உள்ளும் புறமும்
“எல்லோரும் அவரவருக்கு உரிய கார்ம அநுஷ்டானங்களைச் செய்ய வேண்டும்; ஆசாரங்களை அநுசரிக்க வேண்டும்! விபூதி, திருமண், ருத்ராக்ஷம் போன்ற சின்னங்களைச் தரிக்க வேண்டும்” என்றெல்லாம் நான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். சிலர் இதெல்லாம் எதற்கு என்று நினைக்கிறார்கள். “நல்ல சீலங்களுடன் இருக்க வேண்டியதே முக்கியம். சீலம் மனசைப் பொறுத்த விஷயம். சமய ஆசாரங்களெல்லாம் வெளி விஷயம்தானே?” என்று எண்ணுகிறார்கள்.
உண்மையில் வெளியில் செய்கிற காரியமும், வெளியில் அணிகிற சின்னங்களும்கூட உள்ளுக்கு நன்மை செய்கின்றன. உடலின் காரியமும் உள்ளத்தின் பாவமும் பரஸ்பரம் சம்பந்தமுடையவை. ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்; லாட்டரியில் தமக்கு லட்ச ரூபாய் விழுந்திருக்கிறது என்று ஒருவர் சற்றும் எதிர்பாராமல் கேள்விப்படுகிறார். உடனே எல்லையில்லாத சந்தோஷம் உண்டாகிறது. இது ஒரு மனோபாவம்தான். ஆனால் இந்த மனோபாவம் காரணமாக அவரது உடம்பில் ஒரே படபடப்பு உண்டாகிறது. மூச்சு அப்படியே சிறிது காலத்துக்கு அடங்கி மூர்ச்சையாகி விடுகிறார். ‘குறிப்பிட்ட உணர்வு உண்டானால் இன்னவிதமாக சுவாசம் மாறுகிறது’ என்ற நடைமுறை உண்மையைத் திருப்பிவைத்துக் குறிப்பிட்டபடி சுவாசப்பயிற்சி (பிராணாயாமாதிகள்) செய்தால், இன்ன விதமான உத்தமமான மனோபாவங்களை அடையலாம் என்று யோக சாஸ்திரம் விவரிக்கிறது. வெளித்தோற்றமே உள் உணர்வைச் சொல்கிறது. கோபம் வந்தால் கண் சிவக்கிறது; உதடு துடிக்கிறது. துக்கம் வந்தால் எதற்காகவோ கண்ணிலிருந்து ஜலம் ஜலமாகக் கொட்டுகிறது. சந்தோஷம் வந்தால் பல்லெல்லாம் தெரிகிறது. இப்படியெல்லாம் உடம்புக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் இருப்பதால்தான் இன்னபடி ஆசனம் போட்டால் இந்தந்த ஆத்ம குணங்களுக்கு அநுகூலமாகும் என்று மகான்கள் வழி கண்டிருக்கிறார்கள்.
மிலிடரிக்காரன் யூனிஃபாரம் போடாவிட்டால் அவனுக்கு வீரம் வராதா என்று கேட்பவர்கள் கேட்கலாம். ஆனால் மிலிடரிக்காரன் என்றால் லோகம் முழுக்க அவனுக்கென்று யூனிஃபாரம் இருக்கத்தான் இருக்கிறது. அதுவே வீரத்தைத் தூண்டுகிறது என்றும் சொல்கிறார்கள்.
வெளியில் தரிக்கும் சின்னம், வெளியில் செய்கிற சமஸ்காரம் இவை உள்ளுக்கும் நன்மை தருவனவே ஆகும். வெறும் வேஷம் என்று நினைத்தால் வேஷமாகவே போகும். ‘ஆத்மார்த்தமாக, ஜீவனைப் பரிசுத்தம் செய்துகொள்வதற்காக இந்த சம்ஸ்காரத்தைச் செய்கிறேன்; சின்னத்தை அணிகிறேன்’ என்று உணர்ந்து செய்தால் சத்தியமாகவே அது உள்ளே புகுந்து சுத்தி செய்கிறது. புறத்தில் செய்வது உள்ளுக்கு உதவுகிறது.
நான் சம்ஸ்காரங்களை முக்கியமாக சொல்வதோ ஆசாரங்களை விடாமலிருக்கப் பிரயத்தனம் செய்வதோ விபூதி, ருத்ராஷம் முதலிய சின்னங்களைத் தரிப்பதோ, பெரிதில்லை. நான் மடாதிபதி. ஆதலால் இதெல்லாம் என்னிடம் இருந்தால்தான் என்னிடம் வருவீர்கள்; என் மடம் நடக்கப் பணம் கொடுப்பீர்கள். எனவே இவையெல்லாம் எனக்குக் காரியார்த்தமாக, வேண்டியிருக்கின்றன. ஆனால், உங்கள் விஷயம் அப்படியில்லை. உங்களுக்கு ஜீவனோபாயம் வேறு விதத்தில் கிடைத்து விடுகிறது. ஆதலால் என்னைவிட சிரேஷ்டமாக, முழுக்க முழுக்க ஆத்மார்த்தமாகவே நீங்கள் சமஸ்காரங்களைச் செய்து, சின்னங்களைத் தரித்துக் கொண்டு பரிசுத்தம் பெற முடியும்; பெற வேண்டும்.
பரம சத்தியத்தை நினைவூட்டும் சின்னங்களைத் தரித்துக் கொள்வோம்; கெட்ட வழியில் போகாமல் தடுக்கும் நல்ல கர்மாக்களை அநுஷ்டிப்போம்; அதனால் சீலம் பெறுவோம்! சித்த சுத்தி பெறுவோம்; இந்தத் தெளிவின் பயனாக அனைத்துமான ஏக பரம்பொருளைத் தியானித்து, தியானித்து, அதை அநுபவத்தில் உணர்ந்து, ஆனந்தமாக இருப்போம்!
சடங்குகள்
நான் சொல்கிற கர்மாநுஷ்டானங்கள், பூஜை முதலியனவெல்லாம் ‘வெறும்’ சடங்குதானே என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆத்மாநுபவம் என்பது உள்விஷயம். சடங்குகளோ வெளிக்காரியங்கள். இவை எப்படி ஆத்மாநுபவத்திற்கு உதவும் என்பது அவர்களுடைய சந்தேகம்.
உண்மையில் ஆத்மாநுபவம் பெற்றுவிட்டால் சடங்கே தேவையில்லைதான். ஆனால் உண்மையான ஆத்மாநுபவம் நமக்கு வந்துவிட்டதா, அதற்கு நாம் பக்குவப்பட்டு விட்டோமா என்று அந்தரங்க சுத்தமாகப் பார்த்துக்கொண்டால், நாம் அதற்கு எவ்வளவோ தூரத்தில் நிற்கிறோம் என்று தெரியும். எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து, எத்தனையோ கர்மாக்களைச் செய்து, அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக்கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்தும் ஸத் வாசனைகளைப் பெருக்கிக் கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும் துர்வாஸனைகளையும் போக்கிக்கொள்ள வேண்டும். பிறகு கர்மா தானே நின்றுபோகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் ‘வெறும்’ சடங்கு என்று சொல்கிற கர்மங்கள், பூஜை எல்லாம் நமக்கு ரொம்பவும் அவசியமானவையே.
எனவே, சாமானிய மக்கள் சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எல்லாச் சடங்குகளையும் வழுவற அநுஷ்டிப்பதே முறை. இவற்றால் என்ன பயன் என்பவர்களுக்கு நிதரிசனமாகச் சில பலன்களைக் காட்டலாம். இன்னின்ன கர்மங்களை இப்படியிப்படித் தவறின்றிச் செய்ய வேண்டும் என்று ஒருவன் கூர்ந்த கவனத்துடன் செய்கிறபோது, அவன் மனஸில் ஐகாக்கிரியம் (ஒருமுகப்படுதல்) ஏற்படுகிறது. பிறகு ஆத்ம தியானம் செய்வதற்கு இவ்வாறு மனம் ஒருமைப்படுவது அத்தியாவசியமாகும். அதோடு சாஸ்திரம் கூறுவதுபோலத்தான் இருக்க வேண்டும் என்று அவன் உறுதியாக இருப்பதால், ஓர் ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு (Discipline) உட்படுகிறான். இதைச் சாப்பிடக்கூடாது, இந்தப் போக்கிய வஸ்துக்களை அநுபவிக்கக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரப் பிரகாரம் நடப்பது வைராக்கியத்துக்குப் பெருத்த சகாயம் செய்கிறது. எத்தனை சிரமங்கள் இருந்தாலும், குற்றம் குறை இன்றி சாஸ்திரப்படி சடங்குகளைச் செய்யும் போது, சங்கல்ப பலமும் (Will-power) உண்டாகிறது. சொந்த அபிப்பிராயமில்லாமல் சாஸ்திரம் சொல்வதே வழி என்று இருப்பதால், அடக்கம், எளிமை எல்லாம் உண்டாகின்றன.
ஆக, ‘வெறும்’ சடங்கு என்று சொல்லப்படுவதைத் தவறாமல் அநுஷ்டிப்பதால் சித்த ஐகாக்கிரியம் (மன ஒருமைப்பாடு) , கட்டுப்பாடு, வைராக்கியம், சங்கல்ப பலம், அடக்கம் இத்தனை நல்ல விஷயங்கள் உண்டாகின்றன. மொத்தத்தில் ஒழுக்கத்துக்கு (Morality) வழி உண்டாகிறது. நன்னடத்தையும் ஒழுக்கமும் இல்லாமல் ஆத்ம விசாரமும், ஆத்மாநுபவமும் உண்டாகவே முடியாது.
புத்தர் வைதிகச் சடங்குகளை விதிக்கவில்லை. ஆனால் அவரும் ஒழுக்கத்தை — சீலத்தை — மிகவும் வற்புறுத்தினார். நேரு பஞ்சசீலம் பஞ்சசீலம் என்று சொல்லி வந்தாரே, அந்த சீலம் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியம். வைதிகச் சடங்குகள் இல்லாமலே புத்தர் சீலத்தை மட்டும் வற்புறுத்தினார். பூர்வ மீமாம்சகர்களோ, வைதிக கர்மாக்களே போதும், ஈஸ்வரனைப் பற்றிக்கூடக் கவலைப்பட வேண்டாம் என்றார்கள். ஆனால் நம்முடைய ஸநாதன தர்மத்தில் சடங்குகள் (கர்மங்கள் அவற்றின் மூலம், சீலம், அதோடு ஈசுவர பக்தி, பிற்பாடு ஆத்மஞானம் என்கிற ரீதியில் எல்லாம் இணைத்துத் தரப்படுகிறது. வெறுமே சீலம் வராது. பால் வேண்டும் என்றால் பசுவை வைத்துப் போஷிக்க வேண்டும். பசுவை வைத்துப் போஷித்தால் பால் கிடைப்பது மட்டுமின்றிச் சாணமும்தான் கிடைக்கும்; வைக்கோல் கூளமும்தான் சேரும். அப்படியே கர்மப் பசுவை வளர்த்தால்தான் சீலம் என்கிற பால் வரும். அதோடு, சாணம் கூளம்போல், விரும்பத்தகாதவை என்று சிலருக்குத் தோன்றுகிற சில விளைவுகளும் உண்டாகலாம். சாணத்தையும் கூளத்தையும் சுத்தப்படுத்திவிட்டு பசுவைப் போஷித்து வருவதே புத்திசாலித்தனம். சடங்குகளின் உண்மைப் பயனை இவ்விதமே பெறவேண்டும்.
உண்மையான ஆத்ம தியானத்துக்குச் சடங்கு வேண்டாம் என்பதுபோல், ஈசுவரன் என்ற மூர்த்தியும் வேண்டாம்தான். ஆனால் அது உயர் நிலையில்தான். ஆரம்பத்திலேயே வேண்டாம் என்று இருக்க முடியாது. முதலில் ஈசுவரன் மிகவும் தேவை. அதற்கு எத்தனையோ காரணங்கள். குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன். நன்மை எல்லாம் நிறைந்த மூர்த்தியாக நமக்கு ஓர் உத்தம உதாரணம் தேவைப்படுகிறது. தொன்றுதொட்டு ஈசுவரனை இப்படிப்பட்ட அனந்த கல்யாண குணமூர்த்தியாகத்தானே பாவித்து வந்திருக்கிறோம்! ‘ஈசுவரன்’ என்றவுடன் அவரிடம் கெட்ட குணம் ஏதுமே இருக்காது என்று தானே நமக்குத் நிச்சயமாகத் தோன்றுகிறது? அழகு, கருணை, சக்தி, ஞானம் எல்லாவற்றிலும் பூரணமாக ஒன்று உண்டு என்றால் அது ஈசுவரன் என்ற கருத்துதான். மனோதத்துவப்படி நாம் எதை நினைத்துக் கொண்டேயிருக்கிறோமோ, அதுவே ஆகிறோம். ஈசுவரனின் கல்யாண குணங்களையே எண்ணுவதால் நம்மிடமுள்ள தோஷங்கள் நீங்கி நாமும் நல்லவர்களாகிறோம்.
எனவே சடங்கு, பூஜை இவற்றால் உண்டாகிற மற்ற பலன்களோடு, அவை நம்மை நல்லவர்களாக்க மிகுந்த உதவி புரிகின்றன; காரியமற்ற தியான யோகத்தில், ஞான விசாரத்தில் நம்மைச் சேர்க்க நிரம்ப உபகாரம் செய்கின்றன.
யோகத்தின் தொடக்கம் கர்மமே
யோகம் என்றால் சுவாசத்தை அடக்கி அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பதுதான் என்று பொதுவாக நினைக்கிறார்கள். ‘யோகம்’ என்பதற்கு நேர் அர்த்தம் சேர்க்கை என்பது. பல வஸ்துக்களோடு நாம் வாழ்க்கையில் சேர வேண்டியதாகிறது. ஆனால் இந்தச் சேர்க்கை எதுவும் நிரந்தமாக இருக்கவில்லை. அதனால்தான் மனசு கிடந்து ஆடிக்கொண்டேயிருக்கிறது. இப்படியில்லாமல் முடிந்த முடிவான ஒரே வஸ்துவுடன் எந்தநாளும் சேர்ந்துவிட்டோம், அதற்கப்புறம் நாம் என்று ஒன்று, அதிலிருந்து பிரிந்து வரவே முடியாது என்று ஆக்கிக் கொண்டுவிட்டால், அதுதான் நிஜமான யோகம். நம் மனசுகளுக்கெல்லாம் மூலமாக இருக்கிற பரமாத்மாதான் அந்த ஒன்று. மனசை மூலத்தில் திருப்புவதற்காகவே யோகிகள் சுவாசத்தை அடக்குகிறார்கள்! ஏனென்றால் எண்ணம் உதிக்கிற வேர் எதுவோ, அதுவேதான் சுவாசத்தின் வேரும் ஆகும். எனவே சுவாசம் மூலத்தில் நின்றால் மனமும் அதன் மூலத்துக்குப் போய் அடங்கிவிடுகிறது.
யோகம் என்பதற்கு எதிர்ப்பதம் ‘வியோகம்’. விட்டுப் போவதை ‘வியோகம்’ என்கிறோம். உடம்பைவிட்டு ஒருவர் செத்துப் போய் விட்டால் ‘தேக வியோகம் ஆகிவிட்டார்’ என்று சொல்கிறோம் அல்லவா?
ஒரு தினுசான வியோகம் வந்துவிட்டால் அதுவே யோகம் ஆகிவிடும் என்று பகவான் கீதையில் சொல்கிறார். ஏதோ ஒன்றில் வியோகம் வந்தால் — அதாவது, எதுவோ ஒன்றை விட்டுவிட்டால் அதுவே யோகம் என்கிறார். அந்த ஒன்று என்ன? துக்கம் என்பதே. துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரித்துத் தள்ளிவிட்டால் அதுவே யோகம் என்கிறார். (தம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோக ஸமஞிதம்.)
லோக ரீதியில் நாம் சொல்கிற ‘இன்பங்களும்’ கூட இந்தத் துக்கத்தைச் சேர்ந்தனவே. பரமாத்மாவைப் பிரிந்திருக்கிற எல்லா அநுபவமுமே துக்கம்தான்.
சித்தம் ஓடிக்கொண்டே இருப்பதால்தான் இன்ப துன்ப அநுபவங்கள் ஏற்படுகின்றன. சித்தம் சஞ்சலிக்காமல் நிறுத்திவிட்டால் இவை இல்லை. ஒரே முனையைவிட்டு அகலாமல்—ஏகாக்ரம் என்று சொல்வார்கள்—இருக்கச் சித்தத்தைப் பழக்குவதே சித்தசுத்தி. யோக ஸித்திக்கு இதுவே உபாயம். பொதுவாக நாம் ‘யோகிகள்’ என்று சொல்கிறவர்களைப் போல் எல்லோரும் ஆரம்பத்திலேயே சுவாச பந்தம் செய்துகொண்டு உட்காருவதில்லை. ஏதாவது ஒரு நல்ல விஷயத்திலே நாம் பூரணமாக ஈடுபடப் பழகினால், அப்போது சித்தம் கூடியமட்டும் அழுக்குப் படாமல் இருக்கும். சித்தத்தை நேராக அடைக்க முயன்றால் அது திமிறிக்கொண்டு நாலாதிசையும் பாயத்தான் செய்யும். எனவே சித்தத்தில் கவனம் வைக்காமல் ஏதாவது ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டுவிட்டால் அப்போது சித்தத்துக்கு சஞ்சலிக்க இடம் குறைந்து போகும்.
பழைய நாளில் அரிகண்டம் என்று போட்டுக்கொள்வார்கள். படுக்காமலே நியமமாக இருக்கவேண்டும் என்பதற்காக கழுத்திலே பெரிய கம்பி வளையம் போட்டுக் கொள்வார்கள். அதற்கு அரிகண்டம் என்று பெயர். ஒருத்தர் இதைப் போட்டுக் கொண்டபின் இஷ்டப்பட்டால்கூட படுக்க முடியாது. அந்த மாதிரி, நம் சித்தத்தை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் போகாதபடி செய்வதற்கு அரிகண்டம் மாதிரி, ஸத் காரியங்களில் பூரணமாக தலையைக் கொடுக்க வேண்டும்.
அநேக நியமங்களோடு பெரிய யக்ஞம் செய்வது, விரதம் இருப்பது, பிரம்மாண்டமான கோயில் கோபுரங்களைப் பார்த்துப் பார்த்துக் கட்டுவது, குளம் வெட்டுவது என்றிப்படியெல்லாம் முன்னே பல காரியங்களைச் செய்து வந்தார்களே, இவையெல்லாம் அந்தந்த லட்சியத்தோடு நின்றுவிடவில்லை. இவற்றின் முக்கியமான லட்சியம் சித்தத்தை ஒருமுகப்படுத்தி சுத்தமாக்கப் பழக்குவதேயாகும். இந்த ஸத்காரியங்களின் நடுவிலும் அநேக கஷ்டம், அநேக அவமானம் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனாலும் காரியத்தை முடித்தாக வேண்டும் என்பதால், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மேலே மேலே எடுத்துக் கொண்ட வேலையில் போய்க் கொண்டிருப்பார்கள். இதுவே சித்த சுத்திக்கு நல்ல உபாயமாகும். அப்புறம் சுவாசபந்தம், தியானம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம்.
முடிவிலே, ஒரு கழக்கோடி எப்படி எந்த அழுக்கிலும் பட்டுக்கொள்ளாமல் கிறுகிறு என்று உருளுகிறதோ — அந்தக் கழக்கோடி மேல் நாம் கொஞ்சம் விபூதியைப் பூசினால் அதைக்கூட உதிர்த்துவிட்டு ஓடும் — அப்படி எந்த இன்ப துன்பத்திலும் ஒட்டாமல் பரமாத்மாவை நோக்கி ஓடி அவரைச் சேர்ந்துவிடுவோம். இந்தச் சேர்க்கைதான் யோகம் என்பது. அதுதான் நம் மூலமான நிலை. அதுவேதான் முடிவான நிலையும். நடுவாந்திரத்தில் நாம் எப்படியோ மாறிப் போயிருக்கிறோம். அதனால் அந்த நிலை இப்போது நமக்குப் புரியவில்லை. நமக்குப் புரிகிற இடத்திலிருந்து அந்த நிலைக்குப் போக வேண்டுமானால் கர்மத்திலேயே ஆரம்பிக்கவேண்டும்.
கர்ம யோகம்
யுத்தம் செய்து பந்துக்களையும் மித்திரர்களையும் கொல்வது பாபமல்லவா என்பது அர்ஜுனனின் கேள்வி. நமக்கும் அர்ஜுனன் கேட்பது நியாயம் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையிலே இதற்கு வேறு விதமாக விடை தந்திருக்கிறார். உலகத்தின் பார்வைக்கு ஒரு காரியம் கெட்டதாக, கொடுமையாகத் தோன்றலாம். ஆனால், அதனால் மட்டும் அது பாபமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உலகத்தின் க்ஷேமத்துக்காகவே கொடுமைகளைக்கூடச் செய்ய வேண்டி நேரலாம். அப்போது அதில் பாவமில்லை. இதுதான் பகவான் தருகிற பதில். அப்படியானால் எது பாபகாரியம்; எது புண்ணிய காரியம்? இதற்கும் பகவான் பதில் சொல்கிறார். ஆசையினாலோ, துவேஷத்தினாலோ செய்கிற காரியங்கள்தான் ஒருத்தனைப் பாபத்தில் தள்ளுகின்றன. ஆசையும் துவேஷமும் இல்லாமல் லோக க்ஷேமமாகச் செய்கிற காரியங்கள் எத்தனை கொடுமையாகத் தோன்றினாலும் அதெல்லாம் புண்ணியமானவைதான். இதுதான் கீதை தருகிற பதில்.
ஆசையும், துவேஷமும் இல்லாமல்கூடக் கொடிய காரியம் செய்யப்படுமா என்று சந்தேகம் வரலாம். திருஷ்டாந்தம் சொல்கிறேன்; ஒரு ஜட்ஜ் குற்றவாளியைச் சிக்ஷிக்கிறபோது அவருக்கு சொந்த ஆசையோ துவேஷமோ இருக்கிறதா? சிக்ஷை தருவது கொடுமையாகத் தோன்றலாம். ஆனால்? அதுவே லோக க்ஷேமத்துக்காக, அந்த குற்றவாளியின் ஆத்ம க்ஷேமத்துக்காகவும்கூட விதிக்கப்படுகிறது. நம் பிள்ளைக்கே பைத்தியம் முற்றிப் போனால் சங்கிலி போட்டுக் கட்டிப் போடுகிறோமே. இது பாபமாகுமா? அவனுடைய நன்மைக்காகவும், அவனால் ஊராருக்குக் கஷ்டம் வரக்கூடாது என்ற பரோபகார எண்ணத்திலும் இப்படிக் கட்டிப் போடுகிறோம்.
சாஸ்திரங்கள் நம்மையெல்லாம் இப்படித்தான், ‘இது இதைச் செய்’ என்கிற விதிகளாலும், ‘இது இதைச் செய்யாதே’ என்ற நிஷேதங்களாலும் கட்டிப் போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே; லோகத்துக்கும் நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார். “தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்தி தௌ” என்கிறார். “எது செய்யத் தக்கது; எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம்” என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவு பண்ணாமல், சாஸ்திரப்படியே கருமம் செய்ய வேண்டும் என்கிறார்.
இப்போது கீதைக்கு லோகம் முழுவதும் மவுசாக இருக்கிறது. நம் சாஸ்திரங்கள் சொல்கிற ஆச்சார அநுஷ்டானங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், ஆராய்ச்சிக்காரர்கள், வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கீதையைப் பிரமாதமாகச் சொல்கிறார்கள். கீதையில் ஸ்வதர்மப்படி அவனவனும் நடக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதற்கு இவர்கள் பல விதத்தில் அர்த்தம் சொல்கிறார்கள். ஆனால் அந்த கீதையிலேயே மேலே நான் காட்டிய வாக்கியத்தில் அவனவனும் சாஸ்திரப் பிரகாரம் தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தையே செய்ய வேண்டும் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லியிருக்கிறது.
சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது எவனுக்கும் எந்தக் காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது. ஆசையும் துவேஷமும் போய்விட்டால், எந்தக் காரியத்தையும் அன்போடு செய்து கொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.
ஆசைக்கும் துவேஷத்துக்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களுக்கிடையிலும் உயர்வு தாழ்வு தெரியாது. நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். லோகம் க்ஷேமமாக இருக்கும். ‘நான் செய்கிறேன்; எனக்காகச் செய்து கொள்கிறேன்’ என்கிற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து, பலனை ஈசுவரனுடைய பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவதுதான் கீதை சொல்கிற கர்மயோகம். சொந்த விருப்பு வெறுப்பில்லாமல், லோக க்ஷேமார்த்தமாகக் காரியம் செய்து ஆத்ம பரிசுத்தி பெறுகிற இந்தப் பண்பாடு, வேத காலம் தொட்டு நம் தேசத்தில் தழைத்து வந்திருக்கிறது. அந்தப் பண்பாட்டை ஒரு கையடக்கமான பேழையில் போட்டுக் கொடுத்த மாதிரி கீதையில் அநுக்கிரகம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
இந்த உபதேசத்தை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் உரைத்து உரைத்து அலசிப் பார்க்க வேண்டும். “இந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா? ஆசையிருக்கிறதா? துவேஷம் இருக்கிறதா? பட்ச பாதம் இருக்கிறதா? இவை இருந்தால் வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எத்தனை உயர்வாக இருந்தாலும் அது பாபம்தான்” என்று நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் அலசி அலசிப் பார்க்க வேண்டும். நமக்கு என்று நாமாக ஆசைப்பட்டு ஒரு காரியத்தை உண்டாக்கிக் கொண்டால் அதைச் சாதித்துக் கொள்வதில் அநேக தப்பிதங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதனால் அவரவருக்கும் சாஸ்திரம் வைத்திருப்பதே காரியம் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொன்னாற்போல் அதையே பிரமாணமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமமான அன்புடன் இருந்து கொண்டு, சுத்தமான எண்ணத்தோடு அவரவரும் அப்படித் தன் கருமத்தைச் செய்தால், சமூகத்தில் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு எதுவுமே இருக்காது. லோகமே இன்பமயமாக இருக்கும்.