23 . பொதுவான தர்மங்கள் – பகுதி ஐந்து

கோபம் கொள்ளத் தகுதி ஏது?

நமக்கு அநேக சந்தர்ப்பங்களில் கோபம் வருகிறது. முக்கியமாக இரண்டு விதங்களில் கோபம் வருகிறது. ஒருவன் ஒரு தப்புக் காரியம் செய்தால், அவனிடம் கோபம் ஏற்படுகிறது. அல்லது ஒருவன் நம்மைத் தூஷித்தால் அவனிடம் கோபம் வருகிறது. யோசித்துப் பார்த்தால் எவரிடமும் இந்த இரண்டு விதங்களிலும் கோபப்படுவதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்று தெரியும்.

ஒருவன் தப்புப் பண்ணுகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே, அப்படியானால் நாம் தப்புப் பண்ணாதவர்களா? ஒருவனை பாபி என்று துவேஷிக்கும்போது, நாம் அந்தப் பாபத்தைப் பண்ணாதவன்தானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். காரியத்தில் பண்ணாவிட்டாலும் மனஸால் பண்ணியிருப்போம். நாம் அநேக தப்புகளை, பாபங்களைப் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறோம். நம்மைவிடப் தப்பும் பாபமும் பண்ணுகிறவர்களும் இருக்கலாம். நம் மனசு ஏதோ ஓர் அளவுக்குப் பக்குவம் அடைந்திருப்பதால் நாம் இந்த அளவு பாபத்தோடு நிற்கிறோம். அவனுடைய மனசுக்கு இந்தப் பக்குவம்கூட வராததால் இன்னும் பெரிய பாபம் பண்ணுகிறான். நாம் செய்கிற தவறுகளை திருத்திக் கொள்வதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது? நம்மையும்விட மோசமான நிலைக்கு இறங்கிப் பாபங்களைச் செய்யப் பழகிவிட்ட இன்னொருத்தனின் மனசுக்கும் அதிலிருந்து மீளுவது சிரமமான காரியம்தான். அப்படிப்பட்டவனோடு நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில்லை. அஸத் ஸங்கத்தைவிட்டு ஸத் ஸங்கத்தில் சேர்வதுதான் ஆத்மாபிவிருத்திக்கு முதல் படி என்று சகல சாஸ்திரங்களும் சொல்கின்றன. ஆனால் பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதொன்றே நாம் செய்ய வேண்டியது. ஈசுவராநுக்கிரகத்தில் நம்மில் யாருக்காவது அநுக்கிரக சக்தி கிடைத்திருந்தால், அதை இந்தப் பாவிகள் கடைத்தேறுவதற்கே உபயோகிக்க வேண்டும்.

நம் கோபம் எதிராளியை மாற்றாது. அவனுக்கும் நம்மிடம் கோபத்தை வளர்ப்பதுதான் அதன் பலன். இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்துகொண்டே போகும். ஒருத்தன் தன் தப்பைத் தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து சரியாக செய்வதில் நமக்குப் பெருமையில்லை. இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும்.

ஒருத்தன் பாபம் செய்ய அவனுடைய மனசு, சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. நாம் பல பாபங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம். எனவே, ஒரு பாபியைப் பார்க்கும்போது, ‘அம்பிகே! இந்தப் பாபத்தை நானும்கூடச் செய்திருக்கலாம். ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்குச் செய்யம்மாஎன்று பிரார்த்திக்க வேண்டும்.

இரண்டாவதாக, நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்று கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத்தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத் தெரியும். ஒருகால் நம்மை தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவற்றுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்றும் நம் அந்தரங்கத்துக்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் பச்சாபத்துடன் அழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம், பிறரைத் தப்புத் கண்டுபிடித்து கோபிக்க நியாயம் ஏது?

நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக்கலாமா?’ என்றால் இப்படித் தப்பே பண்ணாத நிலையில் நாம் அன்பு மயமாகிவிடுவோம். அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர, எந்தப் பாவனையும் இராது. கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தப்பே பண்ணாத நிலையிலே எல்லாம் அம்பாளின் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரை பூஷிப்பது, யாரைத் தூஷிப்பது? எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.

மநுஷ்யனைப் பாபத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள் காமமும் குரோதமும் என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தினால் நமக்கேதான் தீங்கு செய்து கொள்கிறோம். பெரும்பாலும் நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. ஆத்திரப்படுவதால் நாமே நம் சரீரம், மனசு இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. அன்பாக இருப்பதுதான் மனிதன் ஸ்வபாவமான தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிக்கும் ஆனந்தம். அன்பே சிவம் என்பார்கள். நாம் எல்லோரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.

அன்பும் துன்பமும்

மனிதப் பிறவி எடுத்ததன் பயனே அன்பு செலுத்துவதுதான். அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில், தாற்காலிகமாக இன்பம் கிட்டலாம். ஆனாலும் இவற்றில் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு செலுத்தும் போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும் பணச்செலவானாலும் இதெல்லாம் தெரிவதேயில்லை. அன்பின் ஆனந்தமும் நிறைவுமே இந்தத் துன்பத்துக்கெல்லாம் மேலாகத் தெரிகிறது. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே.

அன்பு செலுத்தும்போது துன்பமே தெரிவதில்லை என்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு நாள் அன்பு செலுத்தப்பட்ட வஸ்துவே நமக்குப் பெரிய துன்பத்தைக் கொடுத்து விடுகிறது. நாம் ஒருவரிடம் அன்பு வைக்கிறோம். கடைசியில் ஒருநாள் அவர் நம்மைவிட்டுப் போயே போய் விடுகிறார். அல்லது நாமாவது அவரை விட்டு ஒருநாள் போகத்தான் போகிறோம். அப்போது, ‘ஐயோ, நம்மிடமிருந்து போய்விட்டாரேஎன்றோ, அல்லதுஐயோ, நாம் இவரை விட்டுப் போகிறோமேஎன்றோ பெரிய துக்கம் உண்டாகிறது. இத்தனை காலமாக அன்பு தந்த ஆனந்தமும் நிறைவும் கடைசியில் பொய்யாகி, இந்தத் துன்பத்திலேயே முடிந்தது என்று மனசு கலங்குகிறோம். அன்பின் முடிவான பலன் துன்பம்தானா என்று பெரிய சலிப்பு உண்டாகி விடுகிறது. எத்தனைக்கெத்தனை அன்பு வைத்தோமோ, அத்தனைக்கத்தனை துன்பம் பிரிவின் போது உண்டாவதைப் பார்க்கிறோம். அன்பே செலுத்தாமல் சுய காரியவாதியாகவோ, அல்லது ஜடமாகவோ இருக்கிற ஜன்மாவே சிலாக்கியமானதோ என்று கூடத் தோன்றிவிடும். அப்படிப் பட்டவனுக்கு இந்தப் பிரிவுத் துன்பமே இல்லையல்லவா?

ஆனால் உண்மையில் சுய காரியவாதி பாபத்தைத்தான் மூட்டைக் கட்டுகிறான். மனிதப் பிறவி எடுத்துவிட்டு, ஆனந்தம், நிறைவு முதலியன இல்லாமல் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதும் பிரயோஜனம் இல்லை.

அன்பு செய்தாலும் முடிவில் துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசியே இல்லை. இப்படியானால் என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நம்முடைய அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வஸ்து இருந்து, அதனிடம் அன்பை வைத்து விட்டால் நாமும் அதுவும் ஒருநாளும் பிரியப் போவதில்லை. எப்போதும் ஆனந்தமாக, நிறைவாக இருக்கலாம்.

அதாவது, என்றும் மாறாமல் இருக்கிற ஒரே வஸ்துவான பரமாத்மாவிடம் அன்பைப் பூரணமாக வைத்துவிட வேண்டும். பரமாத்மா நம்மைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும், பிரிகிற உயிர் பரமாத்மாவிடமிருந்து பிரியாமல் அவரிடமே கலந்து விடும். அவரிடம் வைக்கிற அன்பே சாசுவதமாக இருக்க முடியும்.

அழியாத பரமாத்மாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றால் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக்கூடாதா, மற்ற எல்லோரும் என்றோ ஒருநாள் நசிப்பவர்கள்தானே என்ற கேள்வி எழலாம். பரமாத்மாவிடம் அன்பை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டால் அவருக்கு வேறாக யாருமே இல்லை என்று தெரியும். மரணமடைகிற மனிதர்களாக எண்ணி, அதுவரை யாரிடமெல்லாம் துக்க ஹேதுவான அன்பை வைத்திருந்தோமோ அவர்களும்கூட இப்போது அழியாத பரமாத்ம ஸ்வரூபமாகவே தெரிவார்கள். இப்படி உலகம் முழுவதையும் பரமத்மாவாகவே பார்த்து அன்பு செலுத்த வேண்டும். அப்போது நம் அன்பு ஒரு நாளும் துக்கத்துக்கு மூலமாக ஆகாமலே இருக்கும்.

எல்லோரையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்த்து அன்பு செலுத்த முடியாவிட்டாலும், ஆத்ம குணம் நிறைந்த பெரியவர்கள், நல்ல ஞானமும் அருளும் நிறைந்த ஸத்குரு ஆகியோரைப் பரமாத்மாவாகக் கருதி, அன்பு செலுத்துவது சுலபமாக முடிகிறது. அப்படிப்பட்டவர்களிடம் அன்பு வைத்து ஆத்மார்ப்பணம் செய்துவிட்டால் போதும். அவர்கள் மூலமாக பரமாத்மா நமக்கு அநுக்கிரகம் பண்ணி விடுவார். நம் அன்புக்குப் பாத்திரமானவர் மரணமடைந்தாலும்கூட, ‘பரமாத்மா வேஷமாகப் போட்டுக் கொண்ட ஒரு சரீரத்துக்குத் தான் அழிவு உண்டாயிற்று. இப்போது சரீரி பரமாத்மாவோடு ஒன்றாகிவிட்டார்என்ற ஞானத்தோடு பிரிவுத் துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்போம். நம் அன்பு கொஞ்சம்கூடக் குறையாமல் அப்படியே எந்நாளும் நிற்கும். ஈச்வரனிடம், ஸாதுக்களிடம் இந்த அன்பை அப்யசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். அதுவே ஜன்மா எடுத்தன் பயன்.

அன்பு

உலகத்தில் நாம் காண்கிற அன்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மகான்கள், யோக்கியர்கள், சத்தியசந்தர்கள், பரோபகாரிகள், ஞானிகள், அநுக்கிரக சக்திவாய்ந்த உத்தமர்கள் ஆகியோரிடம் அவர்களது குணத்துக்காக அன்பு ஏற்படுகிறது. பந்துக்களுடனும் சிநேகிதர்களுடனும் சேர்ந்து பழகுவதால் அவர்களிடம் ஒருவித அன்பு உண்டாகிறது. மூன்றாவது, ஒரு காரியத்துக்காக, லாபத்துக்காக சிலரிடம் அன்பு வைக்கிறோம். உதாரணமாக வியாபாரத்தில் சகாயம் செய்வார் என்பதற்காக ஒரு தனிகரிடம் அன்பு பாராட்டுகிறோம். சம்பளம் கொடுக்கிறார் என்பதால் யஜமானரிடம் அன்பாக இருக்கிறோம்.

இந்த மூவகை அன்பும் உண்மையானதல்ல; சாசுவதமானதல்ல. யஜமானர், “நீ போய்விடுஎன்றால் உடனேயே நம் அன்பும் போய்விடும். பழகினவர்கள் தூர தேசம் போனாலோ, காலகதி அடைந்தாலோ, வேறு விதத்தில் அவர்களுடன் பழக்கம் போய்விட்டாலோ நாளடைவில் அன்பும் போய்விடுகிறது. முதலில் பிரிவின்போது அழுத அழுகை அப்புறம் எப்படியோ மறைந்து விடுகிறது. உண்மையான அன்பானால், அந்த அழுகை என்றைக்கும் அப்படியேதானே இருக்க வேண்டும்? உத்தம புருஷர்களான மகான்களிடம் வைக்கும் அன்புகூட நிரந்தரமில்லைதான். மகான்களிடம் உத்தம குணம் குறைந்தால்அல்லது குறைந்ததாக நமக்குத் தோன்றினாலே போதும்அவரிடம் வைத்த அன்பும் குறைந்து விடுகிறது.

மூவகை அன்பும் காரணத்தால் ஏற்பட்டது. எனவே தான் அவை நிரந்தரமாக இருக்கவில்லை. உத்தம புருஷர்களிடம் இன்ன குணம் இருக்கிறது என்பதால், அந்தக் குணத்தைக் காரணமாகக் கொண்டே அன்பு வைக்கிறோம். அதோடு அவர்கள் நம்மை உத்தாரணம் செய்வார்கள் (உய்விப்பார்கள்) என்ற சுய காரியமும் உள்ளூற இருக்கவே செய்யும்.

இப்படியெல்லாம் எக்காரணமும் வியாஜமும் இன்றி பிரியமாக இருப்பதுதான் உண்மை அன்பு. ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி, அவருக்கு ஆத்ம குணங்களும் அநுக்கிரக சக்தியும் இல்லாவிட்டாலும் சரிஅப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு வைத்தால் அதுவே உண்மையான அன்பு.

அப்படிப்பட்ட அன்பு யாருக்காவது இருக்கிறதா? ஒரே ஒருவருக்கு இருக்கிறது. ஸ்வாமிதான் அந்த ஒரே ஒருவர்.

ஸ்வாமிக்கு நம்மிடம் இருக்கும் அன்புக்கு ஒரு காரணமும் இல்லை. காரணத்தை அவர் பாராட்டுவதாக இருந்தால் நமக்கு ஒருவேளை சோறுகூடப் போடமாட்டார்! நம் பிழைகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு, நம்மை இந்த மட்டும் காப்பாற்றுபவர் அன்பு மயமான பரமேசுவரனே. இந்தப் பரமசிவ அன்பின் திரிபே உலகில் காணும் மூன்றுவகை அன்புகளும்.

அந்தக் காரணமற்ற பரமசிவ அன்பை நாமும் அப்பியசிக்க வேண்டும். தப்புச் செய்பவன் என்று காரணம் பார்த்து நாம் ஏன் ஒருவனை வெறுக்க வேண்டும்? நாமே தப்புச் செய்கிறோமே, அப்போதும் நம்மை நாமே உதறித் தள்ளுகிறோமா? அப்படியே மற்றவர்களிடத்திலும் இருக்க வேண்டும். மகா பெரியவர்களிடத்தில் அன்பு இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவனிடமே அதிக அன்பு வைக்க வேண்டும். “நாம் தப்புச் செய்வது போலவே இவனும் செய்கிறான். இவன் மனம் இவனை இப்படித் தூண்டுகிறது. அந்த மனத்தை நல்லதாக்க முயற்சி பண்ணுவோம்என்று நினைக்க வேண்டும். ஈசுவர கிருபையால் அநுக்கிரக சக்தி பெற்றிருப்பவர்கள், அதைக் கொண்டு பாபியிடம் உள்ள பாபங்களை நிவிருத்தி பண்ணுவதையே முக்கியமாகக் கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதனிடம் காரணமில்லாத தூய அன்பை வைக்கப் பழகிவிட்டால், பின்னால் அதுவே நம்மை அன்பு மயமாக்கி, அந்த அன்பை எல்லோரிடமும் பரப்ப உதவி புரியும். குருவிடம் இவ்விதம் பயன் எதிர்பாராமல் பூரண அன்பு வைக்கப் பழகவேண்டும் என்பது பெரியோர்கள் ஏற்படுத்தியுள்ள விதி. குருவிடம் காரணம் பார்க்காமல், வியாஜம் இல்லாமல் அன்பு செலுத்த ஆரம்பிக்க வேண்டும். பின்பு அந்த அன்பு தருகிற ஆனந்தத்தில் பழகிப் பழகி லோகம் முழுவதும் குருவாக நினைத்து, சமஸ்தப் பிராணிகளிடமும் காரணமில்லாத சமமான அன்பு செலுத்த வேண்டும். லோகம் முழுவதும் அன்பை நிரப்பினால் அதுவே ஆனந்த நிலை, அதுவே பரிபூர்ண நிலை; அதுவே பரம சாந்தி.