33 . பண்பாடு – பகுதி நான்கு

விஞ்ஞானமும் ஆன்ம நிறைவும்

 “வேதாந்தம் உலகமே மாயை என்கிறது. அதனால் உலக வாழ்க்கைக்கு உதவுகிற விஷயங்களில் இந்தியர்களுக்கு அக்கறையே கிடையாது. ஸயன்ஸ், டெக்னாலஜி, வைத்தியம், என்ஜினீயரிங் எல்லாம் மேல் நாட்டிலிருந்துதான் இந்தியாவுக்கு வந்திருக்கிறதுஎன்று சில வெள்ளைக்காரர்கள் சொல்வதுண்டு. இதுவே உண்மை என்று நம்மவர்களும் நம்பி, “ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஸ்வாமியையும், ஆத்மாவையும் பற்றித்தான் ஹிந்து சாஸ்திரங்கள் இருக்கின்றன. லோக வாழ்க்கைக்கு உபயோகமாக அவற்றில் ஒன்றும் இல்லைஎன்று கண்டனம் செய்வதுண்டு.

உண்மையில் நம்முடைய சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் எதுவுமே இல்லை. நமது புராதன சாஸ்திரங்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், இந்த உண்மை தெரியும். ஆயுர்வேதத்தைசரகர், சுச்ருதர் முதலானவர்களின் கிரந்தங்களைப் பார்த்தால், இப்போதைய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும்படியான மருத்துவ முறைகளும், ஸர்ஜரி விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம். மிகவும் புராதனமான அதர்வண வேதத்திலேயே யுத்தத்தில் உண்டாகும் பல விதமான காயங்களைக் குணப்படுத்தும் மூலிகைகள், சிகிச்சை முறை முதலியவற்றைப் பற்றிச் சொல்லியிருப்பது இப்போது ரொம்பவும் உபயோகமாக இருப்பதாகச் சமீபத்தில் காசி சர்வகலாசாலையில் ஒருத்தர் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருக்கிறார். என்ஜினீயரிங் டெக்னாலஜியிலும் ஆதியிலேயே அபாரமான திறமையை நம்மவர்கள் காட்டியிருக்கிறார்கள். போஜராஜன் செய்த ஸமராங்கண சூத்திரத்தில் ஆகாய விமானம் உள்படப் பலவிதமான மிஷின்களைச் செய்வதற்கான அடிப்படைத் தத்வங்களை விவரித்திருக்கிறது. சுமார் இரண்டாயிரம் வருஷங்களான ஓர் இரும்பு ஸ்தம்பம் இன்றைக்கும் தில்லி குதுப்மினாருக்குப் பக்கத்தில் துருப்பிடிக்காமல் இருக்கிறது. டாடா தொழிற்சாலை இல்லாமலே இப்பட்டிப்பட்ட பெரிய தூணை எந்த உலையில் (FURNACE) அடித்து உருவாக்கினார்கள் என்று ஆச்சரியப்படும்படி இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே இப்படிப் பல என்ஜினீயரிங் அற்புதங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளான கல்லணை எந்தவிதமான கலவையால் கட்டப்பட்டது என்று இன்றும் புரியவில்லை. ஆவுடையார் கோவில் கொடுங்கையில் பாறாங்கல்லை ஒரு காகிதத்தின் அளவுக்கு மெல்லியதாக இழைத்திருக்கிறார்கள். திருவீழிமிழலை வெளவால் ஒட்டி மண்டபத்தின் பிரம்மாண்டமான வளைவை (ARCH) எந்த ஆதாரத்தில் கட்டியிருக்கிறார்கள் என்று என்ஜினீயரிங் நிபுணர்களும் வியக்கிறார்கள்.

தமிழில் பதினெண் சித்தர்கள் பாடலில் இருக்கிற வைத்திய நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

வான நூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்தியத்தால்தான் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று கிரகணம் என்று கொஞ்சம்கூடத் தப்பாமல் பஞ்சாங்கம் கணிக்க முடிந்திருக்கிறது.

எல்லா கலைகளும் சாஸ்திரங்களும், ஸயன்ஸுகளும், பாரத தேசத்தில் நன்றாக வளர்ந்தே வந்திருக்கின்றன. ஆனாலும், இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் அணுகுண்டு போன்ற எத்தனையோ அனர்த்தங்கள் உண்டாகியிருப்பதைப் பார்க்கிறோமல்லவா? இப்படி நேரக்கூடாது என்பதாலேயே, பக்குவமானவர்களுக்கு மட்டும் நம் தேசத்தில் விஞ்ஞான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். சாதாரண ஜனங்களுக்குப் புரியாத பரிபாஷையில் இந்த சாஸ்திரங்கள் அமைந்திருப்பதற்கு இதுவே காரணம். சித்தர்களின் தமிழ் பாடல்களும்கூட இப்படித்தான் நமக்குப் புரியாத பரிபாஷையில் இருக்கும்.

இப்போது நிபுணர்கள் ஆராய்ச்சி செய்தால், நம் சாஸ்திரங்களிலிருந்து பல விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடியும். சில சமாச்சாரங்கள் நமக்குப் புரியாமல் இருக்கும். அதற்காக அவற்றை ஒதுக்கிவிடக்கூடாது. நமக்குப் பின்னால் வருபவர்களுக்காவது அது புரியக்கூடும் என்பதால், நமக்குப் புரிகிற சாஸ்திரங்கள், புரியாத சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் நாம் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும்.

மற்ற தேசங்களில் சமீப காலமாகவே இந்த விஞ்ஞான வித்தைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. நாம் ஆதியில் நமக்கென்றே இருந்த இந்த வித்யா சம்பத்தை மறந்துவிட்டு, மற்றவர்களிடமிருந்து இப்போது கற்றுக் கொள்கிறோம்! இதில் ஒரு முக்கியமான வித்தியாசம், இந்த வித்தைகள் யாவும் பிரம்மவித்தை என்கிற ஆத்ம சிரேயஸுக்கு அநுசரணையாகவே நம் தேசத்தில் வைக்கப்பட்டிருந்தன. வெறும் லௌகிக சௌக்கியத்துக்காகவே அவற்றை உபயோகப்படுத்தி மேல்நாடுகள் உண்டாக்கியிருக்கிறநாகரிகத்தில் ஆத்மசாந்தி அடியோடு போய்விட்டது. இதை மேல் நாட்டுக்காரர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தின் மூலம் படிப்படியாக நாகரிகத்தில் ஏறி, இப்போது அவர்கள் அதில் உச்ச நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும் இதில் ஆத்ம திருப்தி இல்லை என்று கண்டுகொண்டு நம்முடைய வேதாந்தத்தின் பக்கமும் நம்முடைய பக்திமார்க்கத்தின் பக்கமும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். நாமோ நம்முடைய லௌகிக வித்தை, ஆத்ம வித்தை இரண்டையும் அலட்சியம் செய்து விட்டு, மற்ற நாட்டவர்கள் அடைந்திருக்கிற இரண்டுங்கெட்டான் நாகரிகத்தைத் தேடி ஓடுகிறோம். அவர்கள் இரும்பு உலகத்திலிருந்து (iron Age) தங்க யுகத்துக்கு (Golden Age)—அதாவது, இருட்டு யுகத்திலிருந்து பிரகாச யுகத்துக்குவந்து கொண்டிருக்கிறார்கள். நாமோ பிரகாச யுகத்திலிருந்து இருட்டு யுகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்! குறைவிலிருந்து அவர்கள் நிறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால், நாமோ நிறைவிலிருந்து குறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

வருங்காலத்தவருக்கு வஞ்சனை செய்யலாமா?

நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத கலைகளோ ஸயன்ஸ்களோ மற்ற விஷயங்களோ இல்லவே இல்லை. போஜராஜன் செய்துள்ள ஸமராங்கண சூத்திரம் என்ற நூலில் பலவிதமான மிஷின்கள் செய்யும் முறைகள்கூட உள்ளன. அதில் ஆகாயவிமானத்தைப் பற்றிக்கூட வருகிறது என்றால் ஆச்சரியமாயிருக்கும்! போஜன் இந்த விமானத்தைப் பற்றிய சித்தாந்த முறையை (Theory) மட்டுமே சொல்லிவிட்டு, “நடைமுறையில் (Practical) இதைப் பண்ணும் வழியை நான் சொல்லாததால் எனக்கு அது தெரியாது என்று நினைக்க வேண்டாம்; நடைமுறையைச் சொல்லி இந்த விமானம் செய்யப்பட்டால், ஜனங்களுக்கு சௌகரியத்தை விட அசௌகரியமே அதிகமாகும் என்றே சொல்லவில்லைஎன்கிறார்.

ஆகாய விமானம், அணுசக்திக் குண்டு இவற்றையெல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் அனர்த்தத்தை நாம் உலக யுத்தத்தில் கண்கூடாகப் பார்த்து விட்டோம். அது ஒரு புறம் இருக்கட்டும்.

போஜன் சொல்லியிருக்கிற ஆகாயவிமானதியரியைச் சில என்ஜினீயர்களுடன் சேர்த்து படித்துப் பார்த்ததில் பலூன், ஜோர்டான் என்ஜின் போன்ற ஒரு முறையை போஜன் சொல்கிறார் என்று தெரிய வந்தது.

பழைய காலத்தில் ஒவ்வொரு கலைக்கும் ஸயன்ஸுக்கும் தனித்தனி நூல்கள் இருந்தன. இந்த நூல்கள் ஒவ்வொன்றையும் டைஜஸ்ட் மாதிரி ஒரு அத்தியாயமாகச் சுருக்கிபிருஹத் ஸம்ஹிதைஎன்ற புஸ்தகத்தை வராஹமிஹிரர் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 1500 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் புஸ்தகத்தில் தாவர சாஸ்திரம், மிருக சாஸ்திரம், பட்சி சாஸ்திரம், தாது சாஸ்திரம் இப்படி சகல விஷயங்களும் அடங்கியிருக்கின்றன.

பழங்காலத்தவரின் என்ஜினீயரிங் ஞானம் இன்றுள்ள நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இவற்றுக்கெல்லாம் ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் உள்ளன. ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாகதலைமுறை தலைமுறையாகரக்ஷிக்கப்பட்டு நம் கைக்கு வந்துள்ளன. இந்த நாள்போல் அச்சுப் புஸ்தகம் போடத் தெரியாத காலங்களிலும் இவற்றை நம் முன்னோர்கள் எப்படியோ காத்து நம் வரைக்கும் தந்துவிட்டார்கள். இப்படி யுகாந்தரமாக வந்த சாஸ்திரங்களை எல்லாம் நமக்குச் சகல வசதி இருந்தும், அடுத்த தலைமுறைக்குக் காத்துத் தராமல் இருக்கிறோம். ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இழையை அறுத்து விடுகிறபாக்கியம்நமக்கே ஏற்பட்டிருக்கிறது.

குருடன் ஒருவன் கையில் லாந்தருடன் போய்க் கொண்டிருந்தானாம். எதிரில் வந்த ஒருவன்உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய்?’ என்று கேட்டான். அதற்குக் குருடன், ‘எனக்கு கண் இல்லாவிட்டாலும் உனக்குக் கண் இருக்கிறது அல்லவா? அதற்காகத்தான் இதை எடுத்து வருகிறேன். இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீயே என்மேல் தடுக்கி விழுந்திருப்பாயேஎன்றானாம். அதுபோலவே பழைய சாஸ்திரங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், எதிர்காலத்தில் யாருக்காவது புரியலாம்; பயனாகலாம் என்பதனாலாவது அவற்றை நாம் ரக்ஷித்தாக வேண்டும். “வசதியே இல்லாத காலங்களில் யுகாந்தரமாக ரக்ஷிக்கப்பட்ட சாஸ்திரங்களை நமக்கு முதல் தலைமுறையினர் எல்லா வசதியிருந்தும் காப்பாற்றாமல் அழித்து, நம்மை வஞ்சித்து விட்டார்கள்என்று, வருங்காலத் தலைமுறையினர் நம்மைக் குற்றம் சொல்ல இடம் வைக்கலாமா?

பழைய காலங்களில் சாஸ்திர ரக்ஷணம் அரசர்களின் பொறுப்பிலிருந்தது. இப்பொழுது ராஜாக்கள் இல்லை; ராஜ்ய, மத்ய சர்க்கார்கள்தாம் உள்ளன. அவற்றுக்கு நிம்மதியே இல்லை. ஒரு பக்கம் பாஷை சண்டை; ஒரு பக்கம் எல்லைச் சண்டை. ஏகப்பட்ட பாலிடிக்ஸ், ஊழல் இப்படிப் பல கஷ்டங்கள். அந்தக் காலத்தில் ஒரு ராஜாவுக்கும் இன்னொரு ராஜாவுக்கும் சண்டை நடந்தது என்றால், இப்பொழுது ஒரு ராஜ்ஜியத்துக்கும் இன்னொரு ராஜ்ஜியத்துக்கும் சண்டை; ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் சண்டை; ஒரு கட்சிக்கும் இன்னொன்றுக்கும் மண்டை உடைகிறது. எனவே, சாஸ்திர ரக்ஷணத்திற்கு அரசாங்கத்தை எதிர்பார்த்துப் பிரயோஜனமில்லை. ‘சுற்றுப்புறத்தில் எல்லாம் ஒரே பூசல்; குடும்பத்திலும் தொல்லைஎன்று நாம் தட்டிக்கழிக்கக்கூடாது. வனவிலங்களுகளைப் பாருங்கள். சிங்கம் புலியை அடிக்கிறது. புலி மானை அடிக்கிறது. இருந்தாலும், காட்டிலே சிங்கக்குட்டியும், புலிக்குட்டியும், மான் குட்டியும் வளர்ந்துகொண்டும் விளையாடிக்கொண்டும்தான் இருக்கின்றன. அப்படி இருக்க நாமும் பழக வேண்டும். எத்தனை இடையூறு இருப்பினும், நமக்கு எதிர்காலத்தினரிடம் உள்ள கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து பழைய சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தரவேண்டும்.

தமிழ்நாட்டுப் பண்பின் பெருமை

உலகத்தில் இருக்கிற கோயில்களில் பாதிக்குமேல் இந்தியாவில்தான் இருக்கின்றன. இதிலும் பாதிக்கு மேற்பட்ட ஆலயங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன.

உலகத்தில் இருக்கிற சாஸ்திரங்களில், பக்தி நூல்களில் பாதிக்குமேல் இந்தியாவில்தான் இருக்கின்றன. இதில் பாதிக்கு மேற்பட்ட நூல்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையே. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள காவிரிப் பிரதேசத்தில் கிடைத்த ஏட்டுச் சுவடிகள், உலகத்திலுள்ள சாஸ்திரங்களில் பாதிக்கு மேற்பட்டவை என்று அறியும்போது, நமக்கு ரொம்பவும் பெருமையாக இருக்கிறது.

இதோடுகூடத் தமிழ்நாட்டுக்கு இன்னொரு தனிப் பெருமை உண்டு. சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட மொழியும், ஒரு விசேஷமான கலாச்சாரமும் உள்ள ஒரு பிரதேசத்தில் பிற மொழியினரும், பிற கலாச்சாரத்தினரும் குடியேறினால், நாளடைவில் அவர்கள் தங்கள் தனி வழக்கங்களையும் பாஷைகளையும் இழந்து அந்தப் பிரதேசத்தின் மொழியையே பேச ஆரம்பித்துவிடுவார்கள். அங்குள்ள நாகரிகத்தையே பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். உலக நாடுகளின் சரித்திரத்தைப் பார்க்கும்போது இந்த உண்மை நிதரிசனமாகிறது. இப்போது உத்யோக நிமித்தம் வடக்கே நம்மவர் போகிறது மட்டுமின்றி, பூர்வத்திலேயே தமிழ்நாட்டு பிராமணர் பலர் வடக்கே போயிருக்கிறார்கள். ஆந்திரர்களுக்கும் சோழர்களுக்கும் கலியாணக் கொள்வினை, கொடுப்பினை இருந்த சமயத்தில், இப்படி பலர் போயிருக்கிறார்கள். வேறு சந்தர்ப்பங்களிலும் போயிருக்கிறார்கள். இப்போது வடநாட்டுக் காரர்கள் பலர் த்ரவிட் (Dravid) என்று குலப்பெயர் போட்டுக் கொள்வதைப் பார்த்திருப்பீர்களே. அவர்களில் பலர், இம்மாதிரி குடியேறியவர்களின் வம்சத்தில் வந்தவர்கள்தான். ஆனால், வெளி மாகாணங்களில் உள்ள இந்தத்திராவிடர்களுக்குத் தமிழ் மொழியே அடியோடு தெரியவில்லை. நீண்ட காலமாக ஒரு பகுதியில் வசிக்கும் பிற சீமையைச் சேர்ந்த மைனாரிட்டிக்காரர்கள் தங்கள் மூல பாஷையைக்கூட மறந்து விடுகிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

இப்படி நான் சொன்னதால் ஆரியர்கள் வடக்கே, திராவிடர்கள் தெற்கே என்று பாகம் பிரிப்பதாக அர்த்தமில்லை. நம் பழைய சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்போது வெள்ளைக்காரர்கள் ஆரியர், திராவிடர் என்று இரண்டு வேறு இனமாக (race) பேதப்படுத்தி சொல்லியிருப்பதற்கே ஆதாரமில்லை. தேசம் பூராவிலும் இருந்தவர்களைஒரே இனத்தவர்களைத்தான்பஞ்ச கௌடர்கள், பஞ்ச திராவிடர்கள் என்பதாக பாரத தேசத்திலிருக்கிற பத்துப் பிராந்தியங்களில் இப்படி ஐந்து அப்படி ஐந்து என்று பிரித்திருந்ததாகவே நம் சாஸ்திரங்களிலிருந்து தெரிகிறது. இது பிரதேச ரீதியில் (regional) செய்த பிரிவே தவிர, இன ரீதியில் (racial) செய்தது அல்ல. பிற்பாடு திராவிடம் என்பது தமிழரை மட்டும், கௌடர் என்பது வங்காளியரை மட்டும் குறிப்பதாக ஆகியிருக்கிறது. ஆதியில் எல்லாம் ஒரே இனம், ஒரே மதம் என்றுதான் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் தமிழ்நாடே திராவிடம் ஆன பிறகும், இங்கிருந்து சில கூட்டமாக வடக்கே போய்க் குடியேறிய பிராமணர்களைப் பற்றித்தான் நான் மேலே சொன்னேன். அவர்களுக்கெல்லாம் இப்போது பேரில்திராவிடஎன்பது ஒட்டிக்கொண்டிருந்தும் கூட, தமிழ் பாஷை அடியோடு தெரியாமல், அந்தந்தப் பிராந்திய பாஷை பழக்கம் இவற்றிலேயே பூரணமாகக் கரைந்துவிட்டிருக்கிறார்கள். இதுதான் லோகம் முழுக்கவே பொது வழக்கு. ஒரு பிரதேசத்துக்கு இன்னொரு பிரதேசத்தவர்கள் வந்து குடியேறினார்கள் என்றால், இப்படிக் குடியேறிகள் தங்கள் கலாச்சாரத்தை நாளாவட்டத்தில் இழந்து அந்தப் பிரதேசக் கலாச்சாரத்தையே தழுவிவிடுகிறார்கள்.

பிறருடைய பாஷையை, பழக்கங்களை வெகு சுலபமாகப் எடுத்துக்கொள்வதில் தமிழ் ஜனங்களுக்கே ரொம்பவும் திறமை இருக்கிறது. தமிழன் என்றால் இங்கிலீஷ்காரனை விட நன்றாக இங்கிலீஷ் பேசுகிறான். ஹிந்திக்காரனைவிட நன்றாக ஹிந்தியில் பேசுகிறான். பால்ரூம் டான்ஸிலிருந்து, ஹிந்துஸ்தானி சங்கீதம் வரை எல்லாம் இவனுக்கு அநாயாசமாக வந்துவிடுகிறது. இதிலே பாராட்டுவதற்கும் விஷயம் இருக்கிறது; கண்டிப்பதற்கும் விஷயம் இருக்கிறது. இது அந்நியம், பிறத்தியாருடையது என்று இல்லாமல் எதையும் இவனால் எடுத்துக் கொள்ளமுடிகிறதே என்று பாராட்டலாம். ஆத்ம சிரேயஸுக்காக இல்லாமல் வெறும் இந்திரிய சுகத்துக்காகவோ, புத்திப் பெருமைக்காகவோ மட்டும் இவன் மற்றவர்களின் தப்பான சமாசாரங்களில் மோகித்து விழுந்து, அவற்றையும் தனதாக ஸ்வீகரித்து விடுகிறானே என்கிறபோது கண்டிக்க வேண்டியதாகிறது.

தமிழ்மொழியும் இந்தப் பிரதேசத்துக்கென்றே விசேஷமாக உள்ள சில பண்பாடுகளும் ரொம்பவும் புராதனமானவைஜீவசக்தி வாய்ந்தவை. அப்படியானால், இத்தனை தொன்மையும் சக்தியும் இல்லாத கலாச்சாரங்களே புதிதாக வந்தவர்களைத் தங்களில் கரைத்துக்கொள்கின்றன என்றால், அவற்றைவிட வலுவாகத் தமிழ் நாடானது இங்கே வந்து குடியேறியவர்களின் விஷயத்தில் இதைத் செய்திருக்கத்தானே வேண்டும்? இப்படி நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், நடைமுறையில் பார்த்தால் நேர்மாறாக இருக்கிறது. மற்றப் பிரதேசங்கள் தங்கள் பாஷை, பழக்கங்கள் இவற்றிலேயே புதிதாக வந்தவர்களைக் கரைத்து விடுகின்றனர். ஆனால், தமிழ்நாடு ஒன்று மட்டும் இதற்கு விலக்காக இருக்கிறது. தமிழ்நாட்டில் மஹாராஷ்டிரர்கள், ஆந்திரர்கள், கன்னடியர்கள், குஜராத்திகள், சௌராஷ்டிரர்கள் முதலிய பல சமுதாயத்தினர் எத்தனையோ பரம்பரைகளாக வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால், அவர்கள் தங்கள் பாஷைகளையே பேசி வருகிறார்கள். தங்களது பழக்க வழக்கங்களையே பின் பற்றி வருகிறார்கள். ஆதிகாலத்திலிருந்து திராவிட தேசமானது இவ்வாறு அந்நிய தேசங்களிலிருந்தும் பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வந்தவர்களுக்கெல்லாம் இடம் தந்து அவரவரையும் அவரவரது பாஷை, சம்பிரதாயம் இவைகளிலேயே நிலைப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு ஒருரிஃப்ரிஜிரேடர்’ (குளிர்பதனப் பெட்டி) போல் எல்லா பாஷைகளையும் எல்லா நாகரிகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் காத்துத் தந்து வந்திருக்கிறது. குளிர் சாதனப் பெட்டியில் வைத்த பழம்போல் மற்றப் பிரதேச பாஷைக்காரர்களான மகான்களின் இலக்கிய சிருஷ்டிகளும் இங்கே உண்டாகி கெடாமல் ரக்ஷிக்கப்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக தியாகராஜரின் தெலுங்குக் கிருதிகள் இந்த மண்ணில் பிறந்தவையே. தெலுங்கு தேசத்திலேயே இப்படிப்பட்ட சிருஷ்டி உண்டாகவில்லை. இப்படியே பல பாஷைக் கிரந்தங்கள், பல சித்தாந்தங்கள் இங்கு உருவாயின. மற்றவை அனைத்தோடும் தன்னை இழையவிட்டுக் கொண்டு, தன்னை மற்றவர் மீது திணித்து நிர்ப்பந்திக்காமல் இருக்கிற ஒரு தனிப் பண்பு திராவிட தேசத்துக்கே சிறப்பாக இருந்து வந்திருக்கிறது.

தொன்றுதொட்டு வேத நெறியின் வீடாக இருந்திருப்பது தமிழகமே. மனித குலத்தின் முதல்வராக மநு, வைகை அருகேயுள்ள கிருதமாலாக் கரையில் வசித்ததாகவே பாகவதம் கூறுகிறது. வேத தர்மம் இங்கேதான் பிறந்தது. உலகத்திலேயே ஈடு இணையில்லாத பக்திச் செல்வத்தையும் நீதி நூல்களையும் தந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும், பட்டினத்தார், தாயுமானவர், திருவள்ளுவர், சங்கப்புலவர் போன்றவர்களும் எங்கு பார்த்தாலும் திராவிட நாட்டின் வேதத்தின் பெருமையைப்பற்றித் தங்கள் நூல்களில் பேசுகிறார்கள். சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் வேத பாடசாலைகளுக்கும் வேத வித்துக்களுக்கும் தாங்கள் செய்த சாஸனங்களைக் கல்வெட்டுகளில் பொறித்துப் பூரிப்படைந்திருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் புலவரான ஸ்ரீவேதநாயகம் பிள்ளைகூடத் தமிழ்நாட்டில் தேவாலயங்களோடுபிரம்மாலயங்கள்’ (வேத பாடசாலைகள்) நிறைந்திருப்பதையே பெருமையோடு கூறியிருக்கிறார். ‘வேதம் நிறைந்த தமிழ்நாடுஎன்று பாரதியார் பாடியது உங்களுக்குத் தெரியும்.

இப்படி வேத தர்மமும் சகல கலைகளும் பரமார்த்திகமும் தோய்ந்து கிடக்கும் தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்து அவ்வப்போது அவைதிகமும் நாஸ்திகமும் தலை காட்டி வந்ததும் உண்டு. ஆனால், இத்தகைய நாஸ்திக ஆட்டங்கள் ஏற்பட்ட ஒவ்வொரு சமயத்திலும் மக்கள் விழித்துக் கொண்டு, தங்களது தெய்வ பக்திக்கும், வைதிக நம்பிக்கைக்கும் கூர் தீட்டிக் கொண்டதை சரித்திரம் சொல்கிறது. அதற்கப்புறம் வேத நெறி இரு மடங்காகக் கொழுந்துவிட்டு ஜொலித்திருக்கிறது.