24 . சமூக விஷயங்கள் – பகுதி ஒன்று

எது சுயராஜ்யம்?

சுதேசி, சுயராஜ்யம் என்று இப்போழுது எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் வெள்ளைக்காரன் மாதிரி இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இவைகளெல்லாம் உள்ள மட்டும் நாம் பரதேசிகள் தான்; நம் நாடு பராதீனத்திலுள்ள ராஜ்யம்தான். வாஸ்தவமான சுயராஜ்யம் வரவேண்டுமென்றால் நம்முடையை தேசத்தின் ஆசார அநுஷ்டானங்கள் எப்படி இருந்தன என்பதைக் கவனித்து, இப்பொழுது இருப்பதை அப்படி மாற்றினால் நல்லது என்று உணர்ந்து, அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்வதுதான். நம்முடைய தேசத்துப் பழைய வழக்கங்கள், தர்மங்கள், ஆத்ம சம்பத்துக்கள் மாறாமல் இருக்க வேண்டும். பிற தேசத்தார்கள் மாதிரி நாம் இருக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு. வெளிநாட்டார் சொல்லாமலே, நாமே அவர்களுடைய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டபின், அரசியலில் மட்டும் அடிமைத்தனம் இருந்ததென்ன, போயென்ன?

உண்மையான சுயராஜ்யமானால், நம்முடைய சுதந்திரப்படி நடத்தும் சட்டசபை எனில், நம்முடைய தர்மராஜ்யம் ஆதியில் எப்படி இருந்தது, அதை மீண்டும் கொண்டுவர என்ன செய்ய வேண்டுமென்பதை ஆலோசிக்க வேண்டும். நமக்கென்று ஒரு பண்பாடும், நாகரிகமும் உண்டு. இருக்கட்டுமே; அதையே ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென்றால், ‘நமதுஎன்கிற வெறும் பாசத்துக்காக இப்படிச் சொல்லவில்லை. எத்தனையோ புராதன நாகரிகங்கள் காலப் பிரவாகத்தில் அடித்துக் கொண்டு போனபோதிலும், நம் பண்பாடும், நாகரிகமும் பாறாங்கல் போல எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருப்பதாலேயே இதற்கு ஒரு விசேஷம் இருக்கத்தான் செய்கிறதென்று உணர்ந்து, அதையே நாமும் அநுசரித்து வாழவேண்டும். நாம் நாமாக இருக்க வேண்டும். எவ்வளவு பலம் நமக்கு உண்டோ அவ்வளவையும் நம்மை நிஜமான நம்மவர்களாக்குவதில் உபயோகப்படுத்த வேண்டும்.

வெள்ளைக்கார வேஷத்திலே உள்ள நம்மவர்கள் சட்டம் செய்கிறார்கள்; அதற்கு அடிமையாக நாம் இருக்கிறோம் என்றால் அதில் சுதந்திரத்தின் சாரமே இல்லை. நம்முடைய சம்பிரதாயங்களை அநுசரிக்காதவர்களுக்கு வோட்டுக் கொடுத்து வரும் ராஜ்யம் அடிமை ராஜ்யம்தான். லௌகிக விஷயங்கள்கூட ஆத்ம சம்பந்தமாகவும் தெய்வ சம்பந்தமாகவும் இருந்த முறைதான் நம்முடையது. அதன்படி இருந்தால் உத்கர்ஷத்தை (உயர்வை) அடையலாம் என்பதை அறிந்து, நமக்கு எந்த மாதிரி ஸ்வதந்திரம் உண்டோ அதை, அந்த முறையை நிலை நிறுத்துவதிலேயே பயன்படுத்த வேண்டும். தர்மம், தொழில்முறை முதலியவைகளை அறிந்தவர்களையும், அநுஷ்டானம், ஒழுக்கம் உடையவர்களையுமே ராஜ்ய நிர்வாகத்தில் வைத்துக் பார்க்கவேண்டும். அவர்கள் நம்முடைய சாஸ்திரப்படி தர்ம ராஜ்யத்தை ஸ்தாபித்து, இது நன்றாக நடக்கிறது என்று காட்டி, மற்ற தேசத்தவர்களும் இதை அநுசரிக்கச் செய்ய வேண்டும். அப்படி நடத்திக்காட்டுவதற்கு நம்முடைய சாஸ்திரங்களையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். வழிகாட்டும் புஸ்தகங்கள் பல இருக்கின்றன. இவை இருப்பதால்தான் நானும் இதையெல்லாம் சொல்லவாவது முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் மறந்து போயிருக்கும். அவைகளைப் பார்த்து அந்தப்படி ஏன் நடக்கக்கூடாது? அந்தப்படி பண்ணுகிறவர்களை ஏன் சட்ட சபைக்கு அனுப்பக்கூடாது என்று எல்லா ஜனங்களும் ஆலோசித்துப் பார்க்க வேண்டும். நமக்குக் கொடுக்கப்படும் சுதந்திரத்தை இவ்விதம் பிரயோஜனப்படுத்தி, லோகத்தில் தர்மத்தை நடத்திக் காட்டி, மற்ற தேசத்தவர்களுக்கும் வழிகாட்டிப் பரமேசுவரனுடைய அநுக்ரஹத்தைப் பெற வேண்டும்.

அறமும், அன்பும், அரசாங்கமும்

அரசனே தர்மத்துக்குக் காரண புருஷன்—”ராஜா தர்மஸ்ய காரணம்”—என்று ஒரு முதுமொழி இருக்கிறது. இதன் அர்த்தம் என்ன என்று பார்க்கலாம்.

முதலில் தர்மம் என்றால் என்ன?

மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் பசி, தாகம் இருக்கிறது. அவர்கள் வசிக்க ஓரிடம் வேண்டியிருக்கிறது. குளிர், வெயிலிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும், மானத்தை ரட்சித்துக் கொள்ளவும் ஆடை அணிய வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் மனிதன் வசதி செய்துகொள்ள வேண்டும். ஏதோ ஒரு தொழிலைச் செய்தே இதற்கு வசதி செய்து கொள்கிறான். அத்தியாவசியமான சுய தேவையைப்பூர்த்தி செய்துகொள்வதோடு ஒவ்வொரு மனிதனும் பிறர் விஷயமாகச் சில கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவனும் ஏதோ ஒரு குடும்பத்தில் பிறப்பதால் அந்தக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், பிற்பாடு கல்யாணமானதும் மனைவி மக்களுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னுடைய சமுதாயம், தேசம் இவற்றுக்கெல்லாம் மனிதன் கடமை ஆற்றவேண்டியிருக்கிறது. பலவிதத்தில் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்; பலவிதத்தில் வீடு, நாடு இவற்றுக்கான கடமைகளைச் செய்யலாம். ஆனால் மனத்துக்குத் தோன்றியபடியெல்லாம் இவற்றைச் செய்யாமல், எவருக்கும் தீங்கு விளைவிக்காத விதத்தில், அதீதமான காமமும் குரோதமும் கலக்காமல் செய்ய வேண்டும். தன்னையும் மேம்படுத்திக்கொண்டு, அனைவரையும் உயர்த்துகிற விதத்தில் தொழிலையும் கடமையையும் செய்ய முடியும். இவ்வாறு சம்பந்தப்பட்ட அனைவரது ஆத்ம அபிவிருத்திக்கும் அநுசரணையாக இக உலகக் காரியங்களைச் செய்வதற்குத்தான்தர்மம்என்று பெயர்.

பலர் கூடி வாழ்கிற சமூகத்தை, அவர்களது பலவிதமான காரியங்களில் உரசலில்லாமல், சமூகம் முழுவதும் ஆத்மாபிவிருத்தி அடையும் முறையில் சீராக வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்வதே ராஜாங்கத்தின் கடமை. பிரஜைகளின் லௌகிக வாழ்க்கையை ஒழுங்கு செய்து, அவர்கள் ஆத்மாபிவிருத்தி அடைகிற வாய்ப்புகளையெல்லாம் பூர்த்தி செய்து தரவேண்டியது ராஜாங்கத்தின் பொறுப்பு. இதனாலேயேராஜா தர்மஸ்ய காரணம்என்றனர்.

ராஜாங்கம், தனி மனிதர்கள் இவர்களுக்குப் பலவிதமான காரியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எத்தனை காரியம் இருந்தாலும் அதற்கெல்லாம் மூலமும், நோக்கமும் அன்பு என்ற ஒன்றாகவே இருக்க வேண்டும். காரியம் என்று ஏற்பட்டால் அதன் விளைவுக்கு ஆளாகிற ஒன்றும் இருக்கத்தான் செய்யும். ‘காரியம் செய்பவன்இருப்பதுபோல்காரியத்தின் விளைவுக்கு ஆளாகிற ஒருவனும் இருந்தே தீருவான். விளைவை அநுபவிக்கப் போகிறவர்களிடம் பூரண அன்பு வைத்தே எந்தக் காரியமும் செய்ய வேண்டும். அன்பிலேயே எந்தக் காரியமும் பிறக்க வேண்டும்.

உலக விகாரங்களில் யுத்தம் முதலியனவும் அத்தியாவசியமாகிவிடுகிற நிர்ப்பந்தம் ஏற்படுவதுண்டு. சிலருக்கு தண்டனை தர வேண்டி நேருகிறது. ஆனால், யுத்தம் செய்யும் போதும், தண்டனை தரும்போதும்கூட எதிராளியிடம் துவேஷம் கொள்ளாமல் அன்புடனேயே செய்ய வேண்டும்.

காரியம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் காரியம் செய்கிற மனசில் அன்பு தவிர வேறெதுவும் இருக்கக்கூடாது. அன்பு வேறு; புத்தரும் காந்தியும் சொன்ன அஹிம்சை வேறு. அன்பினால் லோக க்ஷேமத்தைச் செய்யும்போது, தப்புச் செய்பவர்களுக்கு ஹிம்சை செய்வதைத் தவிர்க்க முடியாமற் போகலாம். அப்போது ஹிம்சையில் தோஷமும் இல்லை. ஆனால், தண்டனை பெறுகிறவர்களிடமும் நம் மனசில் அன்பே இருக்க வேண்டும். லோகக்ஷேமத்தை மட்டுமின்றி அவனுடைய க்ஷேமத்தையும்அதாவது இனிமேலும் இந்த கெடுதல்களைச் செய்து அவன் பாபத்தைத் பெருக்கிக் கொள்ளக்கூடாது என்பதையும்உத்தேசித்தே அவனுக்கு ஹிம்சை தரவேண்டியிருக்கிறது என்ற உணர்வோடு சிட்சிக்கவேண்டும். காமம், குரோதம், துவேஷம், வஞ்சனை இவற்றைப் பூரணமாக நீக்கிவிட்டு, லோகக்ஷேமத்துக்காக எந்தக் காரியமும் செய்யலாம். அன்பு ஒன்றே சகல காரியங்களுக்கும் வழித்துணை (guide) யாகிவிட்டால் உலகில் உள்ள பல தீமைகள் தானாகச் சிறுகச் சிறுகச் மறைந்து போகும். இது என்னுடைய உபதேசம் (Message) அல்ல; இதுவே பாரத தேசத்தின் சகல ரிஷிகளும் முனிவர்களும் தந்திருக்கிற உபதேச சாரம்.

குற்றத்தைக் குறைக்கும் வழி

ராஜாங்கம் எதற்காக இருக்கிறது? ஒரு தேசத்தில் அதிக பலம் உள்ளவர்கள், குறைந்த பலம் உள்ளவரை ஹிம்ஸிக்கலாம். பெரிய கூட்டத்தார் சிறிய கூட்டத்தாரை கஷ்டப்படுத்தலாம். பலர் சேர்ந்து ஒருவனை நிர்பந்தப்படுத்தி அவனது சொத்து, வீடு முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொள்ளலாம். இப்படி எல்லாம் நேராமல் தேசத்தில் ஒழுங்கு இருக்கச் செய்வதற்கு ஏற்பட்டதே ராஜாங்கம்.

தப்புச் செய்பவர்களை அவ்விதம் செய்யாமல் தடுப்பதற்காக ராஜாங்கம் என்ன செய்கிறது? தண்டனை தருகிறது. தண்டனை உண்டு என்ற பயம் இருப்பதாலேயே பலர் தப்புச் செய்யாமல் தடுக்கப்படுகிறார்கள்.

ஹிம்ஸை செய்த ஒருவனுக்கு அவன் செய்ததைக்காட்டிலும் ராஜாங்கம் அதிக ஹிம்ஸை தருகிறது. பத்து ரூபாயை அவன் திருடுவதால், திருட்டுக் கொடுத்தவருக்கு சிறிது கஷ்டம் உண்டாகிறது. திருடியவனுக்கோ அதைவிடப் பெரிய கஷ்டமாகப் பல நாட்கள் சிறைவாசம் விதிக்கப்படுகிறது. இப்படிச் செய்தால்தான் அவன் மீண்டும் அந்தத் தப்பு பண்ணமாட்டான். மற்றவர்களும் அந்தத் தப்பைப் பண்ணப் பயப்படுவார்கள் என்கிற அடிப்படையில் தண்ட நீதி அமைந்திருக்கிறது. மனித இயல்புப்படி (Psychology) பார்க்கும் போது இதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஆனால் இதனிலும் சிலாக்கியமான ஓர் உபாயத்தையும் அரசாங்கம் அதே சமயத்தில் விருத்தி செய்யவேண்டும். குற்றம் இழைத்த பின் ஒருவரைத் தண்டிப்பதும், ஒருவர் சுபாவமான தர்ம உணர்ச்சி இல்லாமல் தண்டனைக்காகப் பயந்தே குற்றம் செய்யாமல் இருக்கச் செய்வதும் இரண்டாம் பட்சம்தான். குற்றம் செய்கிற எண்ணமே தோன்றாமல் இருக்கச் செய்வதுதான் சிலாக்கியமானது.

முதலில் ஒருவன் ஹிம்ஸை தருவது, பிறகு அரசாங்கம் அவனுக்கு அதைவிட அதிக ஹிம்ஸை தருவது என்கிறஅர்த்த சாஸ்திரநீதியையே நடைமுறையில் கடைபிடிக்க வேண்டியிருந்தாலும், இந்த அர்த்த சாஸ்திரமும், தர்ம சாஸ்திரத்தின் காலில் விழுந்து கிடக்க வேண்டியதுதான் என்பதை ராஜாங்கம் ஒரு லட்சிய நிலையாகவாவது (Ideal) புரிந்து கொள்ள வேண்டும்.

தர்ம சாஸ்திரப்படி நடக்கும் ஸத்துக்கள் உருவாவதற்கு உரிய சூழ்நிலையை அரசாங்கம் காப்பாற்றிக் கொடுத்தால், ஜனங்களுக்கு குற்றம் செய்கிற உணர்வே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். தர்மம் அறிந்தவர்கள், தர்மத்தை அநுஷ்டிப்பவர்கள் விருந்தியாவதற்கு வசதி இருந்தால் அவர்கள் மற்றவர்களிடமும் தங்கள் வாழ்க்கை உதாரணத்தாலேயே சாந்தத்தையும் ஒழுக்கத்தையும் பரப்புவார்கள். சண்டை, பூசல், குற்றம் எல்லாம் குறையும்.

முதலில் ராஜாங்கப் பதவியில் உள்ளவர்கள் தர்ம சீலர்களாய் இருக்க வேண்டும். ‘இவர்கள் செய்வதும் சொல்வதும் சொந்த நன்மைக்காக அல்ல; நம் நன்மைக்காகத்தான்என்று ஜனங்கள் நம்பிக்கை வரக்கூடிய தர்மிஷ்டர்கள் தர்மப்படியே ராஜாங்கம் நடத்த வேண்டும். தர்மிஷ்டர்கள் தர்மங்களை சாந்தமாக எடுத்துச் சொன்னால் ஜனங்கள் அதன்படியே நடப்பார்கள்.

இப்படிக் குற்றமே இல்லாமல் ஆக்குகிற காரியத்தை ராஜாங்கத்தார் மட்டும் செய்ய முடியாது. தர்மசீலர்களான மற்றவர்களும் சேர்ந்து இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். இவ்வாறு தர்மிஷ்டர்கள் கைங்கரியம் செய்வதற்கு அநுகூலமான சூழ்நிலையை ராஜாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும்.

போலீசையும் கோர்ட்டையும் விருத்தி செய்வதைவிட தர்மக்ஞர்களை விருத்தி பண்ணுவதில் ராஜாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்த நலனைக் கருதாமல், உபதேசத்தைப் பணம் பண்ணும் தொழிலாக்காமல், பரோபகாரமே லக்ஷியமாகக் கொண்டு சாந்தமாகத் தர்மங்களை எடுத்துச் சொல்கிறவர்களுக்கு ராஜாங்கம் உற்சாகம் தரவேண்டும். இந்த உற்சாகத்தாலேயே மேலும் பலர் அவ்விதம் உருவாவார்கள். எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாகத் தாங்களே இருப்பதுதான் அதிக சக்தி வாய்ந்தது.

கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்றே அர்த்தம். இதற்குப் பதில் கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும். பழைய கால ராஜாக்கள் கோர்ட்டுகளுக்குப் பதிலாகக் கோயில்களைக் கட்டி வந்தார்கள். பழைய கோயில்களைப் புதுப்பித்தார்கள். அந்தக் கோயில்களிலேயே பொழுது போக்குக்கான சகல கலைகளும் கூடத் தெய்வீகமாக்கப்பட்டு அர்ப்பணமாயின. ஜனங்களும் ஆலய வழிபாடு செய்து சாந்தர்களாக இருந்தார்கள். இப்போதுள்ளது போலச் சமூகச் சச்சரவு, பூசல் எல்லாம் அப்போது இல்லை.

சட்டம் போட்டுக் குற்றம் செய்யாமல் தடுப்பதைவிட, ஒரு நல்ல மார்க்கத்தைக் காட்டி, அதில் ஜனங்களைத் திருப்பித் தப்பைப் பண்ணவும் செய்யவும் அவகாசத்தைக் குறைக்க வேண்டும். இப்படி தண்டத்தைக் காட்டாமல் நல்லதைக் காட்டித் தேசத்தில் சாந்தியை உண்டாக்குவதுதான் சிலாக்கியம். இந்த சாந்திதான் நிலைத்து நிற்கும். சாந்தர்களுக்கும், ஸத்துக்களுக்கும், தர்மிஷ்டர்களுக்கும் ராஜாங்கம் மதிப்புத் தந்தாலே தேசத்திலும் ஜனங்களிடையே இந்த நல்ல பண்புகள் விருத்தியாகும்.