அரையாண்டுப் பரிட்சை எழுதாமல் வீட்டை விட்டு வந்து சென்ற சேது, ஆண்டுத் தேர்வில் எப்படியோ தேறி விட்டான். குருநாதரின் ஆசியாலேயே தேர்வில் வெற்றி பெற்றதாக எண்ணினால் சிறுவன் சேது.
1952-ம் ஆண்டில் சேதுராமன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வேண்டும். பரீட்சைக்குப் பணம் கட்ட வீட்டில் பதினைந்து ரூபாய் கொடுத்தார்கள். ஆனால், அவன் அதைக் கட்டவில்லை. ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி பதினான்கு ரூபாயைப் பெட்டியில் வைத்து விட்டான். ஒரு சீட்டில், “எனக்கு இந்த படிப்பு படிக்க இஷ்டமில்லை. இதற்காகப் பதினைந்து ரூபாய் செலவு செய்ய வேண்டாம் என்ரு எழுதி அத்துடன் பெட்டியில் வைத்து விட்டு, யாரிடமும் கூறாமல் காஞ்சீபுரத்திற்குச் சென்று விட்டான்.
பின்னர் அங்கிருந்து எங்கெல்லாமோ அலைந்து திரிந்து விட்டு, மகாபலிபுரத்தில் இருந்த ஒரு சத்திரத்தில் படுத்து உறங்கிய போத, வள்ளிமலை சுவாமிகள் கனவில் தோன்றினார்.
“சேது, நீ வீட்டை விட்டு வந்தது நன்மையும், தீமையும் கலந்தது. நடமாடும் தெய்வங்களான தாய் தந்தையரைத் துயரத்துக்குள்ளாக்கி விட்டுப் பிரிந்து வந்தது தவறு. நீ நாளைக்குத் திருப்போரூருக்குப் போ. ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் ஒரு கிழவரைக் காண்பாய். அவர் உனக்கு நல்வழி காட்டுவார்” என்று கூறி மறைந்தார்.
பொழுது விடிந்ததும் திருப்போரூருக்குப் புறப்பட்டுச் சென்றான் சேது. திருக்குளத்தில் நீராடி விட்டு, வெட்டியை துவைத்து, உலர்த்தி உடுத்திக் கொண்டு, திருநீறு பூசி ஆலய தரிசனத்திற்குச் சென்றான். கலியுக வரதனாம் முருகனை வழிபட்டான். ஏழைக்கிறங்கும் பெருமானின் பெருங்கருணையை நினைத்து, நெஞ்சம் நெகிழ்ந்து, கண்ணீர் உகுத்தா ந். கருவறையை வலம் வந்தான். அரைமணிக்கு மேல் சந்நிதியில் தங்கியிருந்தான். கனவில் வள்ளிமலை சுவாமிகள் கூறியது போல், அங்கு ஒரு கிழவரையும் காணவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினான்.
கோபுர வாசலை நெருங்கியிருப்பான் சேதுராமன். பின்னால் யாரோ நடந்து வரும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தான். என்ன ஆச்சரியம்!
குருநாதர் கூறியது போளவே அங்கு ஒரு கிழவர் தென்பட்டார். அவருக்கு எண்பது வயதிருக்கும். மெலிந்த உருவம். நல்ல உயரம். வெண்தாடி அவர் மார்பில் புரண்டது. நெற்றியில் துலங்கியது. வெண்மை நிறத்தில் ஒரு அங்கி அணிந்திருந்தார். அந்த உருவத்தைப் பார்த்ததும் மெய்மறந்து நின்று விட்டான் சேதுராமன். சிறுவனின் உடல் சற்று நடுங்கியது. அவனுக்கு பேச நா எழவில்லை.
கிழவர் அவனை அன்புடன் அருகில் அழைத்தார். அதரவோடு கையில் தடவிக் கொடுத்தார். “உன் பையை என்னிடம் கொடு” என்றார். பதில் பேசாமல் தன் கைப்பையை அவரிடம் கொடுத்தான் சேது. கிழவர் தன் கையில் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தை அந்தப் பையில் போட்டு விட்டு அதைச் சிறுவனிடமே திருப்பிக் கொடுத்தார்.
பின்னர் சேதுவை கோயிலுக்குள் அழைத்துச் சென்று அவன் பார்க்காத இடங்களையெல்லாம் சுற்றிக் காட்டினார். நன்றாக சுவாமி தரிசனம் செய்து வைத்தார். சிறுவனின் பேரானந்தத்தைக் கேட்க வேண்டுமா?
திருப்போரூரிலுள்ள உணவு விடுதியொன்றில் சேதுவுக்கு ஆகாரம் வாங்கிக் கொடுத்து விட்டு, அவனை திருக்கழுகுன்றத்திற்கு அழைத்துச் சென்றார் அந்தக் கிழவர். மலைக்கோயிலில் தரிசனம் செய்து வைத்தார். மதியம் பறவைகள் வந்து அமுதுண்ணும் அதிசயத்தையும் சிறுவனுக்குக் காட்டினார். இவன் மகிழ்ச்சிக்கு எல்லையேது?
குன்றிலிருந்து இறங்கி வந்து ஒரு வீட்டினுள் நுழைந்து “அம்மா, சாதம் போடம்மா” என்றார் கிழவர். ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்தது போல், அந்த அம்மாள் இரு நுனி இலைகள் போட்டு, தயாரித்து வைத்திருந்த உணவு வகைகளைப் பரிமாறினாள். சேதுராமனுக்கு நல்ல பசி. வயிறார உண்டான். கிழவரும் சமையலை ரசித்து சாப்பிட்டார்.
அடுத்து இருவரும் பஸ் ஏறி செங்கல்பட்டுக்கு வந்தனர். அங்கிருந்து மாலை ரயிலில் சென்னைக்குப் புறப்பட்டனர். சேதுவுக்கு தின்பண்டகளெல்லாம் வாங்கித் தந்தார் கிழவர். அவனைப் பற்றியும், வீட்டில் உள்ளோரைப் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி இருவரும் சிந்தாதிரிப்பேட்டை மங்கபதி நாயக்கன் தெருவையடைந்தனர். தமது கையில் இருந்த மீதி சில்லறையை சேதுவின் பையில் போட்டார் கிழவர். “வேண்டாம் தாத்தா” என்று அவன் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. “சேது, உன் வீடு எங்கேயிருக்கிறது?” என்று கேட்டார் கிழவர். “அடுத்த தெருவில் இருக்கு தாத்தா” என்று கூறி கிழவரை வேதகிரி மேஸ்திரி தெருவுக்கு அழைத்து வந்து, தன் வீட்டைக் காட்டினான் சேது. கிழவர் வெளியே நின்று கொண்டு, “உள்ளே போ” என்றார். தன் தாயும், பிறரும் அந்த அதிசயத் தாத்தாவைக் காண வேண்டும் என்று கொள்ளை ஆசை சேதுவுக்கு. “தாத்தா, நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்கோ” என்று அழைத்தான். தாத்தா மறுத்தார். சிறுவன் பிடிவாதம் பிடித்தான். அவர் மசியவில்லை. “நீ போய் உன் பையை வைத்து விட்டு வரப் போகிறாயா இல்லையா?” என்று சற்று உரிமையோடு கடிந்து கொண்டார் கிழவர். சேது துள்ளிக் குதித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினான்.
காணாமற் போன பிள்ளையைக் கண்டதும் தர்மாம்பாளின் பெற்ற வயிற்றில் பால் வார்த்தது போலாயிற்று. “சேது, வந்துட்டியாடா கண்ணே? எங்கேடா போயிருந்தே? எப்படிடா வந்தே?” என்று தாய் கேட்டாள், உணர்ச்சிவசப்பட்டவளாய்.
“அம்மா, எல்லாம் அப்புறமாய் சொல்றேன். சீக்கிரம் வாசலுக்கு வாயேன். என்னைக் கொண்டு வந்து விட்ட தாத்தாவைப் பாரும்மா. அவரை நீ உள்ளே கூப்பிடேன். நான் கூப்பிட்டா வர மாட்டேங்கிறார்” என்று உற்சாகத்துடன் கூவிக் கொண்டே வாசல்பக்கம் ஓடி வந்தான் செது. அவன் பின்னால் தர்மாம்பாளும், மதனியும், சுப்ரமணியனும் ஓடி வந்து தெருவில் எட்டிப் பார்த்தார்கள். ஆனால், அங்கு கிழவரைக் காணவில்லை.
திருப்போரூரில் கிழவர் தன் பையில் ஒரு காகிதத்தை மடித்துப் போட்டது நினைவுக்கு வரவே, அதை ஆவலுடன் எடுத்துப் பார்த்தான் சேதுராமன். அதில் நூற்றெட்டு “ஹர ஹரோ ஹர” நாமாவளிகள் எழுதியிருக்கக் கண்டான். திருமுருகனின் பெருமை பேசும் அந்தக் கும்மிப் பாடல்கள் தன் கையெழுத்திலெயே இருந்த அதிசயத்தையும் கண்டு வியந்தான். திருபோரூர் முருகரே கிழவராக வேடம் புனைந்து வந்து தந்தருளியதாகக் கருதி அந்த நாமாவளியை வீட்டிலுள்ளோர் அனைவரும் பக்தி சிரத்தையுடன் கும்மியடித்துப் பாடி மகிழ்ந்தனர்.
சேதுராமன் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சைக்குப் பணம் கட்டாமல் அதைப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டுச் சென்றாலும், பள்ளித் தலைமையாசிரியர் அவனுக்காக பணம் செலுத்தி விட்டிருந்தார். அதுவும் தெய்வச் செயலாக அமைந்து விட்டது. அதனால் அவன் மீண்டும் பள்ளியில் சேர்ந்து, பரீட்சைஎ ழுதி, முதல் தரமான மார்க்குகளுடன் எஸ்.எஸ்.எல்.சி. யில் வெற்றி பெற்றான்.
அந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது தர்மாம்பாள், பிள்ளைகளுடன் நன்னிலத்தின் அருகிலுள்ள தங்கள் கிராமமான நாடாகடிக்குச் சென்றிருந்தார். அச்சயம் சுற்றியுள்ள ஆலயங்களுக்குச் சென்று எல்லா தெய்வங்களின் மீதும் கீர்த்தனங்கள் பாடினார் சேதுராமன். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்கள் போல் சந்தப் பாடல்கள் பாட ஆரம்பித்தார்.இலக்கணப் பயிற்சியோ, பன்னூள் ஆராய்ச்சியோயின்றி, கவிபாடும் மரபு அறியாமல். பரந்த அறிவு இல்லாமல், தெய்வ சந்நிதிகள் முன்பு நின்ற நிலையிலேயே தங்குதடையின்றி தல புராணச் செய்திகளோடு, சொல் நயம், பொருள் நயம் சொட்டச் சொட்டப் பாடும் திறன் பெற்றார் சேதுராமன். முதலில் முருகன் மீது மட்டும் பாடி வந்தவர், சமரச மனப்பான்மையில் நாளடைவில் எல்லாத் தெய்வங்களின் மீதும் பாடத் தொடங்கினார். சிவன், திருமால், விநாயகர், இலக்குமி, ஆண்டாள், அனுமன், ஐயப்பன், நவக்கிரகங்கள், கன்னிகா பரமேசுவரி முதலிய தெய்வங்களின் மீதும், சைவ சமயாசாரியரான நால்வர், சேக்கிழார் போன்ற பெரியோர்கள் மீதும், காஞ்சிப் பெரியவர்கள் போன்ற மகான்கள் மீதும் இணையற்ற பாடல்கள் பிறந்தன.