வள்ளிமலை – 18

திருப்போரூர் முருகரே பாடித் தந்துள்ள இந்த நாமாவளிகள் ஜபத்துக்குரிய நூற்றெட்டு என்னும் எண்ணில் அமைந்திருப்பதால் இதைப் பாராயணம் செய்வதும், பெண்மணிகள் கும்மியடித்துப் பாடுவதும், மண்ணுலக நல்வாழ்வுக்கும் விண்ணுலகப் பெருவாழ்வுக்கும் உறுதுணையாய் அமையும்.

அருட்கவி சேதுராமனின் உள்ளியங்கிய தெய்வீகப் பேராற்றலைக் கேட்டு உளம் மகிழ்ந்தார் தமிழ்ப் பேரறிஞரான தணிகை மணி வ.சு. செங்கல்வராயப் பிள்ளை. பெரும் பேறு பெற்ற அந்த இளம் கவி தெய்வச் சந்நிதிகளின் முன் அருட் பாக்களை வழங்கும் அதிசயக் காட்சியை நேரில் காண வேண்டும் என்று விழைந்தார். அவரைத் தமது இல்லத்திற்கு அழைத்தார். பூஜை அறையில் கொலு வீற்றிருக்கும் குல தெய்வமாம் தணிகேசன் மீது பாடல்கள் இயற்றும்படி கேட்டுக் கொண்டார். தணிகேசனும், சேதுராமனைக் கருவியாகக் கொண்டு தன் பெருமையைப் பாடிக் கொண்டார். ராக, தாளத்தோடு வெள்ளமெனப் பாய்ந்து பெருகிய அந்தப் பாக்களையும், விருத்தங்களையும், கீர்த்தனங்களையும் கேட்டுக் கேட்டு உருகிப் போனார் பிள்ளையவர்கள். பலவற்றைத் தன் கையாலேயே எழுதிக் கொண்டார். தமது முதிர்ந்த அறிவைக் கொண்டு அவற்றை ஆராய்ந்தார். இணையில்லா அந்தப் படைப்புகளில் இழையோடிய அருள் லயத்தையும், பொருள் நயத்தையும் கண்டு அதிசயித்தார். முருகனின் பெருங்கருணையை நினைத்து நினைத்து நெஞ்சம் கரைந்துருகினார்.

ஐந்தாறு ஆண்டுகளில் அன்னார் இல்லத்தில் மட்டும் ஆயிரம் பாடல்களுக்கு மேல் தோன்றின. அவற்றில், முதல் ஆறு மாதங்களில் பாடப்பெற்ற 233 பாடல்களைத் தொகுத்து “திருத்தணித் திருவீதிகைக அருட்புகழ்” என்ற தலைப்பில் பிள்ளையவர்கள் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார்.

அருளமுதம் வற்றாமல் பொங்கியது. சேதுராமன் பல தலங்களுக்கும் சென்றார். பல தெய்வங்களை வழிபட்டார். தெய்வப்பணி புரியும் நல்லோர் கூட்டம் அவரை நாடி வந்தது. “எங்கள் ஊர் ஆலயத்திற்கு வாருங்கள்”, “எங்கள் ஊர்ப் பெருமானைத் தரிசனம் செய்யுங்கள; அவர் புகழ் பாடுங்கள்” என்று வருந்தி அழைத்துச் சென்று திருத் தொண்டாற்றினார்கள்.

இவ்வாறு திருவருளால் உந்தப்பட்டு பல்வேறு ஆலயங்களில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியருளினார் சேதுராமன். அன்னாரது அன்புச் சகோதரர் அருளிசைமணி சுப்ரமணியனும் உடனிருந்து அவற்றை எழுதி வைத்துக் கொண்டார். சில அன்பர்களது நன்முயற்சியாலும், இவரது நல்லாதரவாலும் அவ்வப்போது சில பாடல்கள் நூல் வடிவத்தில் வெளிவந்திருக்கின்றன. இன்னும் எண்ணாயிரத்துக்கு மேற்பட்ட பாட்லகள் அச்சேறாமல் நோட்டுப் புத்தகங்களிலேயே இருக்கின்றன. செல்வம் படைத்தவர்கள் முன்வந்து இப்பாடல்கள் நூல் வடிவம் பெற உதவினால் செந்தமிழுக்கும், நம் சமயத்திற்கும், சன்மார்க்கத்திற்கும் அரும் பணியாற்றியவராவார்கள். ஆத்தீக உலகம் அவர்களுக்கு நன்றி செலுத்தும்; நாட்டில் தெய்வ நெறி தழைக்கும்; அருட்செல்வர் கூட்டம் பெருகும்; அறம் வளரும்; அன்பு சூழும்; அமைதி நிலவும்.

அருட்கவி சேதுராமனை வைஷ்ணவி தேவி ஆட்கொண்டாள். ஒரு சாதாரண தேவிபக்தனாகத் திருவடி தேடி வந்த அன்பரைத் தன் அடிமையாக்கிக் கொண்டதோடு, அவரது ஆசிரமத்தையும் மாற்றியமைத்து அருட்பணிக்குக் கருவியாக்கிக் கொண்டாள் வைஷ்ணவி தேவி.

அடிமுடி காண முடியாத பரம் பொருள், ஞான ஒளியாய் தரிசனம் தந்த திருத்தலம் திருவண்ணாமலை. ஒவ்வோர் ஆண்டு கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தன்று, மலைவடிவிலிருக்கும் அண்ணாமலையார் மனிதகுலம் வாழ மாலையில், செஞ்சுடர் சோதியாய் தோற்றமளிக்கிறார். மலையுச்சியில் தோன்றும் அத்தீப தரிசனம் கிடைக்கக் கொடுத்து வைத்தவர்கள் “அண்ணாமலையாருக்கு அரோஹரா” என்று விண்ணதிர முழக்கமிடுகிறார்கள்>

1958-ம் ஆண்டு அருணாசலத்தில் கார்த்திகை தீப தரிசனத்தைக் கண்ட லட்சக் கணக்கானவர்களில் அருட்கவி செதுராமனும் ஒருவர்; உலக பந்தங்களிலிருந்து சிறுக சிறுக விலகிச் சென்று, உள்ளொளி பளிச்சிட்டதன் காரணமாக, சத்திய ஒளி காட்டும் பாதையில் நற்பயணம் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக ஞானச் சுடரைத் தரிசித்தார். கூப்பிய கரத்தை சிரமெல் உயர்த்தி, இமைகள் மூடி “அண்ணாமலையாருக்கு அரோஹரா” என்று நெஞ்சம் கரைய, புண்ணியம் சேர, உடல் குலுங்க உரக்கக் கூவினார். அருவமாய் அருகில் நின்றிருந்த ஸ்ரீ அருணகிரிநாதரும், ஸ்ரீ சேதாத்ரி சுவாமிகளும், ஸ்ரீ ரமண மகரிஷியும், ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகளும் அருட்செல்வருக்கு அருளாசி வழங்கினார்கள்.

பின்னர், சேதுராமன் தம் நண்பர் மூவருடன் கிரிவலம் செய்ய புறப்பட்டார். அண்ணாமலையார் ஆலயத்திலிருந்து புறப்பட்டவர், தித்திக்கும் திருப்புகழ் உள்ளத்தில் பொங்கி வர, தம் குருநாதருக்குத் திருப்புகழ் உபதேசம் செய்த ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் சமாதி ஆலயத்திற்குச் சென்றார். அங்கு வழக்கமாக வழிபாடு செய்யும் பாஸ்கராசாரிய அருணாசலம், அன்று ஏனோ, சேதுராமனையே தீபாராதனை காட்டச் சொன்னார். எதிர் பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பைப் பெரும் பககியமாகக் கருதி, சேதுராமன் பரம குருவின் சமாதி ஆலயத்திற்குப் பூஜை செய்து, குரு ஸ்துதிகள் சொல்லி கற்பூரார்த்தி காட்டினார்.

அடுத்து, ரமணாசிரமம் சென்று மகரிஷியின் சமாதி ஆலயத்தைத் தரிசனம் செய்து கொண்டே, கிரிவலத்தைத் தொடர்ந்தார். தேவார, திருப்புகழ் பாக்களை ஓதிக்கொண்டு அருட்பெருஞ் ஜோதியை திருவலம் செய்து முடித்தார் அருட்கவி சேதுராமன்.

அருணாசல ஒளி திருக்கோயிலூருக்கு வழி காட்டியது. மறுநால் தபோவனத்திலிருக்கும் ஞானப் பழத்தைத் தரிசிக்கச் சென்றார் சேதுராமன். அருள் விழியாலும், புன்சிரிப்பாலும், இன்சொல்லாலும் தம்மை நாடி வருபவர்களுக்கு நற்கதி காட்டியருளிய ஞானானந்தகிரி சுவாமிகள் புன்முறுவல் பூத்தார்.

“சும்மா பாடிப்பாடி என்ன செய்வது? பாடியதெல்லாம் போதும்; ஆடிப்பாடியது அடங்க வேண்டாமா? பாட்டு எங்கிருந்து பிறக்கிறது என்று பாட்டின் மூலத்தை ஆராந்து பார்த்து அதைக் கண்டு பிடிக்க முயற்சி பண்ணட்டும். அது தெரியாமல் சும்மா பாடிக் கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை” என்று சேதுராமனுக்கு ஞானோபதெசம் செய்தருளினார்.

தபோவனத்திலிருந்து புறப்பட மறுநாள்தான் சேதுராமனுக்கு உத்தரவு கிடைத்தது.

விடைபெறுவதற்கு முன் சேதுராமன் சுவாமிகளை வணங்கி விட்டுப் பணிவுடன்”சுவாமி, நேற்று தாங்கள் கூறிய பொன்மொழிகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த உபதேச வார்த்தைகள் என் இதயத்தில் ஆழப் பதிந்து விட்டன. நான் பாடுவது அடங்கி, ஆத்மஞானம் பெற தாங்கல்தான் ஆசி வழங்க வேண்டும். அந்த நிலை சீக்கிரமே சித்திக்கும்படி தாங்கள் அனுக்கிரகம் புரிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதைக் கேட்டு, ஞானானந்த சுவாமிகள் மீண்டும் புன்னகைத்தார்.

“அப்படியொரு நிலை ஏற்பட வேண்டுமா? எங்கே இருந்து சித்திப்பது? அது அங்கேயேதானே இருக்கிறது? அது, அதுவாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே உள்ளதை சீக்கிரமெ நி உணருவாய்; கவலைப்படாதே. முருகனைப் வேண்டுவோம்ம். அமைதியும் சாந்தியும் ஏற்பட பிரார்த்திப்போம்” என்று ஞானானந்தர் சேதுராமனுக்கு கருணையுடன் கூறி விடை கொடுத்தனுப்பினார்.