உருவமும் அருவமும்
புஷ்பத்தின் வாசனை கண்ணுக்குப் புலப்படாது. மூக்குக்குத்தான் அது தெரியும். கற்கண்டின் தித்திப்பு மூக்குக்குத் தெரியாது; அது நாவுக்குத்தான் புலனாகும். சங்கீதம் நாவுக்குப் புலப்படாது; செவிக்குத்தான் புலப்படும்; சூடும், குளிரும் தொடு உணர்ச்சி கொண்ட தோலுக்குத்தான் புலனாகும்; இவற்றைக் காதால் உணர முடியாது. மேலே சொன்ன நாலும் கண்ணுக்குத் தெரியாது. மாறாகப் பச்சை சிகப்பு முதலிய வர்ணங்கள் காது, மூக்கு, வாய், தோல் இவற்றுக்குப் புலப்படாது; கண்ணுக்கே புலனாகும். நாஸ்திகர் உட்பட அனைவரும் நிச்சயமாக உண்டு என்று கூறுகிற உலக வஸ்துக்கள், இவ்விதம் ஒவ்வோர் இந்திரியத்துக்குப் புலனானாலும் போதும், எல்லா இந்திரியங்களுக்கும் புலனாக வேண்டியதில்லை என்று தெரிகிறது. நாலு இந்திரியங்களுக்குப் புலனாகாமல் ஒரே ஒர் இந்திரியத்துக்குப் புலனானாலும் ஒரு வஸ்து இருப்பதாகவே சொல்கிறோம். உதாரணமாக சங்கீதம் காது ஒன்றுக்கே புலனாகிறது; அதை ருசிக்கவோ, பார்க்கவோ, முகரவோ, தொடவோ முடியாது. இருந்தாலும் சங்கீதம் என்று ஒன்று கிடையாது என்று சொல்வதில்லை அல்லவா?
ஐந்து இந்திரியங்களுக்கும் புலனாகாமலும் உண்மையில் ஒரு வஸ்து இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்ப்போம். பிரபஞ்சம் முழுவதிலும் மின்சார அலைகளே வியாபித்திருக்க விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆனால் நமக்கு எந்த இந்திரியத்தாலும் அதை அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், சில பரிசோதனைகளின் மூலம் மின்சாரத்தின் வியாபகத்தையும், அது சரீரம் மூளை எல்லாவற்றிலும்கூட வியாபித்திருப்பதையும் நிரூபித்துக் காட்டினால் நம்புகிறோம். இத்தனை இந்திரியங்களையும் அவை கிரகிக்கிற வஸ்துக்களையும் படைத்து ஒழுங்கு செய்து வைத்த ஒரு பெரிய அறிவு இருக்கவே செய்கிறது. அதைத்தான் கடவுள் என்கிறோம். மின்சாரத்தைப்போல அதுவும் எங்கும் வியாபித்திருக்கிறது. நமக்குள்ளும் வியாபித்திருக்கிறது. இந்திரியங்கள் அதிலிருந்து தோன்றி அது இயக்கி வைக்கிற முறையில் கட்டுப்பட்டே வேலை செய்கின்றன. கண்ணால் பார்க்கத்தான் முடிகிறது. கேட்க முடிவதில்லை. காதால் கேட்கத்தான் முடிகிறது; பார்க்க முடிவதில்லை. இவை இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது அந்தப் பராசக்தி வகுத்து வைத்த கட்டுப்பாடுதான். இப்படியாக எந்தப் பெரிய சக்திக்கு இந்த இந்திரியங்கள் கட்டுப்பட்டிருக்கின்றனவோ, அந்த மகா சக்தி இந்த இந்திரியங்களுக்குக் கட்டுப்படுமா? இதனால்தான் கடவுளை எந்த இந்திரியத்தாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைக் கொண்டு கடவுளே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.
கடவுள் மகா சக்தி படைத்தவர் மட்டுமல்ல; பரம காருண்யமும் பொருந்தியவர். எனவேதான் அவர் அனைத்துக்கும் அப்பாற்பட்ட அருவமாயினும், பக்தர்கள் தங்கள் இந்திரியங்களால் கிரகித்து, கண்ணாரக் கண்டு, வாயாரப் பேசி, கையார ஸ்பரிசித்து மகிழும் வண்ணம் பல உருவங்களும் தரிக்கிறார். கடவுள் இல்லை என்று வாதம் செய்கிறவர்களிடம் தம்மை நிரூபித்துக் கொள்வதற்காக அவர் உருவம் எடுத்து கொண்டு வரமாட்டார். ‘கடவுள் உண்டு, அவரை அநுபவிக்க வேண்டும்’ என்று தாபத்துடன் வேண்டுகிறவர்களிடம் கருணை கொண்டு அவர்களுக்கே உருவத்துடன் காட்சி தருவார். அருவமாயினும் உருவம் கொள்வார். மின்சாரம் ஒயரில் வருகிறபோது அருவமாயிருந்தாலும், காற்றடக்கமான ஒரு கண்ணாடிச் சிமிழும் (bulb) அதனுள் சிறு கம்பியும் (filament) சேர்த்து ஸ்விட்சைப் போட்டால் அருவ மின்சாரமே ஜோதி ரூபமாகிறதல்லவா? பக்தர்கள் தங்கள் இதயச் சிமிழில் பக்தி என்ற கம்பியைப் பூட்டிக்கொண்டு சிரத்தை என்கிற ஸ்விட்சைத் தட்டிவிட்டுக் கொண்டால், அருவமான கடவுள் திவ்ய மங்கள ஜோதியாகத் தரிசனம் தருவார். சூரிய வெப்பத்தில் கடல் நீர் ஆவியாகப் போகும்போது அருவமாகி விடுகிறது. அதுவே மேகமாகக் குளிர்ந்தால் நம் கண்ணுக்குத் தெரிகிற மழையாகிறது. இன்னமும் குளிர்ந்தால் கெட்டியான பனிக்கட்டியே ஆகிறது. நம் இதயம் எத்தனைக்கெத்தனை குளிர்ந்து ஈஸ்வரனை ஸ்மரிக்கிறதோ, அத்தனைக்கத்தனை ஸ்தூலமாக அருவ தத்துவம் உருவம் கொள்கிறது.
அல்லும் பகலும் இறைவனையே நாடி, வேறு ஆசைகளை அறவே மறந்து பக்தி செய்தால் அருவப் பரம் பொருளை நன்றாக உணரலாம். இப்படி ஒருவன் ஞானம் பெறுவதனால், பக்தி செய்வதனால் ஏனைய உலக மக்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். ஈசுவர தரிசனம் பெற்ற ஒருவனை, பரமாத்மாவை அநுபவித்த ஒருவனைப் பார்த்த மாத்திரத்தில் மக்களின் தாபமெல்லாம் சமனமாகி அவர்களுக்கும் ஓர் ஆறுதலும் சாந்தியும் உண்டாகின்றனவே! அந்த சாந்திக்கு ஈடாக எந்த உலகப் பொருளைச் சொல்ல முடியும்? இதுவே ஞானியால், பக்தனால் உலகுக்கு ஏற்படுகிற மிகப் பெரிய நன்மை.
ஈஸ்வரன்
ஞானிக்கு ஆத்ம ஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மாதான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டுகொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்ம ஸ்வரூபத்தை மட்டுமே அநுபவிக்கிறவன் அவன். வெளிப் பார்வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குத் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாம் ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும்? அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.
பிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், இந்த மாய உலகத்தில் அகப்பட்டுக்கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈசுவரன் என்று ஒருவனைப் பூஜை செய்து தங்கள் காரியங்களை நடத்தித் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக நல்ல மனஸோடு பிரார்த்தித்தால் ஈஸ்வரனும் அவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈசுவரன் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெரிகிறது. நாம் பிரார்த்தித்தாலும் பிரார்த்திக்காவிட்டாலும் சகல பிரபஞ்சங்களையும் இத்தனை ஒழுங்கான கதியில் நடத்திக் கொண்டு, சகல ஜீவராசிகளுக்கும் சோறு போடுகிற பெரிய காரியத்தைச் செய்கிறார்.
காரியம் இல்லாத பிரம்மம் வேறு. காரியம் செய்கிற ஈசுவரன் வேறு என்பதா? இல்லை. ஞானியின் பிரம்மமே தான் லோக காரியங்களை நிர்வகிக்கிற ஈஸ்வரனாகவும் இருக்கிறது.
சிவனின் தக்ஷிணாமூர்த்திக் கோலம் பிரம்ம நிலையைக் காட்டுகிறது. அங்கே காரியமே இல்லை. ஒரே மௌனம் தான். அதே பரமசிவன் எத்தனை காரியங்களை செய்திருக்கிறார்? சிதம்பரத்தில் ஒரேயடியாகக் கூத்தடிக்கிறார். தாருகாவனத்தில் பிக்ஷாடனனாக அலைந்து மோகிக்கச் செய்திருக்கிறார். தக்ஷயக்ஞத்தில் சூரியனைப் பளீரென்று அடித்துப் பல்லை உதிர்த்திருக்கிறார்.
ஸ்வாமி எப்போதும் உள்ளே அடங்கி பிரம்மமாக இருக்கிறார். வெளியிலே சகல காரியமும் செய்யும் ஈஸ்வரனாக இருக்கிறார்.
சாதாரண ஜனங்கள் ஏரியில், சம்ஸார அலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானிகள் மறுபக்கம் வயலிலே நிற்கிறார்கள். நடுவில் ஏரிக்கரை. அது குறுக்கிடுவதால் ஞானிக்கு ஏரி தெரியாது. ஸ்வாமியோ இரண்டுக்கும் மத்தியில் இருக்கிற கரைமேல் இருக்கிறார். ஏரித் தடத்தில் நிற்கிற “தடஸ்தன்” அவர். அவருக்கு லோகமும் தெரியும்; லோக திருஷ்டி நசித்துப்போன ஞானியின் நிலையும் தெரியும். ‘ஏரியில் முழுகுகிறவனைத் தூக்கிப்போடு’ என்று வயலில் இருக்கிறவனைக் கூப்பிட்டு அவர் சொல்ல முடியும்.
எல்லாம் தாமே என்பதை ஸ்வாமி அறிந்திருக்கிறார்; ஆனாலும் அவரை வேறாக நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறுபோலப் பார்த்து வேடிக்கையும் செய்வார். இதைப் பற்றி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரின் “சிவலீலார்ணவ”த்தில் ஒர் அழகான சுலோகம் உண்டு. அதன் தாத்பரியத்தைச் சொல்கிறேன்.
பரமேஷ்வரனின் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்த கதை எல்லோருக்கும் தெரியும். அவர் உடைப்பு அடைத்து ஒழுங்காக வேலை செய்யாததைக் கண்டு பாண்டிய ராஜா அவரைப் பிரம்பால் அடித்தான். உடனே அந்த பிரம்படி பாண்டியன் உள்பட சகல ஜீவராசிகள் மீதும் விழுந்தது. இங்கே தாமே எல்லாமும் என்பதை அவர் காட்டிவிட்டார். இதைப் பார்த்துக் கவி கேட்கிறார்; “அது சரி உண்னைத்தவிர வேறில்லை என்ற சிவாத்வைதம் பிரம்படி படுவதற்கு மட்டும்தானா? நீ மதுரமான பிட்டை வாங்கி வாங்கித்தின்றாயே, அப்போது மட்டும் ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் அதை உண்ட ஆனந்தம் இல்லை? அடிபடும்போது ஒன்று; ஆனந்தத்தின்போது வேறு வேறா?”
ஸ்வாமி உள்ளே அடங்கிய பிரம்மமாகவும், வெளியே காரியம் செய்கிற ஈசுவரனாகவும் இருப்பதை இந்த ரஸமான கேள்வி மூலம் தெரிந்து கொள்கிறோம். அவர் செய்கிற காரியங்களை ஐந்தாகச் சொல்வார்கள். “பஞ்ச கிருத்யம்” என்பார்கள். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்ற மூன்று உங்களுக்கே தெரியும். இந்த மூன்றும் மாயாலோக விஷயம்தான். இப்படி மாயையால் மறைக்கிற காரியம் “திரோதானம்” எனப்படும். இந்த மாயையிலிருந்து விடுவிப்பதே அவன் செய்கிற மகா பெரிய காரியம். ‘அநுக்கிரகம்’ என்று அதற்கே பேர். அத்வைத ஸித்தி நமக்கு ஏற்படவேண்டும் என்றால், அதற்கு இந்த அநுக்கிரகமின்றி வேறு வழியில்லை. இந்த அநுக்கிரத்தை வேண்டி வேண்டிச் செய்கிற உபாஸனைக்கே, நம்மை அநுக்கிரகிக்கக்கூடிய கருணை படைத்தவர் அவர் என்று நம்பி அவரிடம் நெஞ்சுருகி அன்பு செலுத்துவதற்கே பக்தி என்று பெயர்.
மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்
இதோ எனக்கு முன்னால் வாழைப்பழச் சீப்பு வைத்திருக்கிறது. “இதைப் பார், இது மஞ்சளாக இருக்கிறது” என்று நான் சொன்னால் இது மஞ்சளாகத்தான் இருக்கிறது என்று காண்கிறீர்கள். அதற்குமேல் மனஸில் அதைப்பற்றி எந்தப் பிரதி சிந்தனையும் ( reaction ) எழுவதில்லை. மாறாக, இதே வாழைப்பழத்தைக் காட்டி, “இதோ பார், இது சிவப்பாக் இருக்கிறது” என்று நான் சொல்லியிருந்தால், உடனே நீங்கள் மனஸில் ஒர் ஆட்சேப உணர்ச்சி எழுந்திருக்கும். இது மஞ்சள் என்றோ, சிவப்பு என்றோ நான் சொல்லாமல், “இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னால் அப்போது உங்கள் மனஸில் ஒருவிதமான பிரதி உணர்ச்சி உண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் உங்கள் மனஸில் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனஸை ஒருமுகப்படுத்தினால் அப்படி பாவிக்கவும் முடிகிறது.
உபாஸனை என்பதை இப்படிப்பட்டதுதான். பரம்பொருள் இப்படி இப்படி இருப்பதாக பாவியுங்கள் என்று பலவிதமான குணங்களைக் கொண்ட பல மூர்த்திகளைக் காட்டிக் கொடுக்கிறது உபாஸனா மார்க்கம். வாழைப்பழம் உண்மையில் மஞ்சள் நிறம் என்பதுபோல் பரமாத்மாவின் உண்மையான குணம் என்ன? அது குணம் கடந்தது என்பதே. பரமாத்மா எல்லா குணமும் கடந்த வஸ்து என்று சொல்லி விட்டால், அப்புறம் ஜனங்களின் மனசு அதில் மேற்கொண்டு நிற்பதற்கு இடமே இல்லை. இது நமக்குப் புரிபடாத வஸ்து என்று விட்டு விடுவார்கள். வாழைப்பழத்தைச் சிவப்பு என்று சொன்னதை மனசு ஆட்சேபித்ததுபோல் ஒரு சிலையைக் காட்டி இதுதான் பரமாத்மா என்றாலும், அதை எவராலும் ஏற்க முடியாது. ‘இது ஒரு கல் பொம்மை அல்லவா? இது எப்படி உலகத்தை நடத்துகிற பரமாத்ம சக்தி ஆகும்?’ என்று தோன்றும். ஆனால், ஒரு சிலையைக் காட்டி, “இதைப் பரமாத்மா என்று பாவியுங்கள்” என்றால் அப்படி பாவிக்க முடிவதாகத் தோன்றும்– வாழைப்பழத்தைச் சிவப்பாகக் கற்பனை செய்வதுபோல். ஆனால் சிவப்பு என்றால் என்னவென்று மனசுக்குத் தெரிவதுபோல் பரமாத்ம லக்ஷணம் தெரியாதே! அதனால் விக்கிரகத்தை ‘ஏதோ பெரிய வஸ்து என்று சிறிது எண்ணிப் பார்க்கலாமே தவிர, அதிலேயே ஆழ ஊன்றி நிற்க முடியாது. தெரிந்த விஷயங்களில்தான் மனசு பிடிமானத்தோடு நிற்கும். எனவே ஒரே காருண்யமும் சௌந்தரியமும் வழிகிற மாதிரி ஸ்திரீ ரூபத்தில் விக்கிரகம் செய்து, “இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு” என்றால், மனசு அதை நன்றாகக் கிரகித்துக்கொண்டு அப்படியே ஆழ்ந்து ஈடுபட முடிகிறது.
குணமற்ற பரமாத்ம வஸ்துவிலிருந்துதான் அனந்த கல்யாண குணங்களும் வந்திருக்கின்றன. ரூபமற்ற பரமாத்மாவிடமிருந்துதான் சகல உருவங்களும் தோன்றியிருக்கின்றன. அந்தந்த குணத்துக்கு அநுகூலமான ரூபம், முத்திரை, ஆயுதம் முதலியவற்றோடு திவ்விய மூர்த்திகளைக் காட்டினால் அவற்றில் மனசு ஈடுபடுகிறது. புரியாத பரமாத்ம தத்துவத்தை நமக்குப் புரிகிற விதத்தில் உபாஸிக்க முடிகிறது.
சகலமும் ஆன பரமாத்மா, நாம் அவரை எந்த ரூபத்தில் உபாஸித்தாலும் அந்த ரூபத்தின் மூலம் அருள் புரிகிறார். படிப்படியாக நம் மனநிலையை உயர்த்துகிறார். கடைசியில் மனஸே இல்லாத, மனஸைக் கடந்த நிலை உண்டாகிறது. மனசு கடந்த அந்த நிலையிலேயே குணமும் ரூபமும் கடந்த பரமாத்மாவை உள்ளபடி அநுபவிக்க முடிகிறது. ஆரம்பத்தில் நமக்குப் பலவித மனோ விகாரங்கள் இருக்கும்போது, “பரமாத்மா எல்லாம் கடந்தவர்” என்றால் அதில் பிடிப்புக் கொள்ள முடியவில்லை. ரூபத்தில், குணத்தில் அவரை உபாஸித்தால், அது முற்றிய நிலையில், எல்லாவற்றுக்கும் அதீதமான பரமாத்மாவை உள்ளபடியே அநுபவிக்க முடிகிறது. மஞ்சள் பழத்தை மஞ்சளாகவே பார்க்கிறபோது மனஸுக்கு வேலை இல்லாமல் போகிறது. “உபாஸனையின்போது, பரமாத்மாவாகவே இப்படி இப்படி பாவனை செய்தால் அதற்கு இன்னின்ன மந்திரம் ஜபிக்க வேண்டும். இன்னின்ன ஆசாரம் வேண்டும். இன்னின்ன பூஜா பத்ததி வேண்டும்” என்று விதிகள் இருக்கின்றன. பாவனை போய், அவரை உள்ளவாறு அறிகிறபோது எந்த விதியும் இல்லை, செயலும் இல்லை. சரீரம் மனசு இவற்றின் காரியமாகிற உபாஸனை இப்போதுதான் அநுபவமாகிற ஞானம் என்பதாகப் பழுத்து விடுகிறது.
இந்த ஞானம் நமக்கு ஆரம்பத்திலேயே வந்து விட்டதாக பாவனை செய்துவிடக்கூடாது. உபாஸனையே பெரும்பாலான ஜனங்களுக்கு ஞானம் பெற உபாயமாகும், திவ்விய மூர்த்திகள் நாமாகச் செய்கிற கல்பிதமான பாவனை மட்டுமல்ல. பரமாத்மாவே மகான்களுக்கும் ரிஷிகளுக்கும் இந்த ரூபங்கள், மந்திரங்கள், விதிகள் எல்லாவற்றையும் அநுக்கிரகித்திருக்கிறார். பரமாத்மா வாஸ்தவமாகவே இப்படிப்பட்ட மூர்த்திகளாகி, அவற்றை அடைகிற மந்திர, யந்திர, தந்திரங்களாகவும் ஆகியிருக்கிறார். எனவே, உபாஸனை முறையை நம்பிக்கையுடன் சிரத்தையுடன் பின்பற்றினால் நிச்சயம் ஞானத்துக்கு வழி உண்டாகும்.
ஞானம் வருவதும் வராததும் இருக்கட்டும். இப்போது உபாஸிக்கிறபோது அன்போடு அதைச் செய்யவேண்டும். இந்த அன்பே, பக்தியே நமக்கு பெரிய நிறைவைத் தரும். அதனால் பகவானின் எல்லையில்லாத அன்பையும் அனுபவிப்போம். அதுவே பெரிய ஆனந்தம். இதற்கப்புறம் அவர் இஷ்டப்பட்டு அத்வைத ஞானம் தரட்டும்; தராமல்தான் இருக்கட்டும். அதைப்பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். நாம் செய்யக்கூடியது பக்திதான். இதற்குப் பிரதியாகப் பெறக்கூடிய பகவதநுக்கிரக ஆனந்தமே நமக்குப் போதும்.