சுவாமிகள் ஆசிரமத்தை சீர்படுத்திக் கொண்டிருந்த போது, தெய்வமும் அவருடன் ஒத்துழைத்ததற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.
ஒரு நால் நள்ளிரவில் சீடர்களெல்லாம் நித்திரையில் ஆழ்ந்திருந்த போது, வயோதிகர் ஒருவர் கையில் மண்வெட்டியுடன் சுவாமிகளிடம் வந்து பசிக்கு உணவு வேண்டும் என்று கேட்டார். அவரை யார் என்று வினவ, தன் பெயர் மண்வெட்டிப் புலவர் என்றும், அருகிலுள்ள சுனையைச் சீர்படுத்தி, சுற்றுப்புறத்தை சுத்தமாக்கியுள்ளதாகக் கூறினார். உடனெ சுவாமிகள் மனம் இரங்கி, சட்டியில் இருந்த களியை எடுத்து அவரது மண்வெட்டியில் வைக்க, அதை ருசித்து சாப்பிட்டு விட்டு அந்த வயோதிகர் போய் விட்டார்.
சற்றைக்கெல்லாம் சீடர்களை எழுப்பி, நடந்த விவரத்தைக் கூறினார் சுவாமிகள். தாமாகவே வந்து உதவி செய்து விட்டுப் போன வயோதிகரைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் ஆவலுடன் சீடர்கள் புறப்பட்டார்கள். அந்தக் கிழவர் கணெசகிரி பக்கம் போவதைக் கண்டு வேகமாக நடந்தார்கள். ஆனால், அடுத்த கணம் வயோதிகரின் உருவம் மறைந்து விட்டது.
ஏமாற்றத்துடன் சீடர்கள் திரும்பி வந்து குகைக்கு அருகில் சென்று பார்த்தார்கள். அங்கு புல் பூண்டுகளெல்லாம் அகற்றப்பட்டு, நிலமெல்லாம் ஒழுங்காகக் கொத்தி விடப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயித்தார்கள். பலபேர், பல நாட்கள் பாடுபட்டு செய்து முடிக்க வேண்டிய அந்த வேலையை ஒரே நாளில் செய்து முடித்தவர் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஒரு சமயம் இந்தக் குகையில் அமர்ந்து சமாதி நிட்டை கூட வேண்டும் என்று நினைத்த சுவாமிகள், உள்ளே சென்று சீடர்களை அழைத்து, ஒரு பெரிய பாறையை கொண்டு வந்து குகை வாயிலை அடைத்து விடும்படி கூறினார். ஏழு நாட்கள் கழித்துப் பாறையை அகற்றும்படியும் உத்தரவிட்டார். சீடர்கள் முதலில் தயங்கினார்கள். சுவாமிகளின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என்று அஞ்சினார்கள். ஆனால் சுவாமிகள், தைரிய மொழிகள் கூறவே, அவர்கள் குகை வாயிலைப் பாறையால் அடைத்தனர்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, திருப்புகழ் பாராயணத்திற்காக கோட்டை நத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சண்முக ரெட்டியாரும், முருகேச வாத்தியாரும் ஆசிரமத்திற்கு வந்த போது சுவாமிகள் குகைக்குள் அடைக்கப்பட்டிருப்பதைக் கேட்டு திடுக்கிட்டு, சீடர்களைக் கடிந்து கொண்டார்கள். சுவாமியை பட்டினி போட்டுக் கொண்ற பாவத்திற்கும், போலீசாரின் தண்டனைக்கும் ஆளாக நேரிடும் என்று எடுத்துச் சொல்லி, குகை வாயிலை அடைத்திருந்த பாறையை அப்புறப்படுத்தி விட்டு, உள்ளே வெகமாக நுழைந்தார்கள்.
சுவாமிகள் பேச்சு மூச்சற்று, நிர்விகல்ப சமாதி நிட்டையில் ஆழ்ந்திருந்தார்கள். வெகு நேரம் கையைத் தட்டி அழைத்த பிறகே, தண்டபாணி என்ற திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே சுவாமிகள் கண் விழித்துப் பார்த்தார். குகை திறக்கப்பட்டிருப்பதையும், சுற்றிலும் சீடர்கள் நின்று கொண்டிருப்பதையும் கண்டு தமது நிட்டையைக் கலைத்ததற்காக அவர்களைக் கடிந்து கொண்டார். பிறகு அவர்கள் தங்கள் செய்கைக்காக வருந்தி, விளக்கம் அளித்த பின்னரே சுவாமிகள் சமாதானமடைந்தார்.
இந்தக் குகையில்தான் சுவாமிகள் அடியார்களுடன் திருப்புகழ் பாராயணம் செய்வது வழக்கம்.
ஆசிரமம் ஏற்பட்ட புதிதில், சுவாமிகளைக் கவனித்துக் கொள்வதற்கோ, அவருடன் சேர்ந்து திருப்புகழ் பாடுவதற்கோ ஒருவருமேயில்லை. அந்த இடத்திற்கு வருவதற்கே கிராம வாசிகள் பயந்தனர். அப்போதெல்லாம் சுவாமிகள் சப்பாத்திப் பழத்தை சாப்பிட்டே வாழ்ந்து வந்தார். பின்னர் கிராம மக்கள் அங்கு ஒரு சட்டியை வைத்து, அதில் கூழோ, கஞ்சியோ, களியோ வைத்து விட்டுப் போகும் பழக்கத்தைத் தொடங்கினார்கள். மைசூர் அரண்மனையில் அறுசுவை விருந்துண்டு பழக்கப்பட்டவர், அந்த பழங்கஞ்சியையும் அதே ஆனந்தத்தோடு பருகினார். அந்தப் பழங்கஞ்சியை, யாசித்து வந்தவர்களுக்கும் அன்புடன் அளித்து வந்தார். அத்துடன் தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் திருப்புகழ் அமுதத்தை வாரி வாரி வழங்கினார் அந்த வள்ளல்.
சுவாமிகளுக்கு அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களிலிருந்து நிறைய சீடர்கள் கிடைத்து விட்டார்கள். பகலில் வயலிலும், தோட்டத்திலும், கழனியிலும் வேலை செய்து விட்டு பொழுது சாய்ந்ததும் அவர்கள் மலை ஏறி வந்து திருப்புகழ் பாராயணத்தில் உற்சாகமாக கலந்து கொள்வார்கள். எந்த ஜாதியானாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும் எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல் தாம் பெற்ற இன்பத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டார் சுவாமிகள். சம்சாரத்தில் உழன்ற பாமர மக்களை சன்மார்க்கத்தில் அழைத்துச் சென்றார்.
இந்தக் குகையில்தான் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாக சுவாமிகள் சொல்வது வழக்கம். அந்த குகை கூட முன்பு குகையாக இல்லையாம். முருகன்தான் ஒரு பாறையாலே இந்த இடத்திலே ஒரு கூரை போட்டு ரகசியமா கல்யாணம் செய்து கொண்டதாக சுவாமிகள் சொல்வதுண்டு. பார்க்கும் போது குகையின் கூறை அது போல் ஒரு பாறையால் மூடப்பட்டது போல உள்ளது. குகையின் உள்ளெ சுற்றிலும் சிறு மேடை கட்டி வைத்திருக்கிறார்கள். அதனுள் சுமார் எண்பது பேர் நெருக்கமாக உட்கார்ந்து கொள்ளலாம்.
அங்கு சில நாட்கள் விடிய விடிய திருப்புகழ் பாராயணம் நடைபெறுவது வழக்கம். பாராயணம் முடியும் வரை சட்டியில் கற்பூரம் எரிந்து கொண்டேயிருக்கும். சாம்பிராணி புகிய குகைக்குல் சூழ்ந்திருக்கும். ஊதுபத்தியின் நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். பாராயணம் முடிந்ததும் சுவாமிகள் எல்லோருக்கும் திருநீறு கொடுப்பார். பாராயணத்தின் போது இறுதிவரை அமர்ந்திருந்து சுவாமிகளிடமிருந்து திருநீறு பெறுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள். சுவாமிகள் மலையை விட்டு இறுதியாக இறங்கிய 1948-ம் ஆண்டு வரை அந்த விபூதிச் சட்டி உடையாமல் அங்கேயே இருந்தது.
1950-ம் ஆண்டு நவம்பரில் சென்னையில் சுவாமிகள் மகாசமாதியடைந்த போது சீடர்கள் அவர் திருமேனியை, அவர் உயிருக்கு உயிராக நேசித்து வந்த வள்ளிமலைக்குக் கொண்டு வந்து திருப்புகழின் தேனிசையால் புனிதம் அடைந்திருந்த குகையிலெயே சமாதிக் கோயில் அமைத்தனர். ஆண்டுதோரும் இங்கு குருபூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சமாதியின் மீது ஒரு சிவலிங்கமும், தட்சிணாமூர்த்தியின் சிறிய விக்கிரகமும் இருக்கின்றன. அந்தச் சிலையில் ஒரு காளைக் கன்றுக் குட்டி தலையை நீட்டிக் கொண்டிருப்பது வெகு அழகாக இருக்கிறது.
எதிரிலிருக்கும் பிறையில் கடவுளர் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. வள்ளிமலை சுவாமிகளின் படமும், வேறு சில சாதுக்களின் படங்களும் இருக்கின்றன. ஒரு தூங்கா விளக்கும் எரிந்து கொண்டு இருக்கிறது. இவை எல்லாம், சுவாமிகள் மகாசமாதிக்குப் பிறகு வைக்கப்பட்டவை. குகையின் அருகில் “சூரியன் காணா சுனை” இருக்கிறது. இங்குதான் முருகனும், வள்ளியம்மையும் நீர் பருகுவார்களாம். அந்த இடத்தில் ஒரு சிறு குகையும் இருக்கிறது. சென்னையில் சுவாமிகளிடமிருந்து வெற்றிலைப் பெட்டியைப் பரிசாக பெற்றுக் கொண்ட தெய்வச் சிறுமி, அந்தப் பெட்டியை இந்தக் குகையில்தான் கொண்டு வந்து வைத்ததாகக் கூறப்படுகிறது. அங்கு ஒரு சமயம் சுவாமிகள் எழு நாட்கள் சமாதி நிட்டையில் அமர்ந்திருந்தார். அப்போதும் சீடர்கள் வந்து அதைக் கலைத்து விட்டார்கள்.
சற்று மேலே உள்ளது அருணகிரிநாதர் குகை. அது தற்போது மூடப்பட்டிருக்கிறது. அந்த குகையில் சுவாமிகள் 12 நாட்கள் நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்திருந்தார். பன்னிரண்டாம் நாள் பன்னிரண்டாம் நாள் திருமதி சீதாலட்சுமி என்ற திருப்புகழ் அடியார் பசும் வெண்ணெயைக் கொண்டு வந்து சுவாமிகள் தலையில் தேய்க்க அது கொதித்து உருகி நெய்யாயிற்று. பின்னர் சுனையிலிருந்து குடம் குடமாக தண்ணீர் கொண்டுவந்து அபிஷேகம் செய்வித்த பிறகுதான் சுவாமிகள் நிட்டை கலைந்தார்.
அடுத்து உள்ளது கணேசகிரி. யானை முன்னங்காலை மடித்து அமர்ந்திருப்பது போல் அந்தப் பாறை காட்சியளிக்கிறது. கணேசகிரிக்கு கீழே இரண்டு விநாயகர் சிலைகள் இருக்கின்றன.வள்ளியை பயமுறுத்தி, தம்பியின் கையில் அவளைப் பிடித்துக் கொடுப்பதற்காக அண்ணன் யானை உருவம் தாங்கி வந்து லீலைகள் புரிந்த இடம் இதுதான் என்று கூறுகிறார்கள்.