மைசூருக்கு அடுத்த பச்சிகவாகினி என்ற சிற்றூரில் உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தார் அர்த்தநாரி.மணமக்கல் மணமேடையில் அமர்ந்திருந்தனர்.முகூர்த்த வேளை நெருங்கி விட்டது.திடீரென்று மாப்பிள்ளைக்கு காக்காய் வலிப்பு வந்து விட்டது.அவருக்கு அந்த நோய் இருப்பது பெண் வீட்டாருக்கே அதுவரை தெரியாது.நல்ல வேளை, இப்போதே தெரிந்ததே, மோசம் போக இருந்தோமே, என்று எல்லோரும் பெருமூச்சு விட்டனர்.பிள்ளை வீட்டார் முகத்தில் ஈ ஆடவில்லை.மணப்பெண் நஞ்சம்மா தன் விதியை நினைத்து நொந்து போனாள்.அங்கிருந்த பெரியவர் ஒருவருக்கு ஓர் அரிய யோசனை தோன்றியது. குறித்த முகூர்த்தத்திலேயே நஞ்சம்மாவுக்குத் திருமணம் நடைபெற்றாக வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். அர்த்தநாரியை அழைத்து அவளுக்குத் தாலி கட்டச் சொன்னார்.மறு பேச்சின்றி அவர் மணமேடைக்குச் சென்று, நஞ்சம்மாவை இரண்டாவது மனைவியாகக் கரம் பற்றினார்.
சுப்புலட்சுமி தன் மாமியாருடன் பூநாச்சி புதூரில் இருந்தாள்.அர்த்தநாரி நஞ்சம்மாவுடன் மைசூரில் குடித்தனம் நடத்தி வந்தார்.அவர் அடிக்கடி கிராமத்திற்கு வந்து போவதும் உண்டு.
அவர் தம் தொழில் கவனம் செலுத்தினாரே தவிர, புத்தகப் படிப்பைப் பற்றிக் கவலைப்பட்டதே கிடையாது.அவருக்கு தெய்வ பக்தியும் அதிகம் கிடையாது.யாராவது கடவுளைப் பற்றிப் பேசினால், “எங்கே இருக்கிறார் கடவுள்?அவரை எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம்” என்று குதர்க்கம் பேசுவார்.
விதவிதமான பலகாரங்கள் செய்வதிலும், மணக்க மணக்கச் சமையல் செய்வதிலும் இவருக்கு ஈடு ஒருவருமில்லை என்று பெயர் வாங்கினார் அர்த்தநாரி.அவர் சம்பளம் இருபதாக உயர்ந்தது.
இருப்பினும் வாழ்க்கைப் படகு சம்சாரக் கடலில் தத்தளித்தது.மனச்சாந்தியற்றிருந்தார்.முதல் மனைவிக்குப் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் அடுத்தடுத்து இறந்தன.சோகத்தில் வாடிய மனைவியும், சில மாதங்களில் போய்ச் சேர்ந்து விட்டாள்.
இரண்டாவது மனைவியான நஞ்சம்மாளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் பிறந்தன.அந்தக் குழந்தைகளாவது ஆயுசோடு இருக்கக் கூடாதா?திடீரென்று இரண்டு பெண் குழந்தைகளும் இறந்து விட்டன.மூன்றாவது பையன் நரசிம்மன் மட்டும்தான் பிழைத்திருந்தான்.
அர்த்தநாரிக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லை.முப்பத்தைந்து கூட முடியவில்லை.அதற்குள் இத்தனை துன்பங்கள் வந்தால், என்ன செய்வார் பாவம்?அவருக்கு வாழ்க்கையே கசந்ததில் வியப்பில்லை.மனைவி, மக்கள் என்ற பற்று மெள்ள மெள்ள குறைந்து வந்தது.
உள்ளத்தில் நிம்மதியிருந்தால் தானே உடலில் வலிமையிருக்கும்?அதுவரை நோய் நொடியில்லாமல் இருந்தவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டது.எந்த மருந்துக்கும் அது கேட்கவில்லை.அரண்மனை வைத்தியர்கள் தங்களால் இயன்றதையெல்லாம் செய்து பார்த்து விட்டார்கள்.ஒன்றும் பயனில்லை. ஒரு மாதம் வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டிலேயே அவதிப்பட்டுக் கொண்டிருந்த அர்த்தநாரி, தற்கொலை செய்து கொள்வதைப் பற்ற்க் கூட தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கி விட்டார்.
அப்போது அரண்மனையில் வேலை செய்து கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த கொத்தனார், அர்த்தநாரியைப் பார்க்க வந்தார்.அவர் ஒரு முருக பக்தர்.பழநி ஆண்டவனால் ஆகாதது ஒன்றும் இல்லை என்ற திடநம்பிக்கை கொண்டவர்.பழநிக்குச் சென்றால், வயிற்று நோய் நீங்கி விடும் என்று அர்த்தநாரிக்கு எடுத்துச் சொன்னார்.தெய்வ நம்பிக்கை அதிகமில்லாத அர்த்தநாரி, கடைசியாக அதையும் செய்து பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். “உத்தியோகம் இல்லாவிட்டால் போகிறது, உயிர் பிழைத்தால் போதும்” என்று மனைவியையும், ஏழு வயது பிள்ளையையும் அழைத்துக் கொண்டு பழநியிலேயே தங்கி விடுவது என்ற எண்ணத்துடன் மைசூரிலிருந்து புறப்பட்டார்.
பிரயாணத்தின் பொது, ஜோலார்பேட்டையில், மனகிவியின் நகைகள் களவு போயின. அருள் கிடைத்து விட்ட பிறகு பொருள் எதற்கு?
ஈரோடு வரை ரயிலிலும், பின்னர் கால்நடையாகவும் பழநி வந்து சேர்ந்தார்.இது நடந்தது 1908-ம் வருடம்.அப்போது அவருக்கு வயது 38.
என்ன அதிசயமோ! பழநியில் காலடி வைத்த அன்றே அவருடைய வயிற்று நோயின் கடுமை சற்றுத் தணிந்தது.நாளுக்கு நாள் அந்த வலி குறைந்து கொண்டே போயிற்று.நாளுக்கு நாள் அவருடைய பக்தியும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
அச்சமயம் கோயம்புத்தூரில் முகாமிட்டிருந்த சிருங்கேரி சங்கராசாரிய சுவாமிகளிடம் சென்று, சந்நியாசம் தர வேண்டும் என்று பிரார்த்தித்தார் அர்த்தநாரி.அவருக்குத் தாயாரும், மனைவியும், பிள்ளையும் இருப்பதால் சந்நியாசம் தர மறுத்து விட்டார் சுவாமிகள்.பின்னர் அர்த்தநாரி தம் கிராமத்திற்குச் சென்று, சொத்துக்களையெல்லாம் விற்று உறவினருக்கெல்லாம் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, பழநிக்குத் திரும்பினார்.
பழநியாண்டவரின் திருச்சந்நிதியில் தங்கியிருந்த அர்த்தநாரியை, எல்லோரும் “மைசூர் சுவாமிகள்” என்றே அழைத்தனர்.அவருடைய மனைவி நஞ்சம்மாளும், மகன் நரசிம்மனும் நான்கு வீடுகளில் உணவு யாசித்து உண்டு வாழ்ந்தனர்.அர்த்தநாரியோ ஆண்டவனுக்கு அபிஷேகமான பாலையும், வாழைப்பழத்தையும் தவிர வேறு ஆகாரத்தை உட்கொள்ளுவதில்லை.
அர்த்தநாரி அன்ன ஆகாரத்தையும் பொருட்படுத்தாமல், ஆண்டவனின் சேவைக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்.தினமும் மும்முரை நீராடுவார்.மூன்று வேளைகளிலும் ஆயிரத்தெட்டு முறை காயத்ரி மந்திரம் ஜபிப்பார்.விடியற்காலையில், சண்முக நதிக்கும், வராக நதிக்கும், அமராவதி நதிக்கும் சென்று, உச்சிகால அபிஷேகத்திற்கான நீரைக் கொண்டு வருவார்.பழநி மலையை வலம் வருவார்.நாள் தவறாமல் சூரியநமஸ்காரம் செய்வார்.இப்படியொரு கடுமையான தவம் இயற்றியதாலும், பழநியாண்டவனுக்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தி வந்ததாலும் சுவாமிகளின் வயிற்று வலி அடியோடு நீங்கி விட்டது.
அன்று சித்திரை மாதம்.அக்னி நட்சத்திரம்.உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.அர்த்த ஜாமத்தின் போது, மதுரையிலிருந்து வந்திருந்த ஒரு தேவதாசி ஆண்டவனின் சந்நிதியில், “வங்காரமார்பிலணி” என்ற திருப்புகழை மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தாள்.அருகில் நின்றிருந்த சுவாமிகள் அந்தப் பாடலில் அப்படியே லயித்துப் போய் விட்டார். அத்திருப்புகழில் “சிங்காரரூபமயில்வாகன நமோநம” என்ற இடம் அவரை அப்படியே உலுக்கி விட்டது. பக்தியால் கரைந்த உள்ளம் கண்ணீராய் வெளிப்பட்டது.ஆனந்தப் பரவச நிலை எய்தினார்.
அக்கணத்திலிருந்து அருணகிரிநாதரின் திருப்புகழை மனப்பாடம் செய்ய வேண்டும், மனமுருகப் பாட வேண்டும் என்று தீராத ஆசை அவரைப் பற்றிக் கொண்டது.ஆனால் அதை எப்படிக் கற்பது? அவருக்குத் தமிழ் எழுத்துக்களே சரியாகத் தெரியாதே! திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அரையும், குறையுமாகக் கற்றது திருப்புகழைப் படித்துணரப் போதுமா?
மணி என்ற எட்டு வயது சிறுவனை சிநேகம் பிடித்துக் கொண்டார் முப்பத்தெட்டு வயது நிரம்பிய மைசூர் சுவாமிகள்.அவனிடம் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டு, அங்கு கிடைத்த ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து தினமும் ஒரு திருப்புகழை மனப்பாட்ம செய்து, ஆண்டவனின் சந்நிதியில் ஒப்பிப்பார்.அதில் பல பிழைகள் இருக்கும். இதைக் கவனித்த கிருஷ்ணசாமிப் பண்டாரம் என்பவர் திருப்புகழைப் பிழையில்லாமல் பாட வேண்டும் என்றும், பிழையற்ற திருப்புகழ் பதிப்பு, சென்னை லிங்கிச் செட்டித் தெரு, 292-ம் எண் இல்லத்தில் கிடைக்கும் என்றும் கூறினார். உடனே அந்த முகவரிக்குக் கடிதம் எழுதி நானூற்றைம்பது பாடல்கள் கொண்ட முதல் பாகத்தை வரவழைத்தார் சுவாமிகள்.ஒரு மாதத்திற்குள் அத்தனை பாடல்களையும் கற்று விட்டார்.தினமும் சந்நிதியில் நின்று பக்திப் பரவசத்துடன் உரக்கப் பாடுவார்.“கணீர்” என்று திருப்புகழ் மாரி பொழிவதைக் கேட்டு ஆனந்திக்க அங்கு பெருங்கூட்டம் கூடி விடும்.
சுவாமிகளுக்குப் பழநியாண்டவரின் அருள் பரிபூரணமாக இருந்தது.தன் அபிஷேகத்திற்காக, பல மைல்களுக்கு அப்பாலுள்ள புண்ணியத் தீர்த்தத்தைக் கொண்டு வரும்படி சுவாமிகளைப் பணித்தார் முருகப் பெருமான்.ஒரு நாள் அவரது கனவில் தோன்றி பொதிகை மலைச்சாரலில் பாபநாசத் தீரத்திலுள்ல கல்யாண தீர்த்தத்தைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அகத்திய முனிவரும், யோக சித்தர்களும் வாழ்ந்த அப்பகுதிக்குப் போகும் வழியையும், நீர் எடுக்க வேண்டிய இடத்தையும், கிழக்கில் மலையிலிருக்கும் மணல் மேட்டையும், மேற்கிலுள்ல பாறைக் கோயிலையும் அவருக்குக் கனவிலேயே காட்டியருளினார். அன்றிரவே லட்சுமணன் செட்டியார், ஐயா குட்டி குருக்கள், மடைப்பள்ளி வெங்குவய்யர் முதலியவர்களின் கனவில் தோன்றி, வழிச் செலவுக்கு மைசூர் சுவாமிகளிடம் பணம் தரும்படி கட்டளையிட்டார். மறுநாள் விடியற்காலையில் அவர்கள் மூவரும் சுவாமிகளிடம் வந்து ஆண்டவனின் கட்டளைக்கிணங்க, அவருக்குப் பணம் கொடுத்துதவினார்கள்.