வள்ளிமலை – 3

சுவாமிகள்,  இப்பணியை செவ்வனே முடித்து வைப்பதற்காக மௌன விரதம் ஏற்றுக் கொண்டார். தாம் ஏற்றுக் கொண்டுள்ல தெய்வப் பணியை ஓர் அட்டையில் விளக்கமாக எழுதி, கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு பயணத்தைத் தொடங்கினார்.

அன்று இரவு முழுவதும் கால் நடையாகவே சென்று, விடியற்காலை திண்டுக்கல்லை அடைந்தார் சுவாமிகள்.இரவில் இவருக்குத் துணையாக, பழநியாண்டவர், ஒரு குருக்கள் உருவில் சுவாமிகளுக்கு முன்னால் இருபது அடி தொலைவில் நடந்து கொண்டிருந்தார்.மௌன விரதம் ஏற்றிருந்ததால் அவரை அழைத்துப் பேச முடியவில்லை.எத்தனை வேகமாக நடந்தாலும், அந்த குருக்களுக்கும், சுவாமிகளுக்கும் இடையே இருபது அடி இடைவெளி இருந்து கொண்டே இருந்தது.திண்டுக்கல்லை அடைந்ததும் குருக்கள் மாயமாய் மறைந்து விட்டார்.

வழி நெடுகிலும் பல பக்தர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டு தெங்காசி வந்தடைந்த சுவாமிகளுக்கு, பழநியாண்டவன், தட்சிணாமூர்த்தி பரதேசியாகக் காட்சியளித்து, கல்யாண தீர்த்ததிற்கு வழி காட்டினார். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் நீர் எடுக்காததால் பாதி வழியில் அது கை தவறிக் கொட்டி விட்டது.எனவே மீண்டும் நடந்து சென்று பரதேசியின் உதவியால் சரியான இடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு கால் நடையாகவே பழநியை நோக்கிப் புறப்பட்டார்.வழியில் திருடர்கள் சுவாமிகளை வழிமறித்தனர்.பின்னர் அவர் கழுத்தில் மாலையாகத் தொங்கிய அட்டையைப் படித்துப் பார்த்து, அவரிடம் மன்னிப்புக் கெட்டு, விபூதி பெற்றுச் சென்றனர்.மற்றோர் இடத்தில் தலையில் நீர்க்குடத்தை வைத்துக் கொண்டே, வெள்ளத்தில் நீந்தி வரவேண்டியிருந்தது.இத்தனை இன்னல்களையும் கடந்து வந்து, புனித தீர்த்தத்தால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, கண் குளிரத் தரிசித்து உள்ளம் குளிர்ந்தார்.

அந்த ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமகத்திற்குச் சென்றார் சுவாமிகள். திருச்சியிலிருந்தே ஜன நெரிசல் இருந்ததாலும், ரயிலில் போனால் தாமதமாகும் என்பதாலும், காவிரியில் குதித்து நீந்திக் கொண்டே கும்பகோணத்தை அடைந்தார் அவர்!

அதற்கு அடுத்த வருஷம், ஆடி அமாவாசை அபிஷேகத்திற்காக, பொதிகை மலையிலுள்ள தட்சிணாமூர்த்தி தீர்த்தமான பாண தீர்த்தத்தைக் கொண்டு வரும்படி ஆண்டவன் கனவில் அருள் கட்டளையிட்டார். சுவாமிகள் மீண்டும், தெங்காசி, பாபநாசம் வழியாக, மலைகளையும், காடுகளையும் தன்னந்தனியாகக் கடந்து சென்று இடையில் குறுக்கிட்ட இன்னல்கள் பலவற்றையும் பொருட்படுத்தாது, நீர்வீழ்ச்சி இருந்த இடத்தையடைந்து, புண்ணைய தீர்த்தத்தை செப்புக் குடத்தில் எடுத்துக் கொண்டார். வழியில் வண்டுகளும், குளவிகளும் கொட்ட, கொடிய விலங்குகள் பயமுறுத்த, சற்றும் மனம் தளராது, மௌன விரதத்துடனேயே பழநிக்கு வந்து சேர்ந்தார்.

அதற்கு அடுத்த வருடம் கோயம்புத்தூருக்கு பதினைந்தாவது மைலில் இருக்கும் வெள்ளியங்கிரி  மலையேறி, பஞ்சலிங்க தரிசனம் செய்து, வேறு வழியாக பூண்டி என்ற கிராமத்தில் வாயு மூலையிலுள்ள தேவி தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு கால் நடையாகப் பழநிக்கு வந்து சேர்ந்தார். 1911-ம் வருடம் மாசி மாதம் சுக்ல சஷ்டியன்று ஆண்டவனுக்கு வெள்ளியங்கிரி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வித்து மகிழ்ந்தார்.

பழநியிலிருந்து கொழும்பு போகும் வழியில் “பெரியாவடையார்” என்ற பிரஹதீசுவரர் கோயில் கொண்டிருக்கிறார்.இது பிரும்மா தவம் செய்த தலம்.ஆதிசேஷனுக்கு ஈசுவரன் தரிசனம் அளித்த இடம்.இங்கு கற்பாறையில் இலுப்பை மரத்தடியில் லிங்கம் இருக்கிறது.இத்தலத்திற்கும் சுவாமிகள் அடிக்கடி வந்து தீர்த்தம் எடுத்துச் சென்று பழநியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வைப்பதுண்டு.

இவ்வாறு மைசூர் சுவாமிகள் நான்கு ஆண்டுகள் முருக பக்தியில் ஒன்றி, அரிய தவமிருந்தார்.சகல சித்திகளும் கைகூடிய அவர் மனம் அவற்றில் நாட்டம் கொள்ளவில்லை.யோகப் பயிற்சிகளின் மூலம் உன்னத சக்திகள் பெற்றிருந்தும், சத்தியப் பொருளையே அவர் தேடிக் கொண்டிருந்தார்.திருப்புகழ் ஓதுவதையே உயிர் மூச்சாகக் கருதியவரின் உள்ளத்தில் கருணை வெள்ளம் கரை புரண்டோடியது.ஏழை எளியவர்களின் துயர் துடைக்கத் துடித்தார்.அவர்களுக்கு வயிறார உணவளித்து மகிழ்ந்தார்.பிணியால் வாடியவர்களுக்கு சிகிச்சை செய்வதில் எல்லையற்ர ஆனந்தம் கொண்டார்.

அடுத்து திருச்செந்தூருக்குச் செல்லுமாறு சுவாமிகளுக்கு உத்தரவாயிற்று.மனைவியும், மகனும் உடன் வர நடந்தே திருச்செந்தூர் அடைந்து, மூன்று நாட்கள் சண்முகநாதரை வழிபட்டார். அங்கிருந்து இலங்கையிலுள்ள கதிர்காமத்திற்கு  வரும்படி கந்தன் கனவில் வந்து அழைக்கவே, சுவாமிகள் தூத்துக்குடிக்குப் புறப்பட்டார். ஆனால் கப்பல் பிரயாணத்திற்கு அனுமதி கிடைக்காததால், குடும்பத்துடன் இராமேசுவரத்திர்குப் பயணமானார்.

அச்சமயத்தில் பன்னிரண்டு வயதி நிரம்பிய மகன் நரசிம்மன், பழநிக்குத் திரும்பி நாட்டுக் கோட்டை செட்டிமார் சிலருடன் சேர்ந்து பர்மாவுக்குப் போய் விட்டான்.சுவாமிகள் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து சமையல் செய்தும், திருப்புகழ் பாடியும் பணம் சம்பாதித்து கதிர்காமத்திற்குப் புறப்படத் தயாரானார்.

ஆனால், இலங்கை செல்ல சர்க்கார் அனுமதி கிடைப்பது கடினமாக இருந்தது.அனுமதி வழங்கும் அதிகாரம் பெற்ற ஆங்கிலேய துரையை அணுகி, தம் விருப்பத்தைக் கூறினார்.பின்னர், புலால் சேர்க்காமலே துரைமார்களின் ருசிக்கு ஏற்ற வகையில் வெகு சாமர்த்தியமாக சமைத்துப் போட்டு அவரை திருப்திப்படுத்தினார்.மகிழ்ச்சியடைந்த துரையும் சுவாமிகள் இலங்கை செல்ல அனுமதி வழங்கினார்.

கதிர்காமக் கோயிலின் எழிலிலும், சூழ்நிலையின் வசீகரத்திலும் மனத்தைப் பறி கொடுத்த சுவாமிகள், அங்கு நாற்பத்தெட்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு, இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். வழிநெடுகிலுமுள்ள ஆலயங்களைத் தரிசித்து அங்கெல்லாம் திருப்புகழ் பாராயணம் செய்து பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார்.

தாய் நாட்டிற்குத் திரும்பிய சுவாமிகள் தூத்துக்குடியிலிறங்கி, திருச்செந்தூருக்குச் சென்று ஆறுமுகனைத் தரிசித்துக் கொண்டு, கோயில்பட்டியை அடைந்தார். அங்கு வேங்கடராயர் என்பவரின் தொடர்பு ஏற்பட்டது.வேங்கடராயர் பல சாத்திரங்களைக் கரை கண்ட மாமேதை.ஆசார சீலர்.சுவாமிகளும், அவரது மனைவியும் ராயரிடம் நாற்பத்தைந்து நாட்கள் பகவத் கீதையிலிருந்தும், ஞான வாசிஷ்டத்திலிருந்தும் பாடம் கேட்டனர்.பல தத்துவங்களைக் கற்றறிந்தனர்.அதன் விளைவாக, சுவாமிகளுக்கு சந்நியாச ஆசிரமத்திலும், ஆத்ம விசாரத்திலும் நாட்டம் ஏற்பட்டது.தமது எண்ணத்தை ராயரிடம் தெரிவித்தார். ராயர், திருவண்னாமலைக்குச் சென்று, ஞான மலையின் நிழலில் மோனத் தவம் புரிந்து கொண்டிருக்கும் ரமண மகரிஷியையும், சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசித்தால் அவர்கள் நல்வழி காட்டுவார்கள் என்று சுவாமிகளிடம் எடுத்துச் சொன்னார்.

அடுத்து பழநிக்கு வந்த சுவாமிகள், வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் சென்று விட்டு, திருவாதிரை திருநாள் தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்குப் பயணமானார்.

மைசூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட அர்த்தநாரி, திருவண்ணாமலையை அடைந்ததும், மலை மீது வாசம் செய்து கொண்டிருந்த ரமண சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றார்.ஆசிரமத்தின் வாயிலில் தரிசனத்திற்காக நின்று கொண்டிருந்த சிறு கூட்டத்தில் சேர்ந்து கொண்டார்.

சற்றைக்கெல்லாம் ரமணர் வெளியே வந்தார்.கோவணாண்டியாகக் காட்சி தந்த மகரிஷி சிறிது நேரம் அப்படியே நின்றார்.அவரை உற்று நோக்கினார் அர்த்தநாரி.மகரிஷியும் அர்த்தநாரியை ஊடுருவிப் பார்த்தார்.ஒரு கணம்தான். அவ்விடத்தில் நின்றிருந்த ரமணர்  மறைந்து அர்த்தநாரியின் கண்களுக்கு பழநியாண்டவரே காட்சியளித்தார். பிரமையோ என்று நினைத்து அர்த்தநாரி கண்களை கசக்கிக் கொண்டு உன்னிப்பாகக் கவனித்தார்.சந்தேகமில்லை.சாட்சாத் பழநியாண்டவரேதான்.அர்த்தநாரிக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.“தண்டபாணிக்கு ஹரோஹரா” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.பொலபொலவெண்ரு கொட்டிய கண்ணீர் அவர் கன்னங்களில் வழிந்தோடியது.அவருக்குப் பேச்சே எழவில்லை.