மூலமாகிய வேதம்
நம்முடைய மதம் என்பது சைவம், வைஷ்ணவம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக இருக்கின்றது. ‘இதை ‘இரண்டு மதம் என்று சொல்வதா, ஒரே மதந்தான் என்று சொல்வதா?’ என்று சந்தேகம் வரும்.
கிறிஸ்துவ மதத்திலும் காத்லிக், ப்ராடெஸ்டன்ட் என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இருந்தாலும், ஒரே மதம் என்று சொல்கிறார்கள். காரணம் என்ன? இரண்டு பேரும் பொதுவாகப் பூஜை செய்ய ஒரே கர்த்தரின் பெயரைச் சொல்லி வணங்குகிறார்கள். புத்த மதத்தில் ஹீனயானம், மஹாயானம் என்று இரண்டு மதமாகச் சொல்வதில்லை! காரணம் அவர்கள் இரண்டு பேருக்கும் புத்தரே தலைவர்.
இப்படி, சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் ஒரே ஸ்வாமி இருக்கிறாரா? இல்லை. இப்போது சாதாரண வைஷ்ணவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு ஆசாரிய புருஷர்களாக இருப்பவர்கள் சிவன் கோயில் பக்கமே வரமாட்டார்கள். விஷ்ணுதான் அவர்களுக்கு ஸ்வாமி, அவர்களுக்கு சிவன் ஸ்வாமியே அல்ல. விஷ்ணுவினுடைய பக்தர்களுக்கு, சிவனும் ஒரு பக்தன்தான் என்பது அபிப்பிராயம். சைவர்களிலும் தீவிரவாதிகள், ‘விஷ்ணு ஸ்வாமியே அல்ல; சிவன்தான் ஸ்வாமி; விஷ்ணு அவருக்குப் பக்தன்’ என்று சொல்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?
‘அது போகட்டும்; இவர்கள் இரண்டு பேரையும் ஒரு மதம் என்று சொல்ல இரண்டு பேருக்கும் பொதுவாக ஏதாவது ஒரு மதப் புஸ்தகமாவது இருக்கிறதா?’ என்று பார்க்கலாம். கிறிஸ்துவம் இஸ்லாம் முதலியவற்றில் பல பிரிவுகள் இருந்தாலும், எல்லாருக்கும் பொதுவாக பைபிளும் குர் ஆனும் இருப்பதுபோல், சைவ வைஷ்ணவருக்குப் பொதுவான பிரமாண கிரந்தம் இருக்கிறதா என்று பார்க்கலாம். சைவர்கள் தேவாரம் முதலிய திருமுறைகளைத் தங்கள் மத நூல்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வைஷ்ணவர்களோ நாலாயிர திவ்வியப் பிரந்தம் தமது ஆதார நூல் என்கிறார்கள். புஸ்தகங்களும் வேறாகப் போய்விட்டன. ஸ்வாமியும் வேறாகப் போய்விட்டார். அப்படி இருக்க இரண்டு பேரையும் ஒரே மதம் என்று எப்படிச் சொல்லுவது?
நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்–திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்!
அப்படியானால், நமக்கு ஒரு மதமா, இரண்டு மதமா? வைஷ்ணவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே, சைவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே என்று சொன்னாலும் உண்மை அப்படி அன்று. இப்போது இருக்கிறவர்களுடைய மனோபாவத்தைக் கவனித்தால் அது வேறு மதம், இது வேறு மதம் என்று சொல்லக்கூடிய ஹேது வளர்ந்திருக்கிறதே தவிர, அவர்களுடைய முதல் நூல்களைப் பார்த்தோமானால் உண்மை தெரியவரும். சைவத் திருமுறைகள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்கிற இரண்டையும் பாடினவர்கள் தங்களது நூலே “முதல் நூல்” என்று சொல்லவே இல்லை; நினைக்கவே இல்லை. அவர்கள் தங்களை மதஸ்தாபகர்களாகவும் நினைத்துக் கொண்டதே இல்லை. அவர்கள் காலத்துக்கு முந்தியே ஒரு மதம் இருந்திருக்கிறது. ஆழ்வார்கள் பாடுவதற்கு முந்தி வைஷ்ணவம் இருந்திருக்கிறது. நாயன்மார்களுக்கு முந்தியும் சைவம் இருந்திருக்கிறது. இவற்றுக்கு முதல்நூல் எது என்று பார்த்தால் மறைகள்தாம்: அதாவது வேதங்களே. சைவர்கள் ஈசுவரனையே,
‘வேதமோ டாறங்க மாயி னானை’
‘வேதநாதன், வேத கீதன், ஆரணன்காண்’
என அநேக இடத்தில் சொல்கிறார்கள். வைஷ்ணவ நூல்களிலும் இப்படித்தான், ‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருப்பதை நாம் சரியாகக் கவனித்தால், இவ்விருவர்களுக்கும் மூலப் புஸ்தகம் ஒன்றே என்பது தெளிவாகும். இப்போது சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் முக்கியமாக இருக்கிற தேவாரமும், பிரபந்தமும் ஒரே பொது மூலமான வேதத்தை ஆதாரமாகக் கொண்டு உண்டானவையே. தேவாரத்தையும் பிரபந்தத்தையும் பாடிய மகான்கள் எங்கு பார்த்தாலும் வேதத்தின் பெருமையையே பேசுகிறார்கள். எந்த க்ஷேத்திரத்தை வர்ணித்தாலும் ‘அங்கே வேத ஒலி மிகுந்திருந்தது; ஹோமப் புகை மிகுந்திருந்தது; வேதம், அதன் அங்கங்கள் எல்லாம் தழைத்திருந்தன’ என்று பரவசமாகச் சொல்கிறார்கள். ஸ்வாமியைப் பற்றிச் சொல்கிற அளவுக்கு வேதத்தைப் பற்றியும் சொல்கிறார்கள்.
வேதம் ஒரே தத்துவத்தைப் பல மூர்த்திகளாக்கித் தந்திருக்கிறது. வேதம் என்ற நதியில் இந்த ஒவ்வொரு மூர்த்தி வழிபாடும் ஒரு துறை மாதிரி, ‘வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க’, என்று இதையே சேக்கிழார் சுவாமிகள் சொல்கிறார்.
இப்படியே சாக்தம், காணபதம் (பிள்ளையார் உபாஸனை), கௌமாரம் (முருகன் வழிபாடு), ஸௌரம் (சூரியனையே பரமாத்மாவாக உபாஸிப்பது) முதலான எதை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆதார நூல்களில், இந்த வழிபாட்டுக்கு ஆதாரம் வேதத்திலேயே இருக்கிறது; ‘எங்கள் ஸ்வாமி வேதத்திலேயே ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவர்’ என்றே சொல்லியிருக்கும்.
ஆக ‘ஹிந்து’ மதம் என்ற பெயருக்குள் உள்ள அத்தனை பிரிவுக்கும் ஆதாரமான நூல் ஒன்றே என்றாகிவிட்டது.
அந்த ஆதாரமான வேதத்தில், சைவ–வைஷ்ணவ–ஸ்மார்த்த சம்பிரதாய ஆசாரியர்கள் எல்லோரும் தசோபநிஷத்துக்கள் என்கிற பத்து உபநிஷதங்களுக்குப் பாஷ்யம் செய்திருக்கிறார்கள். இந்த உபநிஷதங்களுள் பிரம்மம் ஒன்றே ஸ்வாமி என்றுதான் சொல்லியிருக்கிறது. அதற்கே ஓரிடத்தில், கடோபநிஷத்தில் விஷ்ணு என்றும், இன்னோரிடத்தில் மாண்டூக்ய உபநிஷத்தில் சிவம் என்றும் பெயர் சொல்லியிருக்கிறது. வேத சம்ஹிதைகளில் வருகிற மித்ரன், வருணன், அக்னி, இந்திரன் முதலான அத்தனை தெய்வங்களும்கூட இந்த சத்தியத்தின் பல பேர்கள்தான் என்றும் அதே வேதத்தில் சொல்லியிருக்கிறது. (ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி)
ஆனபடியால், நம் மதத்தின் அத்தனை பிரிவுகளுக்கும் பொதுப் புஸ்தகம், பொது ஸ்வாமி இரண்டும் இருப்பதாக ஆகிவிட்டது. பொதுப் புஸ்தகம் வேதம், பொது ஸ்வாமி பிரம்மம். எனவே, சந்தேகமில்லாமல் நாம் எல்லாரும் ஒரே மதந்தான் என்று தீர்மானமாகச் சொல்லிக்கொள்ளலாம்.
அந்தப் பொது ஸ்வாமியையும் நமக்குக் காட்டிக் கொடுத்திருப்பது பொதுப் புஸ்தகமான வேதம்தான். ஸ்வாமியைக் காட்டிக் கொடுத்திருப்பதோடு, ஆசாமிகளான நாம் எப்படி வாழ்க்கை நடத்தி முடிவில் அந்த ஸ்வாமியாகவே ஆகவேண்டும் என்பதற்கும் நமக்கு வழிகாட்டிப் பரமோபகாரம் செய்வது இந்த வேதம்தான். இகம், பரம் இரண்டுக்கும் அதுதான் நமக்குக் கதி; அதுதான் இத்தனை சம்பிரதாயங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும் மூலம், வேர். நம்முடைய மதப்பிரிவுகள் எல்லாம் வேதத்திலிருந்தே வந்தவை. வேர் ஒன்று; கிளைகள் பல.
ஆராய்ந்து பார்த்தால், ஹிந்து மதப் பிரிவுகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள எல்லா மதங்களுக்குமே மூலம் வேதம்தான் என்று தெரியும். அந்த மூலத்தை மங்காமல் ரக்ஷிக்க வேண்டும் என்பதே நம்முடைய தலையாய கடமை.
வைதிகமும் தமிழும்
கரிகால சோழனின் சாஸனம் ஒன்று இருக்கிறது. அது நல்ல சமஸ்கிருத பாஷையில் அமைந்திருக்கிறது.
பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்க்கா நுஸாரிணாம் |
ததேது அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாஸனம் ||
கரிகாலன் இதில் தன்னை ‘அரிகாலனாகிய கரிகாலன்’ என்கிறான். ‘அரி’ என்றால் விரோதி என்று அர்த்தம். விரோதிகளுக்கு யமனாக இருக்கிற வீராதி வீரன்தான் ‘அரிகாலன்’. சரி, கரிகாலனுடைய அந்த விரோதிகள் யார்? வேத சாஸ்திர மார்கத்தை அநுசரிக்காதவர்கள் அனைவரும்தான் அவனுடைய விரோதிகள். வேத சாஸ்திர வழியில் செல்கிறவர்களை ரக்ஷிக்க வேண்டும் என்பதே கரிகாலனின் சாஸனம்.
பிரசித்தி பெற்ற நம்முடைய தமிழ் மன்னர்கள் வைதிக மதத்தை மனமார வளர்த்தார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்றே ஒரு சங்ககால அரசனுக்குப் பெயர் இருக்கிறது. ‘வழுதி’ என்றால் பாண்டியராஜா. பிற்காலத்திலும் கல்வெட்டுகளில் எங்கு பார்த்தாலும் தமிழரசர்கள் வேத வித்துக்களுக்கு வரியில்லாத ‘இறையிலி’ யாக நிலத்தை சாஸனம் செய்தது தெரிகிறது. நான்மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக வழங்கப்பட்ட பல கிராமங்கள் ‘சதுர் வேதி மங்கலம்’ என்ற பெயரில் உள்ளன.
வெளிதேசத்து விஷயம் ஒன்று புதிதாக நம் ஊருக்கு வந்தால், அதற்கு உள்ளூர் பாஷையில் வார்த்தையிருப்பதில்லை. வெளிநாட்டிலிருந்து நம் தேசத்துக்கு வந்த ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம் பாஷையில் வார்த்தையில்லை. பிற்பாடு இப்போது இவற்றுக்கும் ஏதேதோ புரியாத தமிழில் வார்த்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது பழக்கத்தில் சரளமாக வரமாட்டேன் என்கிறது.
வேதம், யாகம் முதலியன சிலர் சொல்கிறமாதிரி தமிழ் நாட்டின் ஆதி நாகரிகத்துக்குப் புறம்பாகப் பிற்பாடு வந்தவை என்றால், யாகம், வேதம் முதலிய பதங்களுக்குச் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால், மிக மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே ‘வேதம்’ என்பது ‘மறை’ என்றும், ‘யாகம்’ என்பது ‘வேள்வி’ என்றும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்தபுஷ்டி நிறைந்த பதங்கள் என்பதை சமஸ்கிருத பண்டிதர்கள் – தமிழ் புலவர்கள் இருவருமே ஒப்புக் கொள்வார்கள். வேட்டலிலிருந்து ‘வேள்வி’ வந்திருக்கிறது. எல்லா தர்மத்துக்கும் வேரான வேதம், வேரைப் போலவே வெளியில் தெரியாமல், அதாவது எல்லாரிடமும், புழக்கத்துக்கு வராமல், அதை ரக்ஷிப்பதற்கான கடும் நியதிகளைப் பின்பற்றும் சிலரிடமே மறைந்து இருக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்லும் வார்த்தைதான் மறை. வைதிகப் பண்பாடும், யக்ஞ அநுஷ்டானமும் தமிழ்நாட்டில் ஊறிப் போயிருந்தாலொழிய, அந்த நாகரிகத்தைக் காட்ட இத்தனை அழகான சொந்த மொழி வார்த்தைகள் உண்டாக்கியிருக்க முடியாது. வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், தலைமுறைத் தத்துவமாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே கற்க வேண்டும் என்பதால் தமிழில் ‘எழுதாக் கிளவி’ என்ற பெயரும் வேதத்துக்கு உள்ளது. கேள்வியிலேயே பாடம் பண்ணுவதால்தான், வேதத்துக்கு ஸம்ஸ்கிருதத்திலும் “ச்ருதி” என்று பேர். ‘மறை’ என்பதைப் போல் வேத ரக்ஷணத்தைப் பளிச்சென்று சொல்கிற நேர் வார்த்தை ஸம்ஸ்கிருதத்திலேயே இல்லை.
வேதத்தின் ஆறு அங்கங்களுக்கு ‘ஷடங்கங்கள்’ என்று பெயர். அதிலிருந்துதான் மத சம்பந்தமான எந்தக் காரியத்தையும் ‘சடங்கு’ என்று சொல்கிற வழக்கம் வந்திருக்கிறது, வைதிக அநுசரணையே தமிழ்நாட்டின் தொன்று தொட்ட பழக்கம் என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.
தமிழ் மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்ராயம். வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத்தான் முதலிடம். அப்புறம்தான் வேத யக்ஞம். பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின்தான் வேத பூஜை செய்ய வேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை..
பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்க வேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத்தாரைச் சொல்லி, அப்புறம் தெய்வத்தைச் சொல்கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக வைதிக நம்பிக்கையிலேயே, மூதாதைகளைத் ‘தென்புலத்தார்’ என்கிறார்.
இந்த ஐந்து பேருக்கும் பாகம் பிரித்துத் தருவது நாமாகச் செய்வது. இது தவிர ராஜ ஆக்ஞையாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வரி போக மீதமுள்ளதை மேலே சொன்னபடி ஐந்தாகப் பிரிக்க வேண்டும். தனக்கு என்று அதில் ஒரு பங்குதான் வைத்துக் கொள்ளப்படுகிறது. பித்ருக்களை உத்தேசித்துக் சிலருக்கு அன்னமாக ஒரு பங்கு போகும். கோயில்களுக்கு ஒரு பங்கு போகும். விருந்தாளிகளுக்கு ஒரு பங்கு போகும். வசதியற்ற உறவுக்காரர்களுக்கு ஒரு பங்கு போகும். பாக்கி ஒரு பங்குதான் ஒருத்தனின் சொந்தக் குடும்பத்துக்கு. வைதிகமும், வள்ளுவரும் விதிக்கிற இந்தத் தர்மத்தைவிடப் பெரிய சோசலிஸம் எதுவும் இல்லை. தனக்கென்று மட்டும் வாழாமல் லோகோபகாரமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிற தியாகம்தான் வைதிக மதத்தின் அஸ்திவாரம். திருவள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார். தமிழ் மறையான குறளும் சரி, மற்ற தமிழ் நீதி நூல்களும் சரி, மறையின் மரபில் வந்தவைதான்.
திருவள்ளுவர் வைதிகத்தைத்தான் சொன்னார். ஒளவையார் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்பதாக உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே, வேதாத்யயனம் ஒரு நாள்கூட நடைபெறாமல் இருக்கக்கூடாது என்கிறாள். ஆழ்வாராதிகளும் சைவத் திருமுறைக்காரர்களும் எங்கே பார்த்தாலும், ‘வேதியா! வேதகீதா! சந்தோகன் காண், பௌழியன் காண்’ என்றெல்லாம் வேதங்களையும் அவற்றின் சாகைகளையும் சொல்லியே பகவானைத் துதிக்கிறார்கள். க்ஷேத்திர வர்ணனைகளிலெல்லாம், ஊர் முழுக்க ஹோமப் புகை சூழ்ந்திருந்தது. வேத சப்தம் ஒரே கோஷமாகப் பரவியிருந்தது என்று அவர்கள் சொல்லாமலிருப்பதில்லை.
இந்தத் தமிழ் நாட்டில் வேத பாடசாலைகளை வைத்து நடத்துவதில் பிராம்மணரல்லாதார் செய்திருக்கிற கைங்கரியம் கொஞ்ச நஞ்சமில்லை. நிலமாகவும் பணமாகவும் வாரிக்கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள்.
இப்போதும்கூட ஏதோ அரசியல் காரணங்களுக்காக அவைதிகமான, நாஸ்திகமான அபிப்ராயங்கள் கொஞ்சம் தலைதூக்கியிருந்தாலும், மொத்தத்தில் தமிழ் ஜனங்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தி விசுவாசமும் போகவேயில்லை என்பதுதான் என் அபிப்பிராயம். அவர்களுடைய அன்புக்குப் பாத்திரராகிற மாதிரி பிராம்மணர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆசார அநுஷ்டான சீலர்களாக ஆகிவிட்டால், இங்கே வேத ரக்ஷணம் நிரம்பவும் நன்றாக நடந்துவிடும் என்பதே என் நம்பிக்கை.