வள்ளிமலை – 9

கணேசகிரியை தரிசித்து விட்டு வரும் வழியில், ஒரு மாட்டின் சிலை உள்ளது.  அது சிங்காரி என்ற பசுவின் சமாதி. சுவாமிகள் அருமையாக வளர்த்த பசு அது.  சுவாமிகளின் பக்தரான ஏகாம்பர முதலியர் ஆசிரமத்திற்கு அளித்தது அந்த பசு. பழநிக் கோயிலில் “சிங்கார ரூப மயில்வாகன நமோ நம” என்ற திருப்புகழ் வரியை முதன் முதலாகக் கேட்டு மனத்தைப் பறிகொடுத்த சுவாமிகள், அந்நிகழ்ச்சியின் நினைவாக, இந்தப் பசுவுக்கு “சிங்காரி” என்ற பெயரிட்டு அழைத்தார்.

ஏகாம்பர முதலியர் தன் மகனுக்குத் திருமணமானதும், புது மணத் தம்பதியோடு வள்ளிமலைக்கு வருவதாக சுவாமிகளிடம் கூறியிருந்தார். ஆனால், ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் அங்கு வர முடியவில்லை. அதற்கு பதிலாக அவர் குடும்பத்தோடு பழநிக்குச் சென்றார். பழநியாண்டவரைத் தரிசிக்கச் செல்லும் முன் அனைவரும் சரவணப் பொய்கைய்ல் நீராடச் சென்றனர்.

குளத்தில் குளித்துப் பழக்கமில்லாத முதலியாரின் மகன் கால் தவறி தண்ணீரில் விழுந்து கரையேற முடியாமல் தத்தளித்தான். கணவனின் நிலை கண்டு பதறிப்போன புது நாட்டுப்பெண் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், சற்றும் யோசிக்காமல் தானும் நீரில் குதித்து விட்டாள். கணவனும், மனைவியும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த மற்றோர் இலைஞரும் நீரில் பாய்ந்தார். புதுமணத் தம்பதியரின் உயிரைக் காக்கச் சென்றவரும் தண்ணீரில் மூழ்கினார். உயிருக்காக மன்றாடினார்.

குளக்கரையில் நின்றிருந்த பெற்றோரும், பிறரும் உதவி கோரி கூச்சலிட்டனர். ஏகாம்பர முதலியர், “பழநியாண்டவா, கந்தா வேலா, சச்சிதானந்த குருவே, என் செல்வங்களைக் காப்பாற்றுங்களேன்” என்று துயரம் தாங்க மாட்டாமல் கண்ணிருக்கிடையில் கதறியழுதார். கண்ணுக்கெதிரே கண்ணின் மணிகளைக் காலன் கவர்ந்து செல்லும் போது தெய்வத்திடம் முறையிடுவது ஒன்றுதானே வழி?

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ திடீரென்று ஓர் ஆசாமி அங்கு தோன்றினார். அவர் சட்டென்று ஒரே பாய்ச்சலில் குளத்தில் பாய்ந்து, நீரில் மூழ்கி எமனுடன் போராடிக் கொண்டிருந்த மூவரையும் எப்படியோ காப்பாற்றி கரையில் கொண்டு சேர்த்து விட்டுப் போய் விட்டார். அவர் யாரென்று ஒருவருக்கும் தெரியாது.

அதே நேரத்தில் வள்ளிமலை ஆசிரமத்தில் சுவாமிகள் தம் சீடர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று உரத்த குரலில், “இதுதான் பழநி, இதையே பழநி என்று நினைத்துக் கொள்ளுங்கள். நாம் பழநியில்தான் இருக்கிறோம்” என்று சுவாமிகள் ஆவேசம் வந்தவர் போல் எழுந்து, திருப்புகழ் புத்தகத்தைக் கையில் எடுத்துக் குதித்தார். அங்கிருந்தவர்களுக்கு அப்போது ஒன்றுமே விளங்கவில்லை. சென்னை திரும்பியதும், ஏகாரம்பர முதலியாரிடமிருந்து பழநியில் நடந்த அற்புதத்தை அறிந்த பிறகே அவர்களுக்கு எல்லாம் புரிந்தது.  சுவாமிகள் வள்ளிமலைய்ல், பழநியின் பெயரைக் கூறிக்கொண்டு, திடீரென்று எழுந்த நேரமும், பழநியில் ஒரு பெரியவர் நீரில் மூழ்கி, மடிய இருந்தவர்களைக் காப்பாற்றிய நேரமும் விநாடி மாறாமல் ஒத்திருந்ததை அதிசயத்தோடு அறிந்து, அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் திருப்புகழ் சித்தரான வள்ளிமலை சுவாமிகள்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

இதைப் போன்று பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார் சுவாமிகள். ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் காட்சியளித்திருக்கிறார் அவர்.  ஒரு சமயம் வள்ளிமலை குகையில் சீடர்கள் பாராயணம் செய்து கொண்டிருந்த போது, சென்னைக்குச் சென்றிருந்த சுவாமிகள் கையில் கமண்டலத்துடன் உள்ளே நுழைந்தார். சுவாமிகள் வந்து விட்டார் என்று அனைவரும் மகிழ்ச்சியுற்றிருந்த போது அவர் திரும்பி கணேசகிரியை நோக்கி நடந்தார். சாமி, சாமி என்று அழைத்துக் கொண்டு சீடர்கள் பின்னே சென்றனர். சற்றைக்கெல்லாம் சுவாமிகள் எங்கோ மறைந்து விட்டார்.

உண்மையில் அன்று சுவாமிகள் சென்னையில்தான் இருந்திருக்கிறார். மூன்று நாட்கள் கழித்தே அவர் வள்ளிமலைக்கு வந்தார். இது போல் எத்தனையோ லீலைகள்!

வள்ளிமலைக்கு வந்த பிறகே சுவாமிகளுக்கு இசை ஞானம் ஏற்பட்டது. அதற்கு முன்பு தன்னிஷ்டத்திற்கு திருப்புகழைப் பாடிக் கொண்டிருப்பார் அவர். வள்ளிமலையில் இரவு நேரங்களில் தேவகானம் கேட்குமாம். தேவகணங்கள் வானுலகத்திலிருந்து கீழிறங்கி வந்து,இசைமாரி பொழிந்து, பொங்கித் தாயை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்களாம். அதை தினமும் உற்றுக் கேட்ட சுவாமிகளுக்கு மெல்ல மெல்ல இசையில் லயிப்பு ஏற்பட்டது. ராக லட்சணங்கள் மனத்தில் பதிந்தன. லய வேறுபாடுகள் உணர்வோடு கலந்தன. அவரையுமறியாமல் சங்கீத தேவதை அவரை ஆட்கொண்டாள். கம்பீரமான சாரீரத்தில், ராக, தாளங்கள் என்ற சுவை கூட்டி, சின்னமாம் ஏகத்தாரையை திருக்கையிலேந்தி திருப்புகழ் அமிர்தத்தை வாரி வாரி வழங்க யாத்திரை புறப்பட்டார்.

வள்ளிமலையிலிருந்து அடிக்கடி சென்னைக்கு வந்து போன சுவாமிகள், இங்கு சிறுகச் சிறுக பல திருப்புகழ் சபைகளையும், சங்கங்களையும் நிறுவினார். முருக பக்தி தழைத்தது.  அடியார் திருக்கூட்டம் வளர்ந்தது.

எழுத்து வாசனையேயற்ற கிராம மக்களை, சொல்லழகும், ஓசை நயமும் மிளிரும் திருப்புகழை சந்தம் தவறாமல் பாடும்படி பழக்கினார் சுவாமிகள். தமது யோக சக்தியாலும், தவ வலிமையாலும் எத்தனையோ பக்தர்களை, இசை வல்லுநர்களாக மாற்றியிருக்கிறார் அவர்.

சென்னையில் கந்தசாமிப் பிள்ளை என்பவர் சுவாமிகளின் முக்கிய சீடராயிருந்தார். ஒரு நாள் கந்தசாமிப் பிள்ளை பிடிலை வைத்துக் கொண்டு “சரிகம” என்ற சரளி சரிசையைத் தட்டுத் தடுமாறிப் பழகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுவாமிகள் “ஏதாவது நல்ல ராகம் வாசி கேட்போம்” என்றார். பிள்ளையவர்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது. “சுவாமி, எனக்கு சரளி வரிசையே இன்னும் சரியாக வரவில்லை. அதற்குள் ராகம் வாசிக்கச் சொல்லுகிறீர்களே, எப்படி முடியும்?” என்று பரிதாபமாகக் கேட்டார். எல்லாம் முடியும், வாசி, என்று அதட்டினார் சுவாமிகள். குருநாதனை நினைத்துக் கொண்டு உடனே பிடில் வாசிக்கத் தொடங்கினார் பிள்ளை. அவரையுமறியாமல் பல ராகங்களை எளிதாக வாசித்தார். சுவாமிகள் ஆனந்தப்பட்டார். அன்று முதல் எந்த ராகத்தையு, விரிவாகவும், தெளிவாகவும் ஆலாபனம் செய்யும் ஆற்றல் பெற்றார் கந்தசாமிப் பிள்ளை.

தம் புகழை சுவாமிகள் பாடக் கேட்டு தணிகேசன் ஆனந்தக் கூத்து ஆடியதும் உண்டு.

1917-ம் ஆண்டு ஜூன் மாதம் வள்ளிமலை சீடர்களுடன் சுவாமிகள் திருத்தணிகைத் தலம் சென்று திருப்புகழ் பாடும் போது, “திருப்புகழோதுங் கருத்தினர் சேரும் திருத்தணி மெவும்பெருமாளே” என்ற அடியை, “தெருத்திண்ணை தோறும் திருப்புகழோதுங் திருத்தணி மேவும் பெருமாளே” என்று மாற்றிப் பாடி விட்டார். பாராயணம் முடிந்ததும், “இப்படி ஏன் மாற்றிப் பாடினீர்கள்” என்று சீடர்கள் கேட்க, “என்னையுமறியாமல் பாடி விட்டென். அதன் காரணம் எனக்கே தெரியவில்லை” என்று சுவாமிகள் சமாதானம் கூறி விட்டார்.

மறுநாள் திருத்தணிகை சீர் கருணீகர் மடத்துத் திண்ணையில் இரவு பாராயணம் நடைபெற்றது. இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்த பாராயணம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

நள்ளிரவு நேரம், மலையில் ஒரு பேரொளி தோன்றி மறைந்ததைப் பாராயணம் செய்து கொண்டிருந்த அடியார்கள் அனைவரும் கண்டு வியந்தனர். சற்றைக்கெல்லாம் கையில் விசிறியுடன் ஓர் அந்தணர் வந்து, திண்ணையின் மீது ஒரே தாவாகத் தாவி சுவாமிகளின் அருகில் வந்து உட்கார்ந்தார். ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் அவர் அங்கிருந்து எழுந்து எதிரிலுள்ள குளத்தின் படிக்கட்டில் போய் அமர்ந்து கொண்டார். சுவாமிகள் பாடும் போது கவனமாகக் கேட்டு களிப்பெய்திய அந்த அந்தணர், உள்ளத்தில் ஆனந்தம் பொங்க சில சமயம் நடனமும் ஆடினார். பொழுது விடிந்ததும் பாராயணம் முடிந்தது. ஆனால், அதற்குள் அந்த அந்தணப் பெரியார் மாயமாய் மறைந்து விட்டார்.