32 . பண்பாடு – பகுதி மூன்று

எழுத்தாளர் கடமை

சூட்சமமான தத்துவங்களையும், சிரமசாத்தியமான சடங்குகளையும் சொல்கிற வேதங்களை நான்காகப் பிரித்து, நான்கு சிஷ்யர்களுக்குப் போதித்தார் வியாஸர். அந்தச் சூட்சமங்களைப் புரிந்துகொண்டு, வேதம் விதிக்கிற யக்ஞ அநுஷ்டானங்களை ஏராளமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுச் செய்யக்கூடிய ஒரு சிலருக்கு, இந்த நாலு சிஷ்யர்கள் வேதங்களைப் போதித்தார்கள். வேதங்களை இவ்வாறு வகுத்துப் பரப்பிய அதே வியாசர், அதே வேதங்களின் பரம தாத்பரியத்தைச் சிலருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ரஞ்சகமான புராணங்களாக இயற்றினார். இவற்றைப்பொது ஜனங்களுக்கெல்லாம் பிரசாரம் செய்கிற பணியை, ஸூதர் என்பவரிடம் ஒப்புவித்தார். புராணங்களைப் பிரசாரம் செய்து கொண்டேயிருந்தால், அவர் ஸூத பௌராணிகர் என்றே பெயர் பெற்றார். இவர் அப்பிராமணராக இருந்தும், பெரிய பிரம்ம ரிஷிகளெல்லாம் இவரை உயர்ந்த ஸ்தானத்தில் அமர்த்தி, நிரம்ப மரியாதை செய்து, இந்தப் புராணங்களைக் கேட்டார்கள்.

வேதத்தில்ஸத்யம் வதஎன்று ஒரு விதி இருக்கும். அந்த விதியைக் கதாரூபமாக்கி ஜனங்கள் யாவரும் ஏற்குமாறு செய்கிறது ஹரிச்சந்திரன் வரலாறு. ‘தர்மம் சரஎன்கிற வேதத்தின் சட்டத்துக்கு மகாபாரதம் முழுவதும் விளக்கமாகிறது. ‘மாத்ரு தேவோபவ’, ‘பித்ரு தேவோபவஎன்கிற வேத வாக்கியங்களுக்கு ஸ்ரீ ராமனின் சரித்திரம் அற்புதமான பாஷ்யமாக இருக்கிறது. ஆத்ம அபிவிருத்திக்காக வேதத்தில் சொல்லியிருக்கிற சூக்ஷ்மமான தத்வங்கள் எல்லாம் இப்படிப் பொது ஜனங்கள் எல்லோருக்கும் பௌராணிகரால் கதைகளாகப் பிரசாரம் செய்யப்பட்டன.

தொன்று தொட்டு பௌராணிகர்களின் பிரவசனங்கள் நம் தேசத்தில் எங்கு பார்த்தாலும் நடந்து வந்திருக்கின்றன. கல்வெட்டுகளைப் பார்த்தால் கோயில்களிலெல்லாம் புராணப் பிரவசனம், குறிப்பாக பாரதப் பிரசங்கம் நடந்து வந்திருப்பது தெரியும். நித்திய பூஜை போலவே புராணப் பிரவசனமும் கோயில்களில் அன்றாடம் நடக்க வேண்டும் என்று மானியங்கள் விட்டிருக்கிறார்கள். ஆலயத்தில் வழிபட்டும், புராணங்களை சிரவணம் செய்துமே சமீப காலம் வரையில் நம்முடைய பொது ஜனங்கள் சூதுவாதில்லாமல் யோக்கியர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இக்கால நோக்கின்படி, அவர்களுக்கு எழுத்தறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் நல்ல பண்பு படைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால், அவர்களே வாஸ்தவமாகக் கல்வி பெற்றவர்கள் என்று சொல்ல வேண்டும்.

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கும் வரையில் எல்லா கல்வியுமே வாய்மொழியாகச் சொல்லி காது வழியாகக் கேட்டே, வழிவழியாக வளர்ந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் பனை ஓலையில் எழுதுகிற தேர்ச்சி பெற்றவர்கள் சிலரே இருந்தார்கள். மற்றபடி, பெரிய வேத வேதாந்தம் தெரிந்தவர்கள்கூட எல்லாம் செவிவழியேதான் கேட்டறிந்தார்கள். அச்சு இயந்திரம் வந்தது. அப்புறம் நிறையப் புஸ்தகங்கள், நியூஸ் பேப்பர்கள் ஏற்பட்டுவிட்டன. பௌராணிகர்களின் இடத்தை இவை பிடித்துக்கொண்டன.

எனவே, பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும்தான் இன்றைய பௌராணிகர்கள். ஸூதரும் மற்ற பௌராணிகர்களும் எப்படி தர்மங்களை ரஸமான கதைகள் மூலம், பொது ஜனங்களிடையே பிரசாரம் செய்தார்களோ, அவ்விதமே செய்யவேண்டியது இன்றைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை. ஜனங்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்வது என்று வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற விஷயங்களையே எழுத வேண்டுமஇதைச் சுவாரசியமாகச் செய்யவேண்டும். உத்தமமான விஷயங்களைப் புதுப்புது விதங்களில் உணர்த்த வேண்டும். பத்திரிக்கையாளர்கள் வாழ்நாள் முழுதும் மாணாக்கர்களாகவே இருந்தால்தான், தாங்களும் இப்படிப் புதுப்புது விஷயங்களை அறிந்து, மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்ய முடியும்.

சத்தியத்தை சர்க்கரைப் பூச்சிட்ட மாத்திரைகளாக்கித் தரவேண்டும். சர்க்கரை பூச்சுத்தானே ஒழிய, முழுக்கவும் சர்க்கரையாகிவிடக் கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்லதல்ல. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாச்சாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இதயபூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் முனைந்தால், தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். ‘நம்மையும் உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும்என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிக்கையாளர்களும் எழுத்தாளர்களும் பெற வேண்டும். இவ்விதம் ஆத்மக்ஷேமம், லோகக்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெறவேண்டும்.

மஹாபாரதம்

தற்போதுள்ள அத்தனை இந்திய மொழிகளில் லிபிகளுக்கும் ஆதாரமாக இருக்கப்பட்ட பிராம்மி என்ற லிபியில் தான், ரொம்பவும் பழைய சாஸனங்கள் இருக்கின்றன. இந்த மிகப் பழமையான சாஸனங்களின் எழுத்தும் அழகாக, பாஷையும் காவிய அழகோடு (flowery- ஆக) இருக்கின்றன. அப்புறம் பல்லவர் காலக் கல்வெட்டுக்களிலும் எழுத்து அச்சடித்தாற்போல் இருக்கிறது. வாசகமும் இலக்கிய நயத்தோடு இருக்கிறது.

அதன்பின் சோழர் காலத்துச் செப்பேடுகளில், எழுத்தும் வாசகமும் பெருமளவு நன்றாக இருக்கிறது. ஆனால் இரண்டுமே ஆதியில் இருந்ததைவிடக் கொஞ்சம் மட்டம்தான். ரொம்பப் பழையது. அச்சடித்த மாதிரி, கண்ணில் ஒத்திக் கொள்ளலாம்போல் இருக்கிறது! சமீபத்தில் இருநூறு முந்நூறு வருஷங்களுக்கு முந்திய செப்பேடுகளைப் பார்த்தாலோ, ஒரு சீரும் இல்லை; முறையும் இல்லை; தப்பும் அதிகமாக இருக்கிறது. மண்டை மண்டையான எழுத்து. ஏகப்பட்ட இலக்கணப் பிழை.

இப்படியே ஆதிகாலத்திலிருந்து சமீபகாலம் வரையிலான விக்கிரகங்களைப் பார்த்தேன். இவற்றிலும், காலம் சொல்லத் தெரியாதவை ரொம்ப ரொம்ப லட்சணமாயிருக்கின்றன. பல்லவ விக்கிரகங்கள் நிரம்ப நன்றாக இருக்கின்றன. சோழ விக்கிரகங்கள் ஒருமாதிரி நியதியிலே நன்றாக இருக்கின்றன. அதன்பின் வரவர மேலும் தரக்குறைவுதான். இப்போது யாரிடமாவது புதிதாக ஒரு விக்கிரகம் அடிக்கக் கொடுத்தால் எப்படி இருக்கிறது? அழகோ, சாந்நித்தியமோ, தெய்வக்களையோ பழையவற்றில் இருப்பதுபோல் புதிதில் இருப்பதில்லை.

பழைய காலத்து ஜனங்களுடைய குணம் எப்படி? அதுவும் அதேமாதிரி உயர்ந்துதான் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டுக்கு வந்த மெகஸ்தனிஸ், ‘இந்தியாவில் யாராவது, ஏதாவது கொடுத்தாலும்கூடக் கைநீட்டி வாங்கிக்கொள்பவர் இல்லை. எந்தப் பண்டம் எங்கு கிடைத்தாலும் அந்த நாட்டவருக்குத் திருடவே தெரியாது. பொய் சொல்லவே தெரியாதுஎன்றெல்லாம் சொல்கிறான்.

சாந்தமும், நல்ல குணமும், தப்பு வழியே இல்லாமல் சரியானபடி போகும் போக்கும் அந்தக் காலத்தில் இருந்தன. இப்போது அந்த நிலை மாறி விட்டது. அந்தக் காலத்தில் ஜனங்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களுடைய மனசு எப்படி இருந்தது? அந்த மாதிரியே இப்போதும் இருக்கக்கூடாதா? என்று தோன்றுகிறது.

பொதுவாக வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அதன் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது. இதனால்தான் பழங்கால சிற்ப சித்திரங்கள், எழுத்து (calligraphy) உட்பட எல்லாம் ஒழுங்காக, அழகாக இருக்கின்றன.

அந்தக் காலத்தில் நல்ல நிலைமையில் இருந்து, இப்போது அதே வம்சத்தில் தோன்றிய ஜனங்களின் நிலை இப்படி எல்லாவற்றிலும் மிகவும் தாழ்வாகப் போனதற்கு, ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என்று யோசித்தேன்.

அந்தக் காலத்தில் கோயில்களிலெல்லாம் பாரதம் வாசிக்க வேண்டுமென்று கட்டளை இருந்திருக்கிறது. பாரதம் வாசிப்பதற்கென்றே மானியம் தருகிற சாஸனங்கள் இருக்கின்றன. இப்போது, பெரிய கோவில்களில் எதிலுமே பாரதம் வாசிக்கிறதைக் காணோம். கிராமாந்தரங்களில் கிராம தேவதைகளின் கோயில்களில் மட்டும் எங்கோ பாரதம் வாசிக்கிறதைப் பார்க்கிறோம். கிராம ரக்ஷைக்காக உள்ள, அந்த ஒரு சில கோயில்களுக்கு இன்றும் கிராம மக்கள் போகிறார்கள். ஸினிமா வந்து இவ்வளவு ஜனங்களை ஆகர்ஷிக்கிறபோதுகூட பாரதம் கேட்க ஜனங்கள் இருக்கிறார்கள் என்றால், பழைய காலத்தில் எப்படி இருந்திருக்கும்? அப்போது மக்களுக்கு வேறே பொழுது போக்கே இல்லையே!

அந்த பாரதத்தில் என்ன இருக்கிறது? பொறுமை என்பதற்கு வடிவமாக தர்மபுத்திரர் இருக்கிறார். சத்தியமான பிரதிக்ஞை என்பதற்கு பீஷ்மர் இருக்கிறார். தானத்துக்குக் கர்ணன். கண்ணியத்துக்கு அர்ஜுனன். இப்படியே ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், சகல தர்மங்களின் மூர்த்தியாக ஸ்ரீராமன் இருக்கிறார். பெண்களுடைய உத்தமமான தர்மத்துக்கு சீதை இருக்கிறாள். ஸ்ரீ ராமனுக்கு நேர் விரோதியாக ராவணனுக்கு மனைவியாக இருக்கும் மண்டோதரியும் சீதைக்குக் குறைவில்லாத மகாபதிவிரதையாக இருக்கிறாள்.

ராமாயண, பாரதக் கதைகளைக் கேட்கும்போது இப்படிப்பட்ட உத்தமமான ஆத்மாக்களின் ஞாபகம் வருகிறது. படித்தவர், படிக்காதவர் எல்லோருக்கும் அடிக்கடி அந்தக் கதைகள் காதில் விழுந்து கொண்டிருந்தால், நம்மால் அந்த உத்தம பாத்திரங்களைப் போலவே நடக்கமுடியாமற் போனாலும், இதுதான் நாம் இருக்கவேண்டிய உண்மையான முறை என்ற நினைவு அடிக்கடி வரும். இதற்கே பலனுண்டு. இதனால்தான் இந்தக் கதைகளைக் கேட்டு வந்த அந்தக் காலங்களில், உயர்ந்த தர்மமும், நீதியும் நாட்டில் இருந்தன.

தர்மம், நீதி இரண்டும் சேர்ந்துதான் பண்பு உண்டாகிறது. அந்தப் பண்பாட்டை மாற்றுவதற்கும், குலைப்பதற்கும் இப்போது எத்தனையோ ஏற்பாடுகள் வந்திருக்கின்றன. முன்பு இருந்த பழக்கத்தை மறுபடியும் உண்டாக்குவது கஷ்டம்தான். ஆனாலும் சிறிதாவது செய்யத்தான் வேண்டும். நாம் நல்லது பண்ணிக்கொண்டு போனால் ஈசுவரன் நமக்குக் கை கொடுப்பார். அவர்தான் நமக்குக் கை கொடுத்திருக்கிறார்; கால் கொடுத்திருக்கிறார்; கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்தச் சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான ஸத்காரியம் செய்ய வேண்டும்.

இப்போது என்ன என்னவோ விதமான ஆபத்துக்கள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஜனங்கள் இன்ன வழியில் போவது என்று தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அநேக கட்சிகள் வந்து அவர்களுடைய புத்தியைப் பலவிதமாகக் குழப்பி மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நம்முடைய சத்தியமும் நீதியும் தர்மமும் ஜனங்களுடைய மனசில் கலையாமல் நின்று காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றுவதற்கு மஹாபாரதமே உபகாரமாக இருக்கும் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஜனங்களுடைய அநுபவத்தினாலே தெரிகிறது.