18 . வைதீக மதம் – பகுதி பன்னிரண்டு

வேதத்தின் மூல வடிவம்

பாஷையை வைத்துக் கொண்டு, ‘இது என் பாஷை, அது உன் பாஷை, இந்த பாஷை தான் உயர்ந்தது. அந்த பாஷை தான் உயர்ந்ததுஎன்று இப்போது பலர் சண்டை போடுவதைப் பார்த்தால் மிகவும் துக்கமாக இருக்கிறது. நாம் எல்லோரும் ஊமையாகப் போனால் தேவலை என்றுகூடத் தோன்றுகிறது. நம்முடைய அபிப்பிராயத்தைத் தெரிவிக்க இருக்கும் கருவி பாஷை. அது எல்லா ஊரிலும் ஒன்றாக இருக்க முடியாது. ஒவ்வொரு கூட்டம் ஒவ்வொரு பாஷையைப் பேசும். ஒவ்வொரு சீமையிலும் ஒரு பாஷை இருக்கும். எனவே, ‘இது என் பாஷை’ ‘அது உன் பாஷைஎன்பதும்இது உசத்தி, அது தாழ்த்திஎன்று சண்டை பிடிப்பதும் அர்த்தமில்லாத காரியம். ‘தெரிந்த பாஷை, தெரியாத பாஷைஎன்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய, ‘என் பாஷை, உன் பாஷைஎன்பதே தப்பு. பாஷையால் சண்டை என்பது பெரிய தப்பு. மதத்தைக் காட்டிலும் ஸ்வாமியைக் காட்டிலும் பாஷைதான் உயர்வென்று நினைப்பது மிகவும் தப்பு. பாஷை என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் ஸம்ஸ்கிருதம் வேண்டுமா என்றால் நான்கூட வேண்டாம் என்றே சொல்வேன். ஆனால் நம்முடைய மதத்துக்கு மூலமான வேதம், சாஸ்திரம் எல்லாம் அந்தப் பாஷையில் இருப்பதனால் வேதத்தையும் சாஸ்திரங்களையும் ரக்ஷிப்பதற்காக சம்ஸ்கிருத பாஷையையும் ரக்ஷிக்கத்தான் வேண்டும் என்கிறேன்.

திருவள்ளுவர் குறளை எழுதி அதை அரங்கேற்ற மதுரைக்கு வந்தார். பொற்றாமரைக் குளத்தில் சங்கப்பலகை இருந்தது. திருவள்ளுவர் தம் புத்தகத்தைக் கொண்டுபோய் சங்கப் பலகையில் வைத்தாராம். குட்டைப் புத்தகம் அது. அதுமாத்திரம் பலகையில் இருக்கப் புலவர்கள் எல்லோரும் குளத்தில் விழுந்து விட்டார்களாம். குறள் அங்கே அரங்கேற்றப்பட்டது. இந்தப் புத்தகத்தைப் இன்னார் பண்ணினார், இதில் இன்ன உயர்ந்த விஷயங்கள் இருக்கின்றன என்று அதைப் பற்றிப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். “திருவள்ளுவ மாலைஎன்று அதற்குப் பெயர். அதில் ஒருவர் பாடுகிறார்;

ஆரியமும் செந்தமிழும் ஆராயத் திதனினிது

சீரிய தென்றொன்றைச் செப்பரிதாம்ஆரியம்

வேதம் உடைத்து தமிழ்திருவள்ளுவனார்

ஓது குறட்பா உடைத்து

ஸம்ஸ்கிருதம் உயர்வா? தமிழ் உயர்வா?” என்று யோசனைப் பண்ணிப் பார்த்தேன். “ஸம்ஸ்கிருதமும் தமிழும் சமம்தான். ஒன்று உயர்வு, ஒன்று மட்டம் என்று சொல்ல முடியாது. எதனாலே என்றால், ஸம்ஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழில் இப்போது திருக்குறள் வந்துவிட்டது. இது தமிழ் மறை. வேதத்துக்குச் சமமான ஒன்று தமிழில் இல்லை என்றால் ஸம்ஸ்கிருதம் உயர்வாக இருக்கலாம்! திருக்குறள் வேதத்துக்குச் சமானமாக வந்திருக்கிறது. அதனாலே இப்போது இரு பாஷைகளும் சமமாயினஎன்று இச்செய்யுளில் கவி சொல்லியிருக்கிறார்.

ஸம்ஸ்கிருதத்துக்கு எதனால் கௌரவம்? வேதம் அதில் இருபதனால்தான் என்பதை அந்தப் புலவர் சொல்லியிருக்கிறார்.

வேதம் ஸம்ஸ்கிருதத்தில் இருந்தால் என்ன மொழி பெயர்த்துவிடலாமேஎன்று நினைக்கலாம். பல நூல்கள் அப்படி இந்தக் காலத்தில் மூல பாஷையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலமே உருமாறிப் போவதுமுண்டு. ஒரு விஷயத்தை ஒரு மனிதன் சொன்னால், அது அவனிடமிருந்து எந்த வாக்கில் வருகிறதோ அதே வாக்கில் இருந்தால், ஒரு காலத்தில் இல்லாவிட்டாலும் மற்றொரு காலத்தில் அதன் உண்மைப் பொருளை முழுவதும் தெரிந்து கொள்ள முடியும். ஒரு பொருளைச் சொல்வதற்கு ஒரு பாஷையில் அழகான சொல் ஒன்று இருக்கும்.. அதை மொழி பெயர்க்கும்போது, அதற்கு ஏற்ற சொல் இதர பாஷையில் இருக்காது. சில சமயங்களில் நான்கைந்து வார்த்தைகளைப் போட்டுச் சுற்றிவளைத்துச் சொல்ல வேண்டியிருக்கும். அந்த வார்த்தை அந்த இடத்தில் எந்த அபிப்பிராயத்தை வெளிப்படுத்துகிறதோ, அதே அபிப்பிராயத்தை மொழி பெயர்ப்பில் காணமுடியாமல் போகலாம். இரண்டாவது, மொழி பெயர்க்கிறவன் தன்னுடைய ஞானத்துக்கு ஏற்றாற்போலத்தான் பொருள் பண்ணிக் கொண்டு சொல்ல முடியும். ஒருவன் பண்ணிய மொழி பெயர்ப்புச் சரி அல்ல என்று இன்னொருவன் எண்ணுவான். பண்ணுகிறவனுடைய அபிப்பிராயத்துக்கும் பாஷா ஞானத்துக்கும் ஏற்றபடி அந்த மொழி பெயர்ப்பு இருக்கும். இப்படியாக பல மொழிப்பெயர்ப்புகள் ஏற்பட்டு, அவற்றில் எதை எடுத்துக் கொள்வது என்ற சந்தேகம் வரும்போது, மூலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டிவரும்.

ஆகவேதான் மூலமாகிய வேதத்தை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். மூலமாக இருக்கும் ஒரே வேதத்தைத் தங்கள் கருத்தின்படி பொருள் கொண்டு ஒவ்வோர் ஆசாரியரும் ஒவ்வொரு சித்தாந்தத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆசாரியர்கள் தத்தம் சித்தாந்தங்களையே ஆதாரமாகக் கொண்டு மூலவேதத்தை மாற்றி வெவ்வேறு மதங்களைச் செய்துவிடவில்லை. மூலம் ஒன்றாக இருக்கிறது. மூலம் மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே இருந்து கொண்டிருப்பதால்தான், அந்த அந்த ஆசாரிய புருஷருக்கு ஏற்றபடி காலத்துக் காலம் புது அபிப்பிராயம் சேர்த்து வந்திருக்கிறது. ஆதாரமான வேதத்தை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டு, அதை ரக்ஷித்து வந்தால்தான் அந்தந்த ஆசாரியரின் புது அபிப்பிராயமானது இன்னொரு தனி மதமாகப் போகவேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்து வந்திருக்கிறது. இந்த மதங்களுக்கெல்லாம் வைதிக மதம் என்ற பொதுப் பெயர் இருந்து கொண்டிருக்கிறது.

சாஸ்திரமா, மனசாட்சியா?

தர்மம் என்பது உலக க்ஷேமத்துக்காகச் செய்யப்பட வேண்டியது. துளிகூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல், சமஸ்த பிராணிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு மகான்கள் தர்ம நூல்களைத் தந்திருக்கிறார்கள். தர்ம சாஸ்திரங்கள், இன்னது தர்மம் என்று தீர்மானம் பண்ணுபவை. ரூபத்தை அறிவதற்குப் பிரமாணம் கண்; சப்தத்தை அறிவதற்குப் பிரமாணம் காது, தர்மப் பிரமாணம் என்ன எனில் தர்ம சாஸ்திரப் பிரகாரம் செய்வதேயாகும்.

சகல தர்மத்துக்கும் மூலம் வேதம். அதைச்ருதிஎன்பார்கள். (எழுதிப் படிக்காமல் காதால் கேட்டுப் பாடம் பண்ணுவதால் இப்படிப் பேர்). ச்ருதிக்கு அப்புறம் ஸ்மிருதி; ஸ்மிருதி என்பது வேதத்தின் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவாகக் குறித்த குறிப்பு (Notes) தர்ம சாஸ்திரம் என்பது இதுவே.

அந்த ஸ்மிருதிக்கு அப்புறம் பிரமாணமாக இருப்பது பெரியவர்களுடைய நடத்தை. பெரியவர்கள் எப்படி நடந்தார்கள் என்பது புராணங்களால் நமக்குத் தெரிய வருகிறது. அதற்கப்புறம் நமக்குத் தெரிந்து சிஷ்டராக இருப்பவர்களின் நடத்தை. சிஷ்டாசாரம் என்று அதைச் சொல்லுவார்கள். எல்லோருடைய நடத்தையும் பிரமாணமாகாது. நம்மிடையே வாழ்பவரில் எவரது நடத்தை தார்மிக விஷயங்களில் பிரமாணமெனில், அவருக்கு சாஸ்திர நம்பிக்கை இருக்க வேண்டும்; சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட ஆசாரங்களை அவரே வாழ்வில் அநுசரிக்க வேண்டும்; காமக் குரோதம் இல்லாதவராக இருக்க வேண்டும்இப்படிப்பட்ட சிஷ்டர்களுடைய ஆசாரம் ஒரு பிரமாணம். அதற்கப்புறம் நம்முடைய மனசாட்சி (conscience). நம்முடைய மனசு நிஷ்களங்கமாக எப்படி ஆலோசிக்கிறதோ அது ஒரு பிரமாணம்.

ஆகவே, ஆத்மிக, தார்மிக மத விஷயங்களில் பிரமாணங்களைக் கொள்ளும் முறையில் முதலில் வேதம் இடம்பெற வேண்டும். அப்புறம் தர்ம சாஸ்திரத்தைக் கொள்ள வேண்டும். அப்புறம் பூர்வகால ரிஷிகள் முதலியவர்களின் நடத்தை. பின்பு இப்பொழுதுள்ள சிஷ்டர்களின் ஆசாரத்தைப் பிரமாணமாகக் கொள்ள வேண்டும். இவைகளுக்கெல்லாம் அப்புறம் கடைசிப் பக்ஷமாகத்தான் சாஸ்திர விஷயங்களில் மனசாட்சியைப் பிரமாணமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. முதலில் மனசாட்சியைத்தான் பார்க்கிறார்கள். கடைசியில்தான் வேதத்தைக் கவனிக்கிறார்கள். நியாயப்படி வேறு ஒரு மார்க்கமும் இல்லாதபோதுதான் மனசாட்சியை அநுசரிக்க வேண்டும். மனசாட்சி என்று ஏன் அதற்குப் பெயர் வந்தது? சாட்சி சொல்லத்தான் யோக்கியதை உடையதுநியாயாதிபதியாக (judge) இருக்க அதற்கு யோக்கியதை இல்லை. சாட்சியாக வந்தவன் வாயால் பொய்யைச் சொல்வான். அதனால் வாய்சாட்சியை நம்புவதற்கில்லை. ஆனால், மனம் பொய் சொல்லாது. மனசுக்கு எல்லாம் நிஜமாகத் தெரியும். “நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை என்று அவ்வைப் பாட்டி சொன்னாள். ஆகவே அதைச் சாட்சியாக மட்டும் வைக்கலாம். இப்பொழுது மனசாட்சியை தர்ம விஷயங்களில் ஜட்ஜாகவே வைத்து விடுகிறார்கள். இன்னது நடந்தது என்பதை நிஜமாகவே அது சொல்லும். இதுதான் நியாயம் என்று அதனால் தீர்மானித்துச் சொல்ல முடியாது. தான் நினைப்பதை சரி என்று எப்படியாவது சமாதானம் சொல்லி நிலைநாட்டிக் கொள்வதே அவரவர் மனசும் செய்கிற முடியாக இருக்கும். இது எப்படி தர்ம நியாயமாகும்? எனவே, ‘மனசாட்சிக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன்என்று சொல்வது தப்பு. எடுத்தவுடன் அதற்கு ஜட்ஜ் ஸ்தானம் கொடுத்துவிடக்கூடாது. ஒருவித வழியும் இல்லாமல் போனால், ‘நீ தான் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாயே, இப்போது உன் அபிப்பிராயத்தைச் சொல்என்று மனஸிடம் கேட்கலாம். மனசு ஒரு தனி மனிதனைச் சேர்ந்தது. எனவே அது எவ்வளவு தூரம் தன் சுயநலத்தை விட்டு விலகிப் பேசும் என்று சொல்ல முடியாது. சொந்த விஷயங்களில் அதற்குத் தருகிற இடத்தைக்கூட சமய விஷயங்களில் தருவதற்கில்லை. ‘தனி மனசுஎன்ற நிலைக்கு மேலே போய் முழுக்க முழுக்க லோக க்ஷேமத்தையே சொன்ன ரிஷிகளின் அபிப்பிராயம்தான் தர்ம விஷயங்களில் பிரமாணமாகும்.

சநாதன தர்மமே சங்கரர் தரும் நெறி

 “நாய்க்குக் கெட்ட பெயர் சூட்டித் தூக்கில் போடு” (Give the dog a bad name and hang it) என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் சொல்வார்கள். நாய் நன்றியறிதலும் விசுவாசமும் உள்ள பிராணி. அதைத் தூக்கில் போடுவதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனால் அதற்கு ஒரு கெட்ட பெயரைக் கொடுத்துவிட்டு, எவனோ தூக்கில் போட்டான் போலிருக்கிறது!

நவீன நாகரிக சீர்திருத்தக்காரர்கள் நமது தர்ம சாஸ்திரங்களின் விஷயத்தில் இதையேதான் செய்கிறார்கள். யுகாந்திரமாக, இந்தத் தேசத்துக்குப் பரம க்ஷேமத்தைச் செய்துவந்த அந்த தர்மங்களால் ஏதேதோ கொடுமைகள் நேர்ந்ததாகச் சொல்லி, கெட்ட பெயரை உண்டாக்கி, அவற்றைத் தூக்கில் போடப் பார்க்கிறார்கள். நம் சனாதன சாஸ்திரங்கள் வரையறை செய்து தந்த சமூகப் பாகுபாடு (வர்ண தர்மம்) கூடாது என்று சிலருக்குத் தோன்றுகிறது. எனவே, தர்ம சாஸ்திரங்களால் வாஸ்தவத்தில் ஏற்படாத கொடுமைகளை இவர்களாகக் கற்பித்துச் சொல்கிறார்கள். ‘நம் தேசத்தில் இன்னின்னார்தான் இன்னின்ன காரியம் செய்யலாம் என்ற அதிகார பேதத்தால் ஜனங்கள் பிரிந்து பிரிந்து போனார்கள். இதனால் ஹிந்து சமூகத்தில் ஒற்றுமை இல்லை; இதனால்தான் நம்மை அன்னிய தேசத்தார் பல முறை ஜயிக்க முடிந்ததுஎன்று சொல்கிறார்கள். இது துளிக்கூடச் சரியில்லை.

பொது எதிரி வந்தபோது நம் தேசத்து ராஜாக்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால் ஜனங்களிடையே பரஸ்பரம் பேதம் இருந்து, அவர்கள் எதிரிக்கு உதவி செய்ததாகச் சொல்வதற்குக் கொஞ்சம்கூட சாட்சியம் இல்லை. பேதங்கள் போகவேண்டும் என்று சொல்கிற இப்போதுதான் உண்மையில் பேதமும் துவேஷமும் உக்கிரமாக இருக்கின்றன. இதற்கு மாறாக, சௌஜன்யத்தையே சமீப காலம்வரை கண்கூடாகப் பார்த்தோம். இரண்டு கிராமங்களுக்கிடையில் ஏதோ ஒரு வயல், வரப்பு, வாய்க்கால் அல்லது கோயில் பற்றிப் பாத்தியதை சண்டை வந்தால், அந்தந்த கிராமத்திலும் உள்ள அக்கிரகார ஜனங்களிலிருந்து சேரி மக்கள் வரையில் எல்லோரும் ஒரு கட்சியாகத்தான் நிற்பார்கள்; இந்தக் கிராமத்தில் உள்ள ஒருவன் தன் ஜாதியைச் சேர்ந்த எதிராளிக் கிராமத்தானோடு சேரவே மாட்டான். கிராமத்து விஷயமே இப்படி என்றால் தேசத்தின் விஷயத்தில் சொல்லவே வேண்டாம்.

சின்னச் சின்ன சமூகங்கள் தங்களுக்குள் கட்டுப்பட்டு ஒழுங்காக இருக்க முடிந்தது. அவரவருக்கும் தங்கள் சமூகத்தைப் பற்றிப் பெருமையே இருந்தது. அவரவரும் தங்கள் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள தனித்தனி நாட்டாண்மை வைத்திருந்தார்கள். ஒருத்தன் தப்புத்தண்டா பண்ணிவிட்டால் நாட்டாண்மைக்காரர்கள் அவனைத் தங்கள் சமூகத்திலிருந்து பிரஷ்டம் செய்து விடுவார்கள். அவரவருக்கும் தங்கள் சமூகத்தில் கௌரவ புத்தியும், மனமார்ந்த பிடிமானமும் இருந்ததால் பிரஷ்டம் செய்யப்படுவதைப் பெரிய அவமானமாக எண்ணினார்கள். இதுவே அவர்களைத் தப்புத் தண்டாவிலிருந்து தடுக்கும் பெரிய சக்தியாக இருந்தது. இப்போது எல்லா சமூகங்களையும் மனமார்ந்த பிடிமானத்தோடு சேர்த்துப் பிடித்து வைக்க எந்த ஸ்தாபனமும் இல்லை. கட்டுக்கடங்காத ஒரே பெரிய அமைப்பில் இது சாத்தியமும் இல்லை. விளைவு: குற்றங்கள் கூச்சமில்லாமல் நடக்கின்றன; போலீஸின் வேலை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. சாஸ்திரங்களை எதிர்க்கிறவர்கள் இதை எல்லாம் யோசிக்க வேண்டும்.

எதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்; அதுவே நல்லதும்கூட. எதிர்ப்பு இருந்தால்தான் நம் நிறை குறை சரியாக வெளியாகும். நம்மை ரக்ஷித்துக் கொள்வதில் விழிப்பும் இருக்கும். ஆனால் எதிர்ப்பு என்கிற பெயரில் இல்லாத கெடுதல்களைச் சொல்லி நல்லதைத் தூக்கில் போடக்கூடாது.

இல்லாததைச் சொல்வதற்கு இன்னோர் உதாரணம். நெற்றிக்கு இட்டுக் கொள்வது சிலருக்கு நாகரிகமாக இல்லை. நெற்றிக்கு இடுவதைஜாதி அடையாளம்என்று கெட்ட பெயர் தந்து தூக்கில் போடப் பார்க்கிறார்கள். வாஸ்தவத்திலோ, விபூதி பூசுகிறவர்களில் பிராம்மணரிலிருந்து தீண்டாதார்வரை சகல ஜாதியாரும் உள்ளனர். இப்படியே நாமம் போடுபவரிலும் எல்லா ஜாதியாரும் இருக்கிறார்கள். எல்லாம் விஷ்ணு வடிவமான மண்ணில் தோன்றி மண்ணில் முடிவது என்பதற்கு அடையாளமே திருமண். சரீரம் பஸ்மமான பின்னும் சாசுவதமாக இருக்கிற சிவமயமான பரமாத்மாவிற்கு அடையாளம் திருநீறு. இப்படிப்பட்ட தத்துவச் சின்னங்களை கெட்ட பெயர் சூட்டித் தூக்குபோடலாமா?

பழைய தர்மங்களை எல்லாம் முறிவுபடாமல் காப்பாற்றப் பிரயத்தனப்பட வேண்டும் என்று எங்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக் கொண்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக க்ஷேமம், ஆத்ம க்ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்.