சிவராத்திர்க்கு முதல் நாள், அம்பிகைக்கு உகந்த வெல்ளிக்கிழமையன்று, தெவிக்கு முன் நின்று அருட்புகழ் பாடினார் சேதுராமன். மணி மணியாகப் பதினைந்து விருத்தப் பாக்கள் தோன்றின. அப்பாடல்களின் மூலம் துறவு மேற்கொள்ள சேதுராமனுக்கு வைஷ்ணவி உத்தரவு தந்த அதிசயத்தைச் சுற்றியிருந்தோர் கேட்டுப் பரவசமாயினர்.
அறுசீரடி ஆசிரிய விருத்தத்தில் பதினைந்து பாட்டுக்கள். பத்தரைமாற்றுத் தங்கக் கவிகளாக் அபொங்கிப் பெருகுகின்றன. முதற் பாட்டில் தேவியின் கடைக்கண் அருளை வேண்டித் துதிக்கிறார்.
உள்ளத்துறவும் உடற்றுறவும்
உண்மைத் துறவாய் உயர, அவை
கள்ளத் துறவாய் அமையாமைக்
காப்பாய்! உன்றன் கடைக்கணருள்
வெள்ளத் துறவை ஒரு போதும்
விட்டுப்பிரியா விதமெனையாள்!
பள்ளத் துறவை விழை புனல் போற்
பாயும் கருணை வைஷ்ணவியே!
தேவியே அவரைத் துறவறம் மேற்கொள்ளுமாறு பணிக்கிறாள் என்பதை இரண்டாம் பாட்டின் மூலம் அறிகிறோம்.
மானியாக வாழ்வேனை
மாயைக் கடலாம் சமுசாரம்
நாணித் துரியாசிரமதை
நண்ணுமாறு பணிக்கின்றாய்!
தோனியா முன் மலரடியால்
துக்கப் பிறவிக் கடல் கடத்தி
கோணி டாதன் நெறிப்படுத்திக்
கூவிக் கொள்ளாய் வைஷ்ணவியே!
வேற்றுமையுணர்வுகள் நீங்கவும், மனத்தின் உண்மையான அத்வைத சிந்தனை ஓங்கவும் தேவியருள வேண்டும் என்ற கோரிக்கை ஏழாவது பாட்டில் மிளிரக் காண்கிறோம்.
தன்னை மறந்து தன்னைத் தான்
யாரென்றரிந்து தமுயன்று
நின்னை உணர்ந்து நெறிநின்று
நான்வே றன்றி நீவேறே
என்ன நினைக்கும் எண்ணமற
எல்லாம் ஒன்றாய் யானாகி
இன்னம் நீயாய்க் காண அருள்
இது விண்ணப்பம் வைஷ்ணவியே!
தெய்வங்கள் மீது ஆசுகவிகள் பாடிக் கொண்டிருந்த தன்னை, ஆத்ம விசாரம் செய்யத் தூண்டியதும் தேவியின் அருள்தான் என்று பதினேழாவது பாட்டில் கூறுகின்றார்.
பாடும் பணியே பணியாகப்
பயின்றேன் அடங்கிப் புலன் கதவை
மூடும்படிக்குன் ஆணையிட்டு
மூலம் அறிய முயல்கென்றாய்!
ஓடும் கருத்தை இனி நிறுத்தி
உள்ளொக் குற்றுள் உனை உணர
வாடும் பயிர் போல் வேர்கருள்வாய்!
வடமுல்லையில் வாழ் வைஷ்ணவியே!
ஆதற்கடுத்த பாட்டில், யோக நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் வைஷ்ணவியே குருவாய் இருந்து, தமக்குத் தாய் போன்ற வள்ளிமலை சுவாமிகள் மூலம் சந்நியாஸ்ம அருளும்படி கோருகின்றார். இப்பாட்டில் தமது தாயாருக்கும், பெரிய தாயாருக்கும் சேர்த்து துறவறம் கேட்பது, அவர்களது விருப்பத்தையும் தேவி ஏற்றுக் கொண்டதர்குச் சான்றாக அமைந்துள்ளது.
நீயே குருவாய் நெஞ்சுள் நின்று
நினது தொழும்பர் மற்றெமக்குத்
தாயே போல்வார் “வள்ளிமலை
சச்சிதானந்தா மூலம்
ஆயே! நான்காம் ஆசிரமம்
அன்னை மாரோர் இருவருடன்
பேயேன் தனக்கும் வழங்கியருள்
பேசும் கடவுள்! வைஷ்ணவியே!
நாளும் கோலும் நன்றாக அமைந்துள்ள சிவராத்திரியன்று, காவியுடை அளித்து தம்மை ஆட்கொள்ளும்படி பதினான்காம் பாட்டில் உள்ளம் உருக வெண்டிக் கொண்ட அருட்கவி அதற்காக இறுதிப் பாட்டில் வைஷ்னவி தேவிக்கு நன்ரி செலுத்தும் பேரழகையும் காண்போம்.
ஆடிப்பாடி அடங்கி விட்டேன்
ஆசைக்கடலைக் கடந்து விட்டேன்
ஓடித்தேடி உனைக் கண்டேன்
உரைப்பதென்னுள் அகந்தையன்றே!
வாடிச் சென்ற வாநாள் போய்
மலர்ந்த தெய்வ வாழ்வினுய்ய
நாடிக் கொடுத்தாய்! இதற்குனக்கே
நன்றி சொன்னென், வைஷ்ணவியே!
“ஆடிப்பாடியதெல்லாம் போதும். இனி அடங்க வேண்டாமா? மூலத்தை அறியும் பொருட்டு, அமைதியாக அமர வேண்டாமா? என்று தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகள் அன்று கேட்ட கேள்வி, இன்று விடையாக அமைந்து விட்ட அதிசயத்தையும் காண்கிறோம்.
சிவராத்திரி புண்ணிய தினம். பகலவன் கிழக்கே தோன்றி விட்டான். திருமாலுக்ககந்த திருவோன நட்ச்சத்திர திருநாளன்று, சிவனுக்குகந்த புனித நாளன்று தேவியின் மலரடிகளிலும், குருநாதர் வள்ளிமலை சுவாமிகளின் படத்தின் முன்னும் படைக்கப் பட்ட காவியுடைகளை சாது பார்த்தசாரதி எடுத்துக் கொடுக்க, செதுராமனின் தாயாரும், பெரிய தாயாரும் அதை உடுத்திக் கொண்டனர். பின்னர் சேதுராமன் துறவுக் கோலத்திற்கு அடையாளமாக முண்டனம் செய்து கொண்டு, முன்பு ஒருமுறை கனவில் வந்த அதே திருக்குளத்தில் நீராடி விட்டுஆலயத்தினுள் வந்தார். அங்கு தேவி, பரமகுரு சேஷாத்ரி சுவாமிகள், குரு ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் இவர்கள் திருமுன் சமர்ப்பிக்கப்பட்ட காவி ஆடையை சாது பார்த்தசாரதி அவர்கள் திருக்கரம் கொட்டுக் கொடுக்க, சேதுராமன் அவற்றைப் பணிவுடன் பெற்றுக் கொண்டு, அன்னையாரிடம் தந்தார். பின்னர் குளத்தில் மூழ்கி, நீரில் நின்றபடியே, தமையனார் புத்தகத்தில் படித்த மந்திரங்களை மும்முறை கூறி, பூணூலை கழற்றி அகற்றி விட்டு, மீண்டும் நீரில் மூழ்கினார். உற்றாரும், சுற்றாரும் கரையில் சுற்றி நிற்க, அன்னையரிடமிருந்து காவித் து ணியைப் பெற்று, உடுத்திக் கொண்டு, சேதுராமன், சுவாமி சாது ராமாக மாறி வைஷ்ணவி தேவியின் சந்நிதிக்கு வந்தார். சற்ரு நேரம் இமைகளை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருந்து விட்டு, “சின்னமாம் ஏகத்தாரை திருக்கையிலேந்தி” என்ற குரு தோத்திரத்துடன், “உம்பர்தரு”, “வங்கார மார்பிலணி”, “உருவாய் அருவாய்”, “காவியுடுத்தும்” முதலான அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாக்களையும் பாடித் துதித்து, உருகித் தொழுது நமஸ்கரித்து எழுந்தார்.அன்று, சிவராத்திரி விரதம் இருந்து, ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு நடைபெர்ர நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டதோடு, தேவியின் சிவாலங்காரத்திலும் ஈடுபட்டு, மனத்தைப் பறி கொடுத்தார் சுவாமி சாதுராம். தேவார, திருவாசக, திருமுறைகளைப் பாடி, திருப்புகழ் ஓதி, அபேதானந்தா பஜனை கோஷ்டியாருடன் சேர்ந்து நாம கீர்த்தனம் செய்து, நான்காம் கால பூஜையைத் தரிசிக்க, மாசிலாமணீசுவரர் ஆலயத்திற்குச் சென்றார். அங்கு திருக்குளத்தில் நீராடி, சிவச் சின்னங்களைத் தரித்து, சுவாமியின் முன்பு பஞ்ச புராணம் பாடி, அம்பிகையின் முன்பு அபிராமி அந்தாதி பாடி, சுந்தரரின் பதிகங்களை வாய் மணக்க, மனங்குளிரக் கூறி, சிவப்பிரசாதம் பெற்று, வைஷ்ணவி ஆசிரமத்திற்குத் திரும்பினார்.