைஷ்னவி ஆலய ஆசிரமத்தில் ஒரு இளம் துறவி வந்து கொண்டிருந்தார். அவருக்கு அப்போது முப்பத்தைந்து வயதிருக்கலாம். அவருக்கு அப்போது சேதுராமன் என்பது திருநாமம். எல்.ஐ.சி.யில் பனிபுரிந்து கொண்டிருந்தார். சாந்தம் தவழும் முகம், பண்புடன் பழகும் குணம், தேவார்ம, திருப்புகழ் பாக்களை அவர் பக்தியுடன் பாடுவது வழக்கம்.
அவர் ஒரு அருட்கவி. உள்ளே பொங்கி அருள் கவிதை வெள்ளமாகப் பாய்ந்தது. எல்லா தெய்வங்களும் அவர் மூலம் தங்கள் புகழ் பாடிக் கொண்டனர். எண்ணற்ற ஆலயங்களுக்குச் சென்று, பல சந்நிதிகளில் நின்று, அவர் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார். எங்கும் அவரை நிழலாகத் தொடர்ந்து சென்ற அவரது பூர்வாசிரம தமையன் சுப்ரமணியன், அருள் வடித்துத் தந்த அந்த வரிகளை உடனுக்குடன் எழுதிக் கொள்வார். பின்னர் அவர் அருட்கவிகளாக அச்சேறும்.
சொல்லாகவும், பொருளாகவும் இருக்கும் பராசக்தி, அவர் வாக்கில் புகுந்து, பக்திப் பெருக்கின் வற்றாத பாமாலைகளாக வடிவெடுக்கும் அற்புதத்தை அந்த கால கட்டங்களில் மக்கள் கண்டிருக்கிறார்கள். அவருடன் பல கோயில்களுக்கும் சென்று அருட்கவி பொழியும் அதிசயத்தை பெரும்பாலும் கண்டவர் அவரது நண்பராக இருந்த “டன்லப்” கிருஷ்ணன் என்பவர். சாது பார்த்தசாரதியும் அவரை பற்றி பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
சேதுராமன் “சாதுராம்” ஆன வரலாற்றைக் கேட்க வியப்பாக இருக்கும். நாயன்மார்களும், ஆழ்வார்களும், அருணகிரிநாதரும், தாயுமானவரும், பட்டினத்தடிகளும், ராமலிங்க சுவாமிகளும் தோன்றிய மண்ணில் தெய்வ ஒளி மங்காது என்றும், பக்தி வெள்ளம் வற்றாது என்றும் எடுத்துக் காட்ட,இறைபுகழ் பாடும் மெய்யன்பர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.
1942-ம் ஆண்டில் சென்னை லிங்கிச் செட்டித் தெருவில், தணிகைமணி வ.சு. செங்கல்வராயப் பிள்ளையவர்களின் வீட்டில் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் தங்கியிருந்தார்கள். அச்சமயத்தில் அவரை நாடி வந்த குடும்பங்களில் திரு எஸ். வி. சேதுராமனின் குடும்பமும் ஒன்று.
சேதுராமனின் தாயார் தர்மாம்பாள், சுவாமிகளிடம் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். தன் பெண் பர்வத வர்த்தனியையும், மூத்த மகன் சுப்ரமணியனையும் திருப்புகழ் கற்றுக் கொள்ள சுவாமிகளிடம் அனுப்பி வைத்தார்.
சேதுராமன், தர்மாம்பாளின் இரண்டாவது மகன். ஏழு வயதில் அச்சிறுவன் முதன் முறையாகப் பழநியில் சுவாமிகளைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றான். 1944-ம் ஆண்டு பழநியில் நடைபெர்ற திருப்புகழ் மாநாட்டிற்கு உறவினருடன் சென்றிருந்தான் சேது. அச்சமயம் எல்லோரையும் பழநியாண்டவரைத் தரிசித்து வரும்படி மலைக்கு அனுப்பி விட்டு, சேதுவை மட்டும் தம்முடன் இருக்கும்படி கூறினார் சுவாமிகள்.
எல்லோருடனும் பழநியாண்டவரைத் தரிசிக்கச் செல்லவில்லையே என்ற குறை சேதுவுக்கு. அதனால் அழுது கொண்டிருந்த சிறுவனை அன்புடன் அரவணைத்து, அருகில் அமர்த்திக் கொண்டார் சுவாமிகள். “உம்பர் தருது….” எனத் தொடங்கும் விநாயகர் திருப்புகழையும், “மதியாம் வித்”தெனத் தொடங்கும் கருவூர்த் திருப்புகழையும் ராக தாளங்களூடன் பதம் பதமாகப் பிரித்து அப்போது அவனுக்கு சொல்லி வைத்தார். அதுவே சுவாமிகள் அவனுக்கு அளித்த உபதேச தீட்சையாகும்.
பின்னர் ஒரு சமயம், சேதுராமனுக்கு, சுவாமிகளுடைய ஹஸ்த தீட்சையும் கிடைத்தது. சுவாமிகளுக்கு வயதாகி விட்டதால், அவருக்கு சரியாகக் காது கேட்காது என்று நினைத்து, சேது, ஒரு சமய அவர் காதருகில் சென்று உரத்த குரலில் “தாத்தா” என்று கத்தி விட்டான்.
அவருக்குக் கோபம் வந்து விட்டது. “என்னைச் செவிடு என்று நினைத்தாயா என்ன?” என்று கேட்டு நறுக்கென்று அவன் தலையில் குட்டி விட்டார். வலிதாங்க முடியாமல் சிறுவன் அழுது விட்டான். ஆனால், புனிதக் கர்ம தீண்டியதால் அவன் புண்ணியம் பெற்றான்.
1950-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஸ்கந்த சஷ்டி ஆறு நாட்களிலும், வள்ளிமலை சுவாமிகள், தம்புச் செட்டித் தெருவில் சீனுவாச முதலியார் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, “வள்ளி கல்யாணம்” கதை செய்தார். அப்போது சிறுவன் சேதுராமனும் உடனிருந்து பாடினான்.
இறுதி நாளன்று சுவாமிகள் மிக உருக்கமாகப் பாடினார். பக்திப் பரவசத்தில் லயித்துப் போய், சமாதியில் ஆழ்ந்து விட்டார். பின்னர் அவருக்கு நினைவு திரும்பவேயில்லை. இரண்டு மூண்று நாட்கள் வீட்டில் ஏதேதோ சிகிச்சைகள் செய்து விட்டு, பொது மருத்துவ மனையில் சேர்த்தார்கள். “தாத்தா”வைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று சேதுராமன் துடித்தான். அவனுக்குக் காய்ச்சலாக இருந்ததால் வீட்டில் எல்லோரும் அவனைத் தடுத்து விட்டார்கள்.
அன்று இரவு தூக்கத்தில் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தான் சேது. “என்ன நடந்தது” என்று கேட்டதற்கு, “டேய் சேது, எழுந்திரு….” என்று சுவாமிகள் என்னை எழுப்பினார். பயந்து கொண்டு விட்டேன்” என்றான் சேது. அவன் உடம்பெல்லாம் வியர்த்து விட்டிருந்தது.
மறுநாட் காலை சுவாமிகள் மகாசமாதி அடைந்தார். அன்று மாலை அவரது பூத உடலை வள்ளிமலைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு சிறுவன் சேதுராமன் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல், தாயோடும், சகோதரரோடும் மருத்துவமனைக்குச் சென்று, சுவாமிகளின் திருமேனியைத் தரிசித்து விட்டு வந்தான்.
வள்ளிமலை சுவாமிகள் மறைந்த பின்னர், சேதுராமனின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. அவனுக்குப் படிப்பில் கவனம் செல்லவில்லை. “டேய் சேது, எழுந்திரு” என கனவில் சுவாமிகள் அழைத்து, உறங்கிக் கொண்டிருந்த அவன் நல்லுணர்வுகளைத் தட்டி எழுப்பியிருக்க வேண்டும். ஆன்மீகத் துறையில் அவனால் ஆன பணி புரியவும், பக்தி நெறியைப் பரப்பும் ஆசுகவிதைகள் படைக்கவும் சேதுராமனுக்கு வள்ளிமலை சுவாமிகள் ஆசி வழங்கியதாகவே தோன்றுகிறது.
சுவாமிகள் சமாதியடைந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த சேது, கணக்குப் பரிட்சை எழுதப் பள்ளிக்குச் சென்றான். ஆனால், அன்று இரவு அவன் வீடு திரும்பவேயில்லை. வீட்டிலுள்ளோர் எங்கெங்கெல்லாமோ அவனைத் தேடினர். நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்ரு விசாரித்தனர். ஏதாவது விபத்தில் சிக்கியிருப்பானோ என்று அஞ்சி மருத்துவ மனைகளுக்கெல்லாம் சென்று பார்த்து விட்டு வந்தனர். மறுநாள் முழுவதும் தேடி அலைந்தனர். செது சென்றவிடம் ஒருவருக்கும் தெரியவில்லை.
ஏழு நாட்கள் கழித்து வீட்டுக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. சேதுராமந்தான் எழுதியிருந்தான். இடம் குறிப்பிடப்படவில்லை. அதில் “என்னை மறந்து விடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
சேதுராமனின் தாய்க்கு ஒரு சந்தேகம் எழுந்தது. திருத்தணிகை முருகன்தான் தன் பிள்ளையை அழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள். தன் மூத்த மகனை அழைத்துக் கொண்டு ஜனவரி முதல் தேதி திருத்தனி திருப்படி விழாவுக்குச் சென்று, சேதுவை, ஸ்லலடை போட்டுத் தேடிப் பார்த்தாள் தாய். மகனைக் கண்டுபிடிக்கவெ முடியவில்லை.
உண்மையில் சேது அன்று திருத்தNணிகையில்தான் தங்கியிருந்தான். தன்னை மொட்டை அடித்துக் கொண்டு, திருப்புகழ் அடியார்களுடன், கண்ணில் படாமல் அலைந்து கொண்டிருந்தவன், மறுநாள் ஓர் பணக்காரக் குடும்பத்துடன் காரில் திருப்பதிக்குச் சென்று விட்டான். வெங்கடாசலபதியின் தரிசனமும் அவனுக்குக் கிட்டியது. அங்கிருந்த காளஹஸ்தி வந்து ஐந்து நாட்கள் தங்கி, கோயம்புத்தூருக்குச் சென்று விட்டு, தஞ்சைக்கு வந்து சேர்ந்தான். அங்கு அவன் தங்கியிருந்த ஓட்டலின் சொந்தக்காரர் அவனைப் பற்றி விசாரிக்க சேது எதுவும் கூறாமல் மறைத்து விட்டான். பின்னர், அவ்ன கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் அவனுடைய கைப்பையைத் திறந்து பார்த்தார் ஓட்டல்காரர். அதில் இருந்த ஒரு புத்தகத்தில், “எஸ். வி. சேதுராமன், ஒன்பதாவது வகுப்பு, செயிண்ட் கேப்ரியேல் ஹைஸ்கூல்” என்று எழுதியிருப்பதைக் கண்டு அந்தப் பள்ளியின் தலைமையாசிரியருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டார். அக்கடிதத்தைத் தலைமையாசிரியர் சேதுவின் வீட்டாருக்குக் கொடுத்து அனுப்பினார். சேதுவின் மாமா அன்று இரவே தஞ்சைக்குப் பயணமாகி சேதுவை சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.