21 . பொதுவான தர்மங்கள் – பகுதி இரண்டு

பூஜை

 ‘தென்புலத்தார், தெய்வம்என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.

சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். ஆபீசுக்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.

ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர்அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.

இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹனம் பண்ணி, நாலு உத்தரணி தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

வெளியூருக்குப் போகும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்ச்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம்; மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.

ஐந்து மூர்த்திகள், துளஸிவில்வ பத்திரங்கள், திராக்ஷை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.

இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வதுபஞ்சாயதன பூஜைஎனப்படும். பிராசீனமாக நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவத்பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும்படியாகச் செய்தார். ‘ஷண்மத ஸ்தாபனம்என்று வருகிறபோது இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.

பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

வீட்டிலே இருந்தால்மகா நைவேத்தியம்எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம்.

நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம்? வெறுமே அவரிடம் காட்டுகிறோம்; பிறகு நாம்தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடச்செய்வது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது எதுவுமில்லை. ‘நிவேதயாமிஎன்றால், ‘அறிவிக்கிறேன்என்றுதான் அர்த்தமே தவிர, ‘உண்பிக்கிறேன்என்று அர்த்தமல்லை. ‘அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும்? ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம்; ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா? செயற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமான கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும்? எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும்கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேசுவரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.

எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சயமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.

அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்!

பரோபகாரம்

பிதிர்கடன், பரமேசுவர பூஜையான வேத யக்ஞம் எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு படைப்பது ஆகியவற்றை வைதிக மதம் விதிக்கிறது. திருவள்ளுவரும் இதே தர்மத்தைத்தான் விதித்திருக்கிறார்;

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

வள்ளுவர் வேதப் பிரமாணத்தை மதித்தே குறள் எழுதினார் என்பதற்கு மிகவும் ஆதரவாக இருக்கப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று. ‘திருவள்ளுவர் வைதிக மதஸ்தரே அல்ல; அவர் ஜைனர் அல்லது பௌத்தர் அல்லது எல்லா மதங்களையும் கடந்தவர். வேதம் கூறும் தர்மங்களுள் ஹிம்ஸையுள்ள யாகத்தைத் திருவள்ளுவர் வெளிப்படையாகவே கண்டிக்கிறார்என்று சிலருக்கு அபிப்பிராயம். கீழ்க்கண்ட குறளை மேற்கோள் காட்டுகிறார்கள்;

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று

ஹவிஸைஅக்னியில் ஆஹுதி செய்து ஆயிரம் யாகம் செய்வதைவிட, ஒரு பிராணியையும் வதைத்து உண்ணாமலிருப்பது சிரேஷ்டம்என்று இதன் அர்த்தம். இதைப் படித்த பின்னும்கூட என் அபிப்பிராயமோ திருவள்ளுவர் வைதிக அநுஷ்டானங்கள் அனைத்திலும் பூரண நம்பிக்கை கொண்டவர் என்பதே. காவிரியின் பெருமையைச் சொல்ல வந்த ஒருவர். ‘ஆயிரம் கங்கையைவிட ஒரு காவிரி உயர்ந்ததுஎன்று சொன்னால், ‘கங்கையும் உயர்ந்ததுஎன்றே அர்த்தமாகும். காவிரியைச் சிலாகித்துப் பேச விரும்புகிற ஒருவர், ஆயிரம் சாக்கடையைவிட ஒரு காவிரி உயர்ந்தது என்று சொல்வாரா? அப்படியே திருவள்ளுவர் அஹிம்ஸையைச் சிலாகித்துப் பேசும்போது, ‘ஆயிரம் யாகத்தைவிட அஹிம்ஸை உயர்ந்ததுஎன்றால், யாகமும் உயர்ந்தது என்றே அர்த்தமாகும். ரொம்ப உயர்ந்த ஒன்றைச் சொல்லி அதைவிட இது ரொம்ப ரொம்ப உசத்தி என்றுதானே சொல்வது வழக்கம்!

இந்தக் குறள் இல்லற இயலில் சொல்லப்படவில்லை; துறவற இயலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. துறவிக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை; அவனுக்கு மட்டுமே வைதிக மதம் பூரண அஹிம்ஸையை விதிக்கிறது. அதையே வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.

உலகத்துக்கெல்லாம் உபயோகமான ஒரு கிரந்தத்தைத் தந்திருக்கும் திருவள்ளுவர் வைதிகத்தை ஆட்சேபிக்கும் நாஸ்திகர் அல்லர். திருவள்ளுவர்விருந்துஎன்று சொல்கிறவிருந்தோம்பல்வைதிக மதத்தில்மனுஷ்ய யக்ஞம்எனப்படும் விருந்தோம்பல் என்பதே. இன்னும் கொஞ்சம் விரித்தால் அன்னதானம் எனக் கொள்ளலாம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் சமைப்பதற்காகப் பானையில் அரிசி போடும்போது பகவானை நினைத்துக் கொண்டு, ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டுவிட வேண்டும். இப்படிப் பல குடும்பங்களில் தினமும் போட்டு வைப்பதைப் பேட்டைக்குப் பேட்டை சேகரித்து, சமைத்து ஆங்காங்குள்ள ஆலயத்தில் நிவேதனம் செய்து, ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். ஒருபிடி அரிசியோடு ஒரு பைசாவும் தினந்தோறும் போட வேண்டும். சேகரித்த அரிசியைச் சமைப்பதற்காக விறகுக்கு, சாதத்தில் சேர்த்துக் கொள்ள மிளகுப் பொடியோ அல்லது வேறு ஏதாகிலும் வியஞ்சனமோ தயாரிப்பதற்கு, சமையல் பாத்திர வாடகைக்குஇப்படிப்பட்ட மேல் செலவுகளுக்குத்தான் அந்த ஒரு பைசா. இந்த திட்டத்தை நடத்திக் காட்டுவது பெரிய பரோபகாரம். பசித்து வந்த ஏழைகளுக்கு ஈஸ்வரனின் கோயிலில் இப்படி பிரசாதம் கிடைக்கிறது என்றால் வயிறும் மனசும் குளிரும். இதனாலாவது கோயிலுக்கு வருகிற வழக்கம் ஏற்பட்டு பக்தியும் வளரும். வெறுமேசாப்பாடுஎன்றில்லாமல், ஈசுவரனுக்கு நிவேதனமாக பிரசாதம் என்று இருப்பால் அந்த அன்னம் சித்தசுத்தியும் அளிக்கும்.

அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம், சமூகசேவை, ஸோஷல் சர்வீஸ் என்று இந்த நாட்களில் ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் பண்ணுவதை, முற்காலங்களில் எந்தப் பகட்டுமில்லாமல் சுபாவமாகவே மக்கள் செய்து வந்தனர். இதற்குப்பூர்த்த தர்மம்என்று ஒரு பெயர். ஜனங்களுக்காகக் கிணறு, குளம் வெட்டுவது, அன்ன தானம், அவர்களின் ஆத்ம க்ஷேமத்துக்காகக் கோவில் கட்டுவது, அதன் அங்கமாக நந்தவனம் அமைப்பது எல்லாம்பூர்த்த தர்மத்தில் சேர்ந்தவை. இதில் கிணறு, குளம் வெட்டுவது முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பேச்சு வழக்கில்கூட, ‘அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? வெட்டிக் கொண்டு இருக்கிறானா?’ என்கிறோம். ‘வெட்டுவதுஅவ்வளவு பெரிய தர்மம். தாகமெடுத்த பசுக்களும் மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காகத் கிராமத்துக்கு வெளியே மேய்ச்சல் பூமியில் ஒரு குளம் வெட்டினால் எவ்வளவோ புண்ணியம். ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும்பணக்காரர், ஏழை என்கிற வித்தியாசமில்லாமல், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற வித்தியாசமில்லாமல்ஒன்று சேர்ந்து மண்வெட்டியை கையில் எடுத்துக் கொண்டு இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவையில் ஈடுபட வேண்டும். இதனால் சமூக ஒற்றுமையும் அதிகமாகும். புத்தியை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக கல்வி, மனசு சுத்தமாக தியானம், வாக்கு சுத்தமாக சுலோகம்இப்படியெல்லாம் இருக்கின்றன அல்லவோ? சரீரம் சுத்தமாவதற்கு அந்த சரீரத்தால் சேவை செய்ய வேண்டும். உழைக்க உழைக்கச் சித்த சுத்தியும் வரும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றில்லாமல் எல்லோருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும்போது அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும். குளத்தில் தண்ணீர் ஊறுவதைவிட நம் இருதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம். வெளிவேஷம், டெமான்ஸ்ட்ரேஷனே வேண்டாம். அவரவரும் பிறருக்குத் தெரியாமல் ஏதாவது ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கேயிருக்கிற கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்தினால்கூடப் போதும்அதுவே பரோபகாரம்; சித்த சுத்தி என்கிற ஆத்ம லாபமும் ஆகும்.

பகவத் ஸ்வரூபமாக எல்லோரையும் நினைத்து, நமக்குக் கர சரணாகதிகள் தந்துள்ள பகவானுக்குப் பிரீதியாக அந்தக் கரசரணங்களைக் கொண்டு பரோபகாரம் செய்வோம்.