38 . பக்தி – பகுதி நான்கு

ஆலய வழிபாடு

உதவி பெற்றதற்கு நன்றி சொல்வதற்கு ஒரு சிறந்த கடமை. ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். அவனுக்குக் காட்டிவிட்டுப் பிறகு நாம்தான் உண்ணப்போகிறோம். நாம் பலவிதமான ஆடை ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் ஆண்டவனுக்குத் திரு ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எல்லோருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன.

ஆதியில் மகரிஷிகள் மந்திர சக்தியால், எங்கும் நிறைந்த பரம்பொருளைச் சில விக்கிரங்களில் விசேஷ சாந்நித்தியம் கொள்ளச் செய்தனர். அப்படிப்பட்ட மூர்த்திகளைச் சுற்றிக் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன.

வீட்டில் பூஜை செய்கிறவர் உள்பட அனைவரும் கோயிலுக்குப் போவது என்று கட்டுப்பாடாகப் பழக்கம் வைத்துக் கொண்டால்தான் அங்கு பூஜைகள் குறைவற நடக்கும். நான் கோயிலுக்குப் போகிறேன் என்றால், எனக்காகவாவது கோயிலைச் சுத்தமாக வைக்கிறார்கள்; விளக்குகள் போடுகிறார்கள்; நைவேத்தியம் சுத்தமாகச் செய்கிறார்கள்; வஸ்திரம் அழுக்கில்லாமல் கட்டுகிறார்கள்.

சின்னஞ்சிறிய சூக்ஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்து விட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கவனிக்கத் தவறுகிறோம். இப்போது ஒரு ஊரில் யார் ரொம்ப அழுக்குத் துணி கட்டிக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால் ஸ்வாமிதான் என்று தெரிகிறது. நம் ஊர் கோயிலில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம் மனஸின் அழுக்கும் போய்விடும். ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’, ‘அரனை மறவேல்’, ‘திருமாலுக்கு அடிமை செய்என்றெல்லாம் புண்ணிய மொழிகள் வழங்கும் இந்த நாட்டில், ஒவ்வோர் ஊரிலும் உள்ள ஈசுவரன் கோயிலையும் பெருமாள் கோயிலையும் நல்ல நிலையில் வைத்திருந்து வழிபாடு நடக்கச் செய்ய வேண்டும். இது நம் முதல் கடமை.

தற்போது ஆலய வழிபாட்டுக் கிரமங்களில் என்ன வேண்டுமானாலும் மாறுதல் செய்யலாம் என்று எண்ணப் படுகிறது. எங்கேயும் உள்ள மின்சாரத்தை வெளிப்படுத்த ஆங்காங்கே மின்சக்தி ஸ்தாபனம் ( Power House) இருப்பது போல், எங்கும் உள்ள ஈசுவர சக்தியை வெளிப்படுத்த ஆங்காங்கே மந்திர பூர்வமாக ஆகமபூர்வமாக ஆலயங்கள் எழுப்பப்பட்டு, அவற்றின் பூஜாக்கிரமங்கள் உருவாகி உள்ளன. மின்சக்தி இயந்திரத்தில் நாம் தாறுமாறாகக் குறுக்கிட்டால் தேகம் போய்விடும். அதுபோலவே ஆத்ம க்ஷேமத்துக்கான ஆலய யந்திரத்தில் குறுக்கிட்டால் ஆத்மா போய்விடும்.

குருக்கள் அநுஷ்டானம் இல்லாதவராக இருக்கிறாரேஅதனால் சாந்நித்தியம் போகவில்லை என்றால், நாமும் எதைச் செய்தால் என்ன என்கிறார்கள்! அதாவது, பாக்கி இருக்கிற ஸ்வாமியையும் வெளியே அனுப்பிவிடலாம் என்கிறார்கள். ஒரளவு அநாசாரத்துக்குத் தாக்கு பிடிக்கிற சக்தி கோயில்களில் இருக்கிறது. அதற்காக முழுக்க அநாசரமாக்குவோம் என்று கிளம்பினால் நமக்குத்தான் பயன் நஷ்டமாகும். ஸ்வாமிக்கு ஒரு நஷ்டமும் இல்லை. கோயிலில் இப்போதுள்ள ஆசாரக் குறையை நிவிருத்தி செய்ய வேண்டுமேயன்றி, ஆகமத்தில் இல்லாத புது விஷயங்களைப் புகுத்தக்கூடாது. நாம் கட்டுப்பாடாக இந்த ஆசாரங்களைப் பின்பற்றி அத்தனை பேரும் கோவிலுக்குப் போவது என்று ஏற்பட்டால் குருக்களும்தானே சரியாகி விடுவார்.

ராஜீய விவகாரங்களின் பொருட்டு மத விஷயங்களை மாற்றக்கூடாது. புதிது ஸ்திரமாக இராது. ஆடி மாதம் வெள்ளம் வரும்போது கரையைச் சில இடங்களில் இடிக்கும்; அதுபற்றிக் கவலை வேண்டாம். புது ஆவேசத்தைப பற்றிக் கோபம் கொள்ள வேண்டாம். ஜனங்களிடம் நாம் நியாயத்தை விளக்கினால் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். புது ஆவேசம் தானாகப் போய்விடும். சீர்திருத்தக்காரர்கள் நம் சாஸ்திரங்களைப் படிக்கவில்லை. அதனால் கோபம் அடைகிறார்கள். அதற்காக நாமும் கோபம் கொள்ளலாகாது. எதிர்க்கட்சியிடத்திலும் நமக்குப் பிரியம் வேண்டும். ஆகமத்தின் கருத்தை நாம் அவர்களுக்குப் பிரியமாக எடுத்துச் சொல்லி விளக்க வேண்டும்.

இந்தக் கோவில்களைக் கட்டிய மன்னர்களின் காலத்திலிருந்து இன்றுவரை அவற்றில் பின்பற்றப்படும் நியதிகளை அப்படியே காக்கவேண்டும். நாம் சரியாக இருந்து, உண்மையான பக்தியுடன் வழிபாடு செய்து, உண்மையான அன்புடன் எடுத்துச் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். இன்று கோயில்கள் விஷயம் இப்படியானதற்கு நாமே காரணம் என்று உணர்ந்து, முதலில் நம்மைத் திருத்திக் கொள்வோமாக!

ஆலயங்கலின் தூய்மை

பேட்டைக்குப் பேட்டை, காலனிக்குக் காலனி புதுக் கோயில்கள் கட்டுகிறார்கள். எங்கே பார்த்தாலும் பழைய கோயில்களையும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்கிறார்கள். புதுக்கோயில், பழைய கோயில் கும்பாபிஷேகங்களுக்காக என்னிடம் பலர் வந்து யோசனையும், பிரஸாதமும் கேட்டபடி இருக்கிறார்கள். இது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

அதே சமயத்தில் என் மனசுக்கு நிரம்ப வருத்தம் தருகிற விஷயங்களையும் பல பக்தர்கள் வந்து தெரிவித்துக் கொள்கிறார்கள். வேறு யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியாமல் ஸ்வாமிகளிடம் சொல்லலாம் என்று என்னிடம் வந்து முறையிடுகிறார்கள். இவற்றுக்கு நான் பரிகாரம் தேட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். மற்றவர்கள் வெளியே சொல்லத் தயங்குகிற இந்த விஷயங்களை நானும் கூடச் சொல்லாமல் இருக்கக்கூடாது. எனக்கு எல்லோரும் சொந்தம்; ஸ்வாதீனப்பட்ட மநுஷ்யர்கள் என்றால், நான் அவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் எனக்கு நல்லது கெட்டது என்று தோன்றுவதைச் சொல்லத்தான் வேண்டும். எனவே மனசு விட்டு இப்போது சொல்கிறேன்.

கோயில்களின் சூழ்நிலை அமைதியாக, தூய்மையாக இருக்க வேண்டும். பகவத் ஸ்மரணை தவிர மற்ற நினைவுகள் மறந்துவிடும்படியாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது என்ன பார்க்கிறோம்? பெரும்பாலான க்ஷேத்திரங்களில் கோயிலைச் சுற்றி ஏகப்பட்ட கடைகள் வந்துவிட்டன. டீக்கடை, சிகரெட் கடை எதுவுமே பாக்கியில்லை. கோயில் அதிகாரிகளே கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதால் இந்த இடங்களை வாடகைக்குக் கொடுக்கிறார்கள். —- அதாவது அநேகமாக ஸ்வாமியைத் தவிர கோவிலையே வாடகைக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்லலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் தெய்வ சாந்நித்தியத்தை நாம் கிரகித்துக்கொள்ள சக்தி குறைகிறது. நம் பக்தி சுற்றுச்சூழலால் குறைகிறது.

ஆபீஸ் கட்டிடங்கள், காட்டேஜ்கள் எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்துவிட்டன. அங்கெல்லாம் தெய்வ சம்பந்தமற்ற காரியங்கள் நிறைய நடக்கின்றன. இது சாந்நியத்தை பாதிக்கிறது. ஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில்தான் விச்ராந்தியான சூழல் இருக்கிறது. அபிவிருத்தி என்ற பெயரில் இவற்றில் அதிகாரிகள் அநாசாரத்தைப் புகுத்திவிடப் போகிறார்களோ என்று பயமாக இருக்கிறது.

இப்போது கோயில்களுக்குத் தனித்தனி நிர்வாகம் இல்லாமல் ஒரே சர்க்கார் நிர்வாகத்தில் இருப்பதால் அவர்களுக்குப் பொது ஜனங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். துரதிஷ்டவசமாக, ஆலய ஆபீஸர்கள் ஏதாவதொரு நல்ல காரியத்தை ஆரம்பித்து முடிக்கு முன்பே வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடுகிறார்கள். ‘செய்கிற காரியத்தைப் பூர்த்தி செய்து பலனைப் பார்க்கலாம்என்கிற உற்சாகம் இருந்தால்தான் அதிகாரிகளிடமிருந்து சிறப்பான பணியை எதிர்பார்க்க முடியும்.

ஆலயங்களில் உட்புறமும், சூழ்நிலையும் சுத்தமாக இல்லாத வரையில், ஆஸ்திக காரியம் எத்தனைதான் நடந்தாலும் எத்தனை கும்பாபிஷேகங்கள் நடந்தாலும் நாம் திருப்திபடுவதற்கில்லை. கும்பாபிஷேகத்துக்கு அப்புறம் சாந்நித்தியம் நிலைத்திருக்க வழி பண்ணாவிட்டால் என்ன பிரயோஜனம்? பிரஜைகள் இவ்விஷயத்தில் தீவிரமான கவனம் செலுத்தினால், அதிகாரிகளுக்கும் சர்க்காருக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து ஆவன செய்வார்கள். பொது மக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்துக்கு (public opinion) அந்த சக்தி உண்டு.

ஆலயங்களுக்கு உள்ளேயே நடக்கிற அநாசாரங்களை என்னைத் தவிர யாரும் எடுத்துச் சொல்லமாட்டார்கள் போலிருக்கிறது. அதையும் நானே சொல்கிறேன். இப்போதெல்லாம் டூரிஸ்டுகள், 45, 50 நாள் யாத்திரை கோஷ்டிகள், காலேஜ் பெண்கள், ட்ரெயினிங் ஸ்கூல் பெண்கள் என்று பலர் கூட்டம் கூட்டமாகக் கோயில்களுக்கு பஸ்கள் அமர்த்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் எத்தனையோ பேர் விலகியிருக்க வேண்டிய காலத்திலும் தரிசனத்திற்கு வந்து விடுகிறார்கள். இப்படி செய்வது தோஷம் என்று தெரியாததாலேயே பெரும்பாலும் கோயிலுக்கு வந்து விடுகிறார்கள். முன்பெல்லாம வீட்டு விலக்கு என்று எவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும்கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்து விடுகிறார்கள். ‘ஸ்வாமிக்கு ஏது தீட்டு?’ சீர்திருத்தக்காரர்கள் நான் சொல்வதை ஆக்ஷேபிக்கலாம். தீட்டு இல்லாத சுவாமி எங்கேயும் இருக்கிறார். அவரைக் கோயிலில்தான் வந்து தரிசிக்கவேண்டுமென்பதில்லையே? சாஸ்திரப் பிரகாரம் ஸ்வாமியின் சாந்நித்தியத்தைக் கிரகித்துத் தரும் கோயில்களில், அந்த சாஸ்திரங்கள் சொன்ன விதிப்படிதான் ஸ்வாமியைத் தரிசிக்க வேண்டும். இந்த விதிகளை மீறுவதால்தான் பல மகாக்ஷேத்திரங்களில், விபத்து, விபரீதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்.

அந்த மகா க்ஷேத்திரத்தில் ஏன் இப்படிப்பட்ட விபத்து உண்டாச்சு? ஸ்வாமி சாந்நித்தியமே போய்விட்டதா?’ என்று கேட்கிறார்கள். நான் மனசு நொந்து சொல்கிறேன்: ஸ்வாமி சாந்நித்தியம் இருப்பதாலேயேதான் நாம் செய்கிற அநாச்சாரத்தைப் பொறுக்க முடியாமல், தம் கருணையையும் மீறி, இப்படி அவ்வப்போது ஒரு விபரீதத்தை நமக்குத் தண்டனையாகத் தருகிறார். விபத்து என்ற பேரில் சில புண்யசாலிகளைத் தம்மிடம் சேர்த்துக்கொண்டு, உயிரோடிருக்கிற நம்மைத்தான் தண்டிக்கிறார். நாம் திருந்த வேண்டும், நல்ல ஆசார ஸம்பன்னர்களாக இருக்கவேண்டும் என்று கருணையினாலேதான் தண்டனை கொடுக்கிறார்.

காட்டேஜ், எக்ஸ்கர்ஷன் எல்லாமே அநேக க்ஷேத்திரங்களில் பக்தியைவிட, உல்லாசகக் கேளிக்கைகளைத்தான் அதிகப் படுத்தியிருக்கின்றன. மொத்தத்தில், நம் வீட்டில் நம்மால் சகிக்க முடியாத அபச்சாரங்களை சாக்ஷாத் வேங்கடரமண ஸ்வாமி சந்நிதியிலும், மற்றும் பல தெய்வ சந்நிதிகளிலும் இழைக்கிறோம்.

இது எனக்கு நன்றாகத் தெரிந்தும், சொல்லாமல் வெறுமனே இருந்தேனானால், அதுவே எல்லாவற்றிலும் பெரிய அபசாரம் என்பதால் என் மனஸிலிருந்ததைச் சொன்னேன். உங்களிடம் சொல்வதாக மட்டும் நினைக்காமல், சாக்ஷாத் வேங்கடரமண ஸ்வாமியிடமே பிரார்த்தனையோடு சொல்கிறேன். அந்த அபசாரங்களைத் தடுத்து நிறுத்துவதில் ஆஸ்திக மகா ஜனங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க அவர்தான் அருள் செய்ய வேண்டும்!