பக்தி செய்வது எதற்காக?
ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு விளைவு இருக்கிறது. பௌதிக விஞ்ஞானம் முழுவதும் இந்தக் காரணம் – விளைவு (cause & effect) பற்றிய விதிகளைக் குறித்ததேயாகும். மாற்ற முடியாத இந்த விதிகளாலேயே உலகம் ஒழுங்குடன் இயங்குகிறது. ஏதோ ஒரு பேரறிவு இருப்பதால்தான் இப்படிப்பட்ட விதிகள் உண்டாகி, அவை எல்லாம் ஒழுங்காக இணைந்து, உலகவாழ்வு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. பௌதிக உலகில் காரணம் – விளைவு என்கிற தவிர்க்க முடியாத சங்கிலி இருந்தால் மனித வாழ்க்கையிலும் அது இருந்துதானே ஆகவேண்டும்? நாம் செய்கிற சகல காரியங்களுக்கும் விளைவு இருந்துதான் ஆகவேண்டும். நல்ல காரியங்கள் செய்தால் அதற்குச் சமமான நல்ல விளைவுகளை பெறுவோம். கெட்டதைச் செய்தால் அதற்கு சமமான கெட்ட பலன்களைப் பெறுவோம். இப்படி பலன்களை தருகிற ‘பலதாதா’ தான் பிரபஞ்சத்தை நடத்தி வைக்கிற மகா சக்தி, ஈஸ்வரன், பகவான், ஸ்வாமி, கடவுள், பரமாத்மா எனப்பட்டவன்.
மனசு இருக்கிற வரையில் அது சஞ்சலித்துக் கொண்டேதான் இருக்கும். நல்லதோடு கெட்டதையும் நினைக்கத்தான் செய்யும். புண்ணியத்தோடு பாபத்தையும் செய்து கொண்டேயிருக்கும். இந்தப் பாபத்துக்கு விளைவாக கஷ்டங்ளைப் போக்கடிப்பதற்காகவே பொதுவில் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறார்கள். இதைத்தான் பக்தி என்று நினைக்கிறார்கள். ஈசுவரன் மனசு வைத்தால் நம் பாபத்துக்குப் பிரதியான கஷ்டத்தை தராமலும் இருக்கலாம். ஆனால் அவன் கஷ்டத்தைப் போக்கத்தான் வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய நமக்கு யோக்கியதை இல்லை. ஏனென்றால் நம் கர்மாவுக்கு பலனாக இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருப்பவனே அவன்தான். ஆகையினால் கஷ்டம் வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிற மனோபாவத்தைப் பிரார்த்திப்பதே இதைவிட உத்தமமாகும். ஆனால் இந்தப் பிரார்த்தனைகூட நிஜமான பக்தி அல்ல.
நம் கஷ்டத்தை ஈசுவரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக ஆகிறது. அதாவது ஈஸ்வரனுடைய எல்லாம் அறிந்த ஸர்வக்ஞத்துவத்துக்குக் குறை உண்டாக்குகிறோம். ‘இந்தக் கஷ்டத்தைப் போக்கு; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று’ என்கிறபோது நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்று ஆகிறது. அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோம். இப்படி ஞான சமுத்திரமாக, கிருபா சமுத்திரமாக இருக்கிற ஈஸ்வரனுடைய ஞானம், கிருபை இரண்டுக்கும் தோஷம் கற்பிக்கிற பிரார்த்தனை உண்மையான பக்தி இல்லை. ஆனால் இப்படிப்பட்ட பிரார்த்தனையால் மனச்சுமை தற்காலிகமாகவாவது லேசாகி, கொஞ்சம் சாந்தி பிறக்கிறது. நாமாகவே எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற அகங்காரத்தைவிட்டு ஈஸ்வரனிடம் யாசிக்கிற அளவுக்கு எளிமை பெறுகிறோமே, அதுவும் நல்லதுதான். அவனும், நாம் அவனுடைய ஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்கூடப் பொருட்படுத்தாமல், நம் கர்மாவையும் மீறிப் பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம். ஆனாலும் ஒரு கஷ்டம் போனாலும் இன்னொரு கஷ்டம் என்று லோக வாழ்க்கையில் வந்துகொண்டேதான் இருக்கும். ஆகையால் லௌகிகமான கஷ்ட நிவிருத்திக்காக பிரார்த்தனை பண்ணுவதற்கு முடிவே இராது.
‘நீ எப்படி விட்டாயோ அப்படி ஆகட்டும்’ என்று சரணாகதி செய்வதுதான் பக்தி. தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால் மனஸின் அழுக்குகள் நீங்கி, அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும். அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம். ‘எனக்கு என்று ஒன்றுமில்லை’ என்று யாரிடம் சரணாகதி செய்துவிட்டாலும் ஒரு பதியிடம் பத்தினி சரணாகதி செய்தாலும் (அவன் தூர்த்தனான பதியாகக்கூட இருக்கலாம்); ஒரு குருவிடம் சிஷ்யன் சரணாகதி செய்தாலும் (அந்த குரு போலியாக இருந்தாலும்கூடச் சரி) – அப்புறம் நிச்சிந்தைதான்; அதன் முடிவான பலனாக மோஷம்தான். ஆனால் ஏதோ புராணங்களில் இப்படிப் பதியிடம், ஆசாரியனிடம் சரணாகதி செய்தே தெய்வமாகி விட்டவர்களைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், பிரத்தியக்ஷத்தில் இப்படி நம் மாதிரி குற்றம் குறை இருக்கக்கூடிய ஒரு மனுஷ்யனிடம் சரணாகதி பண்ணுவது என்றால் முடியத்தான் இல்லை. நாம் சரணாகதி பண்ண லாயக்குள்ளவன் என்று தோன்றுகிற குரு கிடைத்து, அவனிடம் சரணாகதி செய்துவிட்டால் அப்புறம் ஸ்வாமிகூட வேண்டாம்தான். ஆனால் வாஸ்தவத்தில், நிஜமாகவே திரிபுவனங்களுக்கும் யஜமானனாக, எல்லாம் தன் சொத்தாகக் கொண்டுள்ள ஸ்வாமியிடம்தான், நம்மால் கொஞ்சத்தில் கொஞ்சமாவது, ‘எல்லாம் உன் உடைமையே, எனக்கென்று ஒன்றுமில்லை’ என்று சரணாகதி செய்து, அதனால் நிம்மதி பெற முடிகிறது.
பக்தி செய்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அன்பு செலுத்தாமல் வாழ்ந்தால் ஆனந்தமே இல்லை, அன்பிலே உள்ள ஆனந்தம் வேறெதிலும் இல்லை என்று அநுபவத்தில் தெரிகிறது. ஆனால் நாம் யாரிடம் அன்பு வைத்தாலும், என்றோ ஒருநாள் ஒன்று நாம் அவரைவிட்டுப் பிரிகிறோம்; இல்லாவிட்டால் அவர் நம்மைவிட்டுப் பிரிகிறார். ஆனந்த ஹேதுவாக இருந்த அன்பு அத்தனையும் அழுகை மயமாகி விடுகிறது. நம்மை விட்டுப் பிரியாத ஒரே சாசுவதமான வஸ்து ஈஸ்வரன்தான். அவனிடம் அன்பு வைத்துவிட்டால், இந்த அன்பு என்றும் சாசுவதமாக ஆனந்தம் தந்து கொண்டே இருக்கும். இந்த அன்பு முற்றுகிறபோது யாவுமே அவனாகத் தெரியும். ஒன்றிடம் அன்பு–அது காரணமாகவே இன்னொன்றிடம் துவேஷம் என்றில்லாமல், எல்லாம் அவனானதால் எல்லாவற்றிடமும் ஏற்றத் தாழ்வில்லாமல் அன்பாக இருப்போம். அன்பற்ற வாழ்வு வாழ்ந்து மனுஷ்ய ஜன்மாவை விருதாவாக்கிக் கொள்ளாமல் இருக்க பக்தியே உதவுகிறது.
பக்தியால் படிப்படியாக லௌகிக கஷ்டங்களைப் போக்கடித்துக் கொள்ளலாம்; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்தாத நிலைக்கு மனோபாவத்தை உயர்த்திக் கொள்ளலாம்; மனத்தின் அழுக்கைப் போக்கிக்கொள்ளலாம்; அலைகிற மனஸை ஒருமுகப்படுத்தலாம்; ஈஸ்வரனின் கல்யாண குணங்களை நாமும் பெறலாம்; என்றும் அழிவில்லாத சாசுவதமான அன்பைப் பெற்று ஆனந்திக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கர்ம பலனைத் தருகிறவனைத் தஞ்சம் புகுந்தால்தான் அவன் கர்மகதிக்குக் கட்டுப்பட்ட ஸம்ஸாரத்திலிருந்து நம்மை விடுவித்து முடிவில் முக்தி தருவான். அதாவது அவனேதான் நாமாகியிருப்பது, எல்லாமுமாகி இருப்பது என்று அநுபவத்தில் அறிந்துகொண்டு, அப்படியே இருக்கச் செய்வான். இந்த அத்வைத ஞானத்தையும் முக்தியையும் அவன் கிருபையாலேயே பெறலாம். பக்தி செலுத்துவதற்கு இத்தனை காரணம் இருக்கிறது.
இனி காரணமே இல்லாத பக்தி ஒன்றும் இருக்கிறது.
காரணமில்லாத பக்தி
பல காரணங்களுக்காகப் பக்தி புரிந்தாலும், முக்தியை வேண்டிப் பக்தி செய்வதே இவற்றில் சிரேஷ்டமாகும். ‘ஞானத்தினால்தான் நேரடியாக முக்தி கிடைக்கும்; ஈசுவர உபாஸனையாகிய பக்தியால் அல்ல’ என்பதே ஸ்ரீ சங்கரர் முதலிய அத்வைத ஆசாரியார்களின் கருத்து. முக்தி என்றால் என்ன? ‘விடுபடுவது’ என்று அர்த்தம். விடுபடுவதைத்தான் தமிழிலும் ‘வீடு’ என்று சுருக்கிச் சொல்கிறார்கள், எதிலிருந்து விடுபடுவது? சம்சாரத்திலிருந்து விடுபடுவதுதான் முக்தி. மறுபடி மறுபடி பிறந்து கொண்டும் செத்துக்கொண்டும் இல்லாமல், நித்தியமான சத்ய நிலையை அடைவதுதான் முக்தி. மனசு என்று ஒன்று இருப்பதால்தான் சம்ஸாரபந்தம் தெரிகிறது. மனசு மறைந்தால்தான் பந்தத்திலிருந்து விடுதலை. ரூபம், குணம் இவை இருக்கிற வரையில் இவற்றை அநுபவிக்கிற மனசும் இருக்கத்தான் செய்யும். பக்தி செலுத்துகிறபோது ஈசுவரனுடைய ரூபம், குணம் எல்லாவற்றையும் மனஸினால் அநுபவிக்கிறோம். பக்தி நிலையிலும் பலவிதமான உணர்ச்சிகள், பரவசம், ஆனந்தம், அழுகை எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. மனசு அதற்கு ஆதாரமான வஸ்துவில் கரைந்துபோய் அந்த ஆதார வஸ்துமட்டும் நிற்கும்போது தான் எந்த மாறுதலும் இல்லாத சாந்த நிலை – முக்தி அல்லது மோக்ஷ நிலை சித்திக்கிறது. இந்த மனசுக்கு ஆதாரமாக இருக்கிற ஆத்மா என்பது என்ன என்று அனவரதமும் விசாரம் செய்துகொண்டே இருப்பதுதான் ஞான மார்க்கம் என்பது. இதே விசாரத்தில் மனஸை முழுக்கினால், கடைசியில் ஈசுவராநுக்கிரகத்தினால் மனசு மறைந்து ஆத்மா இன்னதென்று தெரிந்துவிடுகிறது. ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்கிற அந்த நிலையே விடுதலை அல்லது முக்தி என்று தெரிகிறது.
ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியார், ‘பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் முக்தி பெறலாமே’ என்று பாடுகிறார். வைகுண்டத்துக்குப் போவதுதான் முக்தி, கைலாசத்துக்குப் போவதுதான் முக்தி என்பவர்களைப்போல் இவர் சொல்லவில்லை. அந்தந்த தேவதைகளிடம் பக்தி செலுத்தினால், அதற்கு உரிய லோகத்துக்கு – வைகுண்டம், கைலாசம் போன்றவற்றுக்கு – செல்லலாம். த்வைதிகளும் விசிஷ்டாத்வைதிகளும் இதையே முக்தி என்பார்கள். ஆனால் இங்கேயும் ஈஸ்வரன் – பக்தன் என்கிற பேதமும் அதை அநுபவிக்கிற மனஸின் ஆட்டமும் இருக்கத்தான் செய்யும். எல்லாம் ஒன்று பட்டுப்போகிற அத்வைத முக்தி இதற்கு வேறானது. கோபாலகிருஷ்ண பாரதியார் அத்வைதியாக இருந்தும் இப்படிப் பாடுகிறார்.
அவர் மட்டுமில்லை, ஞானம்தான் முக்திக்கு நேர் சாதனம் என்று சொன்ன அத்வைத பரமாசாரியரான சங்கரரே நிறைய பக்தி ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். க்ஷேத்திராடனமும் தீர்த்தாடனமும் செய்திருக்கிறார்; ஷண்மத ஸ்தாபனம் என்று ஆறுவித மூர்த்திகளின் வழிபாட்டை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய மடத்தில் வந்துள்ள நாங்களும் மணிக்கணக்காக மூர்த்தி பூஜை பண்ணுகிறோம். இது ஏன்?
ஆத்மா எப்படி இருக்கும் என்று மனசுக்குத் தெரியாது. மனஸே ஆத்மாவிலிருந்துதான் முளைத்திருக்கிறது. எனவே, இந்த மனஸால் ஆத்மாவை எப்படி அளக்க முடியும்? மனசு மறைந்தால்தான் ஆத்ம ஸ்வரூபம் பளீரென்று பிரகாசிக்கிறது. ஆனால் நம் மனஸோ அலைபாய்ந்தபடிதான் இருக்கிறது. எனவே முதலில் பல திசைகளில் போகிற சிந்தனையை ஒருமுகப்படுத்த வேண்டும். இதற்குத்தான் பக்தியை வழியாக வைத்திருக்கிறார்கள். உலக விஷயங்கள் மனஸை நானாதிசையிலும் சிதற அடிப்பவை. ஆனால் ஈஸ்வரனையே சிந்திக்கச் சிந்திக்க மனசு அவன் ஒருவனிடமே குவிந்து, தைல தாரையாக – அதாவது எண்ணெய் பிசிர் இல்லாமல் கம்பியாய் ஒழுகுவதுபோல், அவனிடமே ஒருமுகப்படுகிறது. மனசு ஒருமுகப்படுகிற இந்த நிலை முற்ற முற்ற மனஸே மறைந்துபோகத் தொடங்கும். இவ்விதமாக ஞானத்துக்கு பக்தியே துணைபுரியும். இதனால்தான் ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் பக்தியை ஞானத்துக்குப் படியாக வைத்தார்.
ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்கிற முக்தி, செத்துப்போனபின் எங்கேயோ போய் அடைகிற நிலை இல்லை. எப்போதுமே ஆத்மா இருந்துகொண்டேதானே இருக்கிறது? அது இல்லாவிட்டால் நம் சரீர யாத்திரை ஏது? ஆகையால் இந்த சரீரம் இருக்கிறபோதே ஆத்மாவை அநுபவிப்பதான முக்தி நிலை சாத்தியம்தான். இம்மாதிரி முக்தி அடைந்த பின்னும் நம்முடன் உயிர் வாழ்கிற பிரம்ம ஞானியைத்தான் ஜீவன் முக்தன் என்கிறோம்.
இப்படிப்பட்ட பிரம்ம ஞானிகளும் சிலர் பக்தர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது பிரம்மத்தின் ஏதோ ஒரு தேவதா ரூபத்தில் எல்லை இல்லாத அன்பை வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய பக்திதான் காரணமில்லாத பக்தி. பக்தி செய்வதால் இவர்கள் பெறக்கூடிய பயன் ஏதும் இல்லை. ஏனெனில் வாழ்க்கைப் பயன்களில் எதற்கு மேலாக ஏதுமில்லையோ அந்த முக்தி நிலையே யை இவர்களுக்கு ஸித்தித்து விட்டது. அதற்கு மேலாக அடைய வேண்டியது என்ன இருக்கிறது? இருந்தாலும் ஈசுவரனாகத் தோன்றுகிற பிரம்மத்தின் லீலா சக்தியை இவர்கள் ரஸித்துக்கொண்டு, அற்புத லீலை செய்கிற அந்த ஈஸ்வரனை ஒர் இஷ்டமூர்த்தியாகக் கண்டு, அதனிடம் காரணமே இல்லாத – பிரதிப் பிரயோஜனமே எதிர்பாராத – உத்தமமான அன்பைப் பொழிகிறார்கள். மோக்ஷம் வேண்டும் என்ற பிரயோஜனத்தைக்கூட ஜீவன் முக்தன் எதிர்ப்பார்க்க அவசியமில்லையே! இந்த பக்தியைத்தான், பிறவியிலிருந்தே பிரம்ம நிஷ்டரான சுகர், “அஹைதுகீ பக்தி” என்கிறார். ஹேது என்றால் காரணம், காரணமே இல்லாதது அ–ஹைதுகீ. இது முக்தி வந்ததற்குப் பிந்தைய நிலையிலுள்ள பக்தி.