20 . பொதுவான தர்மங்கள் – பகுதி ஒன்று

சத்தியம்

சகல மக்களும் அநுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு (அஹிம்ஸை). அடுத்தது உண்மை (சத்தியம்).

சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள்.

வாங்மனஸயோ: ஐக ரூப்யம் ஸத்யம்

மனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே பகவான் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். மனத்தில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக நாம் நடந்து கொண்டோமானால் அடுத்த ஜன்மத்தில் நமக்குக் கொடுத்த பேச்சுத் சக்தியைப் பறித்துக் கொண்டு விடுவார்அதாவது மிருக ஜன்மத்தையே நமக்குத் தருவார்.

பூரண அஹிம்சைக்கு நமது சாஸ்திரத்திலேயே சில விலக்குகள் இருக்கின்றன. தர்மத்துக்காக யுத்தம் செய்யும் போதும், யாகயக்ஞங்களில் பலி தருகிற போதும் அஹிம்ஸைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது என்று நினைப்பீர்கள். ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது. அதைக் கொஞ்சம் விளக்குகிறேன்.

ஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து வாஸ்தவமாகவே ஒருவருடைய மனசு கொதிக்கிறது. அவன் இந்தத் தப்பையெல்லாம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான். ‘அவன் அந்த அயோக்கியத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான்என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு வாக்கும் மனசும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இவன் அப்படிச் சொல்வதால் இவனுக்கும் பிரயோஜனமில்லை. ஜனங்களுக்கும் பிரயோஜனமில்லை. தப்புச் செய்கிறவர்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வியர்த்தமாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதை சத்தியம் என்று சொல்வதற்கில்லை.

ஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சாத்தியமாகிவிடுமா? ஆகாது.

ஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்

பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே.

ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாறும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது. நல்லதாகவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் ஹிதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.

சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே,’ என்பது பெரியோர் வாக்கு.

ஸ்த்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத்

ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்

ப்ரியம் அந்ருதம் ப்ரூயாத்

காமமும் குரோதமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. க்ஷேமத்தையே உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக காம, குரோதங்களற்ற நல்ல மனம் வேண்டும்.

ஆக சத்தியத்தின் லட்சணம், மனமும் வாக்கும் ஒன்று பட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது. வாக்கு சாந்தமாக, ஹிதமாக இருப்பது. மொத்தத்தில் தனக்குச் சித்த சுத்தியையும் பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது.

சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஓர் அவாந்தரப் பிரயோஜனம் உண்டுஅதாவது அந்த சத்தியசந்தன் உத்தேசிக்காமலே ஒரு பிரயோசனம் சித்திக்கும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே யதார்த்தத்தில் சத்தியமாக நடந்துவிடும். இதற்குத் திருஷ்டாந்தமாக ஒரு கதை சொல்கிறேன்.

திருக்கடவூரில் அபிராமி பட்டர் என்று அம்பாளின் பரம பக்தர் இருந்தார். அவர் அம்பாளையே நினைத்து பரவசமாகும்போது உன்மத்தரைப் போலப் பிதற்றுவார். இதைப் பற்றி சரபோஜி ராஜாவிடம் யாரோ துஷ்பிரசாரம் செய்தார்கள். ‘அபிராமிபட்டர் ஒரு குடிகாரர், பக்தர் என்று வேஷம் போடுகிறார்என்று ராஜாவிடம் கோள் சொல்லிவிட்டார்கள். சரபோஜிக்கு இதைப் பரிசோதித்துப் பார்க்கத் தோன்றியது. ஒரு நாள் சரபோஜி திருக்கடவூரில் அம்பாளை தரிசிக்க வரும்போது, அங்கே தன்வசமிழந்திருந்த பட்டரிடம், ‘இன்றைக்கு என்ன திதி?’, என்று கேட்டான். அன்றைக்கு அமாவாஸை. பட்டரோ அம்பாளின் பூரண சந்திர முகத்தையே தியானம் செய்து பரவசமாக இருந்தார். எனவே, அரசரிடம், இன்று பௌர்ணமி என்று சொல்லிவிட்டார். அரசன் தன்னிடம் மற்றவர்கள் பட்டரைப் பற்றிச் சொன்னது உண்மை என்றே நினைத்தான். பட்டரிடம் கேலியாக, “அப்படியா! சந்திரன் உதயமாகிவிட்டானா என்று ஆகாயத்தைப் பார்ப்போம்என்று தலையைத் தூக்கினான்.

அப்போது வாஸ்தவமாகவே ஆகாயத்தில் பூரண சந்திரன் வந்து நின்றது, அபிராமி பட்டர் சத்தியத்திலேயே ஊறியிருந்ததால், தவறிப்போய் அவர் அசத்தியத்தைச் சொன்னபோது, அம்பாளே தன் தாடங்கத்தைக் கழற்றி ஆகாயத்தில் வீசீ, பூரண சந்திரனாக ஜொலிக்கச் செய்தாள்.

மகான்கள் செய்கிற ஆசீர்வாதம் அவர்கள் கொடுக்கிற சாபம் எல்லாம் அப்படியே பலித்து விடுவதற்குக் காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்திதான். அவர்கள் எது சொன்னாலும் நடந்துவிடும். இது சத்தியமாக இருப்பதின் அவாந்தரப் பிரயோஜனம். ஆனால், தான் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டு அதன் பொருட்டாக ஒருவரும் சத்தியத்தை அநுஷ்டிக்கக்கூடாது. உத்தேசமில்லாவிட்டால்தான் இந்தச் சக்தி தானாக வருமே ஒழிய உத்தேசித்துவிட்டால் அப்புறம் அதுஅவாந்தரமே இல்லை.

கர்ப்பமாக நாம் தாயாரிடம் வைக்கப்படுவதிலிருந்து, கடைசியில் தகனமாகிற வரையில் நம்மை சுத்தப்படுத்த சாஸ்திரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லியிருக்கிறது. அவற்றோடு, அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் இவையும் நம்மால் அநுஷ்டிக்கப்பட்டால், நம் அழுக்குகள் எல்லாம் போய், ‘நாம் உண்மையில் யார்? ஸ்வாமி என்பவர் யார்? பரம சத்தியம் என்பது என்ன? என்பதை எல்லாம் அறிகிற பக்குவம் உண்டாகும். பிறர் பொருள் மீது ஆசைப்படாமலிருப்பதே அஸ்தேயம். ‘சௌசம்என்பதுசுசிஎன்பதிலிருந்து வந்தது. ‘சுசிஎன்றால் சுத்தம். வெளியே சுத்தமாக, தூய்மையாக, ஆசாரமாக இருந்தால் அதுவே உள்தூய்மைக்கு உபகாரம் செய்யும். நீராடுவது, மற்ற மடி ஆசாரங்கள் சௌசத்தின் கீழ் வரும். இந்திரிய நிக்ரஹம் என்பது ரொம்பவும் முக்கியம். சரீர சந்தோஷத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது, எதை வேண்டுமானாலும் பார்ப்பது, எதை வேண்டுமானாலும் கேட்பது, எதை வேண்டுமானாலும் தின்னுவது, எதை வேண்டுமானாலும் பேசுவது என்றில்லாமல், இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது இந்திரிய நிக்ரஹம்புலனடக்கம்அதாவது யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.

எள்ளும் தண்ணீரும் எங்கே போயின?

மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும். ஆதித்யம் (ஓர் அதிதிக்காவது உணவு படைப்பது) அல்லது திருக்குறளிலேவிருந்துஎன்பது இதுதான். இது மனுஷ்ய யக்ஞம். பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. ‘பிரம்மம்என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில்வேதம்என்று அர்த்தம். வேதம் ஓதுவதும், ஓதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷிகளின் திருப்திக்காக ஏற்பட்டது. இது எல்லோரும் செய்வதல்ல. எல்லோருக்காகவும் பிராமண ஜாதியினர் மட்டும் செய்வது. எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம்பூத யக்ஞம்’. அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகிற காரியம். பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம். வைதிகத் தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம்.

வேத நெறியில் சொல்லப்பட்டதையே ஏறக்குறைய திருவள்ளுவரும்,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென் புலத்தார்என்பது பித்ருக்கள். பித்ருக்களான தாய் தந்தையார்களுக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். ‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவஎன்று வேத மாதாவும், இங்கே நம் எல்லோருக்கும் வேத ஸாரத்தையே லகுவாகப் பிழிந்து கொடுத்த அவ்வை, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.

அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.

பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதைசீர்திருத்தக்காரர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் மரண மடைந்த பின் பித்ரு காரியம் செய்வது அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது.

எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன; அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வஸ்து அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா? என்று சீர்த்திருத்தக்காரர் கேட்கிறார். அவர் வாய்விட்டுக் கேட்கிறார்; உங்களில் பலருக்கும் மனசுக்குள் இப்படிச் சந்தேகம் இருக்கலாம்.

உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்:

ஒருவர் பையனைப் பட்டணத்தில் படிக்க வைத்திருந்தார். அவர் பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருந்தது. உடனே அப்பாவுக்கு, ‘தந்தி மணியார்டரில் பணம் அனுப்புஎன்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோதந்தி மணியார்டர்அனுப்பும்படி எழுதியிருந்தான். அப்பா தபாலாபீஸுக்குப் போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஓட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, “சரி, உம்முடைய பணம் சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டதுஎன்றார். குமாஸ்தா பணத்தை வாங்கி பெட்டியில் போட்டதையும், ஓட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், “என் பணம் இங்கேதானே இருக்கிறது! அதில் ஓட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே! அது எப்படிப் போய்ச் சேரும்என்று கேட்டார். “அது போய்ச் சேர்ந்துவிடும்என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். “கட்டுக் கடகடஎன்று தந்தியும் அடித்தார். ‘ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ரூபாய் இங்கே இருக்கிறது. லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய்ச் சேரும்என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.

ஆனாலும் பணம் போய்ச் சேர்ந்து விட்டது. தர்ப்பணம் முதலியன பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கான சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போடுவார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேசுவரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.

தந்தி மணியார்டர் செய்தவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லையல்லவா? மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டுச் செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் கட்டினாலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித்தரவும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ கட்ட முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை இங்கே தந்தால், பிதிருக்கள் இருக்குமிடத்தில் அவர்களுக்கு ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.

பிதிருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவமும், சாஸ்திரத்தில் நமக்குள்ள சிரத்தையுமே முக்கியம். “இன்னொருவனுடைய ஆரோக்கியத்துக்காக நான்டோஸ்ட்சாப்பிடுகிறேன்என்று பார்ட்டியில் வெள்ளைக்காரர்களும் வேறொருவன் பேரைச் சொல்லிக் கொண்டு தாங்களே போஜனம் செய்கிறார்கள். தங்களுடைய மனோபாவத்தின் சக்தியால் இன்னொருவனுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்று நம்பி அப்படிச் செய்கிறார்கள். சிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம். சிரத்தை நமக்கு முக்கியம். ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் அதற்குரிய சட்டப்படிதான் பண்ண வேண்டும். லெட்டர் எழுதினால், “இப்படித்தான் அட்ரஸ் எழுதுவேன்; அந்தத் தபால் பெட்டியில் போடுவானேன்? எங்களகத்தில் அதைவிட நல்ல பெட்டி செய்து அதில் போடுவேன்என்று சொல்லலாமா? காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில் அன்பு, பக்தி, ஞானம் இவற்றைக் கட்டுப்பாடின்றிச் செலுத்தலாம். காரியம் என்று செய்கையில் அதற்காக ஏற்பட்ட விதியை விடவே கூடாது.