அழுக்கு நீங்க வழி
ஞானத்துடன்—அறிவுடன் பார்த்தால்—எல்லாவற்றையும் ஆனந்தமாகவே பார்ப்போம். ஆனந்தம் முடிவில்லாதது. உண்மையாக அறிந்தால் எல்லாம் ஆனந்தம் என்று காண்போம். ஆனந்தம் எல்லையில்லாதது. அது இல்லாத இடமில்லை. ஞானமும் எல்லையில்லாதது. அதுவும் இல்லாத இடமில்லை. எல்லையில்லாத, எங்கும் நிறைந்த பொருள் இரண்டு இருக்கமுடியாது. ஆகையால் ஆனந்தமும் ஞானமும் ஒன்றே. உபநிஷத்தில் ஆனந்தம் தான் பிரம்மம் என்று சொல்லியிருக்கிறது. ஆனந்தம், ஞானம், பிரம்மம், ஆத்மா எல்லாம் ஒன்றே. அது இல்லாத இடமில்லை என்பதால், அதுவே இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் உடைய ஜீவனும்.
நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறோம். ஒன்றை ரோஜா என்கிறோம். இன்னொன்றை ஊமத்தை என்று சொல்கிறோம். ஞானம் என்கிற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்தமாகத்தான் தெரியும். ஊமத்தம் பூவும் அப்படியே தெரியும். நமக்கு ஞானம் இல்லாதபடியால் ஒன்றை ரோஜாவாகவும், மற்றொன்றை இன்னொரு பொருளாகவும் பார்க்கிறோம். உண்மையில் எல்லாம் ஆனந்தம்தான். உண்மை நமக்குப் புலப்படாததற்குக் காரணம், நமக்குச் சித்தத்தில் அழுக்கு இருப்பதும், ஒருமைப்பாடு இல்லாததும்தான். கண்ணாடி ஆடிக் கொண்டிருந்தால், அதில் தெரியும் பிரதி பிம்பம் யதார்த்தமாக அல்லாமல் விரூபமாகத் தெரியும். ஆட்டத்துடன் அந்தக் கண்ணாடியில் அழுக்கும் இருந்தால் பிரதிபிம்பத்தில் யதார்த்த பாவமே கொஞ்சங்கூட இராது. நம்முடைய மனக்கண்ணாடி ஆடிக் கொண்டும், அழுக்குப் படிந்தும் இருப்பதால் பொருள்களை அது உள்ளபடி ஆனந்த வஸ்துவாகப் பிரதிபலிப்பதில்லை.
பைத்தியம் பிடித்த ஒருவனிடம் ‘இந்தத் தடியைக் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டே இரு’ என்றால், அவனால் முடியாது. நம்மால் அந்தத் தடியைத் கால்மணி நேரம் பிடித்துக் கொண்டிருக்க முடிகிறது. ஸ்தூல வஸ்துவை நம்மால் பிடிக்க முடிகிறது. ஆனால் ஒரு பொருளை மட்டும் குறிப்பிட்ட நேரம்வரை நினைத்துக் கொண்டு இரு என்றால் அப்படிச் செய்ய முடியவில்லை. சித்தம் மறுகணமே ஆயிரக்கணக்கான எண்ணங்களை சினிமாப் படங்கள் ஓடுவதுபோல் ஓட்டமாக ஓடியபடி நினைக்கிறது. ஆகையால், நாம் எப்படிப் பைத்தியங்களை நினைக்கிறோமோ, அதுபோல் மகான்களுக்கு நாமும் பைத்தியமாகத்தான் படுவோம். மனம் கட்டப்படுகிற வரையில் எல்லோரும் பல வகைப்பட்ட பைத்தியங்களே. அழுக்குடனுள்ள கண்ணாடி ஆடுவதுபோல் நம்முடைய சித்தம் தோஷத்துடனும் ஐகாக்ரதை இல்லாமலும் (ஒரு முகமாகாமலும்) இருப்பதுதான் இதற்குக் காரணம். தோஷம் போனால் ஐகாக்ரதை வரும்; ஐகாக்ரதை வந்தால் உண்மை விளங்கும்.
தோஷத்தைப் எப்படிப் போக்குவது? நமக்கு அழுக்கு என்பது தேகம். இந்தத் தேகம் எதனால் வந்தது? பாபத்தினால் வந்தது. அந்தப் பாபத்தை எதனால் செய்தோம்? கர சரணாதி அவயவங்கள், மனம் இவற்றினால் செய்தோம். சுற்றியுள்ள கயிற்றை அவிழ்க்க வேண்டியிருந்தால், சுற்றின பிரகாரமே மறுபடியும் திரும்பவும் அவிழ்க்க வேண்டும். அதே மாதிரி அஸத் காரியங்களை ஸத்காரியங்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் தொலைக்க வேண்டும். கர சரணாதி அவயவங்கள், மனம் இவற்றினால் செய்த பாவங்களை இந்த அவயவங்களினாலேயே தொலைக்க வேண்டும். தானம், தருமம், கர்ம அநுஷ்டானம், ஈசுவர நாமோச்சாரணம், ஆலய தரிசனம் முதலியவையே ஸத்காரியங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம். இவற்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு பிறகு ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு, எல்லையில்லாத ஞானமாக ஆனந்தமாக ஆக வேண்டும்.
கண்டமும் அகண்டமும்
ஒரே ஒரு சூரியன்தான் உள்ளது; கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவை எல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அநேக சூரியன்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்றுதான். அவ்வாறே, உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினு மினுக்கின்ற அறிவொளி அனைத்தும் ஒரே பிரம்மத்தின் பிரதிபலிப்புத்தான். இதைத்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யரவர்கள் ப்ரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும் அகண்டமான ஒரே சக்தி எதுவோ, அறிவு எதுவோ, அந்த எல்லை கடந்த சக்திதான், அறிவுதான் நம்மிடத்தில் ஓர் எல்லைக்குள் பிரிந்து கண்டம் கண்டமாகத் தோன்றுகிறது. அந்த ஒரே வஸ்துதான் வேதத்தின் அந்தத்தில் இருக்கும்படியான தத் (அது) என்பது. ‘தத்’ என்றால் தூரத்தில் எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிறது என்று அர்த்தம். நாம் இப்போதிருக்கும் நிலையில் அது தூரத்தில் இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் தூரத்தில் கிட்டத்தில் எல்லாமுமாய் இருப்பது அதுதான். ‘அது நீயேதான்’ – ‘தத்–த்வம்’ என்கிறது வேதம்.
இப்படி நான் சொல்லுகிற க்ஷண காலம் நமக்கு எல்லாம் புரிந்து விட்டதுபோல் இருக்கிறது. இந்த ஒரு க்ஷணத்தில் எப்படி இருக்கிறாமோ அப்படியே எப்போதும் இருந்தால் துக்கம் இல்லை. ஆனால் அடுத்த க்ஷணமே நமக்கு இந்த சத்தியமான பார்வை போய்விடுகிறது. நாம் பல விதமான பொய்களாலேயே கஷ்டங்களுக்காளாகிறோம். பொய்யினால் பெறும் ஆனந்தமும் விரைவில் பொய்யாகிவிடும். உண்மையில் எப்போதும் ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கிறவனைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். உண்மையாக இருக்கிறவன் ஸ்வாமி ஒருத்தன்தான். ஆசாமிகளாகிய நாம் அந்த ஸ்வாமியைத்தான் பற்றிக் கொள்ள வேண்டும். கண்டம் கண்டமாக நாம் இருக்கிறோம். கண்டம் கண்டமாக இருப்பது எல்லாம் முடிவில் அகண்டத்தோடு ஒன்றுபடும்போது அகண்டமாக ஆகி, நிரந்தர ஆனந்தமாகி விடுகிறது.
அகண்டமாக இருப்பவன் ஒருவன்தான் இருப்பு. கண்டமாக இருப்பது வெறும் நினைவுதான். நினைவு, கனவு எல்லாம் சாசுவத உண்மை அல்ல.
அகண்டமாக இருக்கிற பரமாத்மாவைக் கண்டம் கண்டமாக உருவமும் குணமும் உள்ளவனாக தியானம் பண்ணிக் கடைசி நிலையாக நிர்குணத் தியானம் செய்ய ஆரம்பித்தால், சண்டை, பூசல் ஒன்றுமே வராது. துக்கம், பயம் எதுவுமே இராது. பரம சாந்திதான் இருக்கும். இதுதான் ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் உபநிஷத மரத்திலிருந்து நமக்குப் பறித்துக் கொடுத்த பழம்.
இந்தப் பழுத்த நிலையை அடைவதற்குமுன், மொட்டாக, பூவாக, பிஞ்சாக, காயாக இருந்துதான் முதிர வேண்டும். பழுக்கும் நிலைவரைக்கும் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். காயாக இருக்கும்போதே பழமாவதற்கு அவசரம் காட்டி, வெம்பி விழுந்துவிட்டால் பயன் இல்லை. ‘வெம்பி விழுந்திடுமோ?’ என்று ராமலிங்கர் சொல்லுகிறார். நமக்கும் அந்தக் கவலை இருக்க வேண்டும். கனிந்த பழம் ஆகும் வரையில் பூஜை, ஜபம், தபம் எல்லாம் இருக்கவேண்டும். வேதத்தின் அந்தத்தில் இருக்கும்படியாக தத்–தத்வம் என்கிற உண்மை நிலைக்கு நாம் வரும் வரையில் அவை வேண்டும். அப்போதுதான் வெம்பாது பழுக்கும். கடைசியில் அந்த தத்வம்—மூலம்—எங்கே இருக்கிறது. ‘தன்னிடத்திலேயேதான் இருக்கிறது; எந்த அறிவு தத்துவத்தை ஆராய்கிறதோ, அந்த அறிவுக்குள்ளேயே இருக்கிறது’ என்பதை அநுபவத்தில் உணரலாம்.
நிறைந்த ஆனந்தம்
கிருதா யுகத்தில் பிருகு என்பவர் தம்முடைய பிதாவான வருணனிடத்தில் போய் “நிறைந்த வஸ்து எதுவோ அதை அப்படி அறிவது?” என்று கேட்டாராம். “நிறைந்த வஸ்து எதுவோ அது காலத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். தேகத்தாலும் நிறைந்து இருக்க வேண்டும். வஸ்துவிலும் நிறைந்து ஒரு குறை என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். அத்தகைய நிறைந்த வஸ்துவை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று பிதாவான வருணனிடத்தில் கேட்டாராம்.
“நீ போய் தபஸ் பண்ணு. அது உனக்கே தெரியும்” என்று வருணன் சொல்லிவிட்டாராம்.
“அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு பிருகு போய்த் தபஸ் பண்ண ஆரம்பித்தார். முதலில் அதனால் அவருக்கு ஒன்று தெரிந்தது. ‘இந்தச் சரீரந்தான் உயர்ந்த வஸ்து. இதுதான் எல்லாவற்றையும் உணருகிறது. உணரப்படுகிற பொருளைக் காட்டிலும் உணர்ந்து கொள்கிற பொருள் உயர்ந்தது. அது இந்தத் தேகந்தான்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அப்பாவிடம் போய், “இந்தச் சரீரம்தான் உயர்ந்த, நிறைந்த வஸ்து” என்று சொன்னாராம்.
அப்பா திரும்பவும், “இன்னும் கொஞ்சம் தபஸ் பண்ணு” என்று சொல்லிவிட்டாராம்.
இப்படியே கொஞ்சம் ‘தபஸ்’ பண்ணுவது, உடனே தமக்குக் தோன்றியதைப் போய்ச் சொல்வது என்று ஐந்து தடவைகள் பிருகு செய்தாராம். முதலில் உடம்பு நிறைந்த வஸ்துவாகத் தோன்றிற்று. இந்த உடம்பு ஒருநாள் பிரேதமாகிப் போவதுதானேயென்று யோசித்தபின், உடம்பு நிறைந்த வஸ்து இல்லை என்றும், பிராணன்தான் நிறைந்த வஸ்துவாகவும் தோன்றிற்று. அதன்பின் மனமே நிறைந்த வஸ்து என்று தோன்றியது. பிற்பாடு அறிவே நிறைந்த வஸ்துவாகத் தோன்றியது. ஐந்தாம் முறை போனபோது ஆனந்தாநுபவம்தான் நிறைவாகத் தோன்றியது.
“நீங்கள் சொன்னபடி நான் இத்தனை நாட்களாகத் தபஸ் பண்ணினேன். இப்போதெல்லாம் நடுநடுவே ஏதோ ஒரு விதமான ஆனந்தம் ஸ்புரிக்கிறதே. இது என்ன?” என்று தந்தையைக் கேட்டாராம் பிருகு.
“உனக்கு ஒவ்வொரு சமயத்தில் கொஞ்சம் ஸ்புரிக்கிறது என்று சொல்கிறாயே அந்த ஆனந்தம்தான் வஸ்து. இது உனக்குத் துளித்துளி உண்டாகிறது. இதுவே நிறைந்து விட்டதானால் அதைத்தான் பேரானந்தம் என்கிறோம். அந்தப் பேரானந்தம் எப்போதும் குறைவு இல்லாமல் காலத்தாலும் தேகத்தாலும் நிறைந்து இருக்கும்படியான ஒரே வஸ்து. சரீரம், பிராணன், மனசு, அறிவு எல்லாவற்றிற்கும் ஆதாரமாக, இவை எல்லாவற்றையும் கடந்த ஒன்று ‘ஆத்மா’ என்று இருக்கிறது. அது தன்னைத்தானே அறிந்து அநுபவிப்பதில்தான் இந்த ஆனந்தம் உண்டாகிறது” என்று பிதா சொன்னாராம். இப்படி உபநிஷக் கதை இருக்கிறது.
அந்தப் பேரானந்த சமுத்திரத்தின் ஏதோ ஒரு திவலை தான் நமக்கு எப்போதாவது உண்டாகிறது. கிளைகள், இலைகள் எல்லாம் அடர்ந்து இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தால் கீழே கொஞ்சம்கூட வெயில் படாமல் நிழல் இருக்கிறது. காற்று அடிக்கும்போது, இலைகள், கிளைகள் நகர்ந்து விலகுகிற சமயத்தில் சூரியனுடைய வெயில் கீழே அந்த இடைவெளி அளவுக்கு விழுகிறது. அப்புறம் மறுபடியும் கிளைகள் மூடி, அது மறைந்து விடுகிறது. அந்த மாதிரியாகத் தான் நமக்கு ஆனந்தம் அவ்வப்போது வந்து வந்து மறைந்து போகிறது. ஆனந்தம் என்பது எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும்படியான வஸ்து. ஆனால் நம்முடைய கெட்ட கர்மா, மனம், புத்தி இவற்றினால் அது நம்மிடம் படாமல் மறைந்திருக்கிறது. ஒரு க்ஷணம் நாம் பண்ணியிருக்கிற புண்ணிய கர்மாக்களினாலே அவை விலகும்போது, காற்று அடித்து இலைகள் விலகும்போது, சூரிய ஒளி அதன் வழியாக வருவது போல், நம்முடைய கர்மாக்கள் விலகியதால், எங்கும் பரவிய ஆனந்தத்தின் திவலை நமக்கு உண்டாகிறது. இதுவே வளர்ந்து விட்டால் பேரானந்தமாகிறது. அந்த ஆனந்த சமுத்திரத்தின் லவலேசத்தைத்தான் நாம் எப்போதாவது அடைந்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறோம். தபஸ் பண்ணிப் பண்ணி விசாரம் செய்தால் எப்போதும் ஆனந்த மயமாக இருக்கும் சமுத்திரத்திலேயே கலந்து அதாகவே இருக்கலாம்.
கண்ணனும் சொன்னான், கம்பனும் சொன்னான்!
ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக் கடந்திருக்கிறது என்றால், அதெப்படி என்று தோன்றுகிறது; குழப்பமாயிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல தினுசாகக் குழப்பிக் குழப்பி, பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.
‘நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன’ என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா என்றாகும். ஆனால் எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே? இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.
ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இவரைத் தாங்குகின்றன என்று ஆகாது. இவரால் தான் அவற்றுக்கு உருவமும் உயிரும். இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமல்ல. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
‘பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும்; உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.’ [ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா] என்கிறார்.
இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். ‘எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன’ என்று கூறுபவரே, ‘என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும் ஒரு பொருளும் இல்லை’ என்கிறார். (ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷு அவஸ்தித:). இங்கே ஆத்மா எல்லாவற்றையும் கடந்தது என்ற தத்துவம் பேசப்படுகிறது.
‘இது என்ன குழப்புகிறாயே’ என்றால், ‘நான் எல்லாருக்கும் விளங்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய:) அதுதான் என் யோகமாயை (யோக மாயா ஸமாவ்ருத:)’ என்று ஒரு போடு போடுகிறார்.
‘இது என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே!’ என்று தோன்றுகிறதா?
நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம். ‘நான் ஒருவருக்கும் விளங்க மாட்டேன்’ என்று பகவான் சொல்லியிருந்தால், ‘ஆயிரம்பேர் இருந்தால், ஆயிரம்பேருக்கும் விளங்க மாட்டேன்’ என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, ‘நான் எல்லோருக்கும் விளங்க மாட்டேன்’ என்றால், ‘ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஒருவனுக்காவது விளங்குவேன்’ என்றுதான் பொருள். பகவான் ‘எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன்’ என்றாரேயன்றி ஒருவருக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன்’ என்று சொல்லவில்லை. அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.
அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். ‘நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன்: ஒரு பொருளும் என்னிடம் இல்லை’ என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.
தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, “ஐயோ, பாம்பு, பாம்பு!” என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.
மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.
“இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன்; பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது” என்று சொன்னால் என்ன அர்த்தம்? மாலைக்குள் தான் பாம்பு இருக்கிறது; பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது எப்படியோ அப்படித்தான். இரண்டும் உண்மைதானே?
பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள் ‘விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி ‘இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.
மாயையினால் மூடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான்.
பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. ப்ரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே? அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கிறபோது இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, ‘என்னிடத்திலும் பொருட்கள் இல்லை; நானும் பொருட்களிடத்தில் இல்லை’ என்று கூறிவிட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் என்பதால், உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமா?
கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்:
‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.’
அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு’ – மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ, அந்த மாயா நாசகனான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.
நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.
ஆனந்தம் எங்கே?
நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம்; அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.
மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான்? நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகக் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது? எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா?
யோசித்துப் பார்த்தால், பரம தாத்பரியமாகத் தெரிவது, இந்த ‘ஞானம்’, ‘ஆனந்தம்’, ‘நாம்’, என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞான மயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.
வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும்போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய் விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது. உதாரணம் சொல்கிறேன்; ஒருவருக்குச் சொந்தமாக கொஞ்சம் நிலம் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் வருஷத்துக்கு வருஷம் விளைச்சல் அதிகமாவதாக வைத்துக் கொள்ளுங்கள். ‘இந்த வயல் என்னுடையது’ என்பதால், விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவருக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது. அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவருக்கு விற்று சாஸனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவா செய்கிறது? “அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது; இப்போது எவனோ ஒருவனுக்கு அதிருஷ்டம் அடிக்கிறதே!” என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. ‘எனது’ என்ற சம்பந்தம் இருந்த மட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.
இன்னோர் உதாரணம் சொல்கிறேன். என்னிடம் பல பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து, அவற்றுக்கு சித்தப்பிரமை இருக்கிறது. அது நிவிருத்தியாக வேண்டும் என்று கேட்டுக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு நேர்மாறாக ஒரு தகப்பனார் நடந்து கொண்டார்! அவர் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டவர். இளையாளுக்கு மூத்தாள் பிள்ளையோடு ஒத்துவரவில்லை. ஏகச் சண்டை போட்டுக் குடும்பம் பிரிந்தது. இவர் இளையாள் தரப்பிலேயே இருந்தார். பிள்ளையைக் கைவிட்டுவிட்டார். அவர் ஒரு நாள் என்னிடம் வந்து, ‘மூத்தாள் பிள்ளை இளையாளுக்குப் பில்லி சூன்யம் வைத்தான். நல்ல வேளையாக அது அவனையே திருப்பி அடித்துவிட்டது’ என்றார். எல்லாத் தகப்பனார்களும் பிள்ளைக்குச் சித்தப்பிரமை ஏற்படும்போது கவலைப்படுகிறார்களென்றால், இவரோ அதிலேயே சந்தோஷப்படுகிறார். ஏன்? இவருக்கு அவனிடம் ‘நம்முடையவன்’ என்ற சம்பந்தம் போய் விட்டது. இளையாளிடம் மட்டும் ‘நம்முடையவள்’ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால்தான் அவளுக்கு ஹானி இல்லை என்றால் இவர் ஆனந்தப்படுகிறார்.
மாயைக்கு ஆளான ‘நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கிறது என்றால், எதிலும் சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற அந்த வெறும் ‘நான்’ எத்தனை ஆனந்தமயமாக இருக்கும்! வெல்லம் போட்டால் கசப்பு பாகற்காய்க் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால், அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன! கசப்பான துக்க உலகத்தின் ‘நான்’ என்பதின் மாயக் கிரணங்கள் சம்பந்தப்படுகிறபோதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால், அந்த ‘நான்’ மட்டுமே ஸ்வச்சமாக நிற்கின்றபோது எத்தனை தித்திப்பாக ஆனந்த மயமாக இருக்கவேண்டும்? சிறிய பொத்தல்கள் கொண்ட ஒரு சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால் துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக்கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப் பார்க்கிறோம். மாயச்சட்டியை உடைத்து விட்டால் ஆனந்த ஜோதிர் மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின் அளவைப் பொறுத்துப் பல வேறு அளவுகளில் ஒளி வெளி வந்தாலும் உள்ளேயிருப்பது ஏகஜோதிதான். நாம் மாயச்சட்டியை உடைத்து விட்டால் உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்றான ஆனந்தரூபமாகவே தெரியும்.
மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசைகளை அடக்குவதுதான் வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனத்தை அடக்கிவிட வேண்டும். மனம் அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பதுபோல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும். பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஓர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது. ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லாம் இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டு விட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.
ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகள் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும், சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்டு வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள். எப்படி ஆசையை அடக்குவது? எப்படி மனத்தை நிறுத்துவது? எப்படி நிலைத்த ஆனந்தத்தை அடைவது என்று கேட்கிறவர்கள் அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும்; முடிவில் பேரானந்தம் அடையலாம். இதற்குப் பரமேசுவரன் அநுக்கிரகம் செய்வாராக.