ஒரு சமயம் சாதுராம் சுவாமிகள் வள்ளிமலைக்குக் கிழக்கே ஒரு மைல் தொலைவில் இருக்கும் மேல்பாடி என்ற அழகிய கிராமத்தில் தங்கி, அங்கு தேவார திருப்புகழ் வகுப்புகள் நடத்தி வந்தார்.
பாலாற்றின் கிளை நதியான, நிவா நதியென்னும் பொன்னையாற்றின் மேற்குக் கரையில் இருக்கும் மேல்பாடி சரித்திரச் சிறப்பும், புராணப் பெருமையும் கொண்ட அழகிய கிராமம். கந்தபுராணத்தில், வள்லித் திருமணப் படலத்தின் தொடக்கத்தில் கச்சியப்ப சிவாசாரியார்,
அயன் படைத்திடும் அண்டத்துக் காவியாய்ப்
பயன்படைத்த பழம்பதி என்பவரால்
நயன்படைத்திடு நற்றொண்டை நாட்டினுள்
வியன்படைத்து விளங்குமெற்பாடியே
என்று வியந்து பாடியுள்ளார்.
அந்தக் காலத்தில் போர்ப் படைகள் முகாமிட்டிருந்ததால் அது “பாடி” யானதாகவும், ஆற்றுக்கு மேற்புறமாக இருந்ததால் மேல்பாடியானதாகவும் கூறப்படுகிறது.
திருப்புகழ் ஆசிரமத்திலிருந்த சாதுராம் சுவாமிகள், மேல் பாடியில், “நாகராஜ யக்ஞோபவாய்த கணபதி எவ்வளவு அழகாக இருக்கிறார்? தலையில் கிரீடம் இல்லாமல், இம்மாதிரிப் பிள்ளையாரைப் பார்க்க முடியாது” என்று வியந்து கூறியிருக்கிறார்.
வழுவழுப்பான கல்லில் வடித்தெடுக்கப்பட்டிருக்கும் அந்த விநாயகரைத் தொட்டு மகிழ வேண்டும் என்ற ஆவல் எவருக்கும் பிறக்கும். நாகப் பாம்பினால் ஆன அந்தப் பூணூல்தான் பார்க்க எத்தனை அழகாக இருக்கிறது என்று வியக்கத் தோன்றும். அவரது மேல் கையில் மழுவும், இடது மேல் கையில் அங்குசமும் உள்ளன. வலது கீழ்க் கையில் உடைந்த தந்தமும், இடது கீழ்க் கையிலுள்ல பாத்திரத்தில் கொழுக்கட்டையும் இருக்கின்றன. அந்தப் பணியாரத்தை ஆசையுடன் துதிக்கையால் அவர் எடுக்கும் பாவம் மிக அருமையாயிருக்கிறது.
அந்த வசீகர விநாயகர் மீது தாம் பாடியிருந்த அருட்கவிதையை மெய்யுருகப் பாடினார் சாதுராம் சுவாமிகள். ஸ்ரீ கணபதியை வணங்கி விட்டு திரும்பியவுடன் நம் பார்வை அங்கு வரிசையை வீற்றிருக்கும் சப்த கன்னியர் சிலைகளின் மீது படியும். வாகனங்களுடன் கூடிய சப்த மாதாக்கள். ஒவ்வொரு சிலையும் தனிக் கலையழகுடன் திகழ்கிறது, என்று சுவாமி சாதுராம் விளக்கிக் கூறுகிறார்.
பிராம்மிக்கு அன்னப் பறவையும், மகெசுவரிக்கு ரிஷபமும், கௌமாரிக்கு மயிலும், வைஷ்ணவிக்கு கருடனும், வாராகிக்கு எருமையும், இந்திராணிக்கு ஐராவதமும், சாமுண்டிக்கு பூதமும் வாகனங்களாகப் பொறிக்கப் பட்டிருக்கின்றன.
பிராகாரத்தில் வடமேற்கு மூலையிலிருக்கும் அம்பிகையில் ஆலயத்தினுள், அழகு தமிழில் “அருந்தவ்ம பயில் உமை” என்றும், வட மொழியில் “தபஸ்கிருதி தேவி” என்றும் அழைக்கப்படுகிறாள். யோக நிஷ்டையில், ஜடாமுடியுடன் அன்னை தோற்றமளிக்கிறாள். மோனத்தவம் மேற்கொண்டிருப்பதால் அன்னையின் உள்ளத்தில் நிலவும் பேரமைதி, திருமுகத்தில் சாந்தமாகத் திகழ்வதைக் காணலாம்.
மேல்பாடியின் வடப்புறத்தில், தேவி பாகவத நிகழ்ச்சிகளும், தென் புறத்தில் கிருஷ்ண லீலைகளும் சின்னஞ்சிறு சுவர்சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும் பேரழகைக் காணக் கண் கோடி வெண்டும்.
அம்பிகையின் சந்நிதி மண்டபத் தூண் ஒன்றில், கிழக்கு நோக்கியிருக்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சிற்பத்தை மூலவராக்கி, ஸ்ரீ முருகருக்கு ஒரு சந்நிதி ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும், திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்த்தில் உள்ல கம்பத்திளையனார் கோயில் நினைவுக்கு வரும்.
பிராகாரத்தின் தெங்கிழக்குப் புறத்தில் இருக்கும் கருங்கல் அண்டாக்களையும், சாதம் வடித்துக் கொட்டும் மெடையையும், அதிலுள்ள பட்டை போடும் குழிகளையும் பார்க்கும் போது, ஒரு காலத்தில் அந்தக் கோயில் எத்தனை எழிப்பாக இருந்திருக்க வேண்டும் என்பது நினைவுக்கு வரும். அங்கிருந்த கருங்கல் கிணற்றின் அமைப்பையும், சூரிய ஒளி படுவதற்கும், மழை நீர் வடிவ்தற்கும் தக்கவாறு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பார்த்து, அக்காலக் கட்டிடக் கலைஞர்களின் நுண்ணிய அறிவை வியந்து பாராட்டத் தோன்றும்.
அடுத்து, சுவாமி இருக்கும் மண்டபத்தில் நுழைந்தால், ஸ்ரீ சோமநாதேசுவரரின் கருவறயை தரிசிக்கலாம். அப்பெரிய சிவலிங்கம் சிந்தையைக் கவர்ந்து, பக்தியைப் பெருக்குகிறது. ஆவுடையாரின் சுற்றளவும், லிங்கத்தின் உயரமும், தரிசிப்பவர் எண்ணங்களை உயர்த்தும், சிறிய மனத்தியயும் பெரிதாக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆலயத்திற்கு வெளியே மொட்டை மண்டபத்திலுள்ல சிற்பங்கள் காணத்தக்கவை. காமாட்சியம்மன், ஏகாம்பரநாதரை வழிபடுவது, கண்ணப்ப நாயனார் காளத்தியப்பனைத் தொழுவது, ஸ்ரீ ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை ஆராதிப்பது, காமதேனு சிவலிங்கத்தின் பால் சுரப்பது, கருடவாகனப் பெருமாள் போன்ற கலை வடிவங்களைக் காணலாம்.
சொமநாதேசுவரர் ஆலயத்திற்கு தெற்கே ஒரு சிறு ஆலயம் அமைந்துள்ளது. மேல்பாடி கிராமம் ஒரு காலத்தில் சோழ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அப்போது அதற்கு ராசாசிரயபுரம் என்ற பெயரும் வழங்கி வந்தது. ஆலயத்தில் உறையும் இறைவனுக்கும் சோழேந்திர சிம்மேசுவரர் என்ற திருநாமம் வழங்கப்பட்டது. அந்த மன்னனின் நினைவாக மேல்பாடியில் அருள்மொழித் தேவர் வீதியும், முக்குடி சோழ வீதியும் இருந்திருக்கின்றன.
இராஜராஜசோழனின் பாட்டனாரான அருஞ்சய சோழன். அவன் வடஆற்காடு மாவட்டத்திலுள்ள ஆற்றூர் என்ற இடத்தில் போரிட்டு உயிர் நீத்தான். இதனால் அவனுக்கு “ஆற்றூர் துஞ்சிய சோழன்” என்ற பெயரும் உண்டு. தன் பாட்டனாரின் நினைவாக ராஜராஜசோழன் மேல்பாடியில் ஒரு கலைக்கோயில் எழுப்பினான். அங்கு உறையும் இறைவனுக்கு அருஞ்சயேசுவரர் என்றும், மகா தேவர் என்றும் காரணப் பெயர்கள் ஏற்பட்டன.
அந்தக் கற்கோயில் பூஜையற்ற ஒரு கலைக்கூடமாக காட்சியளிக்கிறது. பசுமை இழையோடும் அற்புதக் கருங்கல்லில் அருமையானதொரு கலையுணர்வோடு மாமன்னர் எழுப்பிய நினைவுச் சின்னத்தில் சிவலிங்கம் மட்டுமே உள்ளது. அம்மனுக்கு சந்நிதியில்லை.
பொன்னையாற்றுக்கு மேற்கரையில், இயற்கையன்னை கோலோச்சும் பகுதியில், அமைதியான சூழ்நிலையில் உள்ள அக்கோயில்களை அடுத்து வீர ஆஞ்சனேய சுவாமி கோயில் உள்ளது. ஆஞ்சநேயரின் உருவச் சிலை, நதிப் படுகையில் கிடைத்ததாகவும், அது சோமநாதேசுவரர் ஆலயத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிரது.
வள்ளிமலை ஸ்ரீ திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் சரிதம் முற்று பெறுகிறது!!