இயற்கை காட்டும் ஈஸ்வர தத்துவம்
சிருஷ்டியில் பலவிதமான சக்திகள் பல்வேறு வஸ்துக்களிடம் வியாபித்திருக்கின்றன. இயற்கையைப் பார்த்தால் ஒன்றின் சக்தியைவிட இன்னொன்றுக்குச் சக்தி அதிகம்; அதையும்விட இன்னொன்றுக்கு அதிகம் சக்தி; என்கிற ரீதியில் போய்க் கொண்டே இருக்கிறது.
பௌதிகமாக நமக்குக் கொஞ்சம் சக்தி இருக்கிறது. அதனால்தான் நாம் கொஞ்சம் கனம் தூக்குகிறோம். மாடு நம்மைவிட அதிக கனம் தூக்குகிறது. ஒட்டகம் அதையும்விட அதிக பளு தூக்கும். யானையால் அதற்கும் அதிக கனத்தைத் தூக்க முடிகிறது.
புத்தி பலத்தைப் பார்ப்போம். தாவரங்களைவிடப் புழுவுக்கு அதிக அறிவு இருக்கிறது. புழுவை விட எறும்புக்கு அதிக புத்தி இருக்கிறது. எறும்பைவிட ஆடு மாடுக்கு அதிக அறிவு. அவற்றைவிட மனிதனுக்கு புத்தி அதிகம்.
இந்த ரீதியில் யோசித்து ஆராய்ந்து பார்த்தால் இந்த பௌதிக பலம், புத்தி பலம் எல்லாம் பூரணமாக இருக்கிற ஒர் ஆதார வஸ்துவும் இருந்தாக வேண்டும் என்று தெரிகிறது.
அதைத்தான் ஸ்வாமி என்கிறோம்.
நாம் நம் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வைத்துக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டுகிறோம். குருவி தன் புத்தி பலத்தையும் தேக பலத்தையும் வைத்துக் கொண்டு கூட்டைக் கட்டுகிறது. இந்த உலகத்தை எல்லாம் நிர்மாணிக்கிற புத்தியும், சக்தியும் கொண்ட ஒன்று இருக்கிறதல்லவா? அதுதான் ஸ்வாமி.
ஒன்றிலிருந்து ஒன்றாக சக்தி அதிகமாகிக் கொண்டே போகிற இயற்கையிலிருந்து இப்படி ஈசுவர தத்துவத்துக்குப் போகிறோம்.
ஒன்றுக்கு ஒன்று மாறாக pair of opposites என்கிற எதிரெதிர்ச் சக்தி ஜோடிகளையும் நாம் இயற்கையில் பார்க்கிறோம். கடும் பனிக்காலம் என்று ஒன்று இருந்தால் கடும் வெயில் காலம் ஒன்று இருக்கிறது. இரவு என்று ஒன்று இருந்தால் பகல் என்பதாக ஒன்று இருக்கிறது. மிருதுவான புஷ்பங்கள் இருப்பதுபோல் கூரான முட்கள் இருக்கின்றன. தித்திப்புக்கு மாறாக கசப்பு இருக்கிறது. அன்புக்கு எதிராக துவேஷம் இருக்கிறது. எதற்கும் எதிர்வெட்டாக ஒரு மாற்று இயற்கையில் இருக்கிறது. இந்த ரீதியில் ஆலோசனை செய்தால் மனித மனசுக்கு மாற்றாகவும் ஒன்று இருக்கத்தானே வேண்டும்? மனித மனஸின் சுபாவம் என்ன? ஆசாபாசங்களில் முழுகிச் சஞ்சலித்துக்கொண்டே இருப்பது; திருப்தியே இல்லாமல் தவிப்பது. இதற்கு மாறாக ஆசாபாசமின்றி, சஞ்சலமே இன்றி, சாசுவத சாந்தமாகவும் சௌக்கியமாகவும் திருப்தியாகவும் இருக்கிற வஸ்துவும் இருக்கத்தான் வேண்டும். அப்படிப்பட்ட வஸ்துதான் ஸ்வாமி.
இயற்கையில் சகலமும் மாறிக்கொண்டிருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால் நாம் மாறாததாக நினைக்கிற மலையும், சமுத்திரமும்கூட காலக்கிரமத்தில் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. இயற்கையில் எதுவுமே சாசுவதம் இல்லை. இதற்கு எதிராக மாறாமலே ஒன்று இருக்கத்தான் வேண்டும். அது தான் ஸ்வாமி என்பது.
இயற்கையில் படிப்படியாக ஒன்றிலிருந்து மற்றொன்று என்றும், அதே இயற்கையில் எந்த ஒன்றுக்கும் மாறுதல் உண்டு என்றும் அம்பாள் காட்டி, இந்த இரண்டாலும் கடைசியில் பரமாத்ம தத்துவம் ஒன்று இருந்தாக வேண்டும் என்று உணர்த்துகிறாள்.
அது இருந்து விட்டுப்போகட்டுமே. அதை எதற்கு உபாஸிக்க வேண்டும் என்று கேட்கலாம். நாம் எப்படி இருக்கிறோம்? எப்போதும் எல்லையில்லாத தேவைகளோடு (wants) இருக்கிறோம். பரமாத்மா ஒரு தேவையும் இல்லாமல் இருக்கிறார். இத்தனை தேவையுள்ள நாம் அற்ப சக்தியோடு இருக்கிறோம். ஒரு தேவையும் இல்லாத பரமாத்மாவோ ஸர்வசக்தராக இருக்கிறார். நாம் ஒரே பள்ளமாக இருக்கிறோம். அவர் பரம உன்னதமாக இருக்கிறார். அவர் சக்தியிலும் ஞானத்திலும் மட்டும் உயர்ந்தவர் என்பதில்லை; தயையிலும் உயர்ந்தவராக இருக்கிறார். அதனால்தான் அவரைத் தியானித்தால் பள்ளமாக இருக்கிற நம்மையும் தூர்த்து நிரம்பச் செய்கிறார். நாம் குறைந்தவர்கள்; அவர் நிறைந்தவர். நம் குறையைத் தீர்த்து நிறைவாகச் செய்ய அந்த நிறைவால்தானே முடியும்? அப்படிச் செய்கிற கருணா மூர்த்தி அவர். நாம் உபாஸித்தால் நம் குறைகளைப் போக்குகிறார்.
குறை இருக்கிறது என்றால் எதுவோ தேவைப்படுகிறது என்று அர்த்தம். அடியோடு தேவையே இல்லாவிட்டால் அப்படியே நிறைந்து விடலாம். நம் குறைகளை நிவிருத்தி செய்கிற பரமாத்மா கடைசியில் நமக்கு எதுவும் தேவையே இல்லை என்ற நிறைவையும் தந்துவிடுவார். அப்போது அந்த உயர்ந்த மேடு நம்மைத் தூர்த்துத் தூர்த்து, பள்ளமாயிருந்த நாமும் அதோடு சமமாக, அதாகவே ஆகியிருப்போம்.
கர்மமும் பக்தியும்
ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் விதேக முக்தி அடையப் போகிறார் என்று தெரிந்தபோது சாமானிய சிஷ்யர்களெல்லாம் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ‘வேதாந்த பரமான உபதேசங்கள் அளித்தீர்கள். அதில் பல விஷயங்கள் எங்களுக்குப் புரியவே இல்லை. கடைத்தேறுவதற்கு “சுலபமான வழி ஒன்று சொல்ல வேண்டும்” என்று ஆசாரியாளிடம் பிரார்த்தித்துகொண்டார்கள். ஆசாரியாள் ‘ஸோபான பஞ்சகம்’ என்று ஐந்து சுலோகங்களை உபதேசித்தார்கள்.
“வேதம் வகுத்த வழியைத் தினந்தோறும் பின்பற்ற வேண்டும். வேதம் கூறுகிறபடி கர்மங்களைத் தவறாமல் அநுஷ்டானம் பண்ணுங்கள். இதையே ஈசுவர பூஜையாக நினைத்து பண்ணுங்கள். ஆசை வாய்ப்பட்டு நம் மனசுக்குப் பிடிக்கிற காரியங்களைச் செய்வது என்பதில்லாமல், லோக உபகாரமாக அவரவர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கர்மாவைச் செய்யுங்கள்” என்ற கருத்துடன் தொடங்குகிறது ‘ஸோபான பஞ்சகம்’.
வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக ‘அநுஷ்டிப்பவர்கள்’ சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பூஜை, உத்ஸவம், பஜனை இவற்றை நன்றாகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கர்ம அநுஷ்டானம் செய்வோரைப் பார்த்து, “இத்தனை கர்மா செய்தும் என்ன பிரயோஜனம்? கொஞ்சமாவது மனசு உருகி பக்தி செய்யாவிட்டால் என்ன பயன்? என்று தாழ்வாக எண்ணுகிறார்கள். கர்ம மார்க்கக்காரர்களோ இவர்களைப் பார்த்து, “செய்ய வேண்டிய கர்மத்தில் சிரத்தையில்லை; ஆடம்பரமாக மணி அடித்துக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தால் போதுமா?” என்று நினைக்கிறார்கள்.
ஆசாரியாள் ஸோபான பஞ்சகத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்தால் கர்மத்தையே ஈஸ்வர பூஜையாக செய்ய வேண்டும் என்று தெரிகிறது.கர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈஸ்வரனையும் மறக்காமலிருக்க வேண்டும். கர்மங்களை ஈஸ்வரார்ப்பணமாக செய்ய வேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே, அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈஸ்வரனிடம் வைத்து அவனுக்குக் கர்ம பலனை அர்ப்பணம் செய்வது சாதாரண ஜனங்களால் லேசில் முடிகிற காரியமில்லை. சாமானிய ஜீவர்கள் ஒரு கர்மம் என்று இறங்கி விட்டால், அப்போது பகவத் ஸ்மரணம் குறைந்துதான் போகும். ஆகவே தனித்தனியாகக் கர்மாவும் வேண்டும். பக்தியும் வேண்டும். நாளடைவில் கர்மத்தையே பூஜையாகச் செய்கிற உத்தம நிலை சித்திக்கும்; அல்லது பூஜையே ஒருத்தனுடைய கர்மம் முழுவதுமாக ஆனாலும் ஆகலாம்; அல்லது பூஜை, கர்மம் எல்லாம் நின்றுபோய் பிரம்மானந்தம் என்கிற சமாதி நிலை ஏற்படலாம்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆரம்ப நிலையைப் பார்த்தால், கர்மம் செய்கிறவனிடம் பகவான் பிரீதி அடைவானா? பூஜை செய்கிறவனிடம் பிரீதி அடைவானா? ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் பிரபுவை ஸ்தோத்திரம் செய்துகொண்டே இருக்கிறான். இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான். என்றாலும் அந்தப் பிரபுவிடம் துளிக்கூட அன்போ பாசமோ காட்டாமல் வேலையை மட்டும் கவனிக்கிறான். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம் பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும். பிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால் அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான். ஈஸ்வரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிடமாட்டான். தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். ஆனாலும் அந்தக் கர்ம மார்க்கக்காரன் மனஸில் அன்பே இல்லாமல், ‘வெட்டு வெட்டு’ என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவத் பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது. ‘இது பகவான் செய்த லோகம். சர்வ லோக ராஜாவான பகவானின் குடிமக்களே ஜனங்கள் அத்தனை பேரும். நாமும் அவனுடைய பிரஜை. எனவே இவர்களெல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள். நம் சகோதரர்கள். ராஜாவாக இருக்கிறதோடு அவனே நம் அம்மையும் அப்பனும். நாம் அத்தனை பேரும் அவனுடைய குழந்தைகள். ஆதலினால் ஒருத்தருக்கொருத்தர் சகோதரர்கள். இத்தனை குழந்தைகளும் இருக்கிற ஜனசமூகக் குடும்பம் ஒற்றுமையாக, சௌஜன்யமாக வாழவேண்டுமென்றே நமக்கு வேததர்மம் வெவ்வேறு காரியங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றை நம்முடைய சொந்த ஆசைகள், லாபங்களை நினைக்காமல் செய்து ‘பகவானின் குடும்பம் ஒழுங்காக நடக்கச் செய்வதே நம் கடமை’ என்ற உணர்ச்சி உண்டானால்தான் நாம் செய்கிற கர்மம் துளிக்கூடக் குறைவு, ஒழுங்கீனம் இல்லாமல் சரியாக இருக்கும். இந்த உணர்ச்சி வருகிறபோது அதிலேயே ஈஸ்வர பக்தியும் உட்புகுந்து நிற்கும். இப்படி பக்தி உணர்வோடு கர்மம் செய்தாலே பகவத் கிருபையைப் பூரணமாகக் கிரகிக்க முடியும். கர்மத்தையே பகவானின் பூஜையாகச் செய்கிற நிலை வருவதற்கு ஆரம்பமாகத் தனியாகப் பூஜை, பஜனை எல்லாம் செய்து பகவானை ஸ்மரிக்க வேண்டியதும் அவசியம்.