சாமானிய தர்மங்கள் அனைவருக்கும் பொதுவானவை
தியானத்தில் ஒருமுகப்படுவதற்கு பெரிய இடைஞ்சல் என்ன? இந்த மனசு ஓயாமல் ஆடிக் கொண்டிருப்பதுதான். மனத்தினால்தான் எல்லா விதமான கஷ்டங்களும் உண்டாகின்றன. மனத்தில் ஏற்படும் ஆசையே அத்தனை கஷ்டங்களுக்கும் காரணம். ‘ஆசைப்படாதே’ என்று இந்த மனசை இழுத்துப் பிடித்து நிற்க வைக்க முடியவில்லை.
நாம் ‘ஒரு வஸ்துவை நினை’ என்று இந்த மனசிடம் சொன்னால், அது ஏதோ சொற்ப காலம் அதை நினைப்பது போல இருந்து, வேறு எங்கோ பாய்ந்து விடுகிறது. தியானம், சாந்தி என்றெல்லாம் நான் உபந்நியாசத்தில் சொல்கிறபோது ஒரு க்ஷணம் உங்கள் மனம் அடங்கினாற்போல் தோன்றும், ஆனந்தமாய் இருக்கும். ஆனால் அடுத்த க்ஷணமே மனம் எங்கோ ஓடி, சாந்தி குலைந்து போகிறது.
‘பேசாமல் இரு’ என்று கட்டளை போட்டு வாயை மூடிக் கொண்டுவிட்டால், அது ஓரளவாவது பேசாதிருக்கிறது. ‘பார்க்காதே’ என்று உத்தரவு போட்டுக் கண்ணை முடிக்கொண்டுவிட்டால், கண் ஓரளவாவது பார்க்காமல் இருக்கிறது. ஆனால் இந்த மனத்திடம் மட்டும் ‘நினைக்காமல் இரு’ என்று எவ்வளவுதான் முட்டிக்கொண்டாலும் அது கேட்பதில்லை. நாம், ‘நினை’ என்றால் மனம் நினைக்க வேண்டும்; ‘நினைக்காதே’ என்றால் நினைக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மனம் ஸ்வாதீனமாயிற்று. நமக்குச் சித்த ஸ்வாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது பைத்தியங்கள் என்று சிலரைக் குறிப்பிட்டு அவர்கள் சித்த ஸ்வாதீனம் இல்லாதவர்கள் என்கிறோமே, உண்மையில் நமக்கு எவருக்குமே சித்த ஸ்வாதீனம் இல்லைதான். பைத்தியம் வாயை அடைக்காமல் பிதற்றிக் கொண்டே இருக்கிறது என்றால், நாமும் மனத்தை அடைக்காமல் அது பிதற்றல் வழியில் போகத்தான் விட்டிருக்கிறோம்.
நமக்குச் சித்த ஸ்வாதீனம் வந்துவிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா? எத்தனை வலி ஏற்பட்டாலும், ‘வலி என்று நினைக்காதே’ என்றால் மனம் வலியைப் பொருட்படுத்தாமல் இருந்துவிடும். எதிரிலே புலி வந்து உறுமினால்கூட மனத்திடம் ‘பயப்படாதே’ என்றால் அது பயப்படாமலே இருக்கும். இப்போது நாம் காரணமில்லாமல் அழுது கொண்டிருக்கிறோம். மனசு வசப்பட்டுவிட்டாலோ, அழுகைக்குக் காரணமாக எத்தனை துக்கம் வந்தாலும்கூட அது சிரித்துக் கொண்டிருக்கும். ஆத்திரமூட்டும்படி என்ன நடந்தாலும் அது கோபமே இல்லாமல் சாந்தமாயிருக்கும்.
முதலில் மனசை இப்படி அப்படிப் போகாமல், நல்ல விஷயத்தில் நினைவைச் செலுத்தும்படி செய்ய வேண்டும். எண்ணெயை விட்டால் அது எப்படிப் பிசிர் இல்லாமல் ஒரே இழையாக விழுகிறதோ (இதைத் ‘தைலதாரை’ என்பார்கள்) அது மாதிரி மனம் நல்ல நினைவில் ஒருமுகப்பட்டுச் செல்ல வேண்டும். ‘ஸ்வாமி, ஸ்வாமி’ என்ற நல்ல வஸ்துவை அப்படியே நினைத்துக் கொண்டிருக்கும்படி, மனத்தை அப்பியாசப்படுத்த வேண்டும். அதன்பிறகு ‘நினைக்கிறோம்’ என்பதும்போய், ஸ்வாமியிலேயே கலந்து ஸ்வாமியாகவே ஆகிவிடுவோம்.
இப்படி மனசை அடக்குவதுதான் ‘யோகம்’ என்பது.
சாவதற்குள் இந்த மனசை அடக்க ஒருவழி தேடியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்புதான்; மறுபடி மனசின் ஓயாத ஒட்டம்தான். எனவே, இந்த ஜன்மாவிலேயே காமமும் குரோதமும் ஏற்படுவதற்கு எவ்வளவோ ஹேதுக்கள் இருக்கும்போதே இவற்றின் நடுவே மனசை அடக்க முழுப் பிரயத்தனமும் பண்ண வேண்டும். அப்படிப் பண்ணி ஜெயித்தவன்தான் ‘யுக்தன்’ என்கிற யோகி. அவன்தான் ‘ஹுகி’ உண்மையான ஆனந்த ஆத்மா என்கிறார் கிருஷ்ண பகவான்.
‘யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா?’ என்று விட்டு விடலாகாது. மருந்து யாருக்கு வேண்டும்? வியாதி உள்ளவனுக்குத்தானே? நமக்குத்தான் மனோவியாதி – அதாவது, மனம் என்ற வியாதி – இருக்கிறது. எனவே நாம்தான் அதை அடங்குகிற மருந்தைச் சாப்பிட வேண்டும்.
மனசை அடக்க இரண்டு சாதனங்கள் உண்டு. ஒன்று பகிரங்க சாதனம், மற்றது அந்தரங்க சாதனம். வெளிமுகமாகச் செய்வது பகிரங்க சாதனம். உள்ளுக்குள்ளேயே செய்து கொள்வது அந்தரங்க சாதனம். இரண்டும் வேண்டும். இந்த மடத்தில் வண்டிக்காரன், சமையல்காரன் இவர்கள் வெளியிலும், தீபத்தில் திரிபோட்டுத் தருகிறவன், புஷ்பம் எடுத்துக் கொடுப்பவன் இவர்கள் பூஜைக்குப் பக்கத்திலேயே அந்தரங்கமாகவும் இருக்கிறார்கள். இரண்டு வகையினரும் இருந்தால்தான் மடம் நடக்கும். அப்படியே பகிரங்க சாதனம் அந்தரங்க சாதனம் இரண்டையும் கொண்டு மனத்தை முதலில் நல்லதில் ஒருமுகப்படுத்தி, பிறகு ஒன்றையுமே நினைக்காத நிலைக்கு வரவேண்டும்.
தான தருமம் செய்து, சந்தியாவந்தனம், யாகம், பூஜை பரோபகாரம் எல்லாம் நல்லதில் மனசைச் செலுத்தும் பகிரங்க சாதனங்கள். தியானம் என்பதே மிகச் சிறந்த அந்தரங்க நிலை. அதற்கு அநுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை. அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் என்பவை. எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனசை அன்புமயமாகச் செய்து கொள்வது அஹிம்சை. மனம், வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலே ஈடுபடுத்துவது சத்தியம். அஸ்தேயம் என்றால் ‘திருடாமல் இருப்பது’ என்று அர்த்தம். அதாவது, பிறர் பொருட்களில் ஆசையே எழாதபடி வைராக்கியமாக இருப்பது. சௌசம் என்றால், தூய்மைப்படுத்திக் கொள்வது. ஸ்நானம், மடி, ஆசாரம், ஆகாராதிகளின் சுத்தி எல்லாம் சௌசத்தில் அடங்கும். இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல் ஒவ்வோர் இந்திரியத்துக்கும் இவ்வளவுதான் ஆகாரம் கொடுப்பது என்று நிர்ணயமாக வைத்துக் கொள்வது. ‘கண் இதைப் பார்க்கக்கூடாது. காது இதைக் கேட்கக்கூடாது. வாய் இதைத் தின்னக்கூடாது. இதைப் பேசக்கூடாது. உடம்பு இந்தப் பாவத்தை செய்யக்கூடாது’ என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம். சாதனை செய்வதற்காக மட்டுமே சரீரம் வேண்டும். சரீரம் உயிர் வாழ்வதற்காக இந்திரியங்களுக்கு எவ்வளவு அதம பட்சம் தீனி கொடுக்க வேண்டுமோ அவ்வளவே கொடுக்க வேண்டும்.
அஹிம்சை
எல்லா மக்களுக்கும் பொதுவான சாமானிய தர்மங்களில் அஹிம்சையே முதலானது என மனு தர்ம சாஸ்திரம் விதிக்கிறது. மனஸை ஸ்வாதீனப்படுத்திக் கொள்ளும் யோகத்துக்கு ஓர் அங்கமாக அஹிம்சை கருதப்படுகிறது.
சரீரத்தால் ஹிம்சை செய்யக்கூடாது என்பது மட்டும் அஹிம்சையல்ல; யாருக்கும் எவ்விதக் கஷ்டமும் ஏற்படவேண்டுமென்று மனஸாலும் நாம் எண்ணக்கூடாது. வாயால் பிறருக்குக் கஷ்டம் தருகிற பேச்சைப் பேசக்கூடாது.
சுபாவத்தில் நம்மில் யாருக்கும் பிறரை ஹிம்சித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசையில்லை. ஆனாலும் பிறர் ஏதாவது குற்றம் செய்வதாக நமக்குத் தோன்றினால், அல்லது நமக்கு அவர்கள் கெடுதல் செய்வதாகத் தோன்றினால், அவர்களுக்குப் பலவிதத்தில் ஹிம்சை தர எண்ணுகிறோம். நம்முடைய சின்னஞ்சிறு குழந்தை தெரியாத்தனத்தால் நம் வீட்டில் நெருப்பை வைத்து விட்டால் குழந்தையை ஹிம்சிக்கிறோமா? அப்படிச் செய்யமாட்டோம். நெருப்பை அணைக்கவே முற்படுவோம். மறுநாள் முதல் அந்தக் குழந்தை நெருப்பண்டை போகாமல் ரக்ஷிப்போம். நமக்குத் துன்பம் தருவதாகத் தோன்றுகிற எவரையும், அந்தக் குழந்தையாகவே பாவிக்க வேண்டும். மறுபடியும் தவறு செய்யாமல் அவரை அன்புடன் தடுத்து ரக்ஷிக்க வேண்டும். அவர்மீது துவேஷம் பாராட்டி, பதிலுக்கு ஹிம்சை தரக்கூடாது. இதுதான் உண்மையான அஹிம்சை.
இது நம் மனத்தை வசப்படுத்திக்கொள்ளும் யோகத்துக்கு மிகவும் பிரயோஜனமாகிறது. மனம் பூதம் போன்றது. ஆனால், பூதத்தை – வேதாளத்தை – விக்கிரமாதித்தன் வசப்படுத்தியபின், அது அவனுக்காக எவ்வளவு காரியம் செய்தது! அப்படியே வசப்பட்ட மனம் எவ்வளவோ நல்லதைச் செய்யும்.
யானை கட்டுப்படாவிட்டால் உலகுக்கு உபத்திரவம்தான்; ஆனால் கட்டுப்பட்டுவிட்டால் எத்தனை நல்ல காரியங்களை அதன் மூலம் சாதிக்க முடிகிறது! யானை பலம் கொண்ட மனஸைக் கட்டுப்படுத்தினால் எத்தனையோ நல்லதைச் செய்யலாம். ஆஞ்சநேய ஸ்வாமி மனோஜயம் செய்ததால்தான் அவ்வளவு சக்தி பெற்றிருந்து அத்தனை ஸத்காரியங்களை செய்தார். மனத்தின் சக்தி அபரிமிதமானது. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் பராசக்தியின் ஒரு மனம்தான் சிருஷ்டித்திருக்கிறது. இந்த சிருஷ்டியில் இருக்கிற ஒரு சிறிய எறும்பின் சின்ன மனமோ, இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் பாய்ந்தோடுகிறது.
‘அஹிம்சையை அநுசரித்தேன், மனம் வசப்பட்டது’ என்று எத்தனையோ மகான்களும் யோகிகளும் சொல்லியிருக்கிறார்கள். அஹிம்சையினால் கோபம்போய் மனசானது அன்பில் தெளிந்து விடுவதால், அப்புறம் அதை வசப்படுத்துவது சுலபமாகி விடுகிறது.
அஹிம்சையின் முக்கிய பிரயோஜனம் சித்தம் அடங்குவதே. ஆனால், அஹிம்சையை அப்பியசிப்பதால், நாம் உத்தேசிக்காமலே வேறொரு பலனும் ஏற்படும். இதற்கு ‘அவாந்தரப் பிரயோஜனம்’ என்று பெயர். நீங்கள் எல்லோரும் இந்த மடத்துக்குப் பூஜை பார்க்கத்தான் வந்திருக்கிறீர்கள். அதுதான் உங்கள் உத்தேசம். அதோடுகூட மேளம் கேட்கிறீர்கள்; ரொம்ப நாளாக பார்க்காத பலரை இங்கு பார்த்தீர்கள்; இப்போது உபந்யாஸம் கேட்கிறீர்கள் – இதெல்லாம் உத்தேசிக்காமலே கிடைக்கும் அவாந்தரப் பிரயோஜனம்.
இவ்வாறே ஒருவன் மனம், வாக்கு, காயம், என்ற திரிகரணங்களாலும் அஹிம்ஸையைப் பூரணமாகச் சாதித்து விட்டால், அவனுடைய சங்கற்பமின்றியே – அதாவது அவாந்தரப் பிரயோஜனமாக – அவனுடைய சந்நிதானத்துக்கு வருகிற எல்லாப் பிராணிகளும் தாமாகவே தங்கள் பகைகளை மறந்து அஹிம்ஸா மயமாகிவிடும்.
அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம்
தத்ஸந்நிதௌ வைரத்யாக:
– யோக சூத்திரம்.
அஹிம்ஸையைப் பூரணமாக அநுஷ்டித்தவன் இருக்குமிடத்தில் குரூரமானவர் மனத்திலும் சாந்தம் உண்டாகும். எனவே, தான் அன்போடு இருப்பதே இவனது சங்கற்பமானாலும், மற்றவர்களையும் அன்பாக ஆக்கும் அவாந்தரப் பிரயோஜனமும் கிடைக்கிறது.
சந்நியாசி பூரண அஹிம்சையை அநுஷ்டிக்க வேண்டும். அவன் இலையைக் கூட கிள்ளக்கூடாது. தாவரங்களைச் சமைத்து ஹிம்சிக்கக்கூடாது. அஹிம்ஸை காரணமாகத்தான் அவனுக்கு அக்னிகாரியமே விதிக்கப்படவில்லை. அக்னி என்று இருந்துவிட்டால், அதில் தவறிப்போய் ஏதாவது பூச்சி பொட்டு விழுந்து சாகக்கூடும். நெருப்பிலே விழுந்ததை எடுத்துக் காப்பாற்றுவது கஷ்டமல்லவா? இதனால்தான் துறவிக்கு ஹோமம், யாகம் எதுவும் இல்லை. அவன் அக்னி காரியமே செய்யாததால் அவனுக்கும் கடைசியில் தகனம் என்ற அக்னி காரியம் இல்லை. அவனுடைய சரீரத்தை பூமியில் அடக்கம் செய்கிறார்கள். ‘சகல பிராணிகளுக்கும் என்னால் பயம் இல்லாமல் போகட்டும்’ என்று சந்நியாஸம் வாங்கிக் கொள்ளும்போது அவன் பிரதிக்ஞை செய்கிறான். அதன்படி, எந்தப் பிராணிக்கும் தாவரத்துக்கும் ஹிம்ஸை இல்லாமல் வாழவேண்டியது அவனுக்கே பூரணமாக விதிக்கப்பட்ட தர்மம்.
‘அஹிம்ஸா பரமோ தர்ம:’ என்று ஜைன, பௌத்த மதங்கள் எல்லோருக்கும் பூரண அஹிம்ஸையை விதித்ததுபோல் நம் மதம் செய்யவில்லை. சன்னியாசிகளுக்கே இதை அதி தீவிரமாக விதித்திருக்கிறது. மற்றவர்களுக்கு இத்தனை கட்டுப்பாடு இல்லை. தர்மயுத்தத்திலும், யக்ஞத்தில் பலி தருவதிலும் நம் மதம் அஹிம்ஸையை விலக்கியிருக்கிறது. லோக க்ஷேமத்துக்காகவே சில தேவ சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக யாகத்தில் பசு (பிராணி) பலி தரப்படுகிறது. யக்ஞத்தில், பலியாகிற பிராணி, இதனால் தானாக சம்பாதித்துக்கொள்ள முடியாத பரமோத்தமமான கதியை அடைகிறது என்பது நம் நம்பிக்கை. ஆக அந்தப் பிராணிக்கும் சிரேயஸ், அது செய்த தியாகத்தால் லோகத்துக்கும் நல்லது என்றாகி விடுகிறது.
இப்படியே யுத்தத்தில் தேசத்துக்குத் தியாகமாக ஸேனா வீரர்கள் பலி ஆகிறார்கள்.
வெறுமே தின்று தின்று தன்னையே போஷித்துக் கொண்டு உயிர் வாழ்வதைவிட, பர நலனுக்காக பிராணத் தியாகம் செய்வது சிரேஷ்டமானது என்பதால் இப்படி அஹிம்ஸைக்கு விலக்கு வைத்திருக்கிறார்கள்.
பூரண அஹிம்ஸா – லட்சியத்தை வாயளவில் பிரமாதமாகப் பேசிவிடலாமே தவிர, காரியத்தில் நடக்காது. குற்றம் குறைகள், அடிதடி, சண்டைகள் எல்லாம் நடைமுறையில் இருக்கத்தான் செய்யும். அப்போது அவற்றைக் குறைப்பதற்காக எடுக்கிற எதிர் நடவடிக்கையில் ஹிம்ஸை இருப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் அது ஹிம்ஸையாகாது. ஏனென்றால், செய்கையைவிட எண்ணம், நோக்கம்தான் முக்கியம். ஹிம்ஸிப்பதிலேயே சந்தோஷப்படுகிற நோக்கமில்லாமல், ஒரு பொது நலத்தை உத்தேசித்து, ஒரு பிராணியை யக்ஞத்தில் பலி தருகிறபோதோ அல்லது ஒரு கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கிற போதோ அல்லது யுத்தத்தில் விரோதிகளை வதைக்கிற போதோ, காரியத்தில் ஹிம்சை தெரிந்தாலும் அது பாபமாகாது; தோஷமாகாது—இதுதான் நம் சாஸ்திரம்.
காரிய சாத்தியமில்லாத பூரண அஹிம்ஸையை பூரண நடைமுறையில் எல்லோருக்கும் விதித்தால், இந்த விதியை மீறிய பாபம், தோஷம்தான் ஜனங்களுக்கும் உண்டாகும். யதார்த்த நிலையை மறக்காத நம் மதம் நமது ஜனங்களுக்கு இந்தப் பாபத்தை உண்டாக்கவில்லை.
மாறாக பௌத்த மதம் எல்லோருக்கும் பூரண அஹிம்ஸை என்று விதி செய்த போதிலும் இன்று நாம் பார்ப்பது என்ன? பௌத்தத்தைத் தழுவிய அத்தனை நாடுகளிலும் சைன்னியம், சண்டை எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. அது மட்டுமில்லை, அந்தத் தேசங்களில் மிச்சம் மீதியில்லாமல் சகல ஜனங்களுக்கும் மாமிஸம் உண்பவர்களாகவே இருக்கிறார்கள்.
பெரிய தர்மம் ஒன்றை அத்தனை பேருக்கும் பொதுவாக வைத்தால், முடிவில் எவருமே அதை அநுஷ்டிக்காத நிலைமையைத்தான் பார்க்கிறோம். நம் தேசத்தில் இப்படிச் செய்யாமல் சன்னியாசிகளுக்கு மட்டும் பூரண அஹிம்ஸையை விதித்தார்கள். அதைப் பார்த்து பிராம்மணர்கள், வட தேசத்தில் குஜராத் முதலான பகுதிகளில் உள்ள வைஷ்ணவர்கள், தென்னாட்டில் சைவ வேளாளர்கள், கோமுட்டிச் செட்டிமார்கள் போன்றவர்களும் இதைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். எனவே ‘விதி’ என்று போட்டுக் கட்டுப்படுத்தாததாலேயே தாங்களாகப் பிரியப்பட்டு, அதிலே நிஜமான ஈடுபாட்டோடு தலைமுறை தத்வமாக இப்படிச் செய்து வந்திருக்கிறார்கள். சந்நியாஸிகளின் ஸத்வ குணத்தைப் பார்த்து, அதன் பொருட்டுத் தாங்களும் இந்த சாகபட்சணத்தையே (Vegetarianism) விரும்பி ஏற்று அநுஷ்டித்து வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, வெளியிலிருந்து யாரும் கட்டுப்படுத்தாமலே மற்ற வகுப்பாரும், ஒரு அமாவாஸை. ஒரு திதி, திவஸம், ஷஷ்டி இம்மாதிரி தினங்களில் மாமிஸ போஜனத்தை விலக்கி விடுகிறார்கள். நடைமுறையில் (Practical) எல்லோருக்கும் இயலாத ஒன்றை சகலர் மீதும் கட்டாயமாக திணிக்காமல், பக்குவிகளான சிலருக்கு மட்டுமே விதிப்பதால், அதுவே மற்றவர்களுக்கும் ஒரு உத்தம லட்சியமாகி (ideal) அதை ஓரளவுக்காவது அவர்களும் பின்பற்றுகிறார்கள். மாறாக எல்லோருக்கும் இதை விதியாக்கிய இடங்களிலோ, எவருமே அதை அநுசரிக்காமல் ஹிம்ஸை அதிகரிப்பதோடு, அவர்கள் விதியை மீறிய தோஷத்துக்கு ஆளாகும்படி வேறு நேர்ந்திருக்கிறது! அஹிம்ஸை என்கிற தத்வம் ஒரு லட்சியமாகவாவது எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதால் அது சாமானிய தர்மங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. காரியம் எப்படி இருந்தாலும் மனசிலே துவேஷம் இருக்ககூடாது என்பதுதான் நம் வைதிக தர்மப்படி அஹிம்ஸையின் லட்சணம் (definition).