வள்ளிமலை – 5

தணிகேசன் தந்த வரப்பிரசாதத்தால் திருப்புகழ்த் தொண்டு புரியத் தொடங்கியிருந்த மைசூர் சுவாமிகள் தணிகேசனின் திருச்சந்நிதியில் திருப்புகழை உரத்த குரலில் ஓதிக் கொண்டிருந்தார். செங்கல்வராயப் பிள்ளையவர்களும், அவரது தாயாரும் அதை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.ஆச்சரியமடைந்த அன்னையார் மகனிடம், “அப்பா, அவரிடம் சென்று, அந்தப் பாடல்களை எந்தப் புத்தகத்திலிருந்து மனப்பாட்ம செய்தார் என்று கேட்டு வா” என்று அனுப்பினார்.

மக்ன முதலில் தயங்கி விட்டு, பின்னர் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சுவாமிகளிடம் சென்று மெள்ள விசாரித்தார்.அதற்குச் சுவாமிகல், “வ. த. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் படித்தேன்” என்று கூறினார்.உடனே, பிள்ளையவர்கள் அட்கக முடியாத மகிழ்ச்சி பொங்க, “சுவாமி, அவர் என் தந்தைதான்.என் பெயர் செங்கல்வராயன்” என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இதைக் கேட்ட சுவாமிகளுக்கு வியப்பை அடக்க முடியவில்லை.“அப்படியா என் கண்ணே!உன்னைத்தான் இத்தனை நாள் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று அவரை அன்புடன் தழுவிக் கொண்டார்.

தம்மிடம் நானூற்றைம்பது பாடல்கள் அடங்கிய முதல் பாகம்தான் இருக்கிறது என்றும், இரண்டாவது பாகத்தையும் பழநிக்கு உடனே அனுப்பி வியக்கும்படியும் சுவாமிகள் கேட்டுக் கொண்டார். ஒரு வாரத்த்திற்கெல்லாம் பிள்ளையவர்களும் அந்த நூலை சுவாமிகளின் பழநி விலாசத்திற்கு அனுப்பி வைத்தார்.

அரண்மனைக்காரத் தெருவில் புரோகிதர் வெங்கடேசய்யர் வீட்டில் நடைபெற்ற சமாராதனையின் போது, ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஒளித் தரிசனத்தைக் கண்டதிலிருந்து, பந்த பாசமற்று, ஞான வைராக்கியத்துடன் வாழ்ந்த சுவாமிகளுக்கு, குடும்பத்தைத் துறந்து, தன்னிச்சையாகப் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுக்கத் தொடங்கியது. தம் மனைவியை அழைத்துக் கொண்டு பழநிக்குச் சென்று, மகனைப் பர்மாவிலிருந்து வரவழைத்து, அவனிடம் தாயை ஒப்படைத்து விட்டு திருப்புகழ் பாடிப் பணம் சம்பாதித்து, நண்பர்கள் ஆதரவோடு காசி யாத்திரை புறப்பட்டார்

பின்னர் இமாலயப் பகுதிகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் புண்ணியத் தலங்களைத் தரிசித்து, புனித நீராடினார். ஹரித்வார், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுந்த்ரி, அமர்நாத் முதலிய தலங்களைத் தரிசித்த பிறகு, இமாலயத்தில் தவம் புரிந்து வந்த ஒரு மகானிடம் முறையாகச் சந்நியாசம் பெற்றுக் கொண்டு சச்சிதானந்த சுவாமிகள் ஆனார். பத்து மாதங்கள் யார் கண்ணிலும் படாமல் காட்டுப் பிரதேசங்களில் வசித்தார்.நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்ய நோன்பு இருந்தார்.பின்னர் விதிப்படி தண்டத்தையும், கமண்டலத்தையும் கங்கைக்கு அர்ப்பணம் செய்து விட்டு, அதிவர்ணாசிரமத்தை மேற்கொண்டார்.அந்தக் கடுமையான குளிர்பிரதேசத்தில் பல மகாங்களுக்குப் பணிவிடைகள் செய்தும், உணவு தயார் செய்து தந்தும் தவநெறியோடு ஆன்ம வலிமையைப் பெருக்கிக் கொண்டார்.இமாலயத்தின் உச்சியில் திருப்புகழ் கொடியை நாட்டினார்.சென்றவிடமெல்லாம் முருக மணம் பரப்பினார்.அன்பு மழை பொழிந்தார்.

ஒரு நாள் அயோத்தியில் ராமர் கோயிலைத் தரிசித்து விட்டு ஆகாரமின்றி சுவாமிகள் ஒரு மரத்தடியில் அமர்ந்து திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார்.உச்சி வேளை நெருங்கியது.சுவாமிகளுக்குப் பசி தாங்க முடியவில்லை.அண்ணாந்து பார்த்தார்.மரக் கிளைகளில் நிறைய குரங்குகள் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, அவற்றை நோக்கி, “வஞ்சங்கொண்டுந்திட ராவண” என்ற திருப்புகழைப் பாடினார்.“குரங்கு துஞ்சுங் கனல் போல் வெகுண்டுங் குன்றுங் கரடார் மரமது வீசி” என்று வானர சேனைகளின் திறமையையும், வல்லமையையும் பாராட்டும் பாடல் இது. இந்தப் பாட்டைக் கேட்ட குரங்குகள் சில ஓடோடியும் சென்று, காட்டு வழிப் பாதையில் பஞ்சாபி யாத்திரிகர்கள் தயார் செய்து கொண்டிருந்த ரொட்டிகளில் சிலவற்றைத் தூக்கிக் கொண்டு வந்து சுவாமிகளிடம் போட்டன. குரங்குகளைத் துரத்திக் கொண்டு வந்த பஞ்சாபிகள், சாது ஒருவர் தங்கள் ரொட்டிகளை சாப்பிடுவது கண்டு மன மகிழ்ச்சியோடு சென்றனர்.அன்று ஸ்ரீ ராமநவமி தினம்.

தமது வட இந்திய யாத்திரையை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய சுவாமிகள், மீண்டும் திருவண்ணாமலைக்குச் சென்றார்.மலை மீதிருந்த ரமணருக்குப் பணிவிடிய செய்து கொண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த சுவாமிகளைப் பார்த்து, “கீழே போங்கள்” என்று பகவான் உத்தரவிட்டார்.சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.“என்ன அபசார்ம செய்தேனோ?பகவான் ஏன் என்னைப் போகச் சொல்கிறார்?” என்று எண்ணி எண்ணி அதற்கு விடை காண போக முடியாமல் மனம் குமைந்தார்.பின்னர், குருநாதரின் கட்டளையை சிரமேற்கொண்டு மலையை விட்டுக் கீழே இறங்கினார்.

மலையடிவாரத்தில் எருமையொன்று குட்டையைக் கலக்கிக் கொண்டிருந்தது.எருமையையும் பிரும்மமாகக் கருதிய ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், அதைத் தழுவி, ஆனந்தத்தில் லயித்திருந்தார்.அவர் திருமேனியில் சேறும் சகதியும் படிந்திருந்தாலும், சுற்றுப்புறம் எங்கும் சந்தனத்தின் நறுமணம் “கம்”மென்று வீசியது.

ரமண பகவான் தம்மைக் கீழே இறங்கிப் போகச் சொல்லிவிட்டாரேயென்ற மனத் தளர்ச்சியுடன் மலையிலிருந்து இறங்கி வந்த சச்சிதானந்த சுவாமிகளைப் பார்த்தார் சேஷாத்ரி சுவாமிகள். ஓடிப்போய் அவரை அப்படியே கட்டித் தழுவினார்.கீழே அமர்ந்து அவரை மடி மேல் அமர்த்திக் கொண்டார்.இவர் மீதிருந்த சகதி அவர் மீதும் ஒட்டிக் கொண்டது.சுகந்தம் பன்மடங்காக வீசியது.

முக்காலத்தையும் உணர்ந்த பிரும்ம ஞானியான ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அர்த்தநாரியையா கண்டார்?திருப்புகழ் அமுதத்தை வாரி வழங்குவதற்காகவே அவதரித்துள்ள திருப்புகழ் சுவாமிகளை ஒரு நொடியில் அடையாளம் கண்டு கொண்டார்.

வருங்காலத்தில் வள்ளிமலை வள்ளலாக விளங்கப் போகிறவரைத் தமது சீடராக ஏற்றுக் கொண்டு, ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய “சிவமானஸ பூஜா” என்ற ஐந்து சுலோகங்களில் ஒன்றான “ஆத்மாத்வ்ம கிரிஜாமதி” என்ற நாங்காவது சுலோகத்தைக் கூறி உபதேசமும் செய்தருளினார்.

ஈசனே, நீயே என் ஜீவாத்ம. என் புத்திதான் பார்வதி தேவி, பிராணன் முதலிய வாயுக்கள் உன் பரிவாரங்கள், என் உடம்பே நீ வசிக்கும் கோயில்.நான் ரசிக்கும் விஷயங்களும் போகங்களும் உனக்குரிய பூஜையாகும்.என் தூக்கமே சமாதி நிலை.காலால் நடக்கும்போதெல்லாம் நான் உன்னை வலம் வருகிறேன்.என் வாயிலிருந்து வெளிவரும் சொற்களெல்லாம் உன்னைப் பற்றிய தோத்திரங்கள்.நான் செய்யும் காரியங்களெல்லாம் உனக்கு நான் செய்யும் ஆராதனையாகும்.