“சொந்த நலனுக்காக ஒரு காரியமும் செய்யாமல், சிந்தனை, சொல், செயல் மூன்றையும் நம்மைப் படைத்த பரம்பொருளுக்கே அர்ப்பனித்து வாழ்ந்தால், “நான், எனது, உன், உனது” என்ற வேறுபாடுகள் நீங்கி, பிரும்ம தத்துவத்தை உணர்ந்து உன்னத நிலையடைவாய்” என்று ஆசி வழங்கினார் குருநாதர். பின்னர் சீடரைப் பார்த்து, “உன் பெரியோர்களும் சந் நியாசிகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.உனது துறவு வாழ்க்கையும் சிறக்கப் போகிறது.உனக்குத் திருப்புகழ்தான் மாமந்திரம்” என்று கூறியதும், சச்சிதானந்த சுவாமிகளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.உடல் நடுங்கக் கை கூப்பி நின்றார்.
பின்னர், சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ ஆதிசங்கரரின் சுலோகத்தின் கருத்தை தெளிவாக விளக்கி விட்டு, “இதே கருத்து கொண்ட பாட்டுக்கள் திருப்புகழில் இருக்கிறதா?” என்று கேட்டார். உடனே சீடர், “எனது யானும் வேறாகி, எங்கும் யாதும் யானாகும் இதய பாவனாதீதம் அருள்வாயே”ஏன்று வரும் திருப்புகழைப் பாடிக் காட்டி, அதன் பொருளையும் எடுத்துக் கூறினார். தமிழில் அதிகப் பழக்கமற்ற சேஷாத்ரி சுவாமிகள், “வேத மந்திரங்களைக் காட்டிலும் ஆழமான கருத்துக்கள் திருப்புகழில் எளிமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. நீ திருப்புகழுக்காகவே பிறந்தவன். அந்த மகாமந்திரமே போதும். வேறு மந்திரங்கள் உனக்குத் தேவையில்லை.நீ வேத சாஸ்திரங்களைக் கற்க வேண்டிய அவசியமும் இல்லை. நீ திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டிருந்தாலே போதும், நீ வள்ளிமலைக்குப் போ, பிறகு நானும் அங்கு வருகிறேன்” என்று கூறி சுவாமிகளுக்கு அருளாசி வழங்கி அனுப்பிவ் ஐத்தார்.
அருணாசலத்தில் அருணகிரிநாதர் அவதரித்து, திருப்புகழ் பாடித் தந்தார்.முருகனின் அம்சமான ரமண பகவான், அத் திருப்புகழைப் பரப்புவதற்காகவே பிறந்திருந்த வள்ளிமலை சுவாமிகளை பராசக்தியின் வடிவான சேஷாத்ரி சுவாமிகளிடம் அனுப்பி வைத்தார்.தாயின் அருட்பெருங்கருணையோடு அரவணைத்து, அருளுபதேசம் செய்து, அன்னாரை வள்ளிமலைக்கு அனுப்பி வைத்தார் சேஷாத்ரி சுவாமிகள்.அடி, முடி காண முடியாத நித்தியமான சத்திய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அருணாசலத்தின் பெருமைக்கு முடிவேது, முற்றுப்புள்ளி ஏது?
சென்னையிலிருந்து எண்பதாவது மைலில், பெங்களூர் செல்லும் பாதையிலிருக்கும் திருவலம் என்ற தலத்திலிருந்து எட்டாவது மைலில் வள்ளிமலை இருக்கிறது.கந்த புராணமும், திருப்புகழும் அதன் சிறப்பை வானளாவப் பேசுகின்றன.
மான் உரு தாங்கிய இலக்குமிக்கும், சிவமுனிவராய் வந்த திருமாலுக்கும் திருமகளாக ஸ்ரீ வள்ளி பிறந்து, வளர்ந்து, ஓடியாடி, தினைப்புனங்காத்து, தவமியற்றி, முருகப் பெருமானை மணம் புரிந்த மலைப்பகுதி அது. இம்மலையைச் சுற்றி, மான் கருவுற்ற இடத்தைக் குறிக்கும் கருமான் ஓடை, மான் வள்ளியை ஈன்ற இடத்தைக் குறிக்கும் பெருமான் குப்பம், நம்பிராஜன் கோட்டை, பரண்கள், சுனைகள் எல்லாமே வள்ளியின் வரலாற்றுக்குச் சான்றுகள் கூறுகின்றன. இச்சா சக்தியான வள்ளியம்மை அருள் தவம் இருந்து, முருகனின் மீது காதல் கொண்டு, அவன் கரம் பற்றிய வள்ளிமலை ஒரு சக்தி பீடமாகத் திகழ்கிறது. முருகவேளின் புனிதப் பாதங்கள் பதிந்து புண்ணியமடைந்துள்ள வள்ளிமலைக்குச் செல்பவர்களுக்கு மரணமெ கிடையாது என்பது அருணகிரியாரின் திருவாக்கு.
வள்ளிமலையின் அடிவாரத்தில் சண்முகநாதரின் ஆலயம் இருக்கிறது. மலையின் மீது ஒரே பாறையில் அமைந்துள்ள சுப்ப்பிரமணியர் ஆலயம் காட்சியளிக்கிறது. அதுதான் மூலஸ்தானம். கீழே உற்சவமூர்த்தி வீற்றிருக்கிறார். மாசி மாதத்தில் நடைபெறும் பிரும்மோற்சவத்தில் தேர் மலையைச் சுற்றிக் கொண்டு வரும். பிறகு வேடர்பறி என்ற உற்சவம் நடைபெறும். ஆலயத்திற்கு பின்புறம் சரவணப் பொய்கை இருக்கிறது. இதில் ஆடி மாதத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளால் வள்ளிமலைக்குப் போ என்ற அருளாசியோடு அனுப்பப்பட்ட ஸ்ரீ சச்சிதானந்த சுவாகிகள் 1916-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது அங்கு வந்து சேர்ந்தார். மலை மீதுள்ள மூலஸ்தான விக்ரகத்திற்கும், கீழ்க் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட சண்முகநாதர் விக்ரகத்திற்கும் அவ்வாண்டு கும்பாபிஷேகம் நடத்தினார்கள். முதல் முறையாக வள்ளிமலைக்கு வந்த சுவாமிகள், அன்னதான சிவன் என்று அழைக்கப்பட்ட பழநி சிவனுடன் சேர்ந்து, பொருள் சேர்த்து இவ்விழாவை வெகு சிறப்புடன் கொண்டாடினார். ஊர் ஊராக, கிராமம் கிராமமாக திருப்புகழ் பாடிச்சென்று, திருப்புகழின்பால் ஈர்க்கப்பட்ட மக்களின் ஒத்துழைப்புடன் பெருமளவில் அன்னதானம் செய்வித்தார். பின்னர் குருநாதரின் வாக்கை வேத வாக்காகக் கொண்டு, அந்த ஆண்டிலேயே மலையுச்சியுலுள்ள பர்வதராஜன் குன்றுக்கருகில் உள்ள ஒரு குகையைத் தமது இருப்பிடமாக்கிக் கொண்டார். அதுவே பின்னர் திருப்புகழ் ஆசிரமமாயிற்று.
மலையடிவாரத்தில் ஆபத்சகாய விநாயகர் அமர்ந்திருக்கிறார். சமயத்தில் வந்து முருகவேளுக்கு உதவி புரிந்த பெருமானல்லவா? வள்ளி மலைக்கும், தணிகை மலைக்கும் உள்ள தொடர்பை நினைவுபடுத்துவது போல் அவர் அங்கு கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
அருகில் தினைப்புன வள்ளியம்மை சந்நிதியும் இருக்கிறது. வள்ளியம்மை ஆயலோட்டுவது போல் கவண் கயிற்றுடன் காட்சியளிக்கிறாள். மயில் மண்டபத்திலிருந்து திரும்பிப்பார்த்தால் சரவணப்பொய்கையும், காற்றில் அசைந்தாடும் மரங்களும், அதற்குப் பின்னால் அசையாமல் நிற்கும் சண்முகரின் கருவறை விமானமும் ராஜ கோபுரமும் எழில் ஓவியமாகக் கண்ணையும், கருத்தையும் கவருகின்றன.
உச்சியில் தெரியும் கோபுரத்தையும், கொடி மரத்தையும் பார்த்துக் கொண்டே நடப்பவர்களுக்கு, வேதத்திற்கும் எட்டாத பெருமானை விரைவில் எட்டிப் பிடித்து விடப் போகிறோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. மலை முருகன் இயற்கையான சூழ்நிலையில் குகைக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறான். கொடி மரமும், ஒரே பாறையில் எழும்பியுள்ள கோபுரமும் மனத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. முன் மண்டபமும் பெரிய பாறைகளால் மூடப்பெற்றிருக்கிறது. அந்த மண்டபத்தில் இடப்புறத்தில், பாறையில் ஆயலோட்டும் வள்ளியம்மையின் எழிலுருவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
உள்ளே செல்வ விநாயகரும், நவவீரர், அருணகிரிநாதர், காசி விசுவநாதர், காசி விசாலாட்சி முதலியோர் வீற்றிருக்கக் காணலாம். குகையைப் போன்ற கருவறையில் குகன், வள்ளி-தெய்வயானை சமேதராய் அருள் பாலிக்கிறார்.
அக்கோயிலில் ஒரு சுரங்கப்பாதை இருந்ததென்றும், அது இப்போது அடைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வழியேதான் முருகன், வள்ளியம்மையை இருபத்தைந்து மைல் தொலைவிலுள்ள திருத்தணிகைக்கு சிறையெடுத்துப் போனதாகவும் தலவரலாறு கூறுகிறது.
முருகனைக் கண்குளிர தரிசித்து விட்டு அடுத்து பார்த்தால் திருப்புகழ் ஆசிரமத்திற்கான வழி இருக்கிறது. அங்கே உள்ள பர்வதாரஜன் குன்றுக்கும், கன்னிக் குன்றுக்கும் இடையில்தான் திருப்புகழ் ஆசிரமம் அமைந்துள்ளது. அங்குள்ள சுனையில்தான் வள்ளிமலை சுவாமிகள் வந்து குளிப்பதாகவும், அங்குள்ள பாறையின் மேல் உட்கார்ந்து கொள்வதாகவும், அந்தப் பகுதியில் நடமாடியதாகவும் கூறப்படுகிறது.
பர்வதராஜன் குன்றின் உச்சியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது காணப்படும் வழுக்குப் பாறைகளின் மீது ஏறிச் சென்றால், அங்குள்ள பாறை வழுவழுப்பாக உள்ளது. அங்குதான் வள்ளியம்மை மஞ்சள் அரைத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அறிகுறியாக, அந்தப் பாறையில் மஞ்சள் தெளித்தது போல் புள்ளி புள்ளியாகத் தெரிகிறது. ஒரு துணியை நீரில் நனைத்து அந்தப் பாறையில் தேய்த்தால் அது மஞ்சள் நிறமாக மாறும் அதிசயத்தையும் காணலாம்.