வள்ளிமலை – 4

தமக்குப் பழநியாண்டவராகக் காட்சி தந்த ரமண பகவானின் சந்நிதியை விட்டு அகலவே மனம் இல்லாமல் இரண்டு மூன்று மாதங்கள் திருவண்ணாமலையிலேயே தங்கியிருந்தார் மைசூர் சுவாமிகள்.சமயம் வாய்த்த போதெல்லாம் ரமணர் முன்னிலையிலும், ஈசுவர சுவாமிகள் முன்னிலையிலும் அமர்ந்து திருப்புகழ் பாடுவார்.மகான்கள் இருவரும் அன்பரின் முருக பக்தியைக் கண்டு மனமிளகி, பிழைகளைத் திருத்துவார்கள்.சந்தம் பிரித்து, ஓசை நயத்துடன் முறையாகத் திருப்புகழைப் பாடுவதற்கு அவர்களிடம் கற்றுக் கொண்டார் சுவாமிகள்.இரு மகான்களும் அவரைத் “திருப்புகழ் முருகன்” என்றே அழைப்பது வழக்கம்.

சுவாமிகள் திருப்புகழ் பாடிக் கொண்டு வர, எல்லோரும் ஒரு நாள் கிரிவலம் வந்தார்கள்.அப்போது சுவாமிகள் அருணகிரிநாதரின் வேடச்சி காவலன் வகுப்பு பாடிக் கொண்டு வந்தார்.அப்பாடலின் இறுதியில் “காவலனே, காவலனே, காவலனே” என்று சுவாமிகள் பாடியபோது, ரமணர் வேடிக்கையாக “ஏமேமி காவலனே, எதெந்தா காவலனே” என்று தெலுங்கில் கேட்டார்.அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு சாது, “இட்லி காவலனே, காப்பி காவலனே” என்று கூறினார்.சற்றைக்கெல்லாம், அந்தக் காட்டுப் பாதையில் சற்றும் எதிர்பாராதவகையில் ஒருவர் இட்லியும், காப்பியும் கொண்டு வந்தார்.அத்தனை பேரும் அதைப் புசித்துக் களைப்பாறினார்கள். விளையாட்டானாலும், பக்தனின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு வேடச்சி காவலனான முருகந்தான் இட்லி வியாபாரியாக அங்கு தோன்றினான் என்றே எல்லோரும் கருதினர்.

திருவண்ணாமலையில் தங்கியிருந்த போது ஒரு நாள் கூட  மைசூர் சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள் அருகில் சென்று தரிசித்ததில்லை. தொலைவில் நின்றபடி ஒரு கும்பி போடுவதோடு சரி, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே அவரிடம் உபதேசம் பெறும் பாக்கியத்தைப் பெற்றார் அவர்.மகான்களின் தரிசனமும், தொடர்பும் அதற்கான வேளை வந்தால்தான் கிட்டும்.பிராப்தம் இல்லாவிட்டால் எத்தனை அருகில் இருந்தாலும் அவர்களைத் தரிசிக்கும் பேறு நமக்குக் கிட்டாது.

அருணாசலத்திலிருந்து மைசூர் சுவாமிகளுக்கு இமாலய யாத்திரை செய்ய வேண்டும் என்ற பேரவா ஏற்படவே, மஞ்சகுப்பம் கிருஷ்ணய்யரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, சென்னிய அரண்மனைக்காரத் தெருவிலுள்ள வெங்கடேசய்யர் என்ற புரோகிதரின் வீட்டுக்குச் சென்றார்.

மைசூர் சுவாமிகளுக்கு அன்னதானம் செய்வது என்றால் மிக விருப்பம்.கையில் காசு கிடைத்தால் இரண்டு பேருக்காவது உணவு அளித்து மகிழ்வார். அவர் சென்னைக்கு வந்ததும், சஷ்டி புண்ணிய தினம் நெருங்கியதால், அன்று வீங்கடேசய்யர் இல்லத்தில் சமாராதனை நடத்துவது என்று முடிவு செய்து, அதாற்கான முயற்சியில் முழு மனத்துடன் ஈடுபட்டார்.

அச்சமயம் சென்னை கந்தசாமி கோயிலுக்கருகில் “கொசக்கடை சாமியார்” என்ற மகான் வசித்து வந்தார். சமாராதனைக்கு முதல் நாள் மாலை, அப்பக்கமாகச் சென்ர சுவாமிகளின் காதில் விழும்படி “சொத்து அடித்துக் கொண்டு போக வந்திருக்கான், எல்லாம் நாளைக்குக் கிடைக்கிறது” என்று அந்தச் சாமியார் தமக்குத் தாமே பேசிக் கொண்டார். அதை தெய்வ வாக்காகவே நினைத்தார் சுவாமிகள்.

மறுநால் சஷ்டி சமாராதனைக்கு அநேகம் பேர் வந்தனர்.இறுதியாக ஒரு வயோதிகர் வந்து “சாப்பாடு கிடைக்குமா?” என்று யாசித்தார்.தொழு நோயால் பீடிக்கப்பட்டிருந்த அவரைப் பார்க்க அருவெறுப்பாக இருந்தது.பந்தியில் அவரை உட்கார வைத்தால் இதர விருந்தாளிகள் முணுமுணுக்கப் போகிறார்களேயென்று, அந்த வயோதிகரை வேறோர் அறையில் உட்கார வைத்து உணவு படைத்தார் சுவாமிகள்.பிறரைப் போலவே அவரையும் அன்புடன் உபசரித்தார்.

சமாராதனை முடிந்ததும், சுவாமிகள் எச்சில் இலைகளில் விழுந்து புரளுவது வழக்கம்.கூடத்திலிருந்த இலைகளில் புரண்டு விட்டு, அறையில் வயோதிகர் உணவருந்திய இலையிலும் புரண்டார்.

அடுத்த கணம் அவர் நினைவிழந்தார்.அவருக்கு ஒரு பேரொளி தரிசனமாயிற்று.அந்த ஒலி சேஷாத்ரி சுவாமிகளாக உருமாறியது.அவர், “இதெல்லாம் என்னடா?போகலாம் வாடா?” என்று கூறி தமது சிகையையும் பூணூலையும் களைந்து ஏறிவது போலவும், “நீ மேலான பதவியடைவாய்” என்று அருள் வாக்கு நல்கியது போலவும் சுவாமிகளுக்குத் தோன்றியது.

வீடு தேடி வந்த வயோதிகர், உபதேசம் பெறத் தக்கவனா என்று தம் வருங்கால சீடனை சோதிக்க வந்த சேஷாத்ரி சுவாமிகளாகத்தான் இருக்க வேண்டும்.

அந்தக் கணத்திலிருந்து சுவாமிகளின் உள்ளத்தில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டு விட்டது.சுய உருவை தரிசித்த சத்திய ஞானியாகவே அவர் திகழ்ந்தார்.காவியுடை அணியாவிட்டாலும், உள்ளத்தளவில் அவர் துறவறம் பூண்டு விட்டார்.பூணூலை அறுத்தெறிந்தார்.அன்ன ஆகாரத்தை வெறுத்து, கச்சாலீசுவரர் ஆலயத்தில் போய் அமர்ந்து விட்டார்.

சுவாமிகளின் மனைவியாருக்கு ஒரே கவலையாகி விட்டது.அவரது நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட ஓரிருவர், சுவாமிகளிடம் சென்று வாதாடினர்.“நீங்கள் தனியாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் போகலாம்.உங்கல் மனைவியின் கதியைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டாமா?இந்த அம்மாளை உங்கள் பிள்ளையிடம் ஒப்படைத்து விடுங்கள்.அதுவரை உங்கள் மனைவி உங்களுடனேயே இருக்க வேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறினர்.அவர்களுடைய வாதத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்து, அவ்விதமே நடப்பதாக இசைந்தார் சுவாமிகள்.

அடுத்த கிருத்திகை தினத்தன்று மனைவியுடன் திருத்தணித் தலம் சென்றார் அவர்.அங்கு முருகன் சந்நிதியில் நின்று வெகு நேரம் திருப்புகழ் பாடினார்.பின்னர் தெய்வயானை சந்நிதிக்குச் சென்று மெய்யுருகிப் பாடினார்.உலகை மறந்து அவர் திருப்புகழ் அமுதம் பொழிந்து கொண்டிருந்ததை மற்றொரு முருக பக்தர் கேட்டு, உள்ளம் உருகி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரது அன்னையும் உடனிருந்தார்.இது நடந்தது 1913-ம் வருடம் அந்த முருக பக்தரின் பெயர் வ. சு.செங்கல்வராய பிள்ளை.

செங்கல்வராய பிள்ளையின் தந்தையாரான வ. த. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்த திருப்புகழ் பாக்களைச் சேகரித்து, வழக்கிலிருந்த பாட்டுக்களையும், செல்லரித்த ஓலைச்சுவடிகளிலிருந்த பாடல்களையும் அரும்பாடு பட்டுத் தேடி, நூலாக வெளியிட்டு இந்து சமயத்திற்கும், அருணகிரியாரின் அடியார்களுக்கும் இணையற்ற சேவை செய்தவர்.

1870-ம் ஆண்டு வள்ளிமலை சுவாமிகள் அவதரித்தார். உலகில் திருப்புகழை பரப்புவதற்காக ஆண்டவன் அருளால் தோன்றிய அந்த மகான் பிறந்த மறு வருஷத்திலிருந்து, அதாவது 1971-ம் ஆண்டிலிருந்தே சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் திருப்புகழ் பாடல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். பழநியாண்டியின் சந்நிதியில் “வங்காரமாரிலணி” என்ற பாடலைக் கேட்டு, வள்ளிமலை சுவாமி திருப்புகழுக்கு அறிமுகமான போது, அவர் அதை முறையாகக் கற்றறிவதற்கு உதவும் பொருட்டு சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் திருப்புகழ் நூலை வெளியிட்டு தயாராக வைத்திருந்தார் போலும்!

எல்லாமே எமையாளும் தணிகேசனின் கருணை!

தந்தை சேர்த்து வைத்த திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கவுரை எழுதி நற்பணியாற்றும் பெருமை அவரது மகனான செங்கல்வராய பிள்ளையவர்களுக்கு கிடைத்தது நமது பாக்கியம்.