பின்னர், பர்வதராஜன் குன்றில் ஒரு பாறையில் செதுக்கப்பட்ட ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதுதான் திருமால்கிரீசுவரர். திருமால் சிவ முனிவராக வேடம் தரித்து வந்து, சிவபெருமானை வழிபட்ட லிங்கம் இது. வள்ளிமலை கிராமத்திலிருக்கும் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் திருமானின் திருநாமமும் திருமால்கிரீசுவரரே.
முன்னொரு சமயம், வள்ளிமலையில் வெய்யில் காய்ந்து, மழையின்றி வறட்சியால், மக்களும், ஆவினங்களும் பரிதவித்த நிலை இருந்தது. அப்போது, சுவாமி சாதுராம் என்பவரும் அவரது நண்பர் கிருஷ்ணனும், வள்ளிமலை திருப்புகழ் ஆசிரமத்தில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். அப்போது சாதுராமுக்கு ஒரு யோசனை தோன்றியது. மழை பெய்யாவிட்டால், அருகிலிருக்கும் சுனையிலிருந்து நூறு குடம் தண்ணீர் எடுத்து வந்து திருமால்கிரீசுவரருக்கு அபிஷேகம் செய்தால் மழை பொழியும் என்று திருப்புகழ் சுவாமிகள் சொன்னது நினைவுக்கு வரவே, அவ்வாறு செய்யலாம் என்று அவர் தீர்மானித்து, அவரும் உடன் இருந்த அன்பர் கிருஷ்ணனும் தேவாரத் திருமுறைகளைப் பாடிக் கொண்டே திருமால்கிரீசுவரருக்கு நூற் குடம் தண்ணீர் அபிஷேகம் செய்வித்தனர். மேகராகக் குறிஞ்சியுடன் அபிஷேகம் தொடங்கியதுமே சூரியன் மேகங்களுக்குப் பின்னால் மறைந்து விட்டான்! அபிஷேகம் முடிந்ததும் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்தன. வானம் இருண்டது. இடி முழக்கத்துடன், வானம்பிளந்தது போல் மழை கொட்டித் தீர்த்து விட்டது. மறுநாள் முழுதும் நல்ல மழை. மகான்கள் வாக்கு என்றுமே பொய்ப்பதில்லை.
பர்வதராஜன் குன்றிலிருந்து பார்த்தால், சோளிங்கபுரம், திருத்தணி மலையும் தெரிவதைக் காணலாம். திருப்புகழ் ஆசிரமப் பகுதிக்குள் நுழையும் முன்பு , ஜாம்பவான் குன்றையு, காவல் பாரா என்ற பாறையையும் காணலாம். ஆசிரமத்தின் மத்தியில் உள்ள அறைக்குள் நுழைந்தால், வள்ளிமலை சுவாமிகளின் உருவச்சிலை கருணையோடு வாவென்று அழைக்கிறது. பின்னால், ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ ரமண பகவான், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் முதலிய பேரருளாளர்களின் உருவப்படங்கள் காட்சி தருகின்றன. ஆசிரமத்திற்கு சற்று வெளியே இருப்பது பொங்கிப் பாறை.
“பொங்கி” என்பது வள்ளிமலையின் காவல் தெய்வம். அது வள்ளியம்மையின் உயிர்த்தோழி. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று தேவியரும் ஓருருவாக அமைந்த மாபெரும் சக்தி அது. அந்தப் பொங்கியை, அங்குள்ள பாறையுருவில் தரிசித்து, பூஜை செய்து வந்தார் வள்ளிமலை சுவாமிகள். ஆசிரமத்திற்கு வருபவர்களையெல்லாம், அந்தப் பாறையை வலம் வரச் சொல்லுவார். தற்போது அப்பாறைக்கு முன் வள்ளியின் உருவச்சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
பொங்கியின் அருள் சுவாமிகளுக்கு பரிபூரணமாகயிருந்தது. நினைத்த போது அவருக்கு அவல் தரிசனம் அளித்திக்கிறாள். ஒரு சமயம் சுவாமிகள் சென்னைக்கு வந்திருந்த போது, பத்து வயது சிறுமியொருத்தி அவரிடம் வந்து, திருப்புகழ் பாடுங்கள் தாத்தா, கேட்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது, என்று ஆர்வமாகக் கேட்டாள். குழந்தை கேட்டது தெய்வமே கேட்பது போலிருந்தது சுவாமிகளுக்கு. உடனே, அந்தத் தெருவிலுள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ஒரு திருப்புகழை ராக தாளத்துடன் அருமையாகப் பாடினார். “நானும் திருப்புகழ் பாடுவேன், கேட்கிறீர்களா?, என்று அந்த சிறுமி வினவ, சுவாமிகள், “பாடம்மா, அதைவிட் இன்பம் எனக்கு வேறென்ன இருக்கிறது?” என்ரு கூறினார். உடனே அந்தப் பெண், “விரகற நோக்கியும், உருகியும் வாழ்த்தியும்” என்ற திருப்புகழை மோகன ராகத்தில் மெய் சிலிர்த்திடப் பாடினாள். அதில் அப்படியே லயித்துப் போன சுவாமிகள், அச்சிறுமியை இறுகத் தழுவிக் கொண்டு உச்சி முகர்ந்தார். ஆனந்தம் தாங்க முடியாமல் பரவச நிலையெய்தினார்.
அப்போது அந்தச் சிறுமி, “நீங்க இவ்வளவு சந்தோஷப்டறிங்களே, நான் ஒண்ணு கேட்கிறேன், தருகிறீர்களா?” என்று கேட்டாள்.
“இதென்னமா கேள்வி, என்ன வேண்டுமோ கேள், என் உடல், பொருள், ஆவியையும் உனக்குக் கொடுத்தாலும் போதாதே” என்றார் சுவாமிகள்.
“அதெல்லாம் வேண்டாம், உங்க வெத்தலைப் பெட்டியைக் கொடுங்கள் போதும்” என்றாள் சிறுமி, சிரித்துக் கொண்டே.
சுவாமிகளுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவர் சற்றும் எதிர்பாராத பரிசை அல்லவா சிறுமி கேட்கிறாள்!
“இந்தாம்மா, நீயே வெச்சுக்க”, என்று தன் வெற்றிலைப் பெட்டியை அவளிடம் கொடுத்தார் சுவாமிகள். அதைப் பெற்றுக் கொண்ட சிறுமி அங்கிருந்து ஓடி மறைந்து விட்டாள்.
மூன்று நாட்கள் கழித்து, சுவாமிகள் வள்ளிமலைக்குச் சென்றார். அங்கு அவருக்குப் பேராச்சரியம் காத்திருந்தது. சென்னையில் சிறுமியிட்ம அவர் கொடுத்த வெற்றிலைப் பெட்டி குகை வாயிலில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிசயித்தார். அதை எடுத்துத் திறந்து பார்த்தார். அவர் அதில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நோட்டும், சில்லறை காசுகளும் அப்படியே இருந்தன. அத்துடன் அதில் ஒரு துண்டுக் காகிதமும் இருந்தது. அதில், “உன்னை நான் மறவேன், என்னை நீ மறவாதே, பொங்கி” என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த சுவாமிகள் உணர்ச்சி வசப்பட்டார். “பொங்கித் தாயே, நான் உன் அடிமையம்மா!” என்று கதறினார். அன்று முதல் அவர் பொங்கித் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்.
மற்றொரு மறக்க முடியாத நிகழ்ச்சியும் உண்டு :
சுந்தர சுவாமிகள் என்பவர் ஒரு சமயம் வள்ளிமலை சுவாமிகளிடம், “இம்மலையில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் வள்ளியம்மைக்கு வேறு பெயர் ஏதாவது உண்டா?” என்று கேட்டார். “அதற்கென்ன, இன்றோ, நாளையோ தெரிந்து கொண்டு விடலாமே…” என்று சாதாரணமாகக் கூறினார்.
மறுநாள் சுவாமிகள் இருவரும் மலையை விட்டு இறங்கி நடந்து வந்து கொண்டிருந்த போது, பத்துவயது சிறுமியொருத்தி “விரகற நோக்கியும்” என்ற திருப்புகழைப் பாடிக் கொண்டு சுவாமிகளை நோக்கி வந்தாள். சென்னையில் முன்பு வந்து வெற்றிலைப் பெட்டியை வாங்கிச் சென்ற சிறுமி பாடிய அதே திருப்புகழ்.
திருப்புகழில் லயித்திருந்த சுவாமிகளிடம் அச்சிறுமி, “சாமி, எனக்கு பசிக்குதுங்க, ஏதாவது கொடுங்க என்று கேட்டாள். அதற்கு சுவாமிகள், “இந்த நேரத்தில், இந்த இடத்தில் சாப்பாடு கேட்கறியே, என்னிடம் ஒன்றும் இல்லையே அம்மா” என்று கூறவும், அந்தப் பெண், “உன்னிடம் அன்பு கூட பொங்கி வராதா?” என்று கேட்டாள். அப்போதுதான் சுவாமிகளுக்கு, பிச்சை கேட்டு வந்தவள், வள்ளியம்மை என்றும், தன்னை பொங்கி என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவே அவ்விதம் பேசியதாகவும் அறிந்து கொண்டார். “அம்மா, உன்னை யார் என்று தெரியாமல் ஏதேதோ பேசி விட்டேனே! என்னை மன்னித்து விடம்மா” என்று கூறி அந்தப் பெண்ணின் கால்களைக் கண்ணீர் நனைக்க, அப்படியே விழுந்து கும்பிட்டார். சுவாமிகள் எழுந்து பார்த்த போது அந்தப் பெண் அங்கே இல்லை, எங்கோ மறைந்து விட்டாள்.
பொங்கிப் பாறையின் மீது, குங்குமத்தில், மயிலும், வெலும், பாம்பும் வரையப்படுவது வழக்கமாக இருந்தது.
வள்ளிமலை சுவாமிகள், பூஜை என்று ஏதும் செய்வது வழக்கமில்லை. திருப்புகழ்தான் அவருக்கு பூஜை, மந்திரம், தியானம், தபஸ் எல்லாம். மலையை விட்டு கீழே இறங்கும் போது, பொங்கிப் பாறை அருகில் வந்து கையை கூப்பி கும்பிட்டு விட்டு போவது வழக்கம். சுவாமிகளின் சமாதி கோயில் அமைந்துள்ள குகைக்குள் தலையை குனிந்து உள்ளே செல்ல வெண்டும். திருப்புகழ் மாமந்திரம் எந்நேரமும், ஒலித்து, எதிரொலித்து, முருகானந்தத்தில் மூழ்கி, கருணைக் கடலாக விரிந்து, வையத்தை வாழ வைத்த வள்ளிமலை சுவாமிகளின் இதயக் குகைக்குள் நுழைவது போன்ற உணர்வும், பய பக்தியும் அனைவருக்கும் தோன்றும்.
சுவாமிகள் மலைக்கு வந்த போது, அந்தக் குகை ஒருவர் ஊர்ந்து செல்லும் அளவுக்குதான் இருந்தது. சில பக்தர்களின் உதவியுடன் மண்ணைத் தோண்டி எடுத்து சுவாமிகள் இந்தக் குகையைப் பெரிய குகையாக்கினார்.
அங்கு மண்ணைத் தோண்டும் போது ஒரு அதிசயம் நடந்தது. பூமிக்கு அடியில் மூன்று எலும்புக் கூடுகள் தென்பட்டன. மூன்ரு மகான்கள் பத்மாசனத்தில் அமர்ந்து, நிட்டையில் ஆழ்ந்திருப்பது போலவே அவை காணப்பட்டன. அந்தத் தவ யோகிகள் யாரோ? எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வாழ்ந்தார்களோ? அது முருகனுக்கே வெளிச்சம்!சுவாமிகள் அந்த எலும்புகளையெல்லாம் செகரித்து, குகைக்கு வெளியே தனித் தனியே புதைத்து, அரச, வேம்பு, வில்வச் செடிகளை அவற்றின் மீது நட்டு வைத்து, அந்த ஜீவ சமாதிகளுக்குத் தினமும் பூஜை செய்து வந்தார். தற்போது ஓங்கி வளர்ந்திருக்கும் அம்மரங்களைச் சுற்றி மேடை கட்டப்பட்டிருக்கிறது. அந்த நிழலில் சற்று நேரம் அமர்ந்தாலே எல்லையற்ற மனச்சாந்தி ஏற்படுகிறது.